Wed05272020

Last updateSun, 19 Apr 2020 8am

சிறைக்கொலைகள்

1983 யூலை 25 அன்று 53 போராளிகளை இனவாத காவலாளிகளும், கைதிகளும்  இனவாதத்தினால் உந்தப்பட்டு தாக்கி கொலை செய்தனர்.  இது அரசியல் ரீதியான கிளர்ச்சியினால் ஏற்பட்ட இன முரண்பாடுகளை முன்வைத்து நடத்தப்பட்ட தாக்குதல். இவ்வாறே இந்த வருடம் வவுனியாவில் சிறைக்கைதிகளை கண்மூடித்தனமாக தாக்கியது இந்த இனவாதம். வவுனியாவில் மேற்கொண்ட தாக்குதலால் கைதிகளால் நடத்தப்பட்ட அரசியல் கோரிக்கை கொண்ட போராட்டம் முடக்கப்பட்டது.

10.11.12 அன்று வெலிகடை சிறைக் கைதிகள் ஆயுதக் களஞ்சியத்தை உடைத்து, ஆயுதங்களை எடுத்து கலகத்தில் சிறைக்கைதிகள் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 27 ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தினார் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர் எம்.எஸ்.சதீஸ்குமார்.


வெலிக்கடை சிறை மோதலில் பலியானோர் தொகை 16 என நள்ளிரவு தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் சிறைச்சாலைக்குள் இருந்து இன்று மேலும் 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டார். காயமடைந்தோரின் எண்ணிக்கையும் 47 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கைதிகளுக்கும் படையினருக்குமிடையில் ஏற்பட்ட மோதல் நிலை, விசேட இராணுவ கொமாண்டோக்களின் அதிரடி நடவடிக்கையின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கை:


வன்னி யுத்தத்தில் தங்களது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிய முடியாமலும் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்பதைக் கூட அறியமுடியாமலும் ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்கள் தவிக்கின்றன. பலர் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற கருத்து பெரும்பாலும் நிலவுகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் பற்றி விசாரணையோ அல்லது உரிமையே அற்று இந்தக் காலத்தில் ஆயிரம் ஆயிரமாய் தமிழர்கள் இரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்களை வெளியிட மறுக்கின்றது இலங்கை அரசு.   


உரிமைக்காக போராடிய நிமலரூபன், மரியதாஸ் டில்ருக்சன் ஆகியோர் வவுனியா சிறையில்  அடித்துக் கொன்றனர். அதனை ஒரு வெறும் சிறைக்கலமாக பார்க்க முடியாது.


வெலிக்கடை சிறைச்சாலை சம்பவத்தில் பாதுகாப்பு பிரிவினர் சுயபாதுகாப்பைவிட தாக்குதல் குணத்துடனேயே கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முன்னணி சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது. நிலமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பொருட்டு இராணுவமும் விசேட படையணிகளும் சிறைச்சாலைக்குள் அனுப்பட்டன. இங்கு யுத்தநிலைக்கு ஒப்பான பதட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சிவில் நிர்வாக சேவையைச் செய்ய வேண்டிய இடத்தில் ஆயுதப்படைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.


ஆயுதப்படைகளின் பயன்பாடும், சுதந்திரமாகவும் கட்டுக்கடங்காத இராணுவ வழிச் செயற்பாடுகளும் ஊக்குவிக்கப்படுகின்றன. இவ்வாறு கட்டுக்கடங்காத இராணுவாதம் பாசிசத்தின் வெளிப்பாடுகள் அரசிடம் இருந்து வருவது குறைந்தபட்ச ஜனநாயகத்தை இல்லாததாக்கும் ஒரு வெளிப்பாடாகும்.


சிறிலங்கா அரசு தமிழ் மக்களின் மீது மட்டும் தான் தனது ஒடுக்குமுறையை விஸ்தரிக்கவில்லை. தனது சொந்த இனத்தின் மீதும் ஒடுக்குமுறையை விஸ்தரிக்கின்றது. சிறைச்சாலையில் வாழ்பவர்களும் மனிதர்கள் என்ற நிலையில் பார்க்கப்பட வேண்டும்.

கைதிகளின் உரிமைகள்:


சிறையில் இருப்பவர்கள் அனுபவிக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் இருக்கின்றது. ஒரு மனிதன் வாழ இருப்பதற்கான உணவு, உடை, இயற்கை உபாதைகளை தீர்ப்பதற்கான வசதியற்ற நிலையில் தான் சிறை இருக்கின்றது.  தரமான உணவு தேவை என்றால் சிறையில் இருப்பவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றனர். இந்த வசதியை ஏற்படுத்திக் கொள்ள சிறையதிகாரிகளின் உதவி தேவைப்படுகின்றது. சிறையதிகாரிகளைச் சமாளிப்பதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்.


