Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

சிறப்பு அகதிகள் முகாம்களை மூடி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்!

நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் !
 
தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் என்னும் பெயரில் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாமாக இயக்கப்படும் சிறப்புஅகதிகள்முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாவும் விடுதலை செய்யப்பட நீங்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

1989ம் ஆண்டு புலிகள் இயக்கத்தினரைக் கட்டுப்படுத்த என கலைஞர் அரசால் வேலூர் கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டதே “சிறப்பு அகதிகள் முகாம்”. வெள்ளைக்காரன் காலத்தில் போடப்பட்ட அந்நியர் நடமாட்ட கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில் இயக்கப்படுவதாக இது கூறினாலும் கூட உண்மையில் கியு பிரிவு உளவுப்பிரிவினரால் சிறையை விடக் கொடிய சித்திரவதை முகாமாவே இது இயக்கப்பட்டு வருகிறது. 1989ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் முதன் முதலில் வேலூர் கோட்டையில் ஆரம்பிக்கப்ட்ட சிறப்புமுகாம் பின்னர் ஜெயா அம்மையாரின் ஆட்சிக் காலத்தில் பல கிளைச்சிறைகள் மூடப்பட்டு பல சிறப்பு முகாம்களாக விஸ்தரிக்கப்பட்டது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது சிறப்பு முகாம் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதும் பின்னர் ஆட்சிக்கு வந்ததும் அதனைவிடக் கொடுமையாக இயக்குவதும்  கலைஞர் மற்றும் ஜெயா அம்மையாரின் வாடிக்கையாக இருந்து வருகிறது.
 
இப்போது இலங்கையில் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால் வேடிக்கை என்னவெனில் புலிகள் இயக்கத்தைக் கட்டுப்படுத்த என ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு முகாம்கள் இன்னும் மூடப்படாமல் தொடர்ந்து இயக்கப்படுகிறது. உண்மை என்னவெனில் அங்கு அப்பாவி அகதிகளே புலிகள் என முத்திரை குத்தப்பட்டு அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். இங்கு வேதனை என்னவெனில் இலங்கையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரும் தமிழகத்தலைவர்கள்கூட தமிழ்நாட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு கேட்க தயங்குகின்றனர். உதாரணமான இலங்கை சென்று  மகிந்த ராஜபக்சவை சந்தித்து அகதிகளை விடுதலை செய்யுமாறு கோரியதாக கூறும் கலைஞர் மகள் கனிமொழி மற்றும் சிறுத்தைகள் தலைவர் திருமா ஆகியோர்  அப்போது ஆட்சியில் இருந்த  கலைஞரை சந்தித்து இந்த சிறப்பு முகாமை மூடுமாறு கேட்டிருக்கலாம். அல்லது இப்பவாவது இந்திய பிரதமர் மன்மோகனை சந்தித்து இந்த அகதிகளை விடுவிக்க முயற்சி செய்யலாம். அவர்கள் இந்த சின்ன விடயத்தைக் கூட  செய்ய மறுக்கின்றனர். ஆனால் அவர்கள் எமக்கு தமிழீழத்தை எடுத்துத் தரப் போகிறார்களாம் . அதற்காக டெசோ மாநாடு நடத்துவார்களாம். அடுத்து மன்மோகனை சந்தித்து முடித்துவிட்டார்களாம். இனி ஜ.நா சென்று முறையிடப் போகிறார்களாம். அடுத்த தேர்தல் வரை இப்படி பல நாடகங்களை இனி அவர்கள் அரங்கேற்றுவார்கள் போலும். இதைத்தான் “கேட்பவன் கேனையன் என்றால் எருமைமாடு ஏரோப் பிளேன் ஓட்டுது என்பார்கள்”;.
 
தான் ஆட்சிக்கு வந்தால் ராணுவத்தை அனுப்பி ஈழம் பெற்றுத் தருவேன் என்றார் ஜெயா அம்மையார். அவர் ஆட்சிக்கு வந்து விட்டார். ஆனால் இப்போது ஈழப்பேச்சை கானோம். இனி ஒரு வேளை அவர் எதிர்க்கட்சியில் இருக்கும்போது இது அவருக்கு நினைவுக்கு வரக்கூடும். இவர் ஈழம் பெற்றுத் தருகிறாரோ இல்லையோ? பரவாயில்லை ஆகக் குறைந்தது ஒரு கையெழுத்தைப் போட்டு இந்த சிறப்பு முகாம்களை மூடுவதற்கு வழி செய்தாலோ போதும். அதை அவர் செய்வாரா? அல்லது “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்”; என்று கூறிய சீமான் அவர்களாவது அம்மையாரிடம் கூறி இந்த முகாம்களை கூட வழி செய்வாரா?
 
வைகோ  முதலில் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினார். இனி உண்ணா விரதம் இருக்கப் போகிறாராம். சீமான் சிறப்பு முகாமிற்கு பூட்டு போடப் போகிறேன் என்கிறார். மனித உரிமைவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நீதிமன்றங்கள் கண்டனம் தெரிவிக்கின்றன. ஊடகங்கள் இவற்றை எல்லாம் தொடர்ந்து வெளியிடுகின்றன. எனினும் இந்திய அரசு இந்த சிறப்பு முகாம்களை  மூட மறுத்து வருகின்றது. என்றாலும் எனக்கு மக்கள் மேல் நம்பிக்கை உள்ளது. மக்கள் சக்தியே மகத்தான சக்தி என நம்புகிறேன்.  எனவே அந்த மக்களுக்கு இந்த பிரச்சனை எடுத்துக் கூறுவோம் .மக்கள் மனங்களை வென்றெடுப்போம்.
 
எட்டு வருடங்களுக்கு மேலாக சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு சித்தரவதைகளை அனுபவித்தவன் நான். அதன் வேதனைகளும் வலிகளும் நன்கு அறிந்தவன் நான். எனவேதான் இந்த சிறப்பு கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்ட குரல் கொடுக்குமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
-தோழர். பாலன்

27/08/2012