Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

ஏகாதிபத்தியங்களின் முள்ளிவாய்க்கால் சதியினை மறைக்க முயலும் சோல்ஹெய்ம்

"எம்மை போரிட செல்ல விடாமல் ஒரு தீர்வை, எமது மக்களுக்கு நாட்டை பெற்றுத்தருவோம் என மறைமுக வாக்குறுதிகளும், தமிழ் மக்களின் நண்பர்கள் போன்ற தோற்றத்தையும் காட்டி நாம் இறுதியில் ஏமாற்றப்பட்டோம். இதை தமிழர் பரம்பரை உள்ளவரை மறக்க முடியாது." போராளியின் வாக்குமூலம்!!!

இன்று சோல்ஹெய்ம் கொடுக்கும் பேட்டி


தமிழ் மக்களின் விடுதலையை முள்ளிவாய்க்காலில் புதைத்து மட்டுமன்றி, எதிர்காலப் போராட்டத்தினை சிதைக்கும் நோக்கோடு சர்வதேச சக்திகள் செயற்படுகின்றன. நாம் எவ்வாறு வீழ்ந்தோம், வீழ்த்தப்பட்டடோம் என்று விமர்சன நோக்கோடு பார்க்கும் காலத்தில் வரும் கருத்துக்களை கவனமாக கையாளப்பட வேண்டும். புலிகள் வீழ்ச்சி, அவர்கள் பிரதிநிதித்துவம் செய்த வர்க்கத்தின் வீழ்ச்சியே. போராட்டம் என்பது அன்னியச் சக்திகளை நம்பி உருவாகுவதில்லை. எல்லா அரசுகளுமே ஒடுக்குமுறை அரசு தான் என்பதை புலிகள் உலக நாடுகளில் சுற்றுப பயணம் செய்த போது அவர்கள் கற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் அரசியலில் வர்க்கங்கள் இல்லாத உலகத்தின் நோக்கில் எல்லோருடனும் கைகோர்த்து நின்றிருந்தனர். ஆனால் சொந்த மக்களையும், தளத்தையும் தொடர்ச்சியாக பாதுகாப்பதன் ஊடாக சொந்த விடுதலையை வெற்றி கொள்ள முடியாது போய்விட்டது.


முள்ளிவாய்க்கால் அழிவிற்கு பின்புலமாக பல சக்திகள் தனிநபர்கள் புலிகள் அமைப்பு முக்கியஸதர்கள் இருக்கின்றார்கள்.


1.இந்திய பிரமுகர்களாக வைகோ, கனிமொழி, ஜெகத் கஸ்பார்


2. ஏகாதிபத்தியங்களின் கூட்டு (நோர்வே உட்பட) பத்திரிகையாளர் உட்பட


3. புலிகளின் தளத்தினதும், புலத்தினதுமான பிரதிநிதிகள்: வழுதி, றொகான், சந்திரநேரு உட்பட.


புலிகள் தளத்தில் போராடிய போது புலத்தில் இருந்த சக்திகள் வெவ்வேறு நலன்களை பிரதிநிதித்துவம் செய்தவர்கள் தேசியம் என்ற ஒரு குடையின் கீழ் அமிழ்ந்திருந்தனர். அமிழ்ந்திருந்த சக்திகள் இன்று மேற்கு தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே தமிழ் மக்களின் போராட்டத்தினை வழிநடத்திச் செல்கின்றனர்.


தளத்திலோ தளங்கள் பறிபோவதற்கு முக்கிய தளபதி எதிரியுடன் கூட்டுச் சேர்ந்ததையும் போராளிகள் இறுதி நேரத்திலேயே இனம் கண்டு கொண்டிருக்கின்றார்கள். கிளிநொச்சி வீழ்ச்சிக்கு முக்கிய தளபதி முக்கிய படைஇலக்குகளுக்கு படைகளை நகர்த்தாமையும், பின்னர் சண்டையிடாது பின்வாங்கப்பட்டதற்கும் பின்னணியாக தளத்திலும் புலத்திலும் இடம் பெற்ற குழிபறிப்புக்களே காரணம்.


