Tue01282020

Last updateTue, 10 Dec 2019 10am

தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்து செல்வதன் அவசியம் குறித்து...

இறுதிப் போரில் காணமால் போன தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு பெற்றோர் கோரிக்கை விட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து மூன்றரை வருடங்களாகின்றது. இந்த மூன்று வருடங்களாக எத்தனையோ பெற்றோர், மனைவிமார், பிள்ளைகள் என தமது உறுவுக்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். தமது உறவுகளை தொலைத்து விட்டு அவதியுறும் மக்களைப் பற்றி தழிழ் கட்சிகள் கவனத்தில் கொள்வது திருப்திகரமானதாக இல்லை. காணாமல் போனவர்களையிட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய தொடர்ச்சியான ஒரு போராட்டத்தினை, தளத்தில் இருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள், சக்திகள் மேற்க்கொள்ளாதது பெரும் அதிருப்தி தருவதாக இருக்கின்றது. இவர்கள் ஒரு தீர்க்கமான மக்கள் போராட்ட வடிவத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் செயற்படுபவர்களாகவும் இல்லை.

அரசியல் வங்குரோத்து:

புலிகள் மீது பல விமர்சனம் இருந்தபோதும் புலிகள் இருந்த போது, சமூகத்தில் ஒரு இயங்குதளம் இருந்தது. தவறுகளுக்கு அப்பால் ஒரு போராட்டத்தை வழிநடத்தி வந்தார்கள். அவர்களை வழிநடத்திய அரசியல் பாதை அவர்களை வீழ்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர்கள் சென்ற அரசியல் பாதை ஒரு எதிர்ப்பு இயக்கத்தை தொடர்ச்சியாக வழிநடத்தக் கூடிய நிலமை உருவாக்ககவில்லை. அது மட்டுமல்லாது அற்றுப்போகவும் செய்துள்ளது. யுத்ததில் புலிகள் தோல்விக்கு உள்ளாக்கப்பட்ட போது எஞ்சிய விடுதலைப் புலிகள் தாமாக கலைந்தனர், சரணடைந்தனர் அல்லது காட்டிக் கொடுக்கப்பட்டனர். அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லக் கூடிய ஆழுமையற்றவர்களாக உருவாக்கப்பட்டனர்.  எஞ்சியிருந்த சிறிய சக்திகளையும் புலம்பெயர் புதிய அதிகார வர்க்கம் திட்டமிட்டு அழித்தனர்.


முன்னர் பிரபாகரனை "சூரியதீபன்", "தேசியத் தலைவன்" என்று கூறி பிரபாகரனை முன்வைத்து தமது சொந்த நலனையும், அன்னிய தேசங்களின் நலனையும் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு புலத்தில் போராட்டம் கையளிக்கப்பட்டதாக புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். முன்னர் எவ்வாறு பிழையாப்பெருமை கொண்டு செயற்பட்டு முள்ளிவாய்க்காலில் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்களே,  முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் பிரபாகரனின் பெயரில் கனவான் அரசியலை புகுத்தியுள்ளனர்.


இன்றைய தமிழ் கட்சிகளும், புலிகள் சார் அமைப்புகளும் ஒரு தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தை  முன்னெடுத்துச் செல்வதை கைவிட்டு விட்டு மேற்குதேசங்களின் நலன்களுக்கும், அவர்களின் கனவான் அரசியலுக்கும் ஏற்ப செயற்பாடுகளை தொடர்கின்றனர். கனவான் அரசியலை அறிமுகப்படுத்திக் கொண்டு களத்தில் போராடிய மக்களையும், போராளிகளையும் பலிகொடுத்ததும், மலடாக்கியும் வருகின்றனர்.


வன்னியில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது புலம்பெயர்ந்த புலிகளால் முன்வைக்கப்பட்டு ஒன்றிற்கும் உதவாமல் போன "வணக்காமண்" கப்பல் விடையத்துடன், அப்பெயரை வைத்து மக்களை ஏமாற்றும் போராட்ட வடிவத்தை அறிமுகப்படுத்தினர். பின்னர் இதே அரசியல் வியாபாரிகளால்  நாடுகடந்த தமிழீழம் அரசு என்ற கனவான் அரசியலுக்குள் நுழைத்தனர்.


இவர்களின் இந்தத் தந்திரோபாயத்தின் ஊடாக மேற்கு தேசங்களினுடனான காய்நகர்வுகள், காட்டிக் கொடுப்புக்கள் மூடி மறைக்கப்பட்டன. கிளிநொச்சி வீழ்ந்த காலத்தில் இருந்து சூசையின் இறுதி வானொலி பேச்சுவரை, எல்லோரையும் அம்பலப்படுத்தும் காலப்பகுதியில் இடம்பெற்ற கழுத்தறுப்புக்களை மக்களிடம் செல்லப்படாமலே மூடி மறைக்கும் தந்திரோபாயங்கள் அமைந்த திட்டத்தினை புலம்பெயர் புதிய புலி அதிகார வர்க்கம் உருவாக்கிக் கொண்டது. காட்டிக் கொடுப்புக்களை மூடிமறைப்பதற்கும், மறக்கவைப்பதற்குமான போராட்ட வடிவங்களே புலம்பெயர் புலிகளின் புதிய அதிகார வர்க்கத்தின் தேவையானதாக இருக்கின்றது. இதனால் கொல்லப்பட்ட தலைவர்கள், போராளிகள் மறைவும், இழப்பும் மறைக்கப்பட்டது. கைது செய்து கொண்டு செல்லப்பட்ட தலைவர்கள், போராளிகள் பற்றி அக்கறை கொள்வது இவர்களுக்கு வேண்டத்தகாதது ஆகிவிட்டது.


