Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அதிகாரத்தினை மையப்படுத்தலும் மாகாணங்களை குறுங்குதலும்!!!

ஆட்சியில் முழு அதிகாரத்தினையும் தமது கைகளில் வைத்துள்ள ராஜபக்ச சகோதரர்கள்; தாம் மக்களில் இருந்து அன்னியப்படுகின்ற போது மக்களை தூண்டி விடுவதன் மூலம் அரசியல் லாபம் பெறுகின்றனர். இதனால் பெருதேசிய சிந்தனைகளை முன்னோக்கி நகர்த்தும் நிகழ்வுகள் பல்வேறு முனைகளில் நடந்தேறுகின்றன. இதன்விளைவாக இனங்களுக்கிடையாயேன முரண்பாடுகளையும், சந்தேகங்களையும் தொடர்ச்சியாக வைத்திருப்பதற்கு ஆளும் கட்சி தொடர்ச்சியாக செயற்படுகின்றது. இதனை புரிந்து கொள்வதன் மூலம் தொடர்ச்சியான பல நிகழ்வுகளை அவதானிக்க வேண்டும்.

பேரினவாத கருத்துக்களை ராஜபக்ச சகோதரர்களான கோத்தபாய, பசில், வீரவன்ச, சம்பிக்க, தினேஸ் குணவர்தன ஆகியோர் மூலமாக அரசு பேச வைக்கிறது. இலங்கையில் இன்றுள்ள ஒன்பது மாகாணங்களை மூன்று மாகாணங்களாக மாற்றுவதற்கு இலங்கை அரசிடம் ஒரு சதித்திட்டம் உள்ளதாக அறியப்படுகின்றது. இந்த சதித்திட்டத்துக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச தலைமை தாங்குகிறார். அவருக்கு ஆளும் கூட்டணியின், சிங்கள தீவிரவாத பங்காளி கட்சிகள் துணை இருக்கின்றன. இவை அனைத்துக்கும் மகிந்த ராஜபக்சவின் ஆசீர்வாதம் உண்டு எனவும் அறியப்படுகின்றது. மேலும் பிரபா கணேசன் என்ற ஆழும் கட்சி உறுப்பினர் 13 திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் என்றால் தான் ஆழும் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.


மையங்கொண்ட அதிகாரம்:


இலங்கை அரசாங்கம் உள்ளுர் சபைகளுக்கான அதிகாரங்களை இல்லாதாக்குவதும், அதனை மைய ஆட்சியின் கீழ் கொண்டுவரும் திட்டத்தினை செயற்படுத்த முனைந்துள்ளது.  இதன் ஆரம்பமே திவிநெகும திட்டமாகும். ஏற்கனவே சர்வவல்லமை பொருந்திய ஜனாதிபதி முறை இலங்கையில் நடைமுறையில் இருக்கின்றது. இருக்கும் அதிகாரத்தின் ஊடாக நிர்வாகத்தை கட்டுப்படுத்த முடியும். பெயரளவிற்கு ஏனும் இருக்கும் மாகாணசபை,  மாநகரசபை, நகரசபை, பட்டினசபை போன்றவற்றின் அதிகாரத்தை இல்லாதாக்கும் செயலை அரசு ஆரம்பித்து விட்டது.


முதலாளித்துவ கட்டத்தில் ஏற்படுகின்ற அரசியமைப்பு வளர்ச்சியானது புதிய அதிகார நிர்வாகக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டு மக்களை நிர்வகிக்கின்றது. இங்கு முதலாளித்துவ நிறுவனங்களை உருவாக்குவதன் ஊடாக உள்ளுர் ஜனநாயகத்தை பெயரளவிற்கேனும் வழங்குகின்றது. இன்று அதிகாரம் மையம் கொண்டு செயற்படுவது பாசீசத்தின் உச்சத்து செல்கின்றதை இது காட்டி நிற்கின்றது. முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியானது உள்ளுர் மட்டத்தில் அதிகாரத்தை பகிர்கின்றது. முக்கியமான சட்டம், நிர்வாகம், நீதி, நிதி, இராணுவம், நிலம் தவிர்ந்த பல அதிகாரங்களை பட்டினசபை, நகரசபை, மாநகரசபை போன்றவற்றுடன் பகிர்ந்து கொள்கின்றது. இப்போ அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை உள்ளுர் சபைகள் வெறும் கண்துடைப்பிற்கும், பொம்மையாகவும் மாற்றப்படுகின்றது.


