Tue05262020

Last updateSun, 19 Apr 2020 8am

நமக்கான போராட்ட அரசியல்!!!


இன்றைய பொருளாதார அமைப்பில் சமூகத்தைப் பற்றிய ஆய்வு முக்கிய இடத்தை வகிக்கின்றது. உலக அரசியலை நடத்திக் கொண்டிருப்பவர்கள் அவர்கள் உருவாக்கும் நிறுவனங்கள் ஊடாக ஆய்வினை செய்கின்றனர். நிறுவனங்களால் அனுப்பப்படுபவர்கள் களஆய்வு என்ற பெயரில் பற்பல நாடுகளுக்கும் சென்று அங்குள்ள நிலமைகளை ஆராய்கின்றனர்.

பல்கலைக்கழக ஆய்வுகளை ஒவ்வொரு நாடுகளின் வெளிநாட்டுத் திணைக்களங்கள் தமது தேவைக்காக பயன்படுத்துகின்றது. உலகத்தை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க வேண்டிய சக்திகள் அன்னிய தேசங்களைப் பற்றி ஆராய்கின்றன.  அவர்கள் ஆய்வுகளை ஒரு முறை செய்து முடிந்த பின்னர் விட்டுவிடுவதில்லை. மறுபடியும் மறுபடியும் ஆய்வுகளைச் செய்கின்றார்கள்.  முரண்பட்ட கருத்தைக் கூட கவனத்தில் கொள்கின்றார்கள். இவ்வாறான கருத்துக்களைக் கொண்டே மற்றைய நாடுகளின் மீதான நடைமுறைக் கொள்கை வகுக்கப்படுகின்றது.  இங்கு நிதிமூலதனத்தின் ஆதிக்கத்தை விஸ்தரிப்பது, அதற்கெதிரான சக்திகளையும் களநிலையையும் கவனத்தில் கொண்டு நேரத்திற்கு நேரம் முடிவுகள் எடுக்கப்படுகின்றது. மேலைதேசங்களைப் பொறுத்தவரை கோட்பாடுகள் நிரந்தரமானதாக கொள்வதில்லை.

கோட்பாடுகள் பற்றி:

உலகை அடிமை கொள்ளும் நோக்கம் கொண்டவர்கள் இவ்வாறான ஆய்வுகளைச் செய்வதிலும், களநிலவரத்தையும் அறிவதில் முக்கியத்தும் கொடுக்கின்றனர். ஆனால் பலம்பொருந்திய எதிரிக்கு எதிராக செயற்படும் இடதுசாரிகள், ஜனநாயகவாதிகள்  இன்னும் கவனமாக உள்நாட்டு - வெளிநாட்டு அரசியல் நிலவரங்களை துல்லியமாக ஆய்வு செய்தல் வேண்டும். இன்றைக்கு சரியாக இருப்பது நாளை சரியாக இருக்க வேண்டும் என்பது இல்லை. அவைகள் மாற்றம் பெறுகின்றவையாகும். ஆய்வுகளை நடைமுறையை ஒற்றியதாகவும் இருக்க வேண்டும். நடைமுறையற்ற ஆய்வு என்பது எவ்விதத்திலும் பயன்தரப் போவதில்லை. கலாசாலைகளில் ஆய்வை சமர்ப்பிப்பவர்கள் தமது  ஆய்வினை முடிந்த முடிவாக ஏற்றுக் கொள்வதில்லை. அவைகளை ஒரு கோட்பாடு என்ற தகுதியுடன் முடித்துக் கொள்கின்றனர். ஆய்வுகளினால் முன்வைக்கப்படும் கோட்பாடுகளை ஒப்பீட்டு ரீதியாகவும், அன்றையப் போக்குடன். ஒத்துப் போகும் கோட்பாடுகளை பயன்படுத்துகின்றனர்.


