Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இயங்கியலற்ற மார்க்சிய சிந்தனைமுறையில் கொரோனா

கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தனக்கும், தன் வீட்டுக்குள்ளும் வாரது, மரணம் தன்னை சுற்றி நிகழாது என்ற சுய கற்பனையில் - சுய அறியாமையில் இருந்து கருத்துக்களை உருவாக்குகின்றவர்கள், தங்கள் கருத்துக்கு இடதுசாரிய முலாம் பூசுகின்றனர்.

ஒட்டுமொத்த சமூகத்தையும் மையப்படுத்தாத, அதில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு அணுகுகின்ற பார்வை - முதலாளித்துவ சிந்தனைமுறை. உனக்கு வைரஸ் தொற்று வந்தால், உன்னைச் சுற்றி மரணம் நிகழ்ந்தால் இதை எப்படி நீ பார்ப்பாய்? முதலாளித்துவம் கொல்லும் தானே, என்று கூறுவாயா? இல்லையென்றால் மக்களுக்கு என்ன கூறுவாய்?

இடதுசாரியத்தின் பெயரில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு அணுகுகின்ற எல்லாப் பார்வையும், இயங்கியலற்ற வரட்டுத்தனமாகும். தன்னை மையப்படுத்தி, தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் தனியுடமைவாதக் கண்ணோட்டம். இதுதான் தனிமனிதர்களுக்குள் இயங்கும் முதலாளித்துவச் சிந்தனைமுறை.

இப்படிப்பட்ட சிந்தனைமுறைகள் வழி மார்க்சியத்தையும், முதலாளித்துவத்தையும் கிளிப்பிள்ளைகள் போல் உளறுவதை அறிவாக்க முனைகின்றனர். தமக்கு தெரிந்ததை வைத்து மீண்டும் அரைக்கின்றதைத் தாண்டி - இயங்கியல் முறையில் இயங்கிக்கொண்டு இருக்கும் சமகால விடையம் மீது இயங்கியலற்று புலம்பவது நடக்கின்றது. முதலாளித்துவம் அப்படித்தான் என்று வார்த்தை ஜாலங்கள் மூலம் முழங்க முடியும். மக்களை அறிவூட்ட முடியாது.

முதலாளித்துவம் மக்களைச் சுரண்டும், கொல்லும். இது எங்குமான பொது உண்மை. இதைக்கொண்டு அரைச்ச மாவை தொடர்ந்து அரைக்க முடியாது. பட்டினி மரணங்கள், சுத்தமான குடிநீர் இன்றிய மரணங்கள், மருந்தின்றிய மரணங்கள், சூழல் மாசுபடுதலால் மரணங்கள், யுத்தங்கள் மூலமான மரணங்கள, போதிய பாதுகாப்பற்ற உழைப்பில் மரணங்கள் .. இப்படி எண்ணற்ற மூலதனம் நடத்தும் கொலைகளும், அதன் சமூக விளைவுகளையும் சொல்லி மாளமுடியாது. இதையே கொரோனாவுக்கு கிளிப்பிள்ளை போல் மீளச் சொன்னால், முதலாளித்துவத்தையும் புரிந்து கொள்ளவில்லை, கொரோனா (SARS-CoV-2) வைரஸ்சையும் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் பொருள்.

2000 வருடங்களுக்கு மேலான தனியுடமை சமூக அமைப்பின் அடித்தளத்தையே கொரோனா (SARS-CoV-2) வைரஸ்சானது ஆட்டம் காண வைத்திருக்கின்றது. இந்த உண்மையின் அடிப்படையில் மூலதனம் முதலில் தடுமாறியது. இலாபத்துக்கான தனது உற்பத்தியை நிறுத்திக் கொண்டு, தப்பிப் பிழைக்கும் போராட்டமாக தனிமைப்படுத்தலை முன்னெடுத்தது. மக்கள் இறக்கக் கூடாது என்ற எந்த அக்கறையிலும் அல்ல. மூலதனம் செத்துவிடக் கூடாது என்ற அக்கறையே உற்பத்தியை நிறுத்தியது.

வைரஸ்சானது மூலதன சந்தையின் விதிக்கமைய சுதந்திரமாக இயங்குமாயின், உனக்கும் உன் வீட்டுக்குள்ளும் வைரஸ் பரவும் - மரணங்கள் நிகழும். இது தான் அறிவியல்பூர்வமான உண்மை. மரணங்கள் பத்துக் கோடிகளில் தொடங்கி 100 கோடிகளிலும் நிகழும். இதை யாரும் இல்லை என்று மறுக்க முடியாது.

