Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ் மாணவருக்கு குரல் கொடுக்கும் சிங்கள மாணவ தலைவர்களுக்கு, மஹிந்த அரசினால் அச்சுறுத்தல்கள்!!


யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இலங்கை அரச படைகளின் அடவாடித்தனங்களும், மாணவர் தலைவர்களை கைது செய்வதும் தொடரும் நிலையில், தென்பகுதி மாணவ அமைப்புகள் ஒன்றாக இணைந்து நாடு தழுவிய போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் வேலையில் இறங்கியுள்ளன.


இந்நிலையில், தென்னிலங்கை மாணவ  அமைப்பு தலைவர்களுக்கும், அவற்றின் செயற்பாட்டாளர்களுக்கும் அரசபடைகளின் புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தல்கள் விடப்பட்டிருக்கிறன. அவ் அச்சுறுத்தல்கள் தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும், பல்கலைக்கழகங்களின் தலைமைகள் ஊடாகவும் விடப்பட்டுள்ளது.

யாழில் நடக்கும் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக ஊடக பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகங்களுடனான சந்திப்பைக் கூட  அரசகைக்கூலிகள் தடுக்க முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.  மக்கள் நலனை முன்னிறுத்திப்  போராடும் சிங்கள மக்கள் சக்திகளை யாழ்பாணத்திற்குள் நுழைய விடாது கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.     

யாழில் நடத்திவரும் ஒடுக்குமுறை ஆட்சி  எவராலும் கவனிக்கப்படாது என்ற நினைப்பில், தாம் விரும்பியபடி சில தமிழ் அடிவருடிகளின் துணையுடன் தம் ஆதிக்கத்தை நிலை நிறுத்தலாம் என நினைந்த அரச பாசிசம், தென்னிலங்கையில் யாழ் மாணவர்களுக்காக போராடும் சக்திகளை கண்டு மிரண்டு போயுள்ளது. வடக்கிலும் தெற்கிலும் ஒன்றுபட்டு மக்களும், மாணவரும் திரண்டெழுந்தால், என்ன செய்வதென்று இப்போதே திட்டமிட தொடங்கியுள்ளது மஹிந்த பாசிச அரசு.


இது ஒருபுறமிருக்க,  EPDPயில் இருந்து  குதிரை-கஜேந்திரன் ஈறாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) வரை, அனைத்துத் தமிழ் அரசியல்வாதிகளும் இந்தக்  குழம்பிய அரசியற் குட்டையில்  மீன்பிடிக்க முயல்கின்றனர். கூடுமானவரை தமிழ்மக்கள், மக்கள் நலம் சார்ந்து போராடும் சிங்கள சக்திகளுடன் இணைந்து விடக்கூடாது என்பதில் , மஹிந்த பாசிச அரசைப் போலவே மிகக் கவனமாக செயற்படுகின்றன தமிழ் அரசியற் கட்சிகள். ஏன் சில இடதுசாரிகள் கூட, குதிரை-கஜேந்திரனுடன் தம்மை  இணைத்துப்  போராட தயாராகவுள்ள போதும், சிங்கள இடதுசக்திகளுடன் இணய ஆயிரம் காரணங்கள் சொல்லி தப்பித்த வண்ணமேயுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் நலம் சார்ந்த புலம்பெயர் சக்திகள், இன உறவை மேம்படுத்தி, இன ஒடுக்குமுறையை எதிர்ப்பதுடன் தேசவிடுதலைக்கான போராட்டத்தில் புதிய யுத்தியை முன்னெடுக்கும் அரசியல் சக்திகளை வளர்த்தெடுக்க உதவ வேண்டும்.