"தத்துவம், கோட்பாடு இரண்டுமே ஒரு அரசியல் பாதையின் வழிகாட்டி. இவற்றை சரியாகக் கையாண்டு அரசியல் நடைமுறையை நிர்ணயிப்பதும், குறிக்கோளை நோக்கி முன்னேறுவதும் புரட்சியாளர்களின் கடமை. அதை விடுத்து, நடைமுறையில் மக்களுடன் நின்று போராடுவோரை தூற்றுவதும், அவர்களை தமது தத்துவ - கோட்பாட்டுப் பிதற்றலுக்கு ஏற்றால் போல நடக்கக் கோருவதும், சரியான மக்கள் சார்ந்த அரசியற் செயற்பாடாக இருக்க முடியாது. தத்துவக் - கோட்பாட்டு பிரயோகத்தை மந்திரமாக உபயோகிப்போரை, நடைமுறையில் போராட அழைப்பதன் மூலமே அம்பலப்படுத்த முடியும்."


ஆனால் மார்க்சீயம் உச்சரிப்பவர்களில் சிலர் கோட்பாடுகள் என்றைக்குமே மாறாதவை என்ற நிலைப்பாடுகளை கொண்டு விவாதிக்கின்றனர். நடைமுறையில் போராடுபவர்களை தூற்றதுவது நடைபெறுவதுடன், இளம் தலைமுறையை இடதுஅரசியலில் இருந்து ஓரங்கட்டும் செய்பாடுகளை இவர்கள் செய்கின்றனர். இது ஒரு ஆபத்தான போக்காகும்.


ஆய்வுகள் நிகழ்காலச் சமூகத்தை துல்லியமாக முறையில் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இன்றைய சமூகக் கட்டுமானம் எவ்வாயாக இயங்குகின்றதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இன்றைய சமூக உறவுகள் எவ்வாறு இருக்கின்றது. அங்கு எழும் பிரச்சனைகள் என்ன? சமூக மாற்றத்திற்கு சாதக, பாதகமான புற அகக்காரணங்களை கவனத்தில் எடுக்க வேண்டும்.  சமூக அமைப்பில் இருந்து அன்னியப்பட்ட நிலையில் இருந்து செய்கின்ற ஆய்வுகள் நடைமுறைக்கு உதவாது.


“படிப்பில் இரண்டு விதமான மனோபாவங்கள் உண்டு . ஒன்று, நமது நாட்டு நிலைமைகளுக்குப் பொருந்தினாலும் சரி, பொருந்தாவிட்டாலும் சரி, எல்லாவற்றையும் அப்படியே எடுத்து நடும் வரட்டு மனோபாவம். இது நல்லதல்ல. மற்றது, நமது தலைகளைப் பாவித்து நமது நாட்டு நிலைமைகளுக்குப் பொருந்தியவற்றைப் படிக்கின்ற, அதாவது, நமக்கு உபயோகமான அனுபவங்களைக் கிரகித்துக் கொள்கின்ற மனோபாவம். இது தான் நாம் கடைப்பிடிக்க வேண்டிய மனோபாவம் . (27.02.57)

பிழையாப்பெருமை:


புலிகளின் தலைவர் கூறியதாக பல மேற்கோள்கள் புலிகள் இருந்த போது கேட்டிருப்போம். மாவீரர் உரை தொடங்கி பிரபாவின் பேட்டிகள் வரையிலும் பல கருத்துக்கள் வந்திருக்கின்றன. இதனை புலிகள் ஆதரவாளர் தலைவர் அது சொன்னார், இது சொன்னார் என்றும், எல்லாம்  தலைவருக்குத் தெரியும், தவறான தந்திரோயங்களை மேற்கொண்டதில்லை எனப் பிரச்சாரம் செய்தனர். இவ்வாறு கடந்த காலத்தில் பிரபாகரனைப் பற்றிய விம்பம் உருவாக்கப்பட்டிருந்தது. அவர் பிழைவிடமாட்டார் என்று பெருமை கொண்டிருந்தனர். இதனால் சர்வதேச நாடுகளின் அரசியலையும், சதிகளையும் உணரானது போயினர். பிழையாப்பெருமை முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள், போராளிகள், புலிகளின் தலைமை என வீழடிக்கப்பட்டனர்.