உள்ளுர் தேர்தலில் தெரிவு செய்யப்படுபவர்களின் அதிகாரம் பறிக்கப்படுகின்றது. இதில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்த நகர்வையே இனவாதிகள் செய்கின்றனர்.  


ஏற்கனவே  வடக்கு கிழக்கை சட்டரீதியாக பிரித்தனர், இப்போ 13 திருத்தச் சட்டத்தை பிரபாகரனே எதிர்த்தவர் என்கின்றனர். அந்த சட்டத்தினை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறும் பாதுகாப்புச் செயலாளர். இன, மத, மொழி, ஜாதி, பால் அடிப்படையில் இலங்கையில் எவருக்கும் சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார். இதனை புள்ளி விபர ரீதியில் நிரூபிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் சகல இனங்களையும் சேர்ந்த மாணவ மாணவியர் கல்வி பயின்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேவைகளில் எவருக்கும் ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என கோதாபய குறிப்பிட்டார். இவைகள் எல்லாம் கேலிக்குரிய ஒன்றுதான். இவர்களின் செயற்பாடாது, அரசியல் சாசனத்தின் ஊடாக உரிமைகளை உறுதி செய்யப்படுவது முதலாளித்துவ ஜனநாயகத்தின் கடமையாகும். இன்றைய செயற்பாடுகள் முதலாளித்துவ ஜனநாயக அடிப்படைக் கூறுகளை கேள்விக்குள்ளாக்கின்றது.


இனவாதத்தை வளர்ப்பது:


இங்கு மாகாணங்களை குறைத்து சிங்கள மக்களை பெரும்பான்மை கொண்ட மாநிலங்கள் ஆக்குவது இனத்துவ பேதங்களை அதிகரிக்கவே செய்யும். சிங்கள, தமிழ் தேசிய இனங்கள் தொன்மை கொண்ட வரலாற்றைக் கொண்டது. சிங்கள மக்கள் ஆரிய இனம் என்ற பெருமையைக் கொள்கின்ற போதிலும் சமூக வளர்ச்சிக் நோக்கில் பார்க்கின்ற போது, இவை ஒரு கருத்துருவம் மட்டும் தான். ஆனால் சிங்கள தேசிய இனம் என்பதும் பழமையானது என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். 1960களில் இலங்கையில் நடைபெற்ற மொழி மாநாடு ஒன்றில் தமிழுக்கும், மலையாளத்திற்கும் இடையில் பிறந்த குழந்தைதான் சிங்களம் என்பார் மொழி அறிஞர் காலம் சென்ற வணபிதா டேவிட் அடிகளார். அவர் கூற்று ஏற்றுக் கொள்ளத்தக் ஒரு கருத்தாகும். மொழிகள் அன்றைய காலத்தில் ஏற்படுகின்ற ஆட்சிகளின் அனுசரனையுடன் வளர்க்கப்படுவதே மொழியாகும். மலையாளம் தனிமொழியாகி 1700 வருடங்கள் ஆகின்றது எனில் சிங்களம் அதற்கு முதல் உருவாகியிருக்கின்றது. எனவே சிங்களமும் தொன்மை மொழிதான். அந்த மொழியை அடிப்படையாகக் கொண்ட கலாச்சார, பண்பாட்டைக் கொண்டது சிங்கள இனமாகும்.


தொன்மை கொண்ட இனங்களை (Assimilate) கலப்பு இனமாக மாற்றுவது அவ்வளவு இலகுவானது அல்ல. இவ்வாறு கட்டாய இனக்கலப்பை ஏற்படுத்திக் கொள்ளவே முடியாது. நாம் சிங்கள் இனத்தை  எவ்வாறு தமிழ் இனத்தின் கீழ் கலப்புச் செய்ய முடியாதோ, அதேபோல தான் ஒரு இனத்தினை இன்னொரு இனத்துடன் இனக்கலப்பினை வலுக்கட்டாயமாக திணிக்க முடியாது.  இனங்களானது பெருமை கொள்கின்ற வரலாறு, மொழி, கலாச்சாரம், நிலப்பரப்பு என வாழ்ந்து வந்த இனத்தினை கட்டாயப்படுத்தி பனியவைக்க முடியாது.


