Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இழப்புக்கள் ஒன்றும் மறுப்பதற்கில்லை!

மாணவர்களின் கைது!

யாழில் மடிந்த போராளிகளை நினைவு கூரும் பொருட்டு ஓழங்கு செய்யப்பட்ட கூட்டமானது ஆயுதபடைகளில் சிதறடிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் நடைபெற்ற போராட்டங்களில் எத்தனையோ போராளிகளையும், பொதுமக்களையும் அரச படைகள் காவுகொண்டுள்ளது. இன்று இறந்த மனிதர்களை வெவ்வேறு தளங்களில் தத்தம் அரசியல் நிலைப்பாடுகளின் படி நினைவு கூறுகின்றார்கள். நினைவு கூரல் வெறும் சம்பிரதாயத்திற்கு உட்பட்டதாக இருக்கின்றது. ஆனாலும், போராட்டத்தில் இறந்த மக்களும், போராளிளும் ஆதிக்க அரசியல் கருத்துக்கு எதிர்நிலையில் இருந்ததினால் கொல்லப்பட்டுள்ளனர். ஓடுக்கப்பட்டோர் நலம் சார்ந்த அரசியல் கருத்தை அழிக்க முடியும் என்ற குருட்டு நம்பிக்கையால், ஆயுதப்படைகளினால் இவர்கள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளார்கள். அதனால் இறந்த போராளிகளையும், மக்களையும் நினைவு கூர்வது அடிப்படை மனித உரிமையாகும்.

தெற்கின் எழுச்சி:

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்னிலங்கை மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தென்னிலங்கையில் போராட்டத்தினை மேற்கொள்ளும் மாணவ போராளிகள், தங்கள் சமூகத்திலுள்ள இனவெறியை எதிர்த்தும் தமக்குள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். தன்இனத்தில் உள்ள இனவெறியை வெற்றி கொள்ள வேண்டிய கட்டாய நிலை அவர்களுக்கு இன்று இருக்கின்றது. இனவாதம் என்பது பல ஆண்டு பழமைவாய்ந்ததொன்று என்பதனால் சமூகத்தின் அனைத்து நிறுவனங்களிலும் இருக்கின்றது. இனப்பெருமிதத்தின் பிரச்சாரம் பெரும் பலத்துடன் சமூகத்தில் விதைக்கப்படுகின்றது. அன்றாடம் சமூகத்தில் விதைக்கப்படும் இனவாதச் சிந்னையை எதிர்க் கொள்வதும், இதற்கெதிராக போராடுவோர் அன்றாடம் எதிர்க் கொள்ளும் சவாலாகும்.

முகப்புத்தகத்தில் தோழர் ரிச்சர் றிச்சர்ட் தெரிவித்த பின்வரும் கருத்து, மேற்கூறிய சவால்களை விபரிக்கின்றது .

“........ (யாழில் மாணவர்கள் தாக்கப்பட்ட )....சமபவத்தை அறிந்த உடன் ஊடக மாநாட்டை நடத்தி எதிர்ப்பை தெரிவித்தோம். அன்றே விசேட கூட்டத்தை நடத்தி எதிர்ப்பு நடவடிக்கைகளை சகல பல்கலைக்கழகங்களிலும் ஏற்பாடு செய்தோம். ஆனால் பேராதனை மற்றும் ரு{ஹனு பல்கலைக்கழகங்களில் மட்டும் தான் அது நடந்தது. களனி பல்கலைக்கழகத்தில் அரச தரப்பு மாணவர்களால் இனவாத பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. அடுத்த தினம் களனி பல்கலைக்கழகத்தில் காரசாரமான விவாதங்களுடன் கூட்டம் நடத்திக்கொண்டிருந்த வேளை தான் மாணவர்களின் கைது தொடர்பான தகவல் கிடைத்தது உடனே செயலில் இறங்கி இருந்தோம். முதற் கட்டமாக அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் சகல மட்ட அழுத்தங்களையும் கொடுத்திருந்தோம. அன்றைய தினம் மாணவர் ஒன்றிய தலைவர்களை கடத்தும் முயற்சியும் நடைபெற்றது தகுந்த முன்னேற்பாடுகளுடன் இருந்ததால் நாம் அதை முறியடித்தோம்”.