இந்தச் சூழலில் என்ன நடக்கும். மருத்துவமுறை முற்றாகச் செயல் இழந்து விடும். உதாரணத்துக்கு இன்றே நோய்த் தொற்றுக்குள்ளானவர்களின் சில கதைகள் வெளி வருகின்றது கைவிடப்பட்டும் – அலட்சியப்படுத்தப்பட்டும், கேட்பாரின்றி தப்பிப்பிழைத்த கதைகள் - தனிப்பட்ட ரீதியில் நான் அறிவேன். மரணங்களை வீடுகளுக்குள் கூட்டியள்ளிய, கூட்டியள்ளும் கதை நாளை வெளிவரும். பெரும் எண்ணிக்கையில் தொற்றும் - மரணம் ஏற்படும் போது, மருத்துவத்துறை செயலிழக்கும். உழைப்பில் இருந்து மக்கள் தப்பி ஓடுவர். இந்தச் சூழிலில் உணவு, நீர்.. என்று மக்களின் அடிக்கட்டுமான விநியோகம் சீர் குலைந்துவிடும்.

உதாரணத்துக்கு பிரான்சில் அடிப்படைத் தேவை சார்ந்த கட்டாய உழைப்பில் இருந்து தப்பியோடுவதைத் தொடர்ந்து, அதைத் தடுக்க தொடர்ந்து உழைக்கின்றவர்களுக்கு வரியற்ற சிறப்பு நிதிக் கொடுப்பனவை பிரஞ்சு அரசாங்கம் அறிவித்துள்ளது. சீனாவில் தனிமைப்படுத்தல் முடிந்த பின், பயம் காரணமாக 20 சதவீதமானவர்கள் வேலைக்குத் திரும்பவில்லை. இதை அடுத்து சீன அரசு, வேலைக்குத் திரும்புபவர்களுக்கு சிறப்பு நிதிக் கொடுப்பனவை அறிவித்திருக்கின்றது. அமெரிக்காவில் தனிமைப்படுத்தலை அறிவித்தவுடன, மக்கள் கலகத்தை எதிர்பார்த்து சொத்துடைய வர்க்கம் ஆயுதக் கடைகளில் ஆயுதங்களை வாங்கிக் குவித்தனர்.

சுதந்திரமான வைரஸ்சின் இயங்கியல் ஒட்டுமொத்த தனியுடமை சமூகக் கட்டமைப்பையே தகர்த்துவிடும். தன்னியல்பான அராஜகமான போக்கு தலைவிரித்தாடும்.

அதாவது நோய் சுதந்திரமாக பரவினால் அடிக்கட்டுமான உழைப்பு முறை தகர்ந்துவிடும். பிணங்களை அகற்ற யாரும் இருக்கப் போவதில்லை. அது புதிய நோய்களை உருவாக்கும். உணவின்றி, நீர் இன்றி, மின்சாரமின்றி … பல்வேறு தொற்றுநோய்கள் பரவி - மனித குலத்தின் உயிர் வாழ்தலுக்கான தனியுடைமையின் அனைத்து அடிக்கட்டுமானத்தையும் சிதைத்து விடும். தனிமனிதனின் தனியுடமையிலான முதலாளித்துவ சிந்தனைமுறை, சமூகமாக கூடி எடுக்க வேண்டிய சமூகநிலைக்கு மனிதன் திரும்பி வருமுன், மொத்த மக்கள் தொகையில் எஞ்சி இருக்கும் எண்ணிக்கையை தீர்மானிப்பது சமூக உணர்வுள்ள மனிதனாக மாறும் அளவும் - பண்பும் மட்டுமே தீர்மானிக்கின்றது.

இது கற்பனையல்ல. இந்த எதார்த்தம் எம்முன் வந்தது, இன்னமும் முடியவில்லை. முதலாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அரசுகளின் வீராப்புகள், அசட்டையீனங்கள், அலட்சியங்கள்.. பல, தரவு ரீதியாக இன்று உறுதி செய்கின்றது.

மக்கள் புரட்சியின்றி இயற்கையின் விளைவால் தனியுடமை அமைப்பு முறையையே சிதைத்து விடும் என்பதை முதலாளித்துவம் உணர்ந்ததன் விளைவே, தங்கள் இலாபத்துக்கான உழைப்பை நிறுத்தினர். இதை விளங்கிக் கொண்டு, இதன் மேல் இயங்குவது தான் இன்றைய இயங்கியல். இது தான் மார்க்சியம்.