Wed04242024

Last updateSun, 19 Apr 2020 8am

இலவசக் கல்வி, நடைப்பயணம் மற்றும் சம உரிமை இயக்கம்...

கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை இன்றைய அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளியிருப்பதாகத தெரிகிறது.  மாறி மாறி இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளுமே மக்களது அடிப்படை உரிமைகளில் காலத்துக் காலம் கை வைக்காமல் ஆட்சி செய்ததாக வரலாறே இல்லை. ஒன்று இவர்கள்மக்களது மானியங்களில் கைவைப்பார்கள் அல்லது மக்கள் மத்தியில் இனவாதத்தை வளர்த்து விட்டு அந்த நெருப்பில் குளிர்காய்வார்கள். இப்படித்தான் காலாகாலமாக நடந்து வந்திருக்கிறது.

மாணவர்கள் இன்று போராட்டப் பாதைக்குள் இறங்கியிருக்கிறார்கள் என்றால் அதற்கொரு அர்த்தம் இருக்கிறது. ஆம் அதுதான் மக்களின் அடிப்படை உரிமையான  கல்வி. கல்வியைக் கொண்டு மனிதன் புத்திசாலித்தனமாக சிந்திக்கத் துவங்குகிறான். விவேகமாக செயல்படுகிறான். சமூக அவலங்களை சாடுகிறான். உரிமைகளுக்காகப் போராடுகிறான். மனித சமூகத்தின் சுபீட்சத்துக்காக திட்டம் வகுக்கிறான். இன்னும் எவ்வளவோ….. அந்தக் கல்வி இலவசமாகக் கிடைக்கும்போது மனிதன் அடையும் ஆனந்தத்துக்கு அளவே கிடையாது. வாழ்க்கையில் வறுமைக் கோட்டுக்குக் கீழிருப்பவன் கூட சந்தோசப்படுகிறான். இந்த சமூகத்துக்காக தானும் ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஒரு உந்து சக்தி அவனுள் உதமயமாகிறது. தனி  ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி.  இங்கே தனிமனிதனுக்கு கல்வி மறுக்கப்பட்டால், மனித சமுதாயமே காட்டுமிராண்டி யுகத்துக்குள் சென்று விடமாட்டாதா?

ஆகவே இந்தக் கல்வி இன்று பணத்துக்கு விலைபேசப்படும் விற்பனைப் பொருளாக மாறிக் கொண்டு வருகிறது. உலக நவ தாராமய ஏகாதியத்தின் கைப்பொம்மையாக மாறியிருக்கும் அதிகார வர்க்கம் இலவசக் கல்வியை இல்லாமலாக்கி அதனை ஒரு விற்பனைப் பொருளாக்க பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய ஒரு கடற்பாடு மக்களுக்கு இருக்கிறது. ஆனால் மக்கள் வாய் திறப்பதில்லை. ம்.. என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம் என்ற நிலையில் மக்கள் இருக்கிறார்கள். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இலசக் கல்வியை பாதுகாப்பதற்காகவும்  கல்வியை தனியார்மயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பல்வேறு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டடு வந்ததோடு அதன் உச்சக் கட்டமாக ஆர்ப்பாட்டப் பேரணியொன்று கண்டியிலிருந்து கொழும்புக்கு நடைப்பயணமாக வந்து சேர்ந்தது. 'கல்வியை விற்பனைப் பொருளாக்காதே",  'கல்வியை தனியார்மயமாக்காதே", 'இலவசக் கல்வியைப் பாதுகாப்போம் " என்ற கோஷங்கள் வானைப் பிளந்தன. இந்த நடைப்பயணத்துக்கு வழிநெடுகிலும் அமோக மக்கள் ஆதரவு  கிடைத்தது.  அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னணி செயல் வீர்ர்கள் இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தமை ஒரு பரதாபமான விடயம்.  அவர்களது உயிரிழப்பு  ஆர்ப்பாட்டப்  பேரணிக்கு தடையாக இருக்கவில்லை. தடைக்கற்களையும் படிக்கற்களாகக் மாற்றி வெற்றிக் கம்பத்தை எட்டும்  இளைய பேரணியல்லவா.  தமது தோழர்களை காவு கொடுத்த நிலையிலும், சோகத்தை உள்ளத்துக்குள்ளேயே அடக்கிக் கொண்டு, ஆயிரம் உயிர்களை நீங்கள் காவு கொண்டாலும்  எங்கள் குறிக்கோளிலிருந்து நாங்கள் கிஞ்சித்தும் அசைய மாட்டோம் என்ற உறுதியோடு அவர்கள் பேரணியைத் தொடர்ந்து முன்னெடுத்தனர். மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணியில் எந்தவொரு அரசியல் கட்சியும் பங்கு பற்றாதது விஷேட அம்சமாகும்.