மேலும், தெற்கில் இருக்கும் இடதுசாரி அமைப்பின் முயற்சியினால், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்திற்கு எதிரான கருத்துக்களை மெதுவாக வெற்றி கொள்ளப்படுகின்றது என்பதையும் மேற்கண்ட தோழர் றிச்சர்ட் இன் முகபுத்தக குறிப்பு உணர்த்துகிறது. இவ்வாறான சிறு வெற்றிகள் கூட வரவேற்கப்பட வேண்டியவையே. தெற்கில் இருந்து வரும் மாணவ போராளிகள், இனவெறிக்கு எதிராக போராட்டத்தின் ஊடாக, கடந்தகால வரலாற்றின் கசப்பான பக்கங்களை கடந்து, புதியபாதையை நோக்கி, உழைக்கும் மக்களின் பலத்தைக் கூட்ட வேண்டும். தெற்கில் செயற்படுத்தப்படும் போராட்டங்கள் சமூக மாற்றத்திற்கான தயாரிப்பாகும். சமூக மாற்றத்திற்கான போராட்ட தயாரிப்புக்களின் ஊடாகத் தான், அரசியல் போராட்டத்திற்கான அத்திவாரத்தினை இட முடியும்.

தூங்கும் தமிழ் சக்திகள்:

இலங்கையிலும் சரி, புலம்பெயர் தேசத்திலும் சரி தமிழ் குறுந்தேசியவாதிகள் "உறங்கிக்" கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் காத்திரமான போராட்டத்தினை புலம்பெயர் மேற்கு தேசங்களில் நடத்துவதற்கான கட்டமைப்பைக் கொண்டிருந்தும், போராட்டத்தினை செய்யாது தூங்குகின்றார்கள். மாவீரர் தினம் புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களின் இருப்புக்கான ஒரு அடையாளப் போராட்டமாக சுருங்கிச் சீரளிந்த நிலையில், தனிநபர்கள் சொத்துக்களையும் தனிமனித இருப்பிற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 2009 மே மாதத்திற்கு பின்னர் சொத்துக்காகவும், விடுதலைப் புலிகளின் புதிய தேசியத் தலைவர் யார் என்பதில் ஏற்பட்ட போட்டியில் கவனம் செலுத்துபவர்கள், இணையங்களை நடத்துவதிலும், புலம்பெயர் தேசங்களில் சதி அரசியலை செய்வதிலும், கொலைக் கலாச்சாரத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதேவேளை, புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற புலிகள், தன்னிச்சையாக தேசத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கும் தமக்கும் தொடர்பு இருப்பதாக பாசாங்கு காட்டுகின்றார்கள்.

புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பாசாங்கு நடவடிக்கைகள் போராட்டத்தினை சிதைக்;கும் நடவடிக்கையே. அத்துடன் போராடும் மாணவர்களுக்கு ஒரு தவறான அடையாளத்தினைத் திணிக்க முயல்வதன் மூலம், புலம்பெயர் புலிகள் போராடும் மாணவர்களின் உயிர்களின் மேல் பகடையாட முனைகின்றார்கள் .

இலங்கையில் தமிழ் அரசியற் கட்சிகள் தேர்தலை மையமாகக் கொண்டு காய்களை நகர்த்துகின்றார்கள். சிங்களத் தோழர்களின் போராட்டத்தினை தமது நலனுக்காக பயன்படுத்தும் கயமையும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வேறு சில தேர்தல் சகதிக்குள் அரசியல் செய்யாத கட்சிகள், போராட்டங்களை சமூக மாற்றத்திற்கான தளத்தில் அணுக வேண்டிய நிலையில், மௌனமாக இருக்கின்றார்கள். ஒரு சமூகத்தின் எழுச்சி ஒன்றும் தானாககனிவதில்லை. அது சமூக முரண்பாடுகளுடன் ஒன்றியதாக இருக்கின்றது. சமூகத்தின் முரண்பாடுகளை கவனத்தில் கொள்ளாது பழைய துருப்பிடித்த கோட்பாட்டு விளங்கங்களை மட்டும் மந்திரமாக செபிப்பதன் மூலம், சமூக மற்றம் வந்து விடப்போவதில்லை .

நினைவு கூரல் தேவைதானா?

தமிழ் மக்களின் உரிமைக்காக இறந்த போராளிகளை நினைவு கூருவது தவறானது என்றும், அரசுடன் இணைந்து செயற்படும் அபிவிருத்திக்கு தடையாக தீயசக்திகளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வே கார்த்திகை தீபம் ஏற்றல் என்று அடக்குமுறையை ஏற்றுக் கொள்ளும் பிரிவினர் வாதிடுகின்றார்கள்.

