Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக யாழ் மீனவர் ஆர்ப்பாட்டம்

இலங்கையின் வடகடலில் அத்துமீறி பிரவேசித்து இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களைத் தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று வியாழக்கிழமை யாழ் மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றார்கள்.

இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் தமது வலைகளை அறுத்து நாசம் செய்வதாகவும், இதனால் தாங்கள் தொழிலில் ஈடுபட முடியாதிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்திய இழுவைப் படகுகள் வாரத்தில் நான்கு அல்லது ஐந்து தடவைகள் வந்து தமது கடல் வளம் முழுவதையும் அள்ளிச் செல்வதனால், தமது மீன் வளங்கள் பாதிப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கத்திடம் மீனவ பிரதிநிதிகள் கையளித்துள்ளனர்.

இது குறித்து உடனடியாக இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுப்பதாக இந்திய துணைத் தூதுவர் தம்மிடம் உறுதியளித்திருப்பதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இந்த மகஜரின் பிரதிகள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளன.