Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

கொரோனா குறித்து!? : பெரியாரிய - அம்பேத்கரிய - மார்க்சியம் மீதான கேள்வி

உலக முதலாளித்துவம் பொது நெருக்கடிக்குள்ளாகி திணறுகின்றது. சமூக வலைத்தளங்களே பாரிய கருத்துருவாக்கத்தை கட்டமைக்கின்றது. முதலாளித்துவ ஊடகங்கள் கட்டமைக்கும் தகவல்களையும் - சிந்தனைகளையும் அவை காவி வருகின்றன. மறுபக்கத்தில் உதிரித்தனமான நம்பிக்கைகள், கற்பனைகள், பரபரப்பான தனிமனித அற்பத்தனங்கள், அறியாமைகள்… முதல் மதம் - இனம் - சாதி - நிறம் சார்ந்த குறுகிய வக்கிரங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள் - சிந்தனைகள்.. எல்லாம் அறிவியல் மூலம் பூசி - மனித சமூகத்தையே திசை தெரிய முடியாத வகையில் திணறடிக்கின்றது.

மக்களைச் சார்ந்த உண்மைகளையும் - அறிவியலையும் - நடைமுறைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்லும், சமூக இயக்கங்களைக் காண முடிவதில்லை. அநேகமாக வெறும் சொற்களுக்குள் - எதிர்தரப்பை திட்டுகின்ற மொழிக்குள் முடங்கிவிடுகின்றதையே காணமுடிகின்றது. தன்னியல்பின் பின்னால் வால் பிடிப்பதையே காண முடிகின்றது. முகமூடி போட்ட போலி அறிவியலை - அறிவென்று நம்பி பரப்புகின்றது. பகுத்தறிவு கொண்டு அணுகவும், அனைத்தையும் சந்தேகக் கண்ணுடன் அணுகிப் பார்க்க முடியாத தத்துவ வறுமைக்குள் முடங்கி விடுகின்றது. இதனால் மக்களை அறிவூட்டக் கூடிய வகையில், மக்களை அணிதிரட்டக் கூடிய வகையில் சிந்தனைகளையும் - செயற்பாடுகளையும் காண முடிவதில்லை. சமூக இயக்கங்கள் செயலற்று தேங்கி விடுகின்றது. அறிவொளியில் இயங்குகின்ற இயங்கியல் தன்மையை சமூகம் இழந்து நிற்கின்றது.

இன்று ஒட்டுமொத்த உலக முதலாளித்துவமே நெருக்கடிக்குள்ளாகி, மக்கள் முன் அம்பலப்பட்டு நிற்க, ஒவ்வொரு நாட்டு முதலாளிகளும் தன் மக்கள் முன் பேயறைந்தவன் போல் விழித்து, என்ன செய்வது என்று தெரியாது தடுமாறுகின்றனர். இந்தச் சூழலில் தன்னியல்பான தங்கள் நடத்தைகள் மூலம், மக்களை திணறடிக்கின்றனர்.

உலகில் யாரையும் விட்டு வைக்காத மனிதப் பேரழிவு குறித்த புரிதலற்ற எச்சரிக்கை, உலகை அதிர வைத்துக் கொண்டு இருக்கின்றது. நாளை இந்த நோய்க்குள்ளாகி, மரணத்தில் இருந்து தப்பிப் பிழைப்போமா என்று கூற எந்த உத்தரவாதமும் கிடையாது. உலகில் உள்ள அனைவருக்குமான நிகழ்தகவு இது, அந்தளவுக்கு இதுவொரு தொற்று. தனக்கு வராது என்ற சுயநலம் கொண்ட நம்பிக்கையில், இன்னமும் மனிதர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கவே முனைகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் கொரோனா (SARS-CoV--2) வைரஸ் குறித்து பெரியாரிய - அம்பேத்கரிய - மார்க்சிய அமைப்புக்கள் அறிவியல் மற்றும் நடைமுறையில் செயலற்று விக்கித்து நிற்கின்றது. ஊடகங்களுக்கு வெளியில் சமூக வலைத்தளங்களே, மனித அறிவியலையும் - தவறான நடைமுறைகளையும் உருவாக்கி விடுகின்றன.

ஏன் இந்த நிலைமை? தவறு எங்கேயோ உள்ளது?

குறிப்பாக தமிழகத்தில் பெரியாரிய - அம்பேத்கரிய - மார்க்சிய இயக்கங்களுக்குள் தொடர்ச்சியாக வரும் அமைப்பு சார்ந்த நெருக்கடிகள், கொரோனா பின்னான நடத்தைகள் மூலம் - விளங்கிக் கொள்ள முடிகின்றது.

அமைப்பு வடிவம், ஜனநாயக மத்தியத்துவம், மேல் இருந்து கீழாக எடுத்துச் செல்லும் கருத்துருவாக்க முறைமைக்குள் கட்சிகள், அமைப்புகள் முடங்கும் போது நெருக்கடி உருவாகின்றது. இது கட்சி - அமைப்புகளின் நெருக்கடி மட்டுமல்ல, கருத்தியல் - நடைமுறை நெருக்கடியாக மாறுகின்றது. இதுவே மேல் இருந்து கீழாக அதிகார வடிவமாகவும் - கீழ் இருந்து கிளிப் பிள்ளைகளையும் உருவாக்குகின்றது.

இன்று கொரோனா (SARS-CoV--2) வைரஸ் குறித்து இயக்கங்கள் மக்கள் முன் தலைமை தாங்கி – அவர்களை வழிகாட்ட முடியாமல் போய் இருப்பது இதனால்தான்.

அமைப்பு வடிவம் என்பது, சமூக இயக்கத்தை ஒருங்கிணைந்து நடத்துவற்கான வடிவம். அதாவது ஒழுங்கமைக்கப்பட்ட அரசு இயந்திரத்துக்கு எதிராக ஒழுங்கமைந்த ரீதியில் போராட்டங்களை - கருத்துகளை முனனெடுத்துச் செல்லும் ஸ்தாபன வடிவம். இங்கு ஒற்றைக் கருத்துக்களை மேல் இருந்து கீழ் கொண்டு செல்வது என்று பொருள்படாது.

கட்சி என்பது ஒரு தத்துவ வழிகாட்டலைக் கொண்டது. பல்வேறு கோட்பாடுகளை உள்ளடக்கிய நடைமுறை இயக்கமாகும். நடைமுறை என்பது மக்கள் மத்தியில் மட்டுமானதல்ல, கருத்துகளை வளர்த்தெடுத்து செல்லும் வடிவத்திலும் தான். இந்த வகையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிவிலக்கல்ல. அமைப்பு வடிவத்தை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்கள், பெரும்பான்மை அடிப்படையில் செயற்படும் போது, அதை மேல் இருந்து கீழானது என்பதல்ல. கீழ் இருந்து மேல் மய்யப்படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்டது. இங்கு மேல் - கீழ் இரண்டு தன்மையும் காணப்படும். இது தான் ஜனநாயக மத்தியத்துவம். கீழ் இருந்து கருத்துருவாக்கம் நடைபெறவேண்டும்.

கொரோனா (SARS-CoV--2) வைரஸ்சினை எடுப்போம். மேல் இருந்து கருத்துருவாக்கம் - செயற்திட்டம் வரும் வரை, கட்சி உறுப்பினர்கள் எதையும் சொல்லவும் உருவாக்கவும் - செயற்படவும் முடியாது என்றால், அது ஜனநாயக மத்தியத்துவமல்ல. கட்சி, அமைப்பு வடிவம் மூலம், மேல் - கீழ் ஸ்தாபன வடிவங்கள் ஊடாக கருத்துப் பரிமாற்றம் நடந்து - கருத்தை முடிவெடுக்கும் வரை, எதையும் சொல்லவும் - செயற்படவும் முடியாது என்றால் - ஜனநாயக மத்தியத்துவம் செயலற்றதாகிவிட்டது என்பது தான் பொருள். முடிவெடுத்து செயற்படு என்பது கற்பனையில் முடிவு எடுக்கும் முன்முடிவுகளுக்குள் முடங்கிவிடும். எல்லாம் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருப்பதால் இயக்கத்தின் போக்கில் ஜனநாயக மத்தியத்துவம் மையப்படுத்தப்பட வேண்டும். மேல் இருந்து மட்டுமல்ல - கீழ் இருந்து அது சமச்சீராக நிகழ வேண்டும். இது தான் இயங்கியல். கட்சியின் வளர்ச்சி இதில் தங்கி இருக்கின்றது.

கருத்துகள், செயற்பாடுகள், நடைமுறைகள்.. கீழ் இருந்து இயங்கியல் ரீதியான சமச்சீரில் வரமுடியாது என்பது ஜனநாயக மத்தியத்துவத்தை பொருளற்றதாகிவிடும். எந்தக் கருத்தும், செயற்பாடும், நடைமுறையும் சுயாதீனமானதாக செயற்படவும் - அதை மத்தியப்படுத்தலுக்கு உள்ளாக்கும் போதே, சரியான போக்குகள் வளர்ச்சியுறும். சமூகத்தில் பாய்ச்சலை உருவாக்கும்.

கொரோனா (SARS-CoV--2) வைரஸ் குறித்து மேல் - கீழ் என்ற அடிப்படை வேறுபாடு இன்றி மாறிக் கொண்டு இருக்கும் இயங்கியல் போக்கில் கருத்துக்களை நடைமுறைகளை முன்னெடுக்கும் போது, அதைக் கட்சி மத்தியப்படுத்துவதே தலைமையின் கடமை. சரியான கருத்தை, நடைமுறையை ஒருங்கிணைத்தலே மத்தியப்படுத்தல். கருத்தை மையப்படுத்தி, அதை தத்துவார்த்த ரீதியாக ஒருங்கிணைப்பதுதான் மத்தியப்படுத்தல். முன் முடிவாக எடுக்கும் தத்துவத்துக்குள் கருத்தை ஒருங்கிணைப்பதல்ல. இங்கு மத்தியப்படுத்தல் என்பது நபர்களை ஒருங்கிணைத்தல் அல்ல. மாறாக கருத்தையும் நடைமுறைகளையும் ஒருங்கிணைத்தல்.

இயங்கியல் ரீதியாக இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கும் கொரோனா (SARS-CoV--2) வைரஸ் - உலக முதலாளித்துவம் - இந்திய முதலாளித்துவம் - பார்ப்பனியம் .. மீது ஒருங்கிணைந்த முழுமை மீது அறிவியலும் உருவாகவில்லை. அது சார்ந்த நடைமுறையும் உருவாகவில்லை.

கேள்விகள்

1.இந்திய சமூக அமைப்பில் கொரோனா (SARS-CoV--2) வைரஸ் பரவினால், தனிமைப்படுத்தப்பட்டு காலாகாலமாக வாழும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் தொற்று விகிதம் எப்படி இருக்கும்;?

2.உலகளாவிய கொரோனா (SARS-CoV--2) வைரஸ் தொற்றுக் காவிகள் யார்? இந்தியாவில் அது யாரை அதிகம் பாதிக்கும்;?

3.இந்து – முஸ்லீம் பிளவுபட்ட சமூகத்தில், அதிகம் பாதிக்கப்படுவது யார்?, ஏன்?

4.மக்களுக்கு கொரோனா (SARS-CoV--2) வைரஸ் குறித்தும், அதன் விளைவு குறித்தும் அரசு மக்களுக்கு சரியாக கூறி இருக்கின்றதா? சமூக இயக்கங்கள் இதை புரிந்து இருக்கின்றதா? அதை மக்களுக்கு எடுத்துக் கூறுவது யார்?

இப்படி ஆயிரம் கேள்விகள் உண்டு. இதைத் தொடர்ந்து விவாதிப்போம்.