தூங்குவதற்கு சிறையில் தரமான இடம் தேவை என்றால் கூட லஞ்சம் கொடுக்க வேண்டும். லஞ்சம் கொடுக்கும் பட்சத்தில் ஓரளவிற்கு தரமான இடம் கிடைக்கும்.
கழிப்பறை அல்லது குளியல் வசதி கூட இவ்வாறே லஞ்சம் கொடுக்கும் பட்சத்தில் ஓரளவிற்கு அனுபவிக்க முடியும்.


மேலும்; எவ்வளவு லஞ்சம் கொடுக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே சிறைக்கைதிகள் வசதிகள் அமையும். இதனால் சிறையில் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் அதிகரிக்கின்றன. சிறைச்சாலைகளில் போதைவஸ்து புளக்கத்தில் உள்ளது. சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் ஊழல், லஞ்சம் போன்றவற்றை  வளர்க்கின்றன.


சட்டத்தினால் உறுதிப்படுத்தப்பட வேண்டிய உரிமைகளை குறுக்குவழியில் பெறவேண்டிய நிலையில் இன்றைய இலங்கை சிறைச்சாலைகளில் நாம் காண்கின்றோம். சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் மூலம்  அதிகாரிகள் ஊழல் பெருச்சாளிகளாக மாறிப்போயுள்ளனர். ஊழலின் காரணமாக அதிகாரிகளின் பின்னால் பெரும் பணம் புளக்கத்துக்குள் வருகின்றது. சிறையதிகாரிகளின் கூட்டு ஒப்பந்தத்தில் ஏற்பட்ட மோதலின் விளைவே இதுவாகும்.  


ஓரு தாய் தனது மகனுடன் சிறைக் கலவரம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட இரவு 11.30 மணிக்கு பின்னர்  தொலைபேசியில் பேசியதாகவும், மகன் இருந்த சிறைக்கூடம் பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளதால் தனக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று மகன் கூறியதாக தெரிவித்துள்ளார். அதே சிறைக் கூடத்தில் இருந்த மற்றையக் கைதிகளும் தமது குடும்பத்துடன் அதிகாலை 4 மணி வரை தொடர்பில் இருந்துள்ளனர். இதன் பின்னரே சிலர் சுட்டுக் கொல்லப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் உரிமை:

சிறை என்பது மனிதர்கள் திருந்துவதற்கான சந்தர்ப்பத்தினை கொடுக்கும் இடமே. ஆனால் சிறை செல்கின்ற மனிதர்களை குற்றவாளிகளாவே தொடர்ந்தும் பார்க்கும் ஒரு சமூகமே எமது சமூகம் உள்ளது. பொதுப் புத்திக்கேற்ப சிறையில் இருப்பவர்கள் எல்லாம் குற்றவாளிகள் என முத்திரை குத்தப்படுகின்றது.  குற்றவாளிகள் என்றாலும் அவர்களும் மனிதர்களே. மனிதர்களுக்கான உரிமையை கொடுக்க வேண்டியது அவசியமாகும். குற்றம் செய்தவர்கள் பலகாரணத்திற்காக  சிறைத் தண்டனையை அனுபவிக்கின்றனர்.


அரசியல் கைதிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய உரிமைகள் உறுதிப்படுத்த வேண்டும். சிறையின் தரம்  உயர்த்தி அன்றாட கருமங்களை பெற்றுக் கொள்ள வசதிகளை ஏற்படுத்திக் கொள்வது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.


தமிழ் கைதிகள் எவ்வித விசாரணையும் இன்றி; பல ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். தமிழ் கைதிகளை நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் படியாக ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றத்திற்கு கொண்டுவரக் கூட வக்கற்றதாக  தமிழ் கைதிகளின் அவலம் இருக்கின்றது.

சிறைச்சாலைகள் குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கி சமூகத்தில் மீள இணைப்பதற்கு பதிலாக மென்மேலும் குற்றவாளிகள் உருவாகவும் இந்த சமூக்தின் மீது அவர்களை வெறுப்படையவும் வைக்கும் சீரழிந்த இடங்களாக மாறிப் போயுள்ளன. தமது உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்வதற்கான போராட்டத்தில் சிறைகளில் கலகங்களில் ஈடுபடவும் செய்கின்றனர். சிறையில் இருக்கின்றவர்கள் எல்லாம் குற்றவாளிகள் என்ற எமது பொதுப்புத்தி அவர்களின் உரிமையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. தமது உரிமையை கேட்டே வவுனியாவில் எதிர்த்துப் போராடினார்கள். வவுனியாவில் இருந்த கைதிகளை அனுராதபுரத்திற்கு கொண்டு சென்று அங்கு அவர்களை துன்புறுத்தி கொன்றதுடன், அங்கவீனர்களாகவும் ஆக்கியுள்ளனர்.