Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வரவு செலவுத் திட்டம்- பழைய மொந்தையில் புதிய கள்

alt2013க்கான வரவு செலவு அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நேற்று நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. எப்போதும் போல இந்த வரவு செலவு திட்டமும் பாமர மக்களுக்கோ நடுத்தர வர்க்க மக்ளுக்கோ எவ்வித நிவாரணங்களையும் வழங்கியதாகத் தெரியவில்லை.

எல்லா முதலாளிகளும் ஏகோபித்த குரலில் வரவேற்கும் பட்ஜெட்டாகத்தான் இது இருக்கப் போகிறது. வெளிநாட்டு செலவானி கட்டுப்பாடுகளைக் கவனியாது தனியார் வங்கிகளுக்கு வெளிநாட்டுக் கடன் பெறுவதற்காகத் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகத் தான் தெரிகிறது.

ஆனால், ஆளும் கட்சியும் அதன் பங்காளிக் கட்சிகளும் இதற்கு ஏகோபித்த பாராட்டுக்களை வழங்கப்போவது என்னவோ உண்மை. அரசாங்கத்தின் ஊதுகுழல்களான ஊடகங்களும், கொஞ்சம் அடக்கி வாசிக்கும் பத்திரிக்கைகளும் எதிர்ப்பைக் கொஞ்சமாக காட்டிவிட்டு வழமை போல சில குறைபாடுகள் இருந்தாலும் இம்முறை வரவு செலவுத்திட்டம் இன்றைய நிலையில் நாட்டுக்கு பொருத்தமான வரவு செலவுத் திட்டம் இதுதான் என்று கொண்டாடப் போகின்றன.

இந்த நிலையில் இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டு மக்களுக்கு என்ன நண்மைகளை தரப்போகிறது? மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுமா? அந்தரத்தில் தொங்கும் வாழ்க்கைச் செலவு ஆகாயத்துக்கே சென்று விடுமா? என்று மக்கள் யோசிக்கிறார்கள். மக்கள் எப்போதும் யோசித்துக் கொண்டு தானே இருப்பார்கள். அவர்கள் யோசிக்கத் தொடங்கி பல வருடங்களாகிவிட்டன. இன்னும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். என்றுதான் விழிக்கப் போகிறார்களோ.. தெரியாது.

அது போகட்டும். நாட்டின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது? நாளுக்க நாள் விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது. உணவுப் பண்டங்களின் விலை எக்கச் சக்கமாக ஏறிக் கொண்டே இருக்கிறது. நேற்று எடுத்த விலைக்கு இன்றைக்கு பொருட்களை வாங்க முடியாது. நேற்றை விட இன்று விலை அதிகம். ஒரு வேளை சாப்பிட்டால் மறுவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற மனப் போராட்டத்தில் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கான செலவு அதிகரித்திருக்கிறது. பிள்ளைகள் புத்தகப் பையை சுமக்கிறார்கள். பெற்றோர்களோ பிள்ளைகளின் கல்விச் செலவையும் சேர்த்துச் சுமக்கிறார்கள். ஒருவர் உழைத்தால் கட்டுப்படியாகாது என்று முழுக் குடும்பமும் உழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறை பட்ஜெட்டைப் பார்க்கும் போது வாடகைக்கு ஆள் வைத்து உழைத்தாலும் போதாது என்ற தோன்றுகிறது.

பெற்றோல் டீசல் விலைகள் உயருகின்றன. போக்கு வரத்துக் கட்டணங்கள் அதிகரிக்கின்றன. விவசாயிகளால் விவசாயம் செய்ய முடியாத நிலை. பசளை விலை அதிகரிப்பு, பாசனத்துக்கு தண்ணீர் கிடையாது. மழையும் பெய்யாது விட்டால் அதோகதிதான். என்ன பாடு பட்டாவது விவசாயம் செய்தாலும் விளைச்சலுக்கு உத்தரவாத விலை கிடையாது. நீர்பாசனக் குளங்களில் அந்நியரின் வானூர்திகள் வந்திறங்குகின்றன. மக்களுக்கு சொந்தமான காணிகள் தனியாருக்கு விற்கப்படுகின்றன.

