Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சுயநிர்ணய உரிமை.

புலம்பெயர்ந்த புத்திஜீவிகளின் விவாதத்திற்கான சுவாரசிய கருப்பொருளா...?

சுரண்டல், ஒடுக்குமுறை, ஏமாத்து, சுத்துமாத்து, ஸ்பெசலாக ஏகாதிபத்தியம் மற்றும் உலக மயமாக்கல் போன்றவற்றை புரிந்து கொள்ள நாங்கள் பேராசிரியர்களாகவோ இல்லை பல்கலைகழகம் சென்றவர்களாகவோ இருக்க வேண்டியதில்லை. நாம் சராசரி மனித வாழ்க்கையிலேயே இவற்றை அனுபவித்து வருகின்றோம். உதாரணமாக சிலர் தமது வாழ்வு முறையில் ஒரு முழுமையான பிற்போக்குவாதியாக வாழ்ந்தாலும் தமது அறிவு நிமித்தம் ஒரு கலந்துரையாடலில் தான் ஒரு பரிபூரணமான முற்போக்குவாதியாக காட்டிக்கொள்ள முடியும். அதே நேரம் ஒரு பாமரன் அல்லது ஒரு அப்புராணி தன் நிஜ வாழ்வில் முற்போக்காக வாழ்ந்தாலும் தனக்கு முற்போக்காக வெளிப்படுத்தத் தெரியாத காரணத்தால் பிற்போக்கு வாதியாக அடையாளப்படுத்தப்படுகின்றான்.

இன்று நடக்கின்ற சுயநிர்ணயம் பற்றிய விவாதம் இந்த வகையில்தான் என்னால் பார்க்க முடிகின்றது. ஒரு ஒட்டு மொத்த சமூக அழிவினை அல்லது சமூக முன்னேற்றத்தை கருத்துக்கு எடுக்காமல் தமது ஈகோ என்ற ஆணவத்தின் பால் தீர்மானித்த கருத்தாக்கமாக்குகிறார்கள்.

ஓரு விடயத்தை மாற்றான உதாரணமாக கற்பிதமாக்கினால் இப்புரிந்து கொள்ளல்கள் எப்படி அமையும் என பார்ப்போம். . !

-அயர்லாந்தின் பிரிவினை கோரிக்கையின் போது மாக்ஸ் பிரிந்து போதல் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை . . . என்று வைத்து கொள்வோம். –

-நோர்வே, சுவீடன் நாடுகளில் அப்படி ஒரு பிரிவினை பிரச்சனை நடைபெறவில்லை, அல்லது அந்தக்காலங்களில் அப்பிரிவினை பற்றி அன்றைய இடதுசாரிகள் எந்தக் கருத்தையுமே முன்வைக்கவில்லை என்று வைத்து கொள்வோம். –

-சோவியத்துக்களை பலமான கூட்டமைப்பாக இணைத்து வைத்திருக்கும் பொருட்டாக லெனின் சுயநிர்ணய உரிமையை பிரேரிக்கவேயில்லை, (பிரிந்து போவதுடன் கூடியதோ இல்லை பிரிய முடியாததுடன் கூடியதோ) என்று வைத்துக்கொள்வோம். –

-வரலாற்றில் இப்படியான நிகழ்வுகளோ, சுயநிர்ணயம் போன்ற தீர்மானங்களோ தோன்றவேயில்லை என்று வைத்துக்கொள்வோம்-

இப்போது இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் தேசம் ஒன்றில் பெரும்பான்மையுடன் மற்றைய சிறுபான்மை இனங்கள் பாதுகாப்பு, அத்து மீறிய குடியேற்றங்கள், சிவில் நிர்வாகம் மற்றும் நீண்ட காலமாகவே இனங்களுக்கிடையே சமமற்ற உரிமை நிலவுகின்ற நிலமையில் என்ன தேவை, என்ன செய்ய வேண்டும்... ?

இப்படியான நிலமையில் வரலாறின் தொகுப்புக்களை ஆயுதங்களாக தூக்கிப்பிடிக்காமல் யதார்த்த நிலமைகளை வைத்து நேர்மையாகவும் நேரடியாகவும் விவாதிக்க முடியாதா . . . என்பதே இங்கு கேள்வி.

இனங்களிடையே அதிகாரப்பகிர்வு என்ற தீர்வு பற்றி ஆரம்பிக்கையில் கடந்தகாலங்களில் ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள், ஒப்பந்தங்கள் இவற்றுக்கு என்ன நடந்தன என்று விவாதிப்பது அவசியம் தான்.

இப்போது வரக்கூடிய அதிகாரப்பகிர்வுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கலாம் என்று விவாதிப்பதும் அவசியம் தான்.

பிரிந்துபோதலுடன் கூடிய சுயநிர்ணய உரிமை சிறுபான்மை இனங்களுக்கு உண்டு என்று தமது கட்சியின் யாப்பில் வைத்திருக்கும் கட்சிகள் இருக்கலாம். மேலும் பல முற்போக்கான சிறு சிறு குழுக்களும் இதனை தமது யாப்பில் கொண்டிருக்கலாம்.

