Mon05252020

Last updateSun, 19 Apr 2020 8am

தேசிய குரல்கள் என்று தம்பட்டமடிக்கும் சந்தர்ப்பவாதிகள் ...

குறிப்பு:

தற்போது வடக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களின் விடுதலைக்காக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொது இடங்களிலும் பல போரட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுப் கொண்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமானவைகளில் ஒன்றாகக் கருதப்படுவது, சிங்கள மற்றும் தென்னிலங்கை மாணவர்களின் ஆதரவுப்போராட்டங்கள். இந்த போராட்டங்களை தமது குறுந்தேசிய புலிப்போராட்டங்களாக சித்தரிக்க முயலுபவர்கள், தேர்தல் அரசியலை முன்னெடுக்க இந்த போராட்டங்களை உபயோகிப்போர் எனப் பல தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயநலனில் நின்று இயங்குகின்றனர். அவர்களில் ஒருவர், திரு.மனோ கணேஷன். அவர் மார்க்ஸ்சிசத்தின் மீதான அவதூறை மட்டுமல்ல, தென்னிலங்கையில் போராட்டங்களை முன்னெடுக்கும் சக்திகள் மீதும் அரசியல் சேறடிப்பை நிகழ்த்துகிறார். கீழ்வரும் குறிப்பு தோழர். ரிச்சார்ட் அவர்களால் முகபுத்தகத்தில் எழுதப்பட்டது.

முதலில் எனக்கும் ஜேவிபிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஜேவிபியை நான் மார்க்சியவாதிகளாகவும் அறியவில்லை. எந்த மார்க்சியவாதியும் தேசியவாதிகளாகவோ, இனவாதிகளாகவோ இருக்க முடியாது. அடுத்த விடயம் முன்னிலை சோசலிச கட்சி தனியே ஜேவிபி இல் இருந்து பிரிந்து வந்தவர்களால் மாத்திரம் ஆரம்பிக்கப்படவில்லை. ஜேவிபி உள்ளிருந்து மார்க்கசிய கருத்தின் அடிப்படையில் பிரிந்து வந்தவர்களுடன் மார்க்க்சியத்தை நேசித்த மார்க்கசியவாதிகளும் இணைந்தே கட்சியை ஆரம்பித்தனர். அப்போது இணைந்து கொண்டவன் தான் நான். ஜேவிபியை மட்டுமல்ல யுத்த குற்றவாளி கொலைகாரான் சரத் பொன்சேகா இன்னுமொரு பேரினவாத பெரும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி என சகலரையும் எதிர்ப்பவன் நான். பல தோழர்கள் உங்களை போன்ற சந்தர்ப்பவாதிகளுக்கு பதில் அளிக்க தேவை இல்லை என்று கூறினார்கள். ஆனால் தோழர் லெனின் எமக்கு கற்று தந்த பாடம் இருக்கின்றது, சந்தர்ப்பவாதிகளையும் மென்சவிக்குகளையும் முதலாளித்துவத்திற்கு முட்டு கொடுக்கும் சமூக ஜனநாயக போலிமுகங்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்தினார்லெனின். லெனினின் வழியில் நடக்கும் எனக்கும் அதை செய்ய வேண்டிய நிலை வந்துள்ளது.

///// பழ ரிச்சர்ட், முதலில் ஒன்றை அறிந்து கொள்ளுங்கள். முன்னிலை சோஷலிச கட்சியின் பிரச்சார செயலர் புபுது ஜயகொட என்னை அழைத்து கருத்து தெரிவிக்கவில்லை. நான் தான் அவரை அழைத்து கோரிக்கை விடுத்தேன். தென்னிலங்கையில், ரோகன விஜெவீரவின் மரணத்தை அனுஷ்டிக்கும் நீங்கள், வடக்கில் தமிழ் இளைஞர்களுக்கும் தமது, போராளிகளை நினைவுகூரும் உரிமையை அங்கீகரியுங்கள் என்று கேட்டேன். (இதில் என்னய்யா தவறு?) ---மனோ கணேசன் ஐயா /////

ஐயா தோழர் புபுது ஜெயகோட உங்களுக்கு அழைப்பை மேற்கொள்ளவில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். யாழ் பல்கலை சம்பவம் பரபரப்பையும் வித்தியாசமான அரசியல் சூழ் நிலமைகளையும் உருவாக்கியுள்ள தருணத்தில். தங்களும் இருக்கின்றீர்கள் என்பதை காட்ட மேற்கொண்ட தந்திரம் தான் இது. நீங்கள் இவ்வாறு விளம்பர அரசியல் நடத்துவீர்கள் என்று தெரிந்திருந்தால் அவர் உங்களுடன் இது தொடர்பாக கதைத்திருக்க மாட்டார். நாம் இந்த நிலைபாட்டில் தான் இருக்கின்றோம் என்று நன்கு அறிந்த பின் தான், நீங்கள் இவ்வாறான நடவடிக்கையில் இறங்கிணீர்கள். ஏன் நீங்கள் இந்த கோரிக்கையை கடந்த வருடம் முன் வைக்கவில்லை? சரி எம்மிடம் முன் வைத்ததுக்கு பதிலாக நீங்கள், வாக்களியுங்கள் என்று தமிழ் மக்களிடம் சென்று வக்காளத்து வாங்கிய தமிழர் அழிப்பிற்கு தலைமை தாங்கிய பொன்சேகாவிடம் அல்லது தமிழர் போராட்டத்தை சமாதான ஒப்பந்தம் என்ற பெயரில் சிதைத்த UNP இனரிடம் கேட்டிருக்கலாமே?

அதுக்கெல்லாம் கொஞ்சம் நேர்மையும் தைரியமும் வேண்டும். சரி கேட்டு தான் விட்டீர்கள் அது தான் அவர் நாளை ஊடக மாநாட்டில் தெரிவிக்க இருக்கின்றேன் என்று சொன்னாரே அப்படி இருக்க அதை ஏன் நீங்கள் எதோ மாபெரும் சாதனை செய்ததாக ஊடகங்களுக்கு செய்தி அனுப்பினீர்கள்? ஐயா இந்த பிரச்சனையில் இதை விட உருப்படியாக ஒன்றும் செய்ய தோன்றவில்லையா? மேல்மாகாண மக்கள் உங்கள் பின்னால் நிற்கின்றார்கள் என்றால் நீங்கள் ஏன் கொழும்பில் இதற்கெதிராக ஒரு ஆர்ப்பாட்டமும் மேற்கொள்ள வில்லை?

கைது செய்யப்பட்ட மாணவர்கள் பயங்கரவாதிகள் என்று அரச தரப்பினர் உங்கள் தம்பி உட்பட பிரச்சாரம் செய்கின்ற போது, ஏன் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கின்றீர்கள்? இதற்கெதிரான பதில் பிரச்சாரத்தையும் தெளிவுபடுத்தலையும் சிங்கள மக்களிடம் மேற்கொள்ள உங்களுக்கு திராணி இல்லையா (இல்லை என்று தெரியும் ஏன் என்று அதையும் தெளிவு சொல்கின்றேன்) ? அது தானே நீங்கள் இங்கு ஆற்ற வேண்டிய பெரும் பணி?

அண்மையில் X -Group இன் தோழர் தீப்தியின் கருத்தரங்கு ஒன்றில் குறிப்பிடப்பட்ட ஒரு விடயம் இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது இலங்கையில் மிக active ஆனா அரசியல்வாதிகள் யார் தெரியுமா? நீங்களும், விக்கிரமபாகு கருணாரத்னவும் தான். எப்படி active என்றால் மற்றவர்கள் மூலம் active. தாங்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள், மற்றவர்கள் செய்யும் வேலைகளில் முகத்தை காட்டி செயற்படுவது போல் காட்டி கொள்வார்கள்.

எம் காட்சியினால் உருவாக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர் அமைப்பினால் காணமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பான எதிர்ப்பு மற்றும் கவன ஈர்ப்பு நடவடிக்கைகளை தங்களின் மக்கள் கண்காணிப்பு குழு செய்ததாக ஊடகங்களில் திட்டமிட்டு செய்தி பரப்பி இருந்தீர்களே நினைவிருக்கின்றதா? நான் உங்களுக்கு FB இல் கமெண்ட் அடித்ததாக சொன்னீர்களே. அதே தோழர் உதுல் அவர்களிடம் கேளுங்கள் விவரமாக சொல்வார்.

ஒரு தடவை தோழர் உதுல் பிரேமரத்ன கைது செய்யப்பட்டிருந்த வேளை மாணவர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிரான கூட்டம் ஒன்றை அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது அதில் கலந்து கொண்டு பேராதனை பல்கலை மாணவி துவாரக பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்படதுக்கும் வடக்கில் இராணுவத்தின் அடக்குமுறைகள் தொடர்பாகவும் உரையாற்றி இருந்தேன் (http://www.facebook.com/media/set/?set=a.1431810290194.51998.1680995341&type=3) அதை சிங்களத்திலே நீங்கள் மொழி பெயர்த்திருந்தீர்கள். அப்போது நீங்கள் செய்த தணிக்கை (அதற்கு முன் உங்களை பெரிய வீரர் என்று தவறாக நினைத்து விட்டேன்) நீங்கள் திராணி அற்றவர் என்பதை நன்கு புலபடுத்தியது. தமிழ் ஊடகங்களுக்கு வீராவேச அறிக்கைகளும் சிங்கள ஊடகங்களில் அடக்கி வாசிக்கும் அரசியலும் பலரின் வாடிக்கை இன்று.