இப்புதிய அதிகார வர்க்கம், இசைந்து போதல் என்ற தந்திரத்தை பயன்படுத்தி தளத்திலும், புலத்திலும் தமது ஆதிக்கத்தினை மீள கட்டியெழுப்புகின்றது. இந்த அதிகார வர்க்கத்திற்கு புலிகள் இருந்த போது சேர்த்த நிதியை தம்வசம் கொள்வது, போராளிகளை மறக்கடிக்கப்படுவது, போராட்டத்தினை மேற்கு தேசங்கள் எதிர்பார்ப்பது போல நீர்த்துப் போக வைப்பது என்பது தான் தேவையாக இருக்கின்றதுடன், இதனை தற்பொதும் செயல்வடிவில் செய்தும் வருகின்றனர்.

தளமும் போராட்டமும்

புலத்தில் இருக்கின்ற புதிய அதிகார வர்க்கத்தின் தேவைக்கு இசைவாக இருக்கக் கூடிய சம்பந்தர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகாதிபத்திய- பிராந்திய நலனுக்கு உட்பட்ட அரசியலுக்கு இசைவாக செயற்படுகின்றனர். சம்பந்தர் தலைமையானது பதவியையும், முதலீடு செய்யும் வர்க்கத்தவர்களின் நலன்களை தெரிவு செய்து செய்வதில் எவ்வித தயக்கமும் கொள்வதில்லை. இவ்வகையான செயற்பாடுகளை தேசியத்தின் ஒன்றுமை என்ற வெற்றுச் சடவால் விடுகின்றனர்.


போராடத் திராணியற்று இருக்கும் இந்தச் சூழலில் தன்னார்வக்குழுக்கள் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதாகவும், வழக்கு தாக்கல் செய்வதாகவும் கூறி மக்களை ஏமாற்றுவதுடன், அரசிற்கு எதிரான போராட்டத்தை மளுங்கடிக்கின்றனர். தன்னார்வக் குழுக்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியைக் கொண்டு இயங்குகின்றது. தன்னார்வக் குழுக்களைப் பொறுத்தவரை பிரச்சனைகளை தீர்ப்பது இல்லை. பிரச்சனைகளை ஒட்டி மக்களை சிந்திக்க விடாது, அரசியல் நீக்கம் மற்றும் போராட்டத் திசையையும் உறுதியைக் குலைப்பதற்கே சம்பளம் கொடுத்து வளர்க்கப்படுகின்றவர்கள். மக்கள் தமது சொந்த வளத்திலும் சொந்தக் காலிலும் ஊன்றுவதையும், தமது பிரச்சனைக்கான தீர்வுகளையும் சுயமாக பெற்றுக் கொள்ள தடங்கலாக இருப்பவர்கள். தன்னார்வக்குழுக்கள் மக்களை சுயமாகவும் சிந்திக்க விடுவதில்லை. மேற்கு தேசங்கள் தன்னார்வக் குழுக்களையும், தனிநபர்களையும் திட்டமிட்டே வளர்க்கின்றனர். இவர்களினாலும் போராட்டம் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றது. தமது பிரச்சனைகளை தீர்க்க மற்றவர்கள் வருவார்கள் என்ற கருத்துருவாக்கத்தை மக்களிடத்தில் விதைக்கின்றனர்.


காட்டிக் கொடுத்த குற்றவாளிகளே, காட்டிக் கொடுக்கப்பட்ட போராளிகளின் விடுதலைக்காக போராட முன்வருவார்களா? இவர்களின் விடிவிற்கு குரல் கொடுப்பார்களா? காட்டிக் கொடுத்தவர்கள் தமது சொத்துக்களையும், சமூக அந்தஸ்துக்களையும் பேணிக் கொள்வதே முதன்மை வேலையாக இருக்கின்றது. தேர்தலை மையமாகவும், பதவிகளையும், முதலீட்டில் ஆர்வம் கொள்ளும் சந்தர்ப்பவாதிகள் மறைக்கப்பட்ட உறவுகளுக்காக போராட ஒரு போதும் வரமாட்டார்கள்


ஆனால் இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்களுக்காகவும், விசாரணை இன்றி தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னால் போராளிகளை விடுவிக்கக் கோரியும் போராடிய போது அரச கூலிக் குண்டர்களால் கடத்தப்பட்டவர்கள் தான் குகன், லலித் போன்றவர்கள். இன்று தெற்கில் இருந்து வரும் நல்லெண்ணம் கொண்ட முற்போக்குச் சக்திகளின் உதவியுடனும், சொந்த தலைமையை உருவாக்கிக் கொள்வதன் ஊடாகவே காணாமல் போன 10000 அதிகமான போராளிகளுக்காகவும், பிரசித்தமான புலிகளின் தலைவர்களினதும் போராளிகளினதும் விடுதலைக்காகவும் போராட முடியும்.