சில பலம்வாய்ந்த வலதுசாரிக்கட்சிகள், தாராளவாதக்கட்சிகள் சிறுபான்மையினருக்கான உரிமையையோ இல்லை சுயநிர்ணய உரிமையையோ கொண்டிருக்காதது மட்டுமல்லாமல் வெளிப்படையான இனவாத கொள்கைகளை தமது கட்சி யாப்பில் கூட வைத்திருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சமகாலத்தில் போராட்டம், இனஉரிமை போன்ற சொற்களைக் கூட கேட்பதற்கு திராணியற்று சராசரி அரசியல், வாழ்வுரிமை என்பவற்றை அதாலபாதாளத்தில் போட்டு எரித்து விட்டு தன்னையும் அழித்துக்கொண்டது தமிழ்த்தேசியம்.

எனவே பிரிவினை, சுயநிர்ணயம், பிரதேச சுயாட்சி என்று எத்தனையோ தீர்வுத்திட்டங்கள் இருந்தாலும் அவற்றைச் அரசியல் சதிராடுவதற்கு பாவிக்கப்படும் சொற்பதங்களாக்குவது தவிர்க்க வேண்டும்.

ஊதாரணமாக சுயநிர்ணயம் என்ற அம்சத்தை பார்க்கத்தான் வேண்டுமென்றால் அது கொண்டுள்ள இன சம உரிமைக்கான கூறுகளை ஆராய்வோம். அவை எந்தக்கட்சியின் வேலைத்திட்டத்துடன் உள்ளடக்கப்பட்டுள்ளன? என்பதைவிட அவைக்கான நடைமுறை வேலைத்திட்டத்தோடான போராட்டமாக எந்தக்கட்சியால் மேற்கொள்ளப்படுகிறது என்பதை நேர்மையான விமர்சனக் கண்ணோட்டததுடன் அவதானித்து ஆதரிக்க வேண்டும்.

யாரோ முணுமுணுப்பது கேட்கிறது “வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளல் இல்லை வரலாற்றிலிருந்து வளர்த்துக்கொள்ளல்” என்பதை நிராகரிப்பதோ...? என்று. நிச்சயமாக இல்லை. யதார்த்தத்தினூடாகவும் கணக்கிட வேண்டும் என்பதே இங்கு கோரிக்கை.

சந்திரிகாவின் பொதி அல்லது இடைகால நிர்வாகசபை போன்ற விடயங்களை இனப்பிரச்சனைக்காக கையாள தெரியாத தமிழ் குறுந்தேசியவாதம் தானாக பெரும் மக்ககள் தொகையுடன் அழிந்தது. இதன் அடிப்படை மறுபக்கத்தில் சிங்கள இனவாதத்திடம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பாவிப்பது என்பதல்ல. சிங்கள தமிழ் மக்களின் மோதல் என்பது இந்திய பிராந்திய வல்லரசின் தேவைதான் மட்டும் என்பதைவிட. இந்திரா காங்கிரஸின் குறளிவித்தையும் தான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய மாநிலங்களில் பலவற்றில் பிரிவினைக்கான போரட்டங்கள் நடந்தன, நடக்கின்றன. தமிழ்நாடு உட்பட தென்மாநிலங்களில் திராவிடநாடு கேட்டார்கள். இப்படியான நிலமையில் இந்திய மாநிலங்களிற்கு பிரிவினைக்கான தேவைகள் இருக்கின்றனவா. . ?

தமிழ் நாட்டு மக்களின் தமிழ் உணர்வுகளை பாவிக்கும் சீமான் போன்றோரிடம் கேட்கவேண்டிய கேள்வி...! ஏன் இந்திய மாநிலங்களின், தமிழ்நாடு மாநிலத்தின் பிரிவினைக்கு போராடுவதற்கு முன்னர் தமிழ்ஈழ பிரிவினை கோரிக்கையின் மேல் ஏன் இவர்களுக்கு இவ்வளவு அக்கறை.

சிறுபான்மை இனங்கள் பெரும்பான்மையினத்தைபோல் அனைத்திலும் சமஉரிமை பெற்று வாழவேண்டும் என்பதே அவசியம். அத்தோடு ஒட்டு மொத்த இலங்கையில் மலர வேண்டிய அரசியல், சமூக, வர்க்க மாற்றங்களிற்கு இந்த சிறுபான்மை இனங்களிற்கான சம உரிமை என்பது முன்னிபந்தனையுமாகும். உலகத்தையே ஆளுகைக்குள் வைத்து இருந்த அமெரிக்க தேசியம் ஜரோப்பிய தேசியங்களையெல்லாம் பின்தள்ளியிருக்கும் சர்வதேசிய சந்தை தேசியம் தோற்கடிக்கப்படுவதற்கும் இது முன்னிபந்தனைதான்.

-16/11/2012