1981களில் கட்டாய சிங்கள மொழிப் போதனையை பாடசாலைகளில் நிர்ப்பந்தித்த போது நாம் எதிர்த்திருந்தோம். ஆனால் நாம் இன்று புலம்பெயர் தேசங்களில் அன்னிய மொழியை கற்றுக் கொள்ளும் முரண்பட்;ட போக்கு இருப்பதைக் கவனிக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் ஒவ்வொருவரின் அடையாளத்தை ஏற்றுக் கொள்கின்றது. அடையாளத்தை ஏற்றுக் கொள்வதன் ஊடாக இந்தச் சமூகத்தில் (Integration) இணைத்துக் கொள்கின்றது. மொழி கூட பொருளாதார அமைப்பில் ஈடுபடுவதற்கு அவசியமானது என்பது ஒரு புறமிருக்க, இனங்களின் அடையாளத்தினை பாதுகாத்துக் கொண்டு வாழ்கின்றார்கள். பலதேசிய இனங்களைக் கொண்ட சுவீஸ்லாந்து நாட்டில் தேசிய இனங்கள் ஒரு அடையாளத்தினை ஒருவர் ஏற்றுக் கொள்வதன் ஊடாக சமாதானமாக வாழ்கின்றார்கள். ஒரு இனம் மற்றைய இனத்தை அழித்துவிடும் என்ற அச்சம் போக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு அரசியல் உரிமை கொண்ட மக்கள் கூட்டத்தினை கொண்ட ஒரு  நாடாக இலங்கை உருவாகுவதன் மூலமே இனங்கள் சமாதானமாக வாழ முடியும்.


இன்று கடற்கரையோர மக்கள் முன்னர் தமிழர்களாகவும், மலையாளிகளாவும் இருந்தவர்கள் இன்று சிங்களவர்களாக இருக்கின்றார்கள். இவை காலப்போக்கில் நடைபெறும் தேசிய இனப்பெருக்கமாகும். இவ்வாறு இருந்த போதிலும் மேற்கு கரையில் இருக்கும் தற்காலத் தமிழர்கள் தமது அடையாளம் நிர்ப்பந்தத்தின் மூலம் அழிக்கப்படுவதாக உணர்கின்றனர்.


இவ்வாறாக கட்டாய சிங்கள மயமாக்கல் இனத்துவ ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது.  ஏற்கனவே இராணுவக் குடியிருப்பையும், அதனைச் சுற்றிய பொருளாதாரத்தினையும் கொண்ட ஆக்கிரமிப்பு உள்ளது. இது நெடுங்காலமாக விதைக்கப்பட்ட இனவாதச் சிந்தனையை இன்றும் சமூகத்தில் ஆளஊடுவும். இவ்வாறான செயற்பாடுகளை இனத்துவ ஐக்கியத்தை கோரும் முற்போக்குச் சக்திகளுக்கும், உழைக்கும் வர்க்கத்தவர்களும் எதிர்க்கொள்ளும் சவாலாகும்.
இனவாதத்தை எதிர்ப்பது


இனவாதத்தினை கட்டமைப்பில் மாற்றம் கொள்ளவைப்பதன் ஊடாகவே முடியும்.  முழுச் சமூக அமைப்பில் இனவாதம் புரையோயோடிப் போயிள்ளது. இனவாத்தை இனவாத அரசு விதைக்கின்ற வேளையில் சிறியளவு பலமற்ற நிலையில் இருக்கின்ற முன்னிலை சோசலிசக் கட்சி இனவாதத்தை எதிர்த்து கட்டமைப்பில் மாற்றங் கொள்ளும் தந்திரோபாயத்தில் வேலைமுறையை மேற்கின்றார்கள். இவ்முயற்சி ஆதரிக்கப்பட வேண்டும். மேற்நிலையில் இருந்து வருகின்ற ஆதிக்க குரல்களை கீழ்நிலையில் இருந்து செயற்படுத்தப்படும் வேலை ஊடாவே எதிர்க்க வேண்டும். வேலைமுறையை ஆரம்பிக்காது விடின் மென்மேலும் இனவாதம் சமூகத்தில் ஆழவூடுருவி சாக்கடை சமூதாயமாகவே நிலைநிறுத்திக் கொள்ளும். ஏனெனில் இந்தச் மார்க்ஸ் கூறுவது போல எந்தச் உற்பத்தி முறைசார்ந்த சிந்தனை இருக்கின்றதோ அதே சமூகத்தின் சிந்தனை தான் எம்மையும் ஆட்கொள்கின்றது. அதாவது நாம் ஆதிக்கவர்க்கத்தின் சிந்தனையான பிற்போக்குச் சிந்தனையின் படியோதான் மனிதர்கள் சிந்திக்கின்றார்கள். ஆதிக்கவர்க்கச் சிந்தனையை எதிர்ப்பதும் மாற்றங் கொள்ளவைக்கும் சமூக மாற்றத்திற்கான போராட்டம் அவசியமாகும். சமூக மாற்றத்திற்கான போராட்டம் புரட்சிக்கு முன்னரும் பின்னரும் நடைபெறவேண்டும். இதன் ஊடாக மக்களை அரசியல் மயப்படுத்த முடியும்.


