Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

முன்னணியின் மூன்றாவது மாநாடுச் செய்தி

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தனது முன்றாவது அமைப்பு மாநாட்டை, 21,22,23 செப்டெம்பர் 2012 அன்று டென்மார்க்கில் நடத்தியது. தனக்கான எதிர்கால வேலைகளை முன்னெடுக்கும் வண்ணம் அமைப்பாக்கத்தையும், தன் அரசியல் வழிமுறைகளையும் வகுத்துக் கொண்டது.       

மூன்று வருடங்களுக்கு முன்னம் எம்மை நாம் ஒரு அமைப்பாக ஒருங்கிணைத்துக் கொண்டவர்கள். தனிநபர் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்து, அதை ஒருங்கிணைந்த நடைமுறை அரசியலாக்கும் வண்ணம், அமைப்பு செயற்பாட்டுக்கான காலடியை எடுத்து வைத்தோம்.

நம்மில் பலர் நீண்ட பல வருடங்களாக வர்க்க அரசியலை முன்னிறுத்தியவர்கள். தமிழ் தேசிய இயக்கங்களின் மக்கள் விரோத அரசியலை எதிர்த்து, உள் மற்றும் வெளியரங்கில் வர்க்க அரசியலுக்காக போராடியவர்கள். இயக்க அரசியல் பாசிசமாக தலைவிரித்தாடியதைத் தொடர்ந்து, நாட்டுக்கு வெளியில் அதற்காக போராடியவர்கள். இதன் ஒரு அங்கமாக அரசியல் சஞ்சிகை, இணையம் நடத்திய நாம், மூன்றாவது பாதைக்கான அமைப்பு ஒன்றைக் கூட உருவாக்கியவர்கள். பாரம்பரியமான புரட்சிகர வர்க்க அரசியலை உயர்த்திப் பிடித்த நாம், இன்று ஒரு அமைப்பு வடிவம் பெற்றிருக்கின்றோம். மற்ற எவரையும் விட, இதற்காக நாம் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும். ஒரு புரட்சிகரமான உயிரோட்டமுள்ள வர்க்க அரசியலும், வர்க்க உணர்வும் கொண்ட பாரம்பரியத்தின் பிரதிநிதிகளாக நாம் இருந்து வந்தோம்.

இதனுடன் நாம் எம்மை நிறுத்திக் கொள்ளக் கூடாது. இந்த அமைப்பாக்கல் என்பது, எம்மை நாம் மேலும் அரசியல்மயப்படுத்திக் கொண்டு புரட்சிகர நடைமுறைக்கு செல்லுதல்தான்.

இருந்த போதும், முதலில் நாம் எம்மை சிந்தனை மையமாக அறிவித்துக் கொண்டோம். வெறும் சிந்தனை செய்யும் ஒரு அமைப்பாக கருதி நாம், நடைமுறையில் சிந்தனையைக் கடந்து செயல்பட்டோம். நாம் இந்த அரசியல் தவறை இனம் கண்டபோது, அமைப்பின் பெயரை புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்று மாற்றினோம். முன்னணி தனக்கான திட்டத்தைக் கொண்டபோது, அது மார்க்சிய லெனினிய மாவோயிச சிந்தனையின் வழிகாட்டலுக்கு உட்பட்டது என்பதை திட்டம் தனக்குள் கொண்டிருக்கவில்லை. ஆனால் இம்மாநாட்டு மூலம், திட்டம் தனது வழிகாட்டும் அரசியலை தெளிவாக்கி, மார்க்சிய லெனினிய மாவோயிச சிந்தனையினை முன்வைத்து இருக்கின்றது.

இப்படி எப்போதும் நாம் தற்காப்புக்குரிய தயக்கத்துடன் செயல்பட்டு இருக்கின்றோம். அன்னிய நாட்டில் இருந்து வர்க்க நடைமுறை அரசியலை முன் கையெடுத்து முன்னெடுக்க முடியாது என்ற தவறான கண்ணோட்டத்துடன், எம்மை நாமே வரையறுத்துக் காட்டினோம். ஆனால் நடைமுறையில் இதைத் தாண்டி முன்னோக்கி செல்லும் பாதை, எம்முன் இயல்பான ஒன்றாக இருந்தது. நாம் வெறும் அரசியற் கருத்துக் காவிகள் அல்ல. அரசியற் கருத்தை வைத்து எம் இருப்பை நிலைநாட்டும் அமைப்புமல்ல. இலங்கையில் ஓரு வர்க்கக் கட்சியை உருவாக்கும் நடைமுறை அரசியலின், ஒரு அங்கமாகவே நாம் உள்ளோம். இதை நாம் சரியாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அதை நோக்கி நாம் போராட வேண்டும்.  
 
