Sat05302020

Last updateSun, 19 Apr 2020 8am

ஜரோப்பிய ஓன்றியத்தை பிணையெடுக்கும் நொபெல் சமாதானப் பரிசு

 

பரிசுகளைப் பொறுத்தவரையிலோ பட்டங்களைப் பொறுத்தவரையிலோ பெருமளவும் அவை அவற்றைப் பெறுகிறவர்களைப் பற்றிச் சொல்லுவதை விடக் கொஞ்சம் அதிகமாக அவற்றை வழங்குபவர்களைப் பற்றிச் சொல்லுகின்றன. நொபெல் சமாதானப் பரிசும், இலக்கியப் பரிசும் ஏகாதிபத்திய அரசியல் நோக்கங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. முற்றிலும் தகுதி வாய்ந்தோராகத் தெரிகிற எவருக்கேன் அப்பரிசு இடையிடை கிடைத்திருந்தால் அது மற்ற நேரங்களில் வழங்கப்படுகின்ற பலவற்றைத் தகுதியுடையனவாகக் காட்டுவதற்காகவே. எனினும், குறிப்பிடத்தக்களவு உலக முக்கியம் பெற்றோரே இப்பரிசுகளைப் பெறுகின்றனர்.

இப்பரிசுகள் பற்றி நான் வலியுறுத்த விரும்புவது அவை நடுநிலையான முடிவுகளின் படி கிடைப்பதில்லை என்பதையே. பொருளியலுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் பெரும்பாலும் ஏகாதிபத்திய, முதலாளியப் பொருளியலின் நியாயங்களை ஏற்போருக்கே கிடைத்துள்ளன. அமர்த்யா சேனுக்குப் பரிசு கிடைத்தபோது அதுபற்றி மூன்றாமுலகிலும் முக்கியமாக இந்தியாவிலும் பெருமகிழ்ச்சி காணப்பட்டது. பொருளியல் விருத்திக்கு ஒரு மனித மேம்பாட்டு வளர்ச்சிப் பரிமாணத்தை வழங்கியதற்காக அவர் மெச்சப்பட்டார். எனினும், முற்றிலும் முதலாளிய மறுப்பான மாற்றுப் பொருளியல் சிந்தனையாளர் எவரும் இதுவரை நொபல் பரிசு பெறவில்லை என்றே நினைக்கிறேன்.

 

சில விருதுகள் பற்றி அதிக இரகசியம் இல்லை. அவற்றுக்கான அரசியல் தகுதிகள் வெளி வெளியாகவே தெரிந்தவை. அந்தளவுக்கு அவை நேர்மையானவை. நடுநிலை, நீதி, நியாயம் என்கிற பேர்களில் வழங்கப்படுகிற அநீதியான, அநியாயமான பக்கச்சார்பான முடிவுகள் பற்றிப் பல சமயங்களிலும் உண்மைகள் வெளியே சொல்லப்படுவதில்லை.

 

உலகின் எந்தவொரு விருதும் பரிசும் பெறுபவரின் திறமையை எடுத்தியம்பும் கட்டியங்களல்ல. விருதுகளும் அத்தனை புனிதமானவை அல்ல. இது இலங்கையில் வழங்கப்படும் சாகித்திய விருது தொட்டு ஒஸ்கார் விருது, நொபெல் பரிசு வரை எல்லா விருதுகளுக்கும் பொருந்தும். இருந்தாலுங்கூடச் சமாதானத்திற்கான நொபெல் பரிசு குறித்த பெருத்த எதிர்பார்ப்பு இன்னமும் இருந்து வருகிறது. ஆனால் உலகின் மிகப்பெரிய கொலைகாரர்க ளான ஹென்றி கிஸிஞ்சர், அல் கோர், ஜிம்மி காட்டர், ஒபாமா முதற்கொண்டு ஆபிரிக்க மக்களை மனிதர்களாகவே மதிக்காத அல்பேர்ட் சுவைற்சர் வரை சமாதானத்தோடு தொடர்பில்லாத வர்களுக்கே இப் பரிசு காலகாலமாய் வழங்கப்பட்டு வந்துள்ளது.

