Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வடக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் ஒருவர் விடுதலை- போரட்டங்கள் தொடர்கின்றன

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், CID - புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுதர்சன் என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களில் ஒரு மாணவர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூன்று மாணவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

 

இன்நிலையில் இன்றைய தினம் யாழ் இராணுவ கட்டளைத் தளபதிக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது.

மேலும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் அதன் பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்களையும் விடுதலை செய்யக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ். பஸ் நிலையம் முன்பு இன்று (04.12.2012)நடைபெற்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டம் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது. இந்த போராட்டத்தில் புதியஜனாயக (மா - லெ) கட்சி தோழர்கள் இலங்கையின் பல பாகங்களிலிருந்து வந்து கலந்து கொண்டனர். அத்துடன் பொது அமைப்புக்கள், தெற்கை சேர்ந்த அரசியல் கட்சிகள், பல்கலைகழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைகழக மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு தமது கண்டனங்களை தெரிவித்தனர்.

இத்தாக்குதல் சம்பவம் பற்றியும் மாணவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மகஜர் ஒன்றில் கையொப்பம் இட்டுள்ளனர். இந்த மகஜர் ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையளர் நவநீதம்பிள்ளையிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

இதேவேளை, தெற்கில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை முன்னிறுத்தி பிரசாரத்தை முன்னெடுக்கும் முகமாக சம உரிமை இயக்கம், ஊடக மாநாட்டை இன்று நடத்தியுள்ளனர் .