இந்த வகையில் அமைப்பு தன்னை முன்னோக்கிய ஒன்றாகவே, வளர்த்தெடுத்து வந்திருக்கின்றது. அமைப்பின் பெயர் மாற்றம் உட்பட ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட வழிகாட்டுதலையும், இன்று தனக்கான வழிகாட்டும் தத்துவத்தையும் கூட முன்னோக்கி வைப்பதன் மூலம் தொடர்ந்து தன்னைத்தான் வளர்த்தெடுக்கின்றது. எமது அமைப்பின் மாநாட்டு நிகழ்ச்சிநிரல் கூட, பொதுவான கூட்ட மரபுக்கு மாறாக ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிக் கண்ணோட்டத்தில் நடத்தினோம். அமைப்பு மாநாடு மேலும் இன்றைய எமது நிலையைக் கடந்து, முன்னோக்கி செல்லும் வண்ணம் எமக்கு வழிகாட்டவுள்ளது.
    
நாம் எம்மை, எம் கருத்தை மையப்படுத்திய போராட்டம் என்பது, எம்மை பாதுகாப்பதற்கல்ல. கருத்தை பாதுகாப்பதற்காக அல்ல. வெறும் மார்க்சியத்தை பாதுகாப்பதற்கு அல்ல. இலங்கையில் ஒரு வர்க்கக் போராட்டத்தை நடத்துவதுதற்குத் தான். ஆகவே அதை நோக்கி எமது செயற்பாடுகள் அனைத்தும் மாற்றியமைக்கப்பட வேண்டும். இலங்கையில் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி அரசியலை முன்னுக்கு கொண்டுவரும் அரசியல் அடித்தளத்தை அடிப்படையாக கொண்ட செயற்பாடுகளை, முன்னெடுக்கும் வண்ணம் எமக்கு மாநாடு வழிகாட்டும். இந்த அடிப்படையில் எமது அமைப்பு மாநாடு, எம் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வண்ணம், ஒரு அரசியல் முன்னோக்காகக் கொள்ளுகின்றது. இதுதான் இந்த மாநாட்டின் அடிப்படையான நோக்கம். எமது அடுத்த மாநாட்டுக்கு இடையில் இலங்கையில் பாட்டாளி வர்க்கத்தின் கட்சியை முன்னுக்கு கொண்டுவரும் அரசியல் அடித்தளத்தை, நாம் சாதித்தாக வேண்டும். இதை நாம் உறுதி எடுத்துக் கொண்டு போராடுவோம்.
 
இதை சாதிப்பதில் உள்ள தடைகள் என்ன? இந்த வகையில் எம்மில் உள்ள தடைகளை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். எமக்கு வெளியில் உள்ள தடைகளையும் நாம் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். இதைச் சுற்றி இரண்டு பிரதானமான கூறுகள் காணப்படுகின்றது.
 
1.தத்துவார்த்த ரீதியானது.
 
2.நடைமுறை ரீதியானது.
 
இங்கு தத்துவமற்ற நடைமுறையும், நடைமுறையற்ற தத்துவமும், எமது நோக்குக்கு தடையானது. அதுபோல் உழைக்கும் வர்க்கம் சார்ந்து நிற்கும் நடைமுறையற்ற நடைமுறையும், வர்க்க கண்ணோட்டமற்ற தத்துவமும் கூட வர்க்கப் போராட்டத்துக்குத் தடையானது. இந்தப் போக்கு எம்மிலும், எமக்கு வெளியிலும் காணப்படுகின்றது.
 
