Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

சீனா, தென்கொரிய வழிமுறைகளும் - மேற்கின் தடுமாற்றங்களும்

உலக முதலாளித்துவமானது கொரோனாவுக்கு எதிராக ஒரே திசையில் பயணிக்க மறுப்பதன் மூலம், கொரோனா தொடர்ந்து பரவும் அதேநேரம் வைரஸ் தொற்று முடிவுக்கு வராது. கொரோனா வைரஸ்சை எதிர்கொள்வதில் உலக முதலாளித்துவமானது பிரிந்து நிற்கின்றது. ஏகாதிபத்தியங்கள், வரையறுக்கப்பட்ட அரச முதலாளித்துவம், வலதுசாரிய இன, நிறவாத … அரசு கொள்கைகளால் முரண்பட்டே கொரோனாவை அணுகுகின்றனர். இந்த வேறுபாட்டையும், மக்கள் விரோதக் கூறுகளையும் கண்டுகொள்ளாத கொரோனாவுக்கு எதிராக மக்களை முன்னிறுத்தும் சிந்தனை முறையானது, தெளிவற்ற குறுகிய அணுகுமுறையால் மனித பகுத்தறிவையே அரித்து வருகின்றது.

அரசுகள் முதலாளிகளின் நலனை முன்னிறுத்தி சிந்திக்கின்றதுக்கு முரணாக எதிர்மறையில் கொரோனா நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவை பற்றி பேசுவதற்குள் - கொரோனா அரசியலை குறுக்கி விடுகின்றனர். வைரஸ்சுக்கு எதிரான அரசுகளின் கொள்கைகள் சரியானதா என்பது குறித்து அக்கறை காட்டப்படுவதில்லை. இதன் பொருள் அரசுகள் கொரோனாவுக்கு எதிராக சரியான அரசியலில் மக்களை வழிநடத்துவதாகவும் - பொருளாதாரரீதியாக மட்டுமே தவறாக இருப்பதான பொதுப் பிரமைக்குள் - மனிதர்களை வழிநடத்தி விடுகின்றனர்.

அரசுகள் கொரோனா பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி, வைரஸ் பரவலை அனுமதிக்கின்ற வகையில் மேற்கு முதலாளிகளிள் இலாபத்துக்கான (தேவைக்கானதல்ல) உற்பத்தியை மீள தொடங்கவுள்ளது. இதையே மூன்றாம் உலக நாடுகளும்; பின்தொடரும்.

இந்த நிலையில் சீனாவில் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முற்றாக முடக்கும் வழிமுறையை முன்னெடுக்க, தென்கொரியாவோ வைரஸ்சை (நோயாளியை) தேடி தனிமைப்படுத்தும் வைரஸ் பரவல் தடுப்புமுறையைப் பின்பற்றியது. இப்படி இரண்டு வழிமுறைகளே, வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான அறிவியல்பூர்வமான வழிமுறையாக இருக்கின்றது. சீனா, தென்கொரிய நாடுகள் தங்கள் பின்பற்றிய வழிமுறைக்குத் தேவையான பொருளாதார - மருத்துவக் கட்டமைப்பை மிகக் குறுகிய காலத்தில் மேம்படுத்தியதன் மூலம், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது. முற்றாக இன்னமும் முழுமையாக வெற்றி பெறவில்லை.

மேற்கில் என்ன செய்தார்கள் எனின் வைரஸ் பரவலை மூன்று கட்டங்களாக வகுத்துக் கொண்டு, வைரஸ் பரவலை சுதந்திரமானதாக்கினர். தென்கொரிய வடிவத்தை அரைகுறையாக உள்வாங்கிக் கொண்டு, நோய்த் தொற்று உள்ளவர் தானாக மருத்துவரை தேடிவரும் போது அவரையும் - அவரைச் சுற்றிய நபர்களையும் கண்டறியும் முறையைக் கையாண்டனர்.

சீனாவில் முதலாவது தொற்று உலகளவில் பதியப்பட்ட நாளில் இருந்து, சராசரியாக 15 நாட்களில் பல நாடுகளில் தொற்று உறுதி செய்யப்பட்ட போதும், வைரஸ் பரவலை அரசுகள் பொதுவாக அலட்சியப்படுத்தின.

ஒவ்வொரு நாடுகளிலும் முதலாவது தொற்று உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்ட திகதிகள் இதைத்தான் உறுதி செய்கின்றன. சீனா, ஜனவரி 10ம் திகதி, தