Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கூடங்குளம் அணு மின்னிலையத்திற்கு எதிரான போராட்டத்தினை இலங்கையிலும் முன்னெடுப்போம்!


தமிழ் நாட்டின் தென் கரையோரத்தில் இலங்கைக்கு அண்மித்ததாக நிர்மாணிக்கப்பட்டு இயங்க வைக்கப்படவுள்ள கூடங்குளம் அணு உலை மின்உற்பத்தி நிலையம் தமிழ் நாட்டு மக்களுக்கும், அதே போன்று இலங்கை மக்களுக்கும் குறிப்பாக வடக்கு மேற்கு கரையோரங்களை அண்மித்த பிரதேசங்களின் மக்களுக்கும் பாரிய உயிர் அழிவுகளையும் கொடிய நோய்களையும் கொண்டு வரக் கூடியதாகும். கூடங்குளம் அணு உலை மூலமும் அணுக்கழிவுகளில் இருந்து வெளிவரும் கதிரியக்கமானது மக்களது அன்றாட வாழ்விலும் மண்ணிலும் கடலிலும் காற்றிலும் சுற்றுப்புறங்களிலும்  நாசங்களை ஏற்படுத்தும் அபாயங்களையே கொண்டுள்ளது.

அவற்றுக்கும் மேலாக அவ் அணு உலையில் அனர்த்தம் ஏற்படும் சூழலில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் மாண்டு மடிந்து போக வேண்டியே ஏற்படும். அதற்கான அண்மைய உதாரணம் யப்பானிலும் அதற்கு முன்பு றஷியாவிலும் இடம்பெற்ற அணு உலைப் பேரழிவில் காண முடிந்தது. எனவே மேற்படி அணு உலை மின் நிலையம் திறக்கப்படுவதற்கு எதிராகத் தமிழ் நாட்டின் தெற்கு கரையோரத்தில் கூடங்குளம் இடிந்தகரைப் பிரதேசங்களை மையமாக வைத்து மக்கள் அணி திரண்டு தொடர்ச்சியான மக்கள் சக்திப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இப்போராட்டம் நானூற்றி ஐம்பதாவது நாளை எட்டவுள்ளது. மீனவர்களும் கிராமப்புற மக்களும் இணைந்து மிகப்பெரும் வெகுஜனப் போராட்டங்களைக்  கரையிலும் தரையிலும் உறுதியுடன் முன்னெடுத்து வருகின்றார்கள். அவற்றின் வீச்சும் வேகமும் தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களிலும் தலைநகர் சென்னையிலும் எதிரொலித்து வருகின்றன.

எனவே கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்களின் வெகுஜனப் போராட்டங்களுக்கு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மத்திய குழு தனது பூரண ஆதரவையும் போராட்ட ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கிறது. அதேவேளை இம் மக்கள் போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதற்கு மத்திய அரசும் மாநில அரசாங்கமும் இணைந்து பொலீஸ் அடக்கு முறைகளை ஏவி, மக்கள் மீது தொடுத்து வரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களையும் வன்மையாகக் கண்டிக்கிறது. இப்போராட்டத்தில் தமிழகப் பொலீசின் காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகி அந்தோனி ஜோன் என்ற மீனவர் கொல்லப்பட்டிருக்கிறார். விமானப்படையின் பேரிரச்சலில் இதயம் பாதிக்கப்பட்டு சகாயம் என்ற மீனவர் உயிர் இழந்தார். இருப்பினும் போராடி வரும் மக்கள் தமது போராட்ட உறுதியைக் கைவிடவில்லை.

மேற்படி மக்கள் எழுச்சிப் போராட்டங்களை மிகுந்த உறுதியுடன் தொடர்ச்சியாகவே முன்னெடுத்து வரும் எஸ்.பி. உதயகுமார் தலைமையிலான போராட்ட இயக்கத்தினருக்கும் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து வரும் மாக்சிச லெனினிச இயக்கங்களுக்கும், ஜனநாயக, முற்போக்கு சக்திகளுக்கும் எமது கட்சி தனது ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய ஆளும் வர்க்கமும் அவர்களது அந்நிய ஏகாதிபத்தியக் கூட்டாளிகளும் கொள்ளை லாபம் பெறுவதற்கே பேரழிவு தரும் அணு உலை மின் நிலையங்களைக் கட்டுகின்றனர். அதிகளவு மின்சாரம் பெறுவது எனக் கூறிக் கொண்டு இயங்க வைக்கப்பட்ட வரும் அணு உலைகளால் வரக் கூடிய அபாயங்களும் நாசங்களும் மக்களுக்கு மறைக்கப்படுகின்றன.

அவற்றைக் கூடங்குளம் இடிந்தகரை மக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் மக்களுக்கும் வெளி உலகிற்கும் வெளிச்சம் போட்டு அம்பலமாக்கி வருகின்றன. இலங்கையானது கூடங்குளம் அணு உலைக்கு மிக அண்மித்ததாகவே உள்ளது. அவ் அணு உலையில் ஒரு அனர்த்தம் ஏற்பட்டால் தமிழ் நாட்டின் மக்கள் மட்டுமன்றி இலங்கை மக்கள் குறிப்பாக வடக்கு மேற்குக் கரையோரப் பிரதேசங்களின் மக்களும் அவற்றை அண்மித்த பிரதேச மக்களுமே உயிர் அழிவுகளுக்கும் ஏனைய பாதிப்புகளுக்கும் ஆளாக்கப்படுவர். ஆனால் இவ் அபாயம் பற்றி இலங்கை ஜனாதிபதியோ அரசாங்கமோ அமைச்சர்களோ அதிகாரிகளோ அதிக அக்கறை காட்டுவதாக இல்லை. இந்திய மத்திய அரசு கூறிய சமாதான ஏமாற்று வார்த்தைகளை மிகப் பணிவாக ஏற்று அமைதியாக இருந்து வருகின்றார்கள்.

-புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

7/11/2012