அவ் வகையில் இம்முறை விருது பொருத்தமானவருக்குத்தான் வழங்கப் பட்டிருக்கிறது. இந்த உலகை இப்போது பெரிதும் அச்சுறுத்தும் அம்சமாக இருப்பது ஜரோப்பிய பொருளாதார நெருக்கடி. அதிலிருந்து தன்னைக்காத்துக்கொள்ளக் கூடிய அத்தனை வழிமுறைகளையும் ஜரோப்பிய ஓன்றியம் கையாளுகிறது. ஊலகெங்கும் போர்களைத் தொடுக்கிறது அல்லது தொடுக்கிற அமெரிக்காவுக்கு பங்காளியாக நிற்கிறது. இன்று ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா ஆகிய போர்கள் ஏன் தொடுக்கபட்டன. ஏன் நடாத்தப்படுகின்றன என்பதை ஒருகணம் எண்ணிப் பாருங்கள். அவ்வகையில் இம் முறை சமாதானத்திற்கான நொபெல் பரிசு ஜரோப்பிய ஓன்றியத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் உலக அமைதிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பவர்களுக்கே உலக சமாதானத்திற்காக நொபெல் பரிசு வழங்கப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது குறித்து ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

இதற்கிடையில் ஜரோப்பிய ஓன்றியத்துக்கு வழங்கப்பட்டது ஆச்சரியமளிப்பதாகப் பலர் கூறத் தொடங்க பரிசை வழங்கிய நொபெல் தெரிவுக்குழுவானது 'ஜரோப்பாவை ஒன்றுபடுத்தி ஜரோப்பாவில் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் நிலைபெறச் செய்ததற்காகவும், போர்களால் நிரம்பிய கண்டத்தை அமைதிப்பூங்காவாக மாற்றியதற்காகவும் ஜரோப்பிய ஓன்றியத்துக்கு இம்முறை நொபெல் சமாதானப்பரிசு வழங்கப்படுகின்றது' என்றனர்.

டைனமட்டைக் கண்டுபிடித்த சுவீடன் நாட்டுக் கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமாகிய அல்பிரட் நொபெல் நினைவாக நோபல் பரிசு வழங்கப்படுகின்றது. 1896இல் தான் இறக்கும் போது இயற்பியல், வேதியல், மருத்துவமும் மனோவியலும், இலக்கியம் மற்றும் சமாதானம் ஆகிய துறையில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு நொபெல் தனது சொத்திலிருந்து பரிசு வழங்கவேண்டும் என உறுதி எழுதி வைத்தார். சமாதானம் தவிர்ந்த ஏனைய நான்கு துறைகளுக்மென பரிசை சுவீடன்; பாராளுமன்றம் தெரியவேண்டும் எனவும் சமாதானத்துக்கான பரிசை நோர்வேப் பாராளுமன்றம் தெரியும் குழுவே தெரிவு செய்ய வேணடும் என எழுதியிருந்தார். சுவீடன் ஆதிக்க நோக்குடைய நாடாக இருந்ததும் நோர்வே யாருடைய பக்கமும் சாராத நடுவு நிலைமையை வெளியுறவுக் கொள்கையையும் கொண்டிருந்தபடியால் அரசியல் நெருக்குவாரங்களோ சொந்த நலன்களுக்கு அப்பால் இந்த சமாதானத்திற்கான பரிசு வழங்கப்பட வேண்டும் என நொபெல் விரும்பினார். இந்த அடிப்படையில் 1901ம் ஆண்டிலிருந்து நொபெல் பரிசுக்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

இம்முறை பரிசு ஜரோப்பிய ஓன்றியத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக நொபெல் பரிசைத் தீர்மானிக்கும் குழு அறிவித்துள்ளது. அவர்களது செய்திக்குறிப்பில் கடந்த அறுபது ஆண்டுகளில் அமைதிக்குப் பாடுபட்டதிற்காக ஜரோப்பிய ஓன்றியத்துக்கு வழங்கப்படுவதாகவும் குரோசியாவை ஜரோப்பிய ஓன்றியத்த்தில் அடுத்த ஆண்டு இணைத்துக்கொள்ளத் தீர்மானித்தமை, மொன்டிநீகுரோவுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் சேர்பியாவுக்கு இணைய சந்தர்ப்பம் வழங்கியமை என்பவை நம்பிக்கையளிப்பதாகவும் இவை பால்கன் பகுதியில் மீளிணக்கத்துக்கு உதவியளித்திருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் யாதெனில் கடந்த அறுபது ஆண்டுகளில் செய்தவற்றுக்காக வழங்கப்பட்டதாக சொல்லப்படும் பரிசுக்கு உதாரணங்களாகக் காட்டப்பட்டிருப்பவை இனி நடைபெற எதிர்பார்த்திருக்கும் நிகழ்வுகளே. இதே பாணியில் தான் உலகுக்கு அமைதியைக் கொண்டுவருவார் என ஒபாமாவுக்கு வழங்கப்பட்டமை உங்களுக்கு நினைவிலிருக்கும்.

