Mon05252020

Last updateSun, 19 Apr 2020 8am

ஆக்கிரமிக்கப்படும் நிலங்கள்!!

“மலையாளபுரம், கிருஷ்ணபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள காணிகளில் மக்கள் கடந்த பல வருடங்களாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பல மாதங்களாக நிலவிய வறட்சி ஓரளவுக்கு நீங்கி மழை பெய்திருப்பதால் தமது காணிகளை கால போகத்துக்கு தயார் படுத்தும் நோக்கத்துடன் விவசாயிகள் கடந்த ஓரிரு தினங்களாக அங்கு செல்கின்றனர்.

ஆனால் அவர்களை வயல் நிலங்களுக்குச் செல்ல விடாமல் இராணுவம் துரத்தி அடித்து வருகின்றது. "எங்களது சொந்த வயல் நிலங்களில் படையினர் குவிந்திருக்கின்றனர். எங்களையும் அவர்கள் விரட்டி அடித்தனர்" என்றார் விவசாயி ஒருவர்.

விழுங்கப்படும் பெரு நிலங்களில் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு கிராமங்கள்.

“கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பிரதேசங்களில் 6 கிராம சேவகர் பிரிவுகள் இயங்குகின்றன. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தப் பிரிவுகளில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு விட்டனர். மரபார்ந்த சமூகக் கட்டமைப்பைக் கொண்ட இந்த மக்கள் சேனைப் பயிர்ச் செய்கை, பருவ காலப் பயிர்ச் செய்கை என்பவற்றோடு மற்றுமொரு பிரிவினர் கடற்றொழில் சமூகமாகவும் வாழ்ந்து வந்தனர். ”

இவை சிறு உதாரணம். ஆனால் நிலங்களை அபகரிப்புகள் பல வகைப்பட்டவையாக இருக்கின்றது.

  • வியாபார நிறுவனங்களின் விளப்பரத் தட்டிக்காக

  • புத்தவிகாரை கட்டுதல்

  • படைமுகாம்கள் விஸ்தரிப்பு

  • பாதை அமைத்தல்.......

போன்ற காரணங்களால் தனியாரின் விளைநிலங்கள், காடுகள் அழிக்கப்படுகின்றன. வயல்வெளிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றது. ஒரு திணைக்களத்தின் கீழ் திட்டமின்றி படையினரின் அதிகாரத்திற்கு உட்டபட்டதாகவே பெரும்பான்மையான நிலங்கள் பாளாப்போகின்றன.

புதிய தெருக்களையும், பாதைகளையும் அமைக்கின்ற போது பழைய வடிகால் அமைப்பு முறை பாதிக்கப்படுகின்றது. வடிகால் மூலம் வயல்களுக்கு சென்று கொண்டிருக்கும் தண்ணீர் தடைப்படுகின்றது. இதனால் வயல்வெளிகளுக்கு செல்லும் நீர் தடைப்படுகின்றது. வயல்களில் நீர்தேக்கம் இன்மையால் உற்பத்தியில் வீழ்ச்சியும், வரண்ட நிலப்பரப்பாக வயல்வெளிகள் உருவாகின்றன.

சங்குப்பிட்டியில் இருந்து மன்னார் செல்லும் பாதையில் பல இடங்களில் இராணுவம் காடுகளை அழித்து முகாம் அமைத்துள்ளது.

யாழ்ப்பாணம் முதல் முல்லைத்தீவு வரையான பல இடங்களில் இராணுவம் முகாம் அமைத்திருக்கின்றது.

விளையாட்டு மைதானமாக இருந்து கிளிநொச்சி ரொட்டறிக் கழக விளையாட்டு மைதானமும் அதனைச் சுற்றிய பகுதிகளும் இராணுவமுகாம்களாக ஆக்கப்பட்டிருக்கின்றன. இதிலும் குறிப்பாக கிளிநொச்சி கனிஸ்ட மகாவித்தியாலத்தின் முன்பாகவே ஒரு இராணுவமுகாம் அமையப் பெற்றிருக்கின்றது. அந்தப் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகள் நின்மதியாக போய்வர முடியுமா என்ற கேள்விக்கு அப்பால் பாடசாலையை அண்டிய பகுதியில் இராணுவமுகாம் அமைக்கப்பட வேண்டிய தேவை என்ன இருக்கின்றது?

இவ்வாறே வேலணையில் இருந்து புளியங்கூடல் பிரதேசத்தில் பாடசாலைக்கு அருகாமையில் கடற்படை முகாம் இருக்கின்றது. அந்த இடத்தில் அமைந்த முகாம் பல விவசாய நிலங்களையும், தனியார் குடியிருப்புக்களையும் ஆக்கிரமித்து இருக்கின்றது.

இது எந்த ஜனநாயக நாட்டில் அவ்வாறு இருக்கின்றது? ஜனநாயகம் தழைப்பதாக கூறும் பெருமக்கள் இதற்கு பதில் தரமுடியுமா?

இன்றைக்கு கைத்தொலைபேசி சந்தைப்படுத்தப்படுதல் வேகமாக நடந்து கொண்டிருக்கின்ற வேளையில், தொலைத் தொடர்பு சமிக்கைளை சீராகப்பெறும் நோக்கோடு தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. விவசாய, தனியார் காணிகளிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறே ஈசல் போல விளம்பரத் தட்டிகளும் முளைத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு எந்தக் கட்டுப்பாடும் உள்ளதோ தெரியவில்லை. தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை பொருளாதார கட்டமைப்பினால் உண்டாகும் வேலைவாய்ப்போ அல்லது நிரந்தர வருவாயோ அற்றவர்கள், நுகர்வுக் கலாச்சாரத்திற்கு உள்ளாகின்றார்கள். விளம்பரத் தட்டிகள் ஈசல் போல முளைப்பது போலவே நுகர்வுக் கலாச்சாரத்தினால் பொருளாதாரம் வளர்ச்சியற்றுப் போகின்றது. சேமித்து தொழில் முயற்சியோ அல்லது அடுத்த வேளை சீவியத்திற்கோ பயன்படுத்த வேண்டிய பணம் கொள்ளைக்காரர்களிடம் போய்ச் சேருகின்றது.

நிலஆக்கிரமிப்பு, பொருளாதார வளங்களும், பெரும் வர்த்தக நிறுவனங்களும் இராணுவ கட்டமைப்பை உயிர்வாழ வைப்பதான உற்பத்தி முறைகளையும் இன்றைய ஆட்சியாளர்கள் மேற்கொள்கின்றார்கள். இராணுவம் சார்ந்த உற்பத்தி, சேவை என்பன பாசீச கட்டமைப்பும் பாதுகாக்கப்படுகின்றது.

-வேலவன்: 12/10/2012