சர்வதேசத்தில் இடம்பெற்ற பேரம் பேசல்கள், காய்நகர்த்தல்கள் என்பன வெளிவராமல் இருக்கின்றது. புலத்துப் புலிகளின் இந்தச் செயற்பாடு தளத்தில் நின்ற போராளிகளுக்கு தப்பான நம்பிக்கையை வளர்த்திருக்கின்றார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வழுதி என்கின்ற தமிழ் சமூகத்தின் புழுதியின் வாக்கு மூலங்களை நாம் மிக அவதானமாக கவனிக்க வேண்டும். சோல்ஹெய்மின் வாக்குமூலமும் இவர்களின் சூழ்ச்சியை வெளிப்படுத்துகின்றது.


கிளிநொச்சி வீழ்ச்சி அடைந்ததில் இருந்து இறுதிவரை களத்தில் காட்டிக்கொடுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. புலிகள் இறுதிவரை பெரும் சண்டையில் ஈடுபடவில்லை. புலிகளின் தலைமையின் நடமாட்டத்தினை அவர்கள் வைத்திருந்த தொழில் நுட்ப கருவிகளே அவர்களின் நகர்வுகளை காட்டிக் கொடுத்திருக்கும்.

நாம் ஆகாயத்தில் நம்நாட்டவர்களை விட அதிகமாக எம்மால் விமானத்தில் பறக்க முடிகின்றது. அவ்வேளையில் பூமியில் என்ன நடைபெறுகின்றது தெரிகின்றதோ இல்லையே தொலைத்தொடர்புக் கருவியின்  மூலமான அசைவுகளையும், இருப்பிடத்தை இலகுவாக கண்டுபிடிக்க முடியும். அவ்வாறே கிளிநொச்சியில் இருந்து தொங்கியவன் நந்திக்கரை வரை கொண்டுவந்துதான் தலைமையை கொன்றான். எம்மக்களின் மேல் கொண்ட சதியாக நாம் உணர்கின்றோம். எமக்கு உள்ள தொழில் நுட்ப அறியாமையைப் பயன்படுத்தி எம்மை அழித்தவனை இட்டு ஆத்திரம் கொள்கின்றோம். ஆனால் இன்று சோல்ஹெய்ம் சொல்வதை இதனை வைத்தே நகைப்பிற்கிடமான கருத்து என்று விடலாம். சண்டையிடாது இவ்வாறு கடற்கரைக்கு அண்டிய பிரதேசத்திற்கு கொண்டு வந்த சதியாளர்களை மக்கள் கேள்வி கேட்பதின் ஊடாக உண்மையை கண்டறிய முடியும்.


சண்டை நடைபெற்ற காலத்தில் கண்டெடுக்கப்பட்ட படையினரின் சடலங்களில் வெளிநாட்டவர்களின் சடலங்களும் அடக்கும். இதனை தமிழ் மக்களின் கவனத்திற்கு கொண்டுவராமல் புலம்பெயர் புலித்தலைமைகள் இருக்கின்றதாக போராளிகள் விசமப்படுகின்றார்கள். காயப்பட்ட போராளிகளை வெள்ளையர் இன இராணுவம் தம்மை தூக்கிச் சென்றதாக போராளிகள் கூறுகின்றார்கள். இவைகள் ஏன் மக்கள் மத்தியில் இருந்து மறைக்கப்படுகின்றது??

லொபி:


சோல்ஹெய்மின் பேட்டியானது ஈழத்தமிழர்களாக எம்மிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தனிமனிதனாகவும், தனிமனித உயர்வுகருதி சோல்ஹெயிம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கட்டமைக்கப்படும் ஐதீகம் என்பது, ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப உருவாக்கப்படும் அரசியல் இராணுவ தந்திரோபாயத்தினை நிறைவேற்றும் ஒரு நபராக பார்க்கமால் விடப்படுகின்றது.