“அறிவு என்பது விஞ்ஞானம் தழுவிய ஒரு விடயம். இதில் நேர்மையீனமோ செருக்கோ அனுமதிக்க முடியாதவை . இதில் உண்மையில் தேவையானது இவற்றிற்கு எதிரானவை - நேர்மை, அடக்கம் - ஆகும் “ -1937)


புரட்சிக்கான கோட்பாடுகள் நாட்டிற்கு நாடு மாறுபடுகின்றதை ஏற்றுக் கொள்ள வேண்டும். புரட்சிக்கான கோட்பாடுகள்  மாற்றங்கொள்ளாது என்று வாதிடுவது வெறும் அபர்த்தமாகும். ஒரு காலத்தில் பொருந்தியது எக்காலத்திலும் அதே கோட்பாடு பொருந்தும் என்பது இயங்கியல் அல்ல. சுனாமி என்ற பேரலை தாக்கி கிழக்கு, தெற்கு மக்களை அழித்த போது மக்களின் உணர்வுகள் மாற்றம் அடைந்திருந்தன. இன ஐக்கியத்திற்கான ஒரு சமிக்கை அன்றிருந்தது. அன்றைய காலத்தில் இனவாதிகளை ஓரங்கட்டும் வேலையை விடுதலைப் புலிகளினால் செய்ய முடியாது போயிற்று.  புலிகளின் போராட்ட பாதைக்கான கருத்துருவாக்கம் எப்பொழுதும் சரியான சூத்திரம் என்ற நிலையில் இருந்ததே காரணம். அன்றைய காலத்தை கருத்தில் கொண்டு இனவெறியர்களை ஒதுக்கும் வேலைமுறையை செய்யாதது  எவ்வளவு தவறோ, அவ்றாகவே இன்றைக்கும் ஐக்கியப்படுத்திய போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தடங்கலாக இருப்பதாகும்.


 “சில நபர்கள் ஒரு சில மார்க்ஸிஸ நூல்களைப் படித்ததும், தம்மை பெரும் படிப்பாளிகளாக எண்ணிக் கொள்கின்றனர். ஆனால் அவர்கள் வாசித்;தது ஆழமாகப் புகுந்து, அவர்களுடைய உள்ளங்களில் பதியவில்லை, அதை எப்படி உபயோகிப்பது என்று அவர்கள் உணராது இருக்கின்றனர். அவர்களுடைய வர்க்க உணர்வுகளும் பழைய உணர்வுகளாகவே இருக்கின்றன. வேறு சிலர் தற்பெருமை பிடித்து, சில வார்த்தைக் கோவைகளைப் படித்து விட்டு, தம்மை பயங்கரமானவர்களாகக் கருதி, பெரும் இறுமாப்பு அடைகின்றனர். ஆனால் புயல் ஒன்று அடித்த போதெல்லாம் அவர்கள் தொழிலாளர்கள் பெரும்பான்மையான உழைக்கும் விவசாயிகள் ஆகியோரின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்ட ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர். தொழிலாளர்களும் விவசாயிகளும் உறுதியா நிற்கும் அதேவேளையில் அவர்கள் ஈடாடுகின்றனர். தொழிலாளர்களும், விவசாயிகளும் நேர்மையாக இருக்கும் அதேவேளை அவர்கள் தெளிவின்றி நிற்கின்றனர் (12.03.57)

தமிழ் தேசிய மையவாதம்:


1970களில் ஏற்பட்ட தமிழ் தேசிய மையவாதச் சிந்தனையை அகற்றிக் கொள்வதற்கு மார்க்சீயம் பேசுகின்றவர்களாலும் முடியவில்லை. களச்சூழலை அறியாத இன்றைய மார்க்சீய கோட்பாட்டாளர்கள்  தான் மிகச்சிறந்த அறிவாளி என்றும், கோட்பாட்டாளர் என்றும் பிரகடனப்படுத்த உதவுமேயன்றி. சமூக மாற்றத்திற்கு பயன்படப்போவதில்லை.