இடைநிலை அதிகார வர்க்கம்:


ஏகாதிபத்தின் இடத்தரகர்களாக இன்றைய ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். இதே போல இனவெறியரசின் கைக்கூலிகளாக உள்ளவர்களும், பாராளுமன்றத்தை நம்பி வாழும் இந்த சமூக அமைப்பின் தூண்களுக்கு பெரும் விளைவுகள் ஏற்படப் போவதில்லை. சம்பிரதாயத்திற்கு தேர்தல்கள் நடைபெறப் போகின்றது. இதன் மூலம் நிர்வாக அலகுகளின் சபை உறுப்பினர்களுக்கான ஊதியத்தில் எவ்வித மாற்றமும் இருக்கப் போவதில்லை. இதனை உணர்ந்தே அரசின் கைக்கூலிகளாக இருக்கும் கட்சியானது. சமுத்தி ஊழியர்களை இணைத்து ஒரு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தி செய்திருந்தனர். இனவாத அரசின் பாதங்தாங்கிகளுக்கு ஒரு இனத்தின் ஜனநாயகக் கோரிக்கைகள் பெரிய விடயமாக தெரிவதில்லை. ஏனெனில் இந்த சமூக அமைப்பை பாதுகாத்துக் கொள்ளும் இடைநிலை அதிகார வர்க்கம் சொத்துக்களை சேர்க்கின்றனர். இவர்கள் லஞ்சம், செயற்திட்டங்களை (Contractora) பொறுப்பெடுத்து செய்கின்ற பெறப்படும் லாப வேட்டைக்காக ஒரு இனத்தின் உரிமையை ஏலம் போடுகின்றார்கள். இவ்வாறான இடைநிலை வர்க்கமாக சுயலாபத்திற்காக செயற்படுகின்றார்கள்


ஏகாதிபத்தியவாதிகளுக்கும், பிராந்தியவல்லரசுகளுக்கும் இனவாதிகள் ஏவல் நாய்களாக இருக்கின்றனர். இதே போல சிற்றரசர்களாக இடைநிலை வர்க்கத்தவர்கள் ஏவல்நாய்களாக செயற்படுகின்றார்கள். உள்@ர் ஆட்சியாளர்களை கொண்டு மக்களை அடக்க பயன்படுத்தப் படுகின்றார்கள். தமிழர், முஸ்லீம், மலையக இடைத்தரகர்களும் சிங்கள இனவெறி அரச பாசீசத்திற்கு சேவகம் செய்கின்றார்கள். இனவாதத்தினை விதைத்து மக்களைப் பிரிக்கின்றார்கள், அடிப்படை ஜனநாயகத்தை மக்களிடம் இருந்து பறித்தெடுக்கின்றார்கள்.


இடசாரிகளினதும் ஜனநாயக சக்திகளின் கடமைகள்


இன்று பாசீச அரசமைப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்கான அனைத்து செயற்பாடுகளையும் இனவெறியரசு செய்கின்றது. இதில் அனைத்து இனமக்களின் உரிமைகள் பேணப்பட வேண்டும் என்றால் இந்த சமூக அமைப்பு மாற்றமடைய வேண்டும். இவைகள் ஒரேயடியாக ஏற்படப் போவதில்லை. முதலில் பாசீசத்தினை எதிர்ப்பதற்கு அனைத்து சக்திகளும் ஒன்றுபட்டு போராடுவது அவசியமாகும்.  இணைந்து போராடுவதன் ஊடாக குறைந்தபட்டசம் முதலாளித்துவ நிறுவனமயப்பட்ட உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.