பல்கலைக் கழக பேராசியர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காலியில் ஆரம்பித்து கொழும்பை நோக்கி வந்தது. ஆரம்பத்தில் சம்பள அதிகரிப்பை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட விரிவுரையளர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் பின்னர்,அரச கல்வியைப் பாதுகாப்போம் என்ற திசையை நோக்கி திரும்பியிருந்தன. அதன் உச்சக்கட்டமாக  காலியிலிந்து கொழும்பு வரை ஆர்ப்பாட்டப் பேரணியொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில்   UNP, JVPபோன்ற பல்வேறு அரசியல் கட்சிகளும் பங்குபற்றியிருந்தன. 'அரச கல்வியை பாதுகாப்போம்",  ' தேசிய உற்பத்தியில் கல்விக்கு 6வீதத்தை ஒதுக்கு" என்ற கோஷங்கள்  அந்தப் பேரணியின் தொனிப்பொருளாக இருந்தது. ஆனால் இலவச கல்வியைப் பற்றிய எந்தக் கோஷமும் அநதப் பேரணியில் காணப்படாதது விஷேட அம்சமாகும். அதே நேரம் ஒருகாலத்தில் 'இலவசக் கல்வியை பாதுகாப்போம்", 'ஏழைகளின் கல்வியில் கை வைக்காதே', என்ற கோஷங்களை தலைமேல் சுமந்திருந்த JVPஅரச கல்வியைப் பாதுகாப்போம் என்ற UNPயின் கோஷத்துக்குள் முடங்கியிருந்ததைப் பார்க்கும்போது கோமாளிகளின் கும்மாளம்தான் நினைவுக்கு வந்தது. இலவசக் கல்வியை குழிதோண்டிப் புதைப்பதற்காக கல்வி வெள்ளை அறிக்கை சட்டமூலத்தை கொண்டு வந்த அந்தநாள் கல்வி அமைச்சரும், இன்றைய  எதிர்க் கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவோடு  விரிவுரையாளர்களின் ஆர்ப்பாட்ட பேரணியில் சென்றது வேடிக்கையாக இருந்தது. வழி நெடுகிலும்  ஆதரவாளர்களால் குளிர்ப்பானங்கள் வழங்கப்பட்டன. இதனால் தானோ என்னவோ அரசாங்கத்தின் அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறியிருந்தார் JVPகாரர்கள் சாப்பாட்டு பார்ஸலுக்காக  UNPக்குப் பின்னால் அணிவகுத்துச் செல்கிறார்கள் என்று. இதனை   JVPதோழர்கள் சிந்திப்பது சரீர சுகத்துக்கு நல்லது.

இதே நேரம் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் 'சம உரிமை இயக்கத்தின்' அறிமுக விழா நடைபெற்றது. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வந்திருந் பெருந்திரளான மக்கள் அங்கு கூடியிருந்தனர் சம உரிமை இயக்கத்தின கொள்கை விளக்கங்கள் அடங்கிய கை நூல் வந்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. அங்கு உரையாற்றிய அதன் தேசிய அமைப்பாளார் ரவீந்திர முதலிகேயின் உரை மக்கள் மத்தியில் ஒரு புதிய சிந்தனையை உருவாக்கக் கூடியதாக இருந்தது. அதன் சில பகுதிகளைப் பார்ப்போம். ' 30வருடகாலம் நீடித்த யுத்தம் முடிந்து விட்டதாகக் கூறப்பட்டாலும் வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் அதன் தாக்கம் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. அங்கு மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். யுத்தத்தின் தாக்கத்திலிருந்து அந்த மக்கள் இன்னும் விடுபட்டதாகத் தெரிய வில்லை. அங்கு இராணுவ ஆட்சி நடக்கிறது. அரசாங்கம் என்ன சொன்னாலும் நிர்வாகம் இராணுவத்தின் கையில்தான் இருக்கிறது. யுத்தத்துக்குக் காரணமான சமத்துவமின்மைய இல்லாமலாக்கி அனைத்து மக்களுக்கும் சமத்துவத்தையும், சம நீதியையும், சம உரிமையையும் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதற்கான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை. ஆகவே, இனரீதியாகவும் மதரீதியாகவும் மொழி ரீதியாகவும் மக்களை பிரித்து ஆளும் ஏகாதிபத்தியத்தினதும், நவ தாராளமய முதலாளித்துவத்தினதும் குள்ள நரித்தனத்தை தோற்கடித்து இந்நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைத்து மக்களினதும்  சம உரிமைக்காகப் போராட சம உரிமை இயக்கம் தயாராக இருப்பதாக கூறினார்.