பிரபாகரன் சரணடைவு ஒப்பந்தத்திற்கு உடன்பட்டிருந்தால் காப்பாற்றப்பட்டிருப்பார் என்பது மிகவும் நகைப்புக்குரியதாகும். இதே பேட்டியில் (தீபம்) கூறும் இன்னொரு முக்கிய விடயம் பழைய முறையில் அல்லாது புதிய முறைகளில் போராடும்படியும், தமிழர்கள் மீண்டும் துன்பப்படுகின்றார்கள் என்பதை பல நாடுகள் உணர்வதாகவும் கூறுகின்றார்.


மேற்கு தேசங்களின் நலன் என்பது அவர்களின் பொருளாதார வளத்தினை பெருக்கிக் கொள்வதற்கான உழைப்பாளிகள், மூலவளம், சந்தை இவற்றை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டினை செய்து கொள்வதற்கான கொள்கையாகும்.


சர்வதேச சமூகம் என்பதே யுத்தங்களையும், போராட்டங்களையும் தேவையான போது ஆதரிப்பதும், தேவையற்ற போது அழிப்பதையும் கொள்கையாக கொண்டிருக்கின்றது. உலகமயமாதலின் ஒரு அங்கமாக தனிநபர்களை ஆபார்ந்தவானாக மாற்றி, அவர்களை முன்னிலைப்படுத்துகின்றது. உலகமயமாதலில் பிரமுகத்தனம் கொடிகட்டிப் பறக்கின்றது. அமைப்புக்களாக இணைய விடாது. தனிமனிதர்களாக இயங்கும் சிந்தனையை அனைத்து மட்டங்களிலும் ஊக்குவிக்கின்றது. மக்கள் திரள் அமைப்புக்களுக்குப் பதில் கனவான் அரசியலை (லொபி)யும் புகுத்துகின்றது. தனிமனிதர்கள் இலகுவாக நிதி மூலதனத்தால் விலைக்கு வாங்க முடியும்.  பிரமுக அரசியல் என்பது உலகமயமாதலின் விளைவாகும். புகார்களை விசாரிக்கும் நியாயவாதிகளை  உருவாக்கின்றது. அது ஒரு போராட்டத்தை புற்றுநோய் போல் அழிக்கும். பிரமுகத்தனம் மக்கள் போராட்டத்திற்கு முன் பூச்சியமே. அதே போல மக்கள் திரளின் முன்னும் பிரமுகர்கள் பூச்சியம்தான். பொதுக்கொள்கையின் கீழ் அமைப்பு வடிவம் எடுக்க வேண்டும். பிரமுகத் தன்மை என்ற நோய்க்கு முடிவுகட்டுவது என்பது முற்போக்கு சக்திகளின் கடமையாகும்.


ஆனால் தமிழ் மக்கள் ஒரு அமைப்பு வடிவம் எடுக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர். புலிகளில் இருந்த பிரிவுகளுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்குகின்றது. இவைகள் பொதுமக்கள் மத்தியில் வெளியே தெரிவதில்லை.  


மக்களையும், தலைவரையும் பல முன்னணிப் போராளிகளையும் சதிமூலம் கொன்ற சர்வதேச சமூகம் இன்று தமது முகமூடியை மறைக்கின்றது. உலகத் தலைமையின் மோசடியை மக்கள் உணர்கின்ற வேளையில் தமது அதிர்ப்தியை வெளிப்படுத்துகின்றனர். இருப்பினும் இவர்கள் சரியான அரசியல் ரீதியாக அமைப்புருவாக்கப்படுத்தாத காரணத்தினால் அரசியல் ரீதியாக முன்னேற முடியாத நிலையில் உள்ளார்கள். இந்தப் பிரிவினரை அமைப்பு ரீதியாக வென்றெடுக்க வேண்டிய அரசியல் கடமையுள்ளது.