இங்கே நினைவூட்ட வேண்டிய சில செய்திகள் உள்ளன. இரண்டாவது உலக யுத்தத்திற்கு முன்பிருந்தே பல ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைகளில் விடுதலைப் போராட்டங்கள் நடை பெற்றன. 1945ல் உலக ஃபாசிசம் தோற்கடிக்கப்பட்ட சூழலில், கிழக்கு தெற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் சோஷலிச ஆட்சிகள் தோற்றம் பெற்றன. அவ்வாறு மார்ஷல் டிட்டோவின் தலைமையில் உருவாக்கப் பட்டதே யூகோஸ்லாவிய சமஷ்டிக் குடியரசாகும். அதே போன்று அல்பேனியாவில் அன்வர் ஹோஜா தலைமையில் சோஷலிச ஆட்சி மலர்ந்தது. இத்தகைய சோஷலிச நாடுகள் ஐரோப்பிய அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளுக்கு பெரும் சவாலாகவும் எதிர் நிலையாகவும் அமைந்தன. எனவே இச் சோஷலிச நாடுகளை உடைப்பதற்கும் சிதைப்பதற்கும் மேற்குலகு சதா முயன்று வந்துள்ளது. அதனைச் சக்தி மிக்க மக்கள் தலைவைர்களாக விளங்கிய டிட்டோ, அன்வர் ஹோஜா போன்றோர் உயிருடனும் அதிகாரத்திலும் இருக்கும் வரை அமெரிக்காவாலும் ஜரோப்பிய ஓன்றியத்தாலும் சாத்தியமாக்க முடியவில்லை. இருப்பினும் அந்நாடுகளில் இன மத முரண்பாடுகளை வளர்ப்பதற்கும் பகை நிலைக்குத் தள்ளுவதிலும் ஊடுருவி வேலைகளைச் செய்தும் வந்தன. அவையே காலப்போக்கில் போர்களாகின. ஜரோப்பிய ஓன்றியம் நாடுகளை ஒன்றுபடுத்தியது என்று சொல்கிற காரணத்தின் பின்னால் சொல்லாமல் விடப்பட்ட காரணங்களும் உள்ளன. அமெரிக்க உலகப்போரின் பின் பிரிக்கப்பட்ட சில நாடுகள் ஒன்றிணைவதை தடுத்து வந்துள்ளது. இன்றுவரை, மீண்டும் கொரியா ஒரு நாடாக இணைவதற்குத் தடையாக உள்ளது அமெரிக்கா தான். அதேநேரம், சோவியத் யூனியனின் செல்வாக்குச் சரிந்ததன் பின்னணியில் கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிஸ அரசுகள் சரிந்த கையோடேயே போரால் பிரிந்த ஜேர்மனியை ஒன்றிணைப்பதை ஆதரித்தது.

யூகோஸ்லாவியாவின் விடயத்தில் அந்த நாடு ஸ்லாவ் தேசிய இனங்கள் பலவற்றின் ஒன்றிணைவால் உருவான நாடு என்பதும் அங்கே எவ்விதமான தேசிய இன ஒடுக்கலும் இருந்ததில்லை என்பதும் பலருக்கு நினைவுக்கு வருவதில்லை. அங்கே இருந்துவந்த தேசிய இனங்களிடையே போட்டி இருந்தது. இடையிடை பகைமையான உணர்வுகளும் இருந்தன. ஆனால், அது மோதல்கட்கோ பிரிவினைக்கோ 1990 கள் வரை இட்டுச் செல்லவில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. மிகமோசமான பொருளாதார நெருக்கடி இருந்து வந்த 1980 களில் பிரிவினைக்கான இயக்கங்கள் உருப்பெறவில்லை. உண்மையில், 1945 முதலாக, சோவியத் யூனியனுடன் முரண்பட்டு நின்ற அணிசேரா நாடான யூகோஸ்லாவியாவின் ஒற்றுமையை அமெரிக்கா அப்போது விரும்பியது. அன்று ஒரு வலுவான யூகோஸ்லாவியாவால் அமெரிக்காவுக்கு பயன் இருந்தது. சோவியத் யூனியன் 1980 களின் இடைப்பகுதியிலிருந்து பலவீனப்படத் தொடங்கிவிட்டது. அதற்குப் பின்னர் யூகோஸ்லாவியாவாற் பயனிருக்கவில்லை.

