Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

லலித் - குகனையும் அரச பாதுகாப்புப் படையினரே கடத்தியுள்ளனர் - திமுது ஆட்டிகல

altலலித் குமார்வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் அரச பாதுகாப்புப் பிரிவினராலேயே  கடத்தப்பட்டுள்ளனர் என முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் திமுது ஆட்டிகல தெரிவித்தார்.

காணாமல் போனதாக கூறப்பட்டுள்ள லலித் குமார்வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பிலான வழக்கின் சாட்சியப்பதிவுகள் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில்,

குமார் குணரட்ணமும் நானும் ஒரே நாள் கடத்தப்பட்டோம். அங்கு எனது கண்கள் கட்டப்பட்டே இருந்தது. அப்போது லலித் மற்றும் குகன் தொடர்பில் என்னிடம் கேட்டனர். அத்துடன் லலித் மற்றும் குகன் இருவரும் இருப்பதாகவும் கூறினர். ஆனால் எனது கண்கள் கண்கட்டப்பட்டிருந்தமையால் வெளியில் நடப்பது எதுவும் தெரியவில்லை.

எனினும் 2011செப்டெம்பர் முதல் 2012யூலை வரையில் 76பேர் கடத்தப்பட்டுள்ளனர். இதனை நாம் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் வெள்ளை வான் கடத்தல் காணாமல் போனதாக பதிவாகிய முறைப்பாடுகள் தொடர்பில் அறிக்கைப்படுத்தியுள்ளோம்.

அந்த காலப்பகுதியில் தான் லலித் குமார்வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டுள்ளனர். அதன்படி நான் கூறுகின்றேன் லலித் குமார்வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் அரச பாதுகாப்புப் பிரிவினராலேயே கடத்தப்பட்டுள்ளனர். அத்துடன் தற்போது தடுத்து வைக்கப்பட்டிருப்பின் அதுவும் அரச பாதுகாப்பு பிரிவினராலேயே தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள் என்றார்.

இதன்போது திமுதுஆட்டிகலவிடம் அரச சட்டத்தரணி குறுக்குவிசாரணையினை மேற்கொண்டு குமார் குணரட்ணத்தின் செயற்பாடு, அவர் நாடு கடத்தப்பட்டமை தொடர்பிலும் அவரிடம் கேட்கப்பட்டது

லலித்  குமார்வீரராஜ் குகன் முருகானந்தன் வழக்கின் சாட்சியப் பதிவுகள் எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் திகதி யாழ்ப்பாணம் அச்சுவேலி ஆவரங்கால் பிரதேசத்தில் வைத்து  காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

alt