Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

'திருப்தி இன்றியே பல்கலைக்கழக போராட்டம் முடிந்தது'

'மூன்று மாதங்கள் கடந்து போராட்டம் நடந்தும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை'

'மூன்று மாதங்கள் கடந்து போராட்டம் நடந்தும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை'

இலங்கையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதற்கு அரசுடன் இணக்கம் கண்டுவிட்டதாக அரசாங்க அமைச்சர்கள் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தனர்.

ஆனால் மாணவர்களின் நலன்கருதியே போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகவும் தமது கோரிக்கைகளுக்கு திருப்தியளிக்கக்கூடிய உறுதிமொழிகள் தமக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்திற்கு கிட்டத்தட்ட 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதா என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்காத சூழ்நிலையிலேயே, இன்று வியாழக்கிழமை கொழும்பில் ஊடகயவியலாளர் சந்திப்பொன்று நடந்தது.

முன்னதாக, பொருளாதார அபிவிருத்தி அமைச்சிலிருந்து வந்த ஃபக்ஸ் அறிவித்தலின்படி, ஜனாதிபதியின் சகோதரரும் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்கள் சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சித் தேவசிறியும் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பவித்ரா கைலாசபதி செவ்வி

மாற்று மீடியா வடிவில் இயக்க

ஆனால், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சார்பில் அங்கு இன்று யாரும் கலந்துகொண்டிருக்கவில்லை.

இதேவேளை, இந்த செய்தியாளர் சந்திப்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சார்பில் யாரும் கலந்துகொள்ளாவிட்டாலும், அவர்கள் நிச்சயமாக இதுவரை முன்னெடுத்துவந்த தொழிற்சங்கப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்திருக்கிறார்கள் என்று பசில் ராஜபக்ஷ கூறினார்.

எந்த அடிப்படையில் விரிவுரையாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டார்கள் என்று ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் இங்கு கேள்வி எழுப்பியபோது, 'அவர்களுக்கு எவை எல்லாம் கிடைக்கவில்லை என்பதை அவர்களிடமே கேளுங்கள். ஆனால் எங்களால் கொடுக்க முடிந்தவற்றை, கொடுக்க வேண்டியவற்றை கொடுக்க நாங்கள் முன்வந்துள்ளோம்' என்றார் பசில்.

இங்கு பேசிய அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க., வரவுசெலவுத்திட்டம் நெருங்கிக்கொண்டிருக்கும்போது, ஒரு தரப்பினருக்கு மட்டும் சம்பள கொடுப்பனவு உயர்வு வழங்குவது அரசாங்கத்தால் முடியாத காரியம் என்று கூறினார்.

இலங்கையில் எந்த தொழிற் துறையினருக்கும் ஒருபோதும் வழங்காத சம்பள உயர்வை பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு அரசு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, மொத்தத் தேசிய உற்பத்தியில் 6 வீதத்தை கல்வித்துறைக்கும் ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு என்ன ஆனது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேரடியாக தெளிவாக பதில் கூறவில்லை.

சில நாடுகள் தமது மக்களை எழுத, படிக்க வைப்பதற்காக முதலீடுகளை இன்னும் செய்துகொண்டிருக்கும் வேளையில், இலங்கையில் கற்றறிந்த சமூகத்துக்கான அரசாங்கம் வாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருப்பதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

'எதிர்பார்த்த வெற்றி இல்லை'

மாற்றுவழிகளில் கோரிக்கை தொடரும் என்கின்றனர் விரிவுரையாளர்கள்

6% நிதி ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை தொடரும் என்கின்றனர் விரிவுரையாளர்கள்.

இதேவேளை, மூன்று மாதங்களுக்கும் அதிகமான காலம் முன்னெடுக்கப்பட்டுவந்த தொழிற்சங்கப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை பற்றி தமிழோசை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் பொருளாளர் கலாநிதி. பவித்ரா கைலாசபதியிடம் வினவியது.

பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களின் அனுமதி, ஏற்கனவே கற்கின்ற மாணவர்களின் கல்வி மற்றும் உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தம் போன்ற முடங்கியுள்ள கல்வி நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுக்கும் நோக்குடன் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளதாக அவர் கூறினார்.

கிட்டத்தட்ட 100 நாட்கள் போராட்டம் நடத்தியும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டும், விரிவுரையாளர்கள் வருமானத்தை இழந்தும் தமது போராட்டத்தால் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை அடைய முடியாது போனததாக பவித்ரா சுட்டிக்காட்டினார்.

நாட்டின் கல்வித்துறைக்கு மொத்தத் தேசிய உற்பத்தியிலிருந்து 6 வீதத்தை ஒதுக்க வேண்டும் என்பதற்கான தமது போராட்டம் தொடரவேண்டும் என்பதே அனைத்து கல்விசார் சமூகங்களினதும் கருத்து என்றும் அவர் தெரிவித்தார்.

தமது கோரிக்கைகளை அடைவதற்கான மாற்றுவழிகள் பற்றி இனி தாங்கள் சிந்திக்க இருப்பதாகவும் பவித்ரா கைலாசபதி கூறினார்.

-bbc.co.uk/tamil