Tue05262020

Last updateSun, 19 Apr 2020 8am

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் கூட்டு அறிக்கை


தென்னிந்தியாவில் இலங்கைக்கு  மிக அருகில் கூடங்குளம்  பிரதேசத்தில்  நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்  அணுவுலைகள் இந்திய மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் இரு நாட்டின் சூழலுக்கும் பெரும் ஆபத்தை தோற்றுவித்துள்ளது. அணு உலை விபத்துக்கள்  ஏற்படுத்திய அழிவுகள் நினைவுகளை கடந்து பரம்பரை பரம்பரையாக தாக்கங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான அழிவுகளில் இருந்து எம் எதிர்கால பரம்பரையை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும். ஏழை விவசாயிகளின், மீனவர்களின், தொழிலாளர்களின் நலன்களிற்கெதிராக செயற்பாடுகள் மனிதாபிமானத்தை கொண்டிருப்பதில்லை. மில்லியன் கணக்கான பிராந்திய மக்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் அபாயகரமான மனிதாபிமானமற்ற மிலேச்ச தனமான கூடங்குளம் அணு உலைகளுக்கெதிராக போராட்டம் முன்னெடுக்ப்பட வேண்டியது அவசியமானதாகும்.

இலங்கை ஆட்சியாளர்கள் இந்த விடயம் தொடர்பான சகல் விடயங்களையும் மக்களுக்கு மறைத்துள்ளனர். வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாண பிரதேசங்களில் வாழும் மக்களின் உயிர் வாழ்வும், முழு நாட்டு மக்களும் இன்னுமொரு வகையிலும்  பாரிய ஆபத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த அவலங்களிற்குள் பெற்றுக்கொள்ளக் கூடிய இழப்பீடு தொடர்பாக இலங்கை அரசு இந்திய அரசுடன் வட்ட மேசை பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்க்கையை ஆபத்திற்குள் தள்ளி பெற்றுக்கொள்ள கூடிய இழப்பீடு தொடர்பாக பேரம்  பேசுவது ஆட்சியாளர்களிடம் மனிதத்துவம் துளியளவும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.


இலங்கை தீவிற்குள் போராட்ட களத்தில் நிற்கும் நாம், எம் தோழமை கரத்தை உலகை நோக்கி நீட்டியிருக்கின்றோம். அணு உலைகளுக்கு எதிரான இந்திய மக்களின் போராட்டத்துடன் நாமும் கைக்கோர்க்கின்றோம். அவர்களின் உயிர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு தொடர்பாக பேரம் பேசுவதை கடுமையாக கண்டிக்கின்றோம். மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய இந்திய அரசு  தென்னிந்திய மக்களின்  விவசாய நிலத்தை, வாழ்வாதாரத்தை, உரிமையை பறித்தெடுத்து உரிமைக்காக குரல் எழுப்பிய நிராயுதபானிகளான மக்கள் மீது மேற்கொண்ட அடக்கு முறையை வன்மையாக கண்டிக்கின்றோம்.


இயற்கையாக எமக்கு கிடைக்கப்பெற்ற அனைத்தையும் பகிர்ந்து கொள்வதன் மூலம் இயற்கையை பாதுகாத்து ஒரே குடும்பமாக சுதந்திரமாக வாழும் கனவை நனவாக்கும் வகையில் உலக வாழ் மக்களின் போராட்டங்களுடன் ஒன்றினையும் நாம், நில ஆக்கிரமிப்பு, இலாபத்தை பெறுவதற்காக மனித குலத்தை அடிமைபடுத்தி மனித சாரத்தை உறிஞ்சும் துஷ்டர்களின் அதிகாரத்தை எல்லாவற்றிற்கும் முன்பாக அழித்தொழிக்கப்பட வேண்டும் என நம்புகின்றோம்.


இந்த ஆபத்துக்களின் மத்தியில் தற்போதைய மனித சமுதாயத்திற்கு சகோதரத்துவம், சகவாழ்வு என்பவற்றினூடாக பூமியில் சமமான முறையில் அனைத்தம் பகிரப்படும் புதிய வாழ்க்கை முறை இன்றியமையாததாகும். நூற்றாண்டு காலமாக அவநம்பிக்கை. ஏமாற்றம் மற்றும் வன்முறை மூலம் பிரித்தாளப்பட்ட தந்திரம் அதனை தொடர்ந்த அடிமைப்படுத்தல் என்பவற்றை உடைத்தெறிந்து சுதந்திரமான ஆக்கபூர்வமான சிந்தனைக் கொண்ட மனிதாபிமானமிக்க மனித சமுதாயத்தை உருவாக்கிட வேண்டியது அவசியமானதாகும்.


ஆகவே, கூடங்குளம் அணு உலைகள்  பின்னாலிருக்கும் மனித விரோத, ஜனநாயக விரோத மற்றும் சூழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு  கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் நாம் அந்நடவடிக்கைக்காக வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் ஒன்றினைந்திருக்கின்றோம். அதற்காக சகல தடைகளையும், சவால்களையும் கடந்து ஒற்றுமையுடனும், தோழமையுடனும், அர்ப்பணிப்புடனும், உறுதியுடனும் அணிதிரள்வோம். கீழே கையொப்பமிட்டுள்ள நாம் கூடங்குளம் அணுஉலைகள் ஏற்படுத்தியிருக்கும் அபாயத்தை எதிர்த்து போராடுகின்றோம் என்பதை பகிரங்கமாக அறிவிக்கின்றோம்.


கூடங்குளம் அணு உலைகள் ஏற்படுத்தியிருக்கும் ஆபத்து தொடர்பான தெளிவை பெறுவோம் !


கூடங்குளம் அணு உலைகள் ஏற்படுத்தியிருக்கும் ஆபத்தை எதிர்த்து அணிதிரள்வோம் !


ஆட்சியாளர்களே, இந்திய அரசுடன் ஏற்படுத்திய இரகசிய உடன்பாட்டை வெளிபடுத்து !


கருணாதாச முனகம
மிகிந்தலை நட்புறவகம்
........................................................
துமிந்த நாகமுவ
மக்கள் போராட்ட இயக்கம்
............................................................
சுரேந்திர அஜித்
இலங்கை மாவோவாதி கம்யூனிச கட்சி
...............................................................

வங்கீஸ் சுமனசேகர
மத்தியநிலையம்
.......................................................