இன்றைக்கு திறந்த வெளிச் சிறையில் வாழ்வது போல தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அதே வேளை முழு இலங்கையும் பாசீசக் கட்டமைப்புக்குள் வடிவமைக்கப்படுகின்றது. ஒரே குடும்ப அங்கத்தவர்களின் அதிகாரம் எங்கும் வெளிப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்பவர் ஒரு அதிகாரி. ஒரு அதிகார தன்னுடைய வரம்பையும் மீறு பேசுகின்ற நிலையையும் எல்லாவற்றையும் கட்டும்படுத்தும் அதிகாரத்தையும் கொண்டுள்ளார். முழு அதிகாரமும் மையத்தில் குவிக்கப்பட்டுள்ளது.  வடக்கிலோ அல்லது தெற்கிலோ கிளர்ச்சிகள் ஏற்படும் பட்டசத்தில் அடக்குவதற்கான இராணுவங்கள் கேந்திர முக்கியத்துவம் கொண்ட இடத்தில் நிலை கொண்டிருக்கின்றன. குறிப்பாக தெற்கில் கிளர்ச்சி ஏற்படும் பட்சத்தில், வடக்கு – கிழக்கில் பாதுகாப்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ள படைகள் தெற்கு நோக்கி நகர்த்தப்படும். வடக்கு – கிழக்கை இராணுவ பிரசன்னத்தூடாக வைத்துக் கொள்வதன் ஊடாக தெற்கையும் பாதுகாத்துக் கொள்கின்றது.


இவ்வாறான சூழலில் ஜனநாயகப் புரட்சி நடைபெறவேண்டிய தேவை இருக்கின்ற தேசத்தில் தனியே தமிழ் மக்களின் கோரிக்கையை முதன்மைப்படுத்தி வேலை செய்வது என்பது தமிழ் மக்களிடம் உள்ள முன்னணியின் வேலை முறைமைக்குள் உட்பட்டது. இதே வேளை தெற்கில் எவ்வகையான முன்னணியைக் கொண்டமைய வேண்டும் என்பதும் மாறுபட்டதாகும்.


தமிழ் மக்கள் பெரும் கொலைக்களத்தில் இருந்து வெளியேறி வந்திருக்கின்றார்கள். இவர்களை போராட்டத்திற்கு அணிதிரட்டுதே பெரும் சவால்களுக்கு உட்பட்டதாகும்;. சமூகம் மாறவேண்டும் என்று எண்ணிக் கொண்டால் மாத்திரம் போதாது. சமூகக் கட்டமைப்பு எவ்வாறு இருக்கின்றது என்று கணிக்கும் சிந்தனையும் அவசியமாகும்.  கோட்பாடுகளை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது விஞ்ஞானரீதியானதாக இருக்கப் போவதில்லை.


தமிழ் மக்கள் எவ்வாறு சிந்திக்கின்றார்கள் என்பது பற்றிய நிலையில் இருந்து அல்லது பிரமுகர்கள் எவ்வாறு சிந்திக்கின்றார்கள் என்பதில் இருந்து முடிவுகள் எடுக்க முடியாது. ஒரு நாட்டின் உள்நாட்டு நிலவரத்திலிருந்தும், அன்னிய சக்திகளின் அழுத்தங்களை கவனத்தில் கொண்டே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் இன்றைய மார்க்சீய ஆய்வாளர்கள் என்பவர்கள் கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் நிலைத் தான் காணமுடிகின்றது. இவர்களின் அகநிலைவாதச் சிந்தனையோட்டம் என்பது புறநிலையை கவனத்தில் கொள்ள மறுக்கின்றனர். 1975களில் தமிழ் தேசிய மையவாதத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட மார்க்சீய சொல்லாடலில் எச்சங்கள் தொடரவே செய்கின்றன.

கட்டமைப்பில் மாற்றங்கொள்ள வேண்டும்:


நாம் வாழ்கின்ற அழுகிய சமூகத்தினை மாற்ற வேண்டும். மனிதர் பல வர்க்கக் கூறுகளாகவும், இனம், சாதி, மதம், பிரதேசம், நிறம் என்று பிரிந்துள்ளனர். இவர்களை இணைத்து, உற்பத்திச் சாதனத்தை கைப்பற்றி, மாற்றத்தை கொண்டு வருகின்ற போதே பிரச்சனைகளை முழுமையாக தீர்த்துக் கொள்ளமுடியும். மாற்றத்திற்கான போராட்டம் என்பது நீண்டதும் நெடியதுமாகும்.