நாம் தெரிந்து கொண்டதை வர்க்க அரசியலாக கருதுவதன் மூலமும், ஏதாவது ஒரு செயற்பாட்டை வர்க்க நடைமுறையாகக் கருதுவதன் மூலமும், வர்க்கப் போராட்டத்தை எம்மை அறியாமல் தடுத்து நிறுத்துகின்றோம். எமது கடந்தகாலத்தை விமர்சனம், சுயவிமர்சனம் செய்யாது, நாம் தொடர்ந்து கற்றுக் கொள்ளாது, சொந்த நடைமுறையை மீள்நோக்கிப் பார்க்காது செயல்படும் போக்கு பொதுவாகக் காணப்படுகின்றது. இதுவே வர்க்க அரசியல் நடைமுறை என்று எம்மை நாம் திருப்தி செய்து கொள்கின்ற போக்கு, உண்மையில் வர்க்கத்துக்கான கட்சியை இலங்கையில் உருவாக்குவதில் ஒரு பாரிய அரசியல் தடையாக இருக்கின்றது.
 
போராட்ட அர்ப்பணிப்பும், தியாக உணர்வும் கொண்ட போராட்ட மரபு உடைய நாட்டில், ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி அரசியல் அரங்கில் இல்லாமல் இருப்பதற்கு காரணம் அகரீதியானது. மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையிலான தத்துவம் மற்றும் நடைமுறையை ஒருகிணைத்து அதை முன்னெடுப்பதும், கடந்தகாலத்தை விமர்சித்து சுயவிமர்சனத்தை உள்வாங்கி அதை நடைமுறையாக்குவதும் அவசியமாகும்.             
 
இந்தவகையில் அரசியல் என்பது அன்றாடம் கற்றுக்கொள்வது. கற்றுக்கொண்டு முன்னேறுவதுதான். எமக்கு தெரிந்ததை வைத்துக்கொண்டு, தொடர்ந்தும் அரசியலை ஓட்ட முடியாது. அரசியலை வெறும் கருத்தாக, அதைச் சொல்வதல்ல. அதை நடைமுறையுடன் பொருத்த வேண்டும். பொருத்துவது என்பது உழைக்கும் வர்க்கத்துக்கு அரசியல் மற்றும் நடைமுறை மூலம் தலைமை தாங்க வேண்டும். இது மக்களின் வாழ்வுடன் இணைந்ததாக இருக்கின்றதா என்பதை, தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். தத்துவங்களைக் கட்டிப்பிடிக்கும், நடைமுறைகளை தூக்கிப்பிடிக்கும், வரட்டுவாதிகளாக நாம் இருக்க முடியாது. இது வெளியில் மட்டுமல்ல, எம்மிலும் இருக்கின்றது. கடந்தகால வரலாற்றுப் போக்குகள், இதை எங்கும் வளர்த்து இருக்கின்றது.
 
இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை, உழைக்கும் வர்க்கக் கட்சியை கட்டுவது தொடர்பாக எம் முழுக் கவனத்தைக் குவிப்போம். இந்த மாநாட்டில் சிறப்பு உரைகள், அதை மையப்படுத்தி ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தது. எம்மைப் போல் வெவ்வேறு தளத்தில் வர்க்க அரசியலை முன்வைக்கும் பிரிவினரின் அரசியல் பார்வைகளை, இந்த மாநாட்டில் கேட்கவும், விவாதிக்கவும், கற்றுக் கொள்ளவும், எமக்கு எம் மாநாடு வழி காட்டியது. நாம் அதனுடன் இணைந்து பயணிக்க, இந்த மாநாடு எம் அனைவருக்கும் வழிகாட்டும்.
 
இங்கு எமது அமைப்பு அல்லாத வேறு இரு அமைப்பைச் சேர்ந்த, எமது அதே இலக்கைக் கொண்ட விடையங்கள் மீதுதான், அவர்களும் சிறப்பு உரையாற்றினார்கள். எம்முடன் இணைந்து விவாதித்தார்கள். இந்தக் கூறுகளை எமது அரசியல் முன்னோக்காக, அடுத்த இலக்காகக் கொண்டு, இந்த சவால் மிக்க பணியை நாம் எமது அரசியல் வழியாக தேர்ந்தெடுத்து இருக்கின்றோம்;.
 
வர்க்கப்போராட்டம் என்ற எமது எதிர்கால நோக்கத்தை அடைய, இந்த மாநாடு எமக்கு வழிகாட்டியது. அதே நேரம் அவர்களுக்கு எம்மால் தெளிவான செய்தியை இந்த மாநாடு மூலமும் வழங்க முடிந்தது. அவர்களுக்கும் எமக்கும் இடையிலான ஒரு ஒருமித்த செயல்பாட்டுக்கு, இந்த மாநாடு மேலும் ஒருபடி வழிகாட்டியது.
 