கல்வியை எடுத்துக் கொண்டால், பெயர் மட்டும் தான் இலவசம் ஆனால் எல்லாமே பணத்துக்கு. இன்றைய நிலையில் பணம் இல்லையென்றால் படிப்பும் கிடையாது. சுதந்திரக் கல்வியை பாதுகாப்போம் என்ற கோஷம் ஒருபுறம், இலவசக் கல்வியை பாதுகாப்போம் என்ற கோஷம் மறுபுறம். தேசியக் கல்வி என்றால் என்னவென்பது அந்தக் கோஷத்தை முன்வைத்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். என்றாலும் ஒழிக்கப்படப் போகும் இலவசக் கலவியை பாதுகாத்தால்தான் வறிய மக்களின் பிள்ளைகளுக்கும் வளமான கல்வியை பெற்றுக் கொடுக்க முடியும். வசதி படைத்தவர்கள் தனியார் பாடசாலைகளுக்கும் , சர்வதேச பாடசாலைகளுக்கும் தமது பிள்ளைகளை அனுப்பி விடுகின்றனர். ஏழைகளோ தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவதா வேண்டாமா என்ற நிலையில் தடுமாறுகின்றார்கள். அவர்களது குடும்ப வருமானம் அன்றாட சாப்பாட்டுக்கே போதாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் பிள்ளையின் படிப்புச் செலவுக்கு அவர்கள் எங்கிருந்து பணம் தேடுவார்கள்? அவர்களது பிள்ளைகளின் கல்வி மட்டுமல்ல எதிர்க்காலமே கேள்விக்குறியாக இருக்கிறது.

இலங்கை கடலால் சூழப்பட்ட தீவு. கரையிலிருந்து 200 கடல் மைல் தூரத்துக்குச் சென்று மீன்பிடிக்க முடியும். எமது நாட்டு மீனவர்கள் உயிரைப் பணயமாக வைத்து கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகிறார்கள். இலங்கை மக்களுக்குத் தேவையான மீன் இலங்கையைச் சுற்றியுள்ள கடலிலேயே இருக்கிறது. ஆனால் வெளிநாட்டிலிருந்து மீன் இறக்குமதி செய்யப்படுகிறது. இதுதான் ஆசியாவின் ஆச்சரியமா என்று மக்கள் கேட்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இலங்கையின் தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் ஒரே விதமான வாழ்க்கை வட்டத்துக்குள்ளேயே சுற்றிவரச் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களை அந்தப் படுகுழியிலிருந்து மீட்பதற்கு அவர்களை வைத்து அரசியல் நடத்தும எந்த அரசியல் தலைவர்களும் முயற்சிப்பதாகத் தெரியவில்லை. தேர்தல் காலங்களிலும், தமது உல்லாசப் பதவிகளுக்கு ஆபத்து வரும் என்ற நிலை உருவாகினாலும் மட்டுமே தோட்டத் தொழிலாளர்களின் ஆபாத்பாண்டவர்கள் தாங்கள் தான் என்றும் நேற்று தான் பிரச்சினைகளைக் கண்டுக் கொண்டதைப் போல் கொஞ்சம் சலசலப்பைக் காட்டுவார்கள். அரசாங்கம் அவர்களது தேவைகளில் சிலதை செய்து கொடுத்து விட்டவுடனேயே அடங்கிப் போவார்கள். அவர்கள் அரசியல் நடத்துவது தோட்டத் தொழிலாளர்களுக்காகவா தமக்காகவா என்பது அந்த ஆறுமுகத்தானுக்கே வெளிச்சம்.

தனியார் துறை ஊழியர்கள் எப்போதுமே பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தவர்களாகவே வாழ்கிறார்கள். அரசாங்க ஊழியர்களைப் போலல்லாது ஆகக் குறைந்த அடிப்படைச் சம்பளமே வழங்கப்படுகிறது. அடிப்படை தொழில் உரிமைகள் கூட வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் அவர்களது குடும்பச் செலவுக்கும் பிள்ளைகளின் படிப்புக்கும் தேவையான பணத்தை தேடுவதில் படாத பாடுபடுகின்றார்கள். இது போன்றுதான் நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரு அல்லல் பட்டு கொண்டிகிறார்கள். இந்த நிலையில்தான் நேற்றைய 2003க்கான வரவு கெலவுத் திட்டம் ஜனாதிபதியால் நீண்ட உரையோடு நாடளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இம்முறை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டில் அப்படி என்னதான் இருக்கிறது? வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்வாறு அடுத்த ஆண்டுக்கான மொத்த வருமானம் 1,27,790 கோடி.மொத்தச் செலவு 1,78,540 கோடி. துண்டு விழும் தொகை50,740 கோடி. 2012 வரவு செலவோடு ஒப்பிடுகையில் இந்த வரவு செலவு திட்டத்தில் மேலதிகமாக 4220 கோடி ரூபா துண்டு விழுகிறது. ஆகவேஇ துண்டு விழும் 50,740 கோடியை அரசாங்கம் எங்கிருந்து, எப்படி தேடப்போகிறது? வசீகரமான வார்த்தைகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தாலும் 2013க்கான வரவு செலவுத் திட்டம் புதிய மொந்தையில் ஊற்றப்பட்ட பழைய கள் என்பது தான் உண்மை.

-www.lankaviews.com/ta