ஏனெனில் தமிழ் தேசியம், சிங்கள தேசியம், இஸ்லாமிய அடிப்படைவாதம் உட்பட ஏனை அடிப்படைவாதங்களை எதிர்க்கொள்ள வேண்டிய சவால்கள் இருக்கின்றது.  அதேவேளை நிதி மூலதனத்தினதும், உள்ளுர் அனுதாபிகளாக தரகு வர்க்கத்தவர்களையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கின்றது.


கட்டமைப்பில் மாற்றம் கொள்ள வைக்க வேண்டுமானால் பழைய உற்பத்தி முறைகள்  அனைத்தையும் மாற்றியமைக்க வேண்டும். இந்தக் காலத்தில் மக்களுக்கான போதனைகளையும், அவர்களை அணிதிரட்டுவதற்கான  வேலைகளையும் செய்யப்பட வேண்டும்.


இங்கு மார்க்சீயத்தை பேசிக் கொள்கின்றவர்கள் அரைநிலபுத்துவ எச்சங்களில் இருந்து உருவாகிய தேசியக் கூறுகளில் முற்போக்கு அம்சம் இருப்பதாக கருதுகின்றனர். இவர்களின் கருத்தானது.  கட்டமைப்பில் மாற்றம் கொள்வதல்ல. இந்த சீரிழிந்த சமூக அமைப்பான மதவாதம், இனவாதம், சாதியவாதம், பிரதேசவாதம், ஆணாதிக்கம், சமச்சீரற்ற பொருளாதார அமைப்பு இவைகளை மறுவுற்பத்தி செய்வதன் ஊடாக சுரண்டல் பொருளாதார அமைப்பை பாதுகாப்பதாகும்.


ஒடுக்கும் பெரும் தேசியத்தில் போராடும் சக்திகள் இல்லாத பட்டசத்தில் அடக்கப்படும் தேசியத்தில் முற்போக்;கு இருப்பதாக கூறுவது பொருத்தமாக இருக்கும். ஆனால் இன்று முழு இலங்கையும் பாசீசத்தின் கட்டமைப்பிற்குள் இருக்கின்றது. சிறுபான்மையினரின் இருப்பு என்பது பெரும்பான்மை மக்களின் முற்போக்குச் சக்திகளின் வளர்ச்சியில் தங்கி நிற்கின்றது. அரசியல் கோரிக்கையைக் கொண்ட போராட்ட வேலையையும் சமூக மாற்றத்திற்கான வேலைமுறை ஆகிய இரண்டும் ஒரே சமாந்திரத்தில் நடைபெறவேண்டும்.


மார்க்சீயம் பேசுகின்ற போலிகள் தமிழ் தேசியத்தில் முற்போக்கு கூறுகள் இருப்பதாக காட்டுவது அன்னியச் சக்திகளை நம்பும் நிலையை அதிகரிப்பதற்கேயன்றி ஒரு சுதேசிய நிலைப்பாடாக இருக்கமாட்டாது. அரைநிலபிரபுத்துவமானது நவதாராளவாதத்துடன் இணைந்து பயணிக்கின்ற வேளையில் ஜனநாயகப் புரட்சி அவசியமாக இருக்கின்றது. புரட்சிக்கான தேவையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமை இருக்கின்றது. ஆனால் இன்று தாமே கோட்பாட்டாளர்கள் என்ற மணிமகுடத்திற்கு ஆவல் கொண்டவர்கள் இளம் சந்ததியைக் குழப்புகின்றனர்.


ஆனால் இறுதிக் காலத்தில் நானும் ஒரு சமூகப் போராளியாக செயற்பட்டேன் என்றும், எனது இறுதி ஊர்வலத்திலும், கல்லறையில் பதிப்பிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து ஆய்வுகளையும், கருதுக்களையும் வெளியிட்டு சுயதிருப்தி அடையும் முறையில் விமர்சிக்க முடியாது. இவ்வாறு செய்வது வரலாற்றுத் துரோகமாகும்.

2/11/2012