1990களில் சோவியத் யூனியனதும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளினதும் சோஷலிச வீழ்ச்சியைத் தொடர்ந்து யூகோஸ்லாவியாவும் அல்பேனியாவும் தத்தமது சோஷலிச ஆட்சிகளை இழந்தன. இதில் அந் நாடுகளின் பிற்போக்குவாத சக்திகளுடன் அமெரிக்க ஜரோப்பிய ஓன்றிய சக்திகள் கை கோர்த்துச் செயற் பட்டன. அதன் காரணமாக பல்லினத் தேசியங்களைக் கொண்டிருந்த யூகோஸ்லாவிய சமஷ்டிக் குடியரசு நான்கு துண்டுகளாகித் தனித் தனி நாடுகளாகியது. சேர்பியாவின் பெருந் தேசிய இன வெறி கொண்ட மிலேச்சத்தனமாக இன மத ஒடுக்குமுறை யானது சோஷலிசத்தின் கீழ் ஏற்பட்ட ஐக்கியத்தையும் நாட்டின் இறைமையையும் பாழாக்கிக் கொண்டது. சோஷலிசம் செயற் பட்ட மண்ணிலே இனவெறி இரத்த ஆறு ஓடியது. இன்று யூகோஸ்லவியா என்ற நாடு உடைக்கப் பட்டு ஏழு தனித்தனி நாடுகளாக்கப் பட்டு விட்டது. இது அமெரிக்காவினதும் ஜரோப்பிய ஓன்றியத்தினதும் தேவைக்கு உகந்ததாதக அவர்களாலேயே திட்டமிட்டு உருவாக்கப் பட்டது. இவைதான் ஜரோப்பிய ஓன்றியம் ஜரோப்பியக் கண்டத்தில் சமாதானத்திற்காகச் செய்த சாதனைகள். சர்வதேச போர்களின் புள்ளிவிபரங்களின்படி நொபெல் பரிசுக்குழு ஜரோப்பிய ஓன்றியத்தைப் புகழுகின்ற அமைதி மிக்க அறுபது ஆண்டுகளில் 33 போர்கள் நடைபெற்றள்ளன. பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்னமும் சனநாயக மறுப்பும் மனித உரிமை மீறல்களும் நிறைந்து கிடக்கின்றன. இன்னொரு புறம் ஜரோப்பிய ஓன்றியத்தின் இராணுவக் கரமாக செயற்படுகின்ற நேட்டோ உலகெங்கும் போர்களில் ஈடுபட்டு குண்டுவீசி இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று நிலைநாட்டிய சனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் சேர்த்துத்தான் இந்தமுறை நொபெல் பரிசு ஜரோப்பிய ஓன்றியத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

பொருளாதார ரிதியில் இப்போது ஜரோப்பிய ஓன்றியம் தட்டுத்தடுமாறுகிறது. வேலையின்மைக்கும் அவர்களது சமூகப் பாதுகாப்பைக் காவுகொல்லும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை காவல் துறையினர் வன்முறையை பிரயோகித்து அடக்குகின்றனர். மக்களின் நியாயமான போராட்டங்களுக்கெதிராக அராஜகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. கொஞ்சக்காலமாக அது தனது ஓன்றியத்தில் உள்ள திவாலான நாடுகளை பிணையெடுக்கின்றன. ஆனால் நெருக்கடி இன்னமும் மோசமாயுள்ளது. இப்போது தன்பங்குக்கு நோபல் பரிசு ஜரோப்பிய ஓன்றியத்தைப் பிணையெடுக்கிறது.

-சேயோன் 14/10/2012