எனது இந்த ஒரு வருட பயணத்தில் மார்க்கசிய அடிபடையிலான எம் கருத்து மோதலின் விளைவு தான் இன்று தென்னிலங்கையில் சிங்கள மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்கள். என் வயதை விட அதிக காலம் அரசியல் நடத்தும் உங்களால் செய்ய முடிந்தது என்ன? கேட்டால் தலைநகர தமிழருக்கு அரசியல் அடையாளம் கொடுத்தேன் என்பீர்கள். வாக்குகளை பெற்று பாராளுமன்றம் செல்வது தான் தலைமைத்துவம் கொடுப்பது என்று நினைக்கின்றீர்களா? மக்களை கொள்கை அடிப்படையில் அமைப்பு ரீதியாக அணித்திரட்டி தலைமை வகிப்பது தான் தலைமைத்துவம். அப்படி உங்களால் தலைநகர மக்களை கூட அணித்திரட்ட முடியவில்லையே.

நீங்கள் யாழ்ப்பாணத்தில் 4ம் திகதி நடக்கும் ஆர்பாட்டத்திட்கும் செல்வீர்கள் வீரத்தனமான அறிக்கையை விடுவீர்கள். நீங்கள் நிற்கும் தளத்தில் ஒன்றும் செய்ய மாட்டீர்கள். இது தான் உங்கள் அரசியல் தமிழ் மக்களை ஏமாற்றி நடத்தும் பிழைப்பு. இது ஈனத்தனமான அரசியல் பிழைப்பு இல்லை என்றால் என்ன?

உங்கள் கட்சியினால தலைநகர தமிழர்களை ஒருங்கிணைத்து (சொந்த தம்பியை கூட தன்னுடன் தக்க வைக்க முடியவில்லை என்பது வேற கதை) ஒரு எதிர்ப்பு நடவடிக்கை கூட மேற்கொள்ள முடியாமல் விட வேண்டியவர்களுக்கு விடாமல் மலிவு பிரச்சாரத்தை பெற எம் கட்சி தோழருடன் உரையாடி அதை செய்தியாக்கி அரசியல் நடத்தும் உங்கள் நிலையை ஒப்பந்தபடி ரணிலிடம் தேசிய பட்டியல் ஆசனத்தை பெற மன்றாடி தமிழர்களை அவமானபடுத்திய நிலை வங்குரோத்து நிலை இல்லை என்றால் ராஜபோக நிலையா மனோ கணேசன் ஐயா அவர்களே?

அதை விட தோழர் புபுதுஜயகோடா நீங்கள் குறிப்பிட்ட விததில் பதில் சொல்லவில்லை, அவர் சொன்னதை உங்களுக்கு ஏற்ற விதத்தில் மாற்றி கொண்டு விட்டீர்கள்.

///////////////// தயவு செய்து மார்க்சியம் பற்றி கவனமாக பேசுங்கள். நாங்கள் மார்க்சியவாதிகள் அல்ல ஆனால் மார்க்சியம் பற்றி மாண்புடன் அறிவோம் ---மனோ கணேசன் ஐயா./////////////////

மார்க்சியம் பற்றி நீங்கள் மாண்புடன் அறிந்திருந்தால் ஏகாதிபத்தியத்திட்கும் முதலாளிதுவத்திட்கும் முட்டுகொடுக்கும் அரசியல் கட்சியை வைத்து கொண்டு இருக்க மாட்டீர்கள். அல்லது மார்க்சியம் என்று வேறு எதையோ நினைத்து கொண்டு இருக்கின்றீர்கள். மார்க்சியத்தை விளங்கிய எவரும் அதை தவிர்த்து செயற்பட முடியாது. முடியுமானால் மார்க்கஸ் எழுதிய மூலதனம் என்ற நூலை வாசியுங்கள் அதன் இணைப்பை இங்கு தருகின்றேன் http://www.padippakam.com/index.php?option=com_content&view=article&id=1731:m-0081&catid=205:ma&Itemid=122

மக்கள் மனங்களை வெல்லவது பற்றி கதைப்பதிலிருந்து, அமைப்பு ரீதியாக இயக்கம் ஒன்றை கட்டி எழுப்புவது பற்றிய தெளிவு உங்களுக்கு பூஜ்யம் என்று விளங்குகிறது. என்னை விட இரண்டு மடங்கு வயது கூடிய முதலாளித்துவவாதியான உங்களுக்கு வகுப்பெடுக்க எனக்கு நேரம் இல்லை. முடியுமானால் லெனின் மார்க்கஸ் எங்கல்ஸ் ஆகியோர் ஸ்தாபனம் குறித்து எழுதிய நூல்களை வாசியுங்கள்.

//// ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் விடுதலை குரல்களை ....////

வாசித்தது முதல் சிரிப்பை அடக்க முடியவில்லை வடிவேலு கேட்பது போல எங்கே எங்கே என்று நாலு தடவை கேட்க தான் தோன்றியது...

இப்படி சொல்லி சொல்லி எவ்வளவு காலம் தான் ஏமாற்ற போகின்றீர்கள்? அறிக்கைகள் விட்டு ஊடகங்களில் செய்தியை விட்டால் மட்டும் தேசியத்தின் குரல்கள் ஆகிவிடுவீர்களா? நீங்களும் ஒன்று தான் கடிதம் எழுதியே அரசியல் நடத்தும் உலக தமிழர்களின் தலைவன என்று தன்னை தானே அழைத்து கொண்ட கருணாநிதியும் ஒன்று தான் .

தமிழ் இளைஞர்கள் அரச பாதுகாப்பு படைகளை எதிர்த்து யுத்தம் செய்த போதும் அவர்களால் எம் இளைய சமூகம் கொல்லப்பட்ட போதும் அதே அரச படைகளின் பாதுகாப்புடன் தலைநகரில் பாதுகாப்பாக வந்த கயவர்கள் தானே ஐயா நீங்கள் எல்லாம். நாடளுமன்ற உறுப்பினராக இருந்த போது வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட போது அழுது புரண்டதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைகின்றேன்.

இப்போது கூட ஒன்றும் தலை முழுகி விடவில்லை. நேர்மையாக செயற்படுங்கள் நேர்மையாக கோட்பாடு ரீதியாக முதலாளித்துவத்தின் காலடியில் உரிமைகளை அடகு வைக்காமல் கோட்பாட்டு ரீதியில் மக்களை அணிதிரட்டி அமைப்பு ரீதியாக ஒன்றிணைக்கும் பணியை செய்ய முயற்சியுங்கள். அடுத்தவர்களின் வேளைகளில் தலையை நுழைத்து மட்டும் இருப்பை நிலை நாட்டாமல்.

உங்களை போன்ற முதலாளிதுவாதிகளுக்கு எல்லாம் இடதுசாரிகளை விமர்சிக்க போலி என்ற வார்த்தையை தவிர வேறு எந்த கருத்து செறிவும் இருக்காது. வெகு விரைவில் போலிகளை மக்கள் அடையாளம் காண்பார்கள். அது வரை தமிழர் உரிமை போராட்டத்தினை சிங்களவர் மத்தியில் நியாயபூர்வமாக எடுத்து சென்று இனவாதிகளை தோலுரித்து காட்டி சிங்கள மக்களை மாகவம்ச மாயையிலிருந்து மீட்கும் உங்களால் முடியாமல் போன என் போராட்டம் தொடரும். முடியுமானால் நீங்களும் முயற்சி செய்யுங்கள் என்று என்னை விட இரண்டு மடங்கு வயது கூடிய உங்களுக்கு சொல்ல வேண்டி இருப்பதை இட்டு வருந்துகின்றேன்...

நான் சொல்வதை பகிரங்கமாக எப்படி வேண்டுமென்றாலும் எவ்வளவு கேவலமாக என்றாலும் விமர்சியுங்கள். அதை எல்லாம் ஏற்று கொள்ளும் எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் திறனும் எனக்கிருக்கின்றது. ஆனால் கெஞ்சி கேட்கின்றேன் போலித்தனமான அரசியலை விடுத்து, எஞ்சி இருக்கும் தமிழரின் வாக்கு பலத்தையும் தாரை வார்த்து விடாமல், அதை உங்கள் நலன்களுக்காக பயன்படுத்தாமல் அகில இலங்கை ரீதியில் ஒன்றிணைந்து நேர்மையாக செயற்படுங்கள்.

அம்பலபடுத்தல்கள் தொடரும்.....

தோழர் . றிச்சார்ட் (செம்பகம்)