நாம் இலங்கையில் புரட்சிகர வர்க்கக் குணாம்சம் கொண்ட, வர்க்க நோக்கம் கொண்ட புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிய கட்சியுடனும், முன்னிலை சோசலிச கட்சியுடனும் தொடர்பில் இருந்தபடி அன்றாடம் தொடர்ந்து விவாதிக்கின்றோம். முன்னிலை சோசலிச கட்சியுடன் பொது அரசியல் இலக்கை நோக்கிய, சில முக்கிய வேலைகளை முன்னெடுக்க அவர்களுடன் உடன்பட்டுள்ளோம்.
 
இதைக் கடந்து மார்க்சிய லெனினிய கட்சிகள் இடையே வெவ்வேறு மட்டங்களில் ஒரு அரசியல் ஒருமைப்பாட்டையும், நடைமுறை ஒருங்கிணைப்பையும் உருவாக்கும் அரசியல் முன்னெடுப்பு, அடுத்த அரசியல் பணியாக எம்முன்னுள்ளது. ஒரு முன்னணி, அதற்கான பொதுவான அரசியல் மற்றும் நடைமுறை செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். மார்க்சிய லெனினிய மாவோயிச சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட ஒன்றுபட்ட கட்சியை உருவாக்கும் வண்ணம், நாம் முதலில் எமக்கு இடையில் ஒரு முன்னணியை உருவாக்குவதன் மூலம் அடுத்த காலடியை எடுத்து வைக்க முடியும். இந்த முன்னணி மூலம் மார்க்சிய லெனினிய சிந்தனையை ஏற்றுக்கொண்ட அனைத்துப் பிரிவையும் ஒன்றிணைக்க முடியும். இதன் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து வர்க்க ரீதியான சக்திகளை ஒருங்கிணைத்தல் தான் எமது அரசியல் இலக்கு. இது தான் இலங்கையில் வர்க்க அரசியலை உயர்த்திப்பிடிக்கும் அனைவரினதும் தெரிவுமாகும். இதை நாம் எமது மாநாட்டு தீர்மானமாக, இலக்காக உறுதியேற்றுக் கொண்டோம்.   

இங்கு இதை அடைவதில் பல தடைகள் உண்டு. வர்க்க ரீதியான இலக்கை மையப்படுத்திய முன்னோக்கு, அரசியல் ஒருமைப்பாட்டை நாம் உயர்த்திப் பிடித்து நிற்க வேண்டும்.
 
இந்த அரசியல் மற்றும் நடைமுறை திட்டம் வகுக்கப்பட்டு விவாதிப்பதும், முரண்பாடுகளை இனம் கண்டு அரசியல் ரீதியாக அவற்றுக்கு தீர்வு காண்பதன் மூலமும் பலமான உழைக்கும் வர்க்கக் கட்சியை இலங்கையில் கட்ட முடியும்.
 
இதை மையப்படுத்தி எமது இந்த மாநாடு, தன்னை அரசியல் மற்றும் நடைமுறை ரீதியாக ஒருங்கிணைக்குமாறு அறைகூவல் விடுகின்றது.  

எமது திட்டம், அரசியல் அறிக்கை,  போராட்டத் தந்திரமும், செயல் தந்திரமும், இலங்கை விவசாயிகள் பற்றிய வர்க்க அரசியல் ஆய்வு போன்றவற்றைப் பார்வையிட பின்வரும் இணைப்புகளை அழுத்திப் பார்க்கவும்;.

1. புதிய ஜனநாயக மக்கள் முன்னணி திட்டம்
2. புதிய ஜனநாயக மக்கள் முன்னணி அரசியல் அறிக்கை  
3. புதிய ஜனநாயக மக்கள் முன்னணி போராட்டத் தந்திரமும், செயல் தந்திரமும்
4. புதிய ஜனநாயக மக்கள் முன்னணி இலங்கை விவசாயிகள் பற்றிய வர்க்க அரசியல் ஆய்வு


புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
23 செப்டெம்பர் 2012