இந்த நிலையில் 3மாகாண சபைகளுக்குமான தேர்தல் முடிந்து விட்டது. இவற்றில் கிழக்குமாகாணத்துக்கான தேர்தலை முக்கியமாக ஆராயவேண்டும். முஸ்லிம் முதலமைச்சரொருவரை கிழக்கு மாகாணத்துக்கு தெரிவு செய்வோம் என்ற கோஷத்தை முன்வைத்து முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் களமிறங்கியது. தமிழர்கள் தான் கிழக்கு மாகாணத்தை ஆளவேண்டும்,அதற்காக தமிழ் மக்கள் தமிழர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற தொனிப்பொருளோடு தமிழர் கூட்டணி தேர்தலில் இறங்கியது. அரசாங்கமோ யார், யாருக்கு வாக்களித்தாலும் ஆட்சியமைக்கப் போவது தாங்களே என்ற நோக்கில் முஸ்லிம் காங்கிரஸின் மாற்றுக் கட்சியோடும். பிள்ளையான் கருணா அம்மான் போன்றவர்களது துணையோடும் களத்தில் இறங்கியது. அந்தத் தேர்தலில் இனவாதம் நன்றாகவே தனது வேலைய செய்தது. சபரகமுவ மாகாண தேர்தலும் இனவாதிகளுக்கு ஒரு ஆடுகளமாகவே இருந்தது. பிரிந்திருந்த தோட்டப்பகுதி தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியாகத் சேர்ந்து  மாகாண சபைக்கு இரண்டு தமிழர்களை தெரிவு செய்வோம், என்ற இனவாதக் கோஷத்தோடு தேர்த்தலில் களமிறங்கிறன வடமத்திய மாகாண தேர்தலில் சிங்கள இனவாதம் தனது கடமையை செவ்வனே செய்தது. இந்த 3மாகாண சபைகளுக்கான தேர்தலை எடுத்துக் கொண்டால்  இனங்களுக்கிடையில் நடத்தப்பட்ட தேர்தலாகவே இருந்த்து. யுத்தத்திற்குப் பின்னர் நாட்டின் அனைத்து மக்களையும் இலங்கையர் என்ற கோஷத்துக்குள் கொண்டு வருவதற்குப் பதிலாக இனவாதத்தை மீண்டும் போஷிக்கும் நடவடிக்கையில் அரசியல் தலைவர்கள் இறங்கியிருப்பது  இதன் மூலம் தெரிகிறது.. அரசியல் வாதிக்கு MPபதவி வரப்பிரசாதங்களைக் கொண்ட உல்லா வாழ்க்கைக்கான தொழில். தேர்தல் என்பது மக்கள் வாழ்க்கையோடும் உணர்வுகளோடும் போட்டி போட்டு விளையாடும் ஒரு பொழுது போக்கு. எனவே இந்த இனவாத போக்குக்கு எதிராக மக்கள் சிந்தித்து இனவாத அரசியல்வாதிகளை ஓரங்ககட்டாத வரை இந்த நாட்டிலிருந்து இனவாதத்தை துடைத்தெரிய முடியாது. அது சிங்கள இனவாதமாக இருந்தாலும் சரி, தமிழ் இனவாதமாக இருந்தாலும் சரி, முஸ்லிம் இனவாதமாக இருந்தாலும் சரியே.

 www.lankaviews.com/ta