 

பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் விட்ட அறிக்கையில் “எமது மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக தீர்க்கப்பட்டு வரும் நிலையில் அப்பிரச்சினைகள் தீர்க்கப்படக்கூடாது என்பதில் சில விஷமிகள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர். இல்லாத பிரச்சினைகளை உருவாக்குவதும் தீர்க்கப்பட்டு வரும் பிரச்சினைகளை, தீர்க்கப்படாத பிரச்சினைகளாக்குவதும் அவற்றின் மூலம் அரசியல் இலாபம் தேடுவது இந்த சமூக நலன் விரோத சக்திகளின் தொடரும் செயற்பாடுகளாகி உள்ளன.” என்கிறார்.

இறந்தவர்கள் சுயநலத்தினை துறந்து பொதுக் கோரிக்கைக்கான மடிந்தவர்கள். அரசியல் விமர்சனங்களுக்குப்பால் புலிகளால் ஏற்படுத்தப்பட்டது தான் இந்த மாவீரர் தினம். மேற் கூறியது போல, சமூகம் தான் சார்ந்த சொந்தங்களை நினைவு கூருவது மனித உரிமை சம்பந்தப்பட்டதாகும்.

அடிப்படை உரிமைகளை மறுத்துக் கொண்டு அடங்கி வாழ் என கூறுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை.

மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டங்களையும், உணர்வுகளையும் தரம் தாழ்த்திப் பார்க்க வைப்பது சுரண்டும் வர்க்க சிந்தனையாகும். அபிவிருத்தி என்றும் சோற்றுக்கு நிகராக மக்களின் உரிமையை தரம் தாழ்த்தும் உரிமை எவருக்கும் இல்லை.

தெற்கில் 1971, 1989களில் கொல்லப்பட்டவர்களுக்கு நினைவு கூர்கின்றார்கள். அந்தப் பகுதியில் அனுமதித்து விட்டு, புலிச் பூச்சாண்டி காட்டி வடக்கு-கிழக்கில் உரிமையை மறுப்பதன் மூலம், இனத்துவ ஒற்றுமையை சிதைக்கும் பாகுபாட்டு அரசியல் என்பதை மாண்புமிகு அமைச்சர் புரிந்து கொள்ளவில்லை. இது அவர் கூறும் இன ஐக்கியம், ஐக்கியப்பட்ட தேசம் என்ற கொள்கைக்கு அவரே உண்மையானவராக இல்லை என்பதையே பறைசாற்றுகிறது.

நிறைவாக:

தெற்கில் வளர்ந்து வரும் சக்திகளின் அரசியல் வளர்ச்சியில் குளிர்காயத் துடிப்பவர்கள் இலங்கையில் மாத்திரம் இல்லை. புலம்பெயர் தேசங்களிலும் இருக்கின்றார்கள். இவ்வாறான எதிர்புரட்சிகர சக்திகள் குறுந்தேசிய அடிப்படையில் இயங்கிக் கொள்வதன் மூலம் தமிழ் மக்களிடையே இனவெறியை விதைக்கின்றார்கள். இனவெறியை விதைப்பதன் ஊடாக தமது சமூக அந்தஸ்துக்களையும், புலிகள் விட்டுச் சென்ற சொத்துக்களை பாதுகாத்துக் கொண்டு சுகவாழ்வு வாழ்பவர்கள்.

இந்தச் சக்திகளுக்கு சமூகம் மாற்றம் தேவை என்பது இனம், மொழி, சாதி, வர்க்க பேதங்களைகளையும் நடைமுறை வேலைகளை மறுத்தவர்களாகவும், போலி முதலாளித்துவ ஜனநாயக சொற்சிலம்பம் என்ற குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களாகவும் இருக்கின்றார்கள்.

பழைய உழுத்துப் போன சிந்தனையை தேசியத்தின் பெயரால் கொள்ளையடிக்கும் பாராளுமன்ற அரசியல்வாதிகளின் போலி முகத்திரையை அகற்றிடுவோம்!.

இதேபோல தமிழ் மக்களிடையே உள்ள இனவாதச் சிந்தனையையும் தெற்கில் உள்ளவர்கள் எதிர்த்துப் போராடுவது போல தமிழ் முற்போக்குச் சக்திகளும் எதிர்த்துப் போராட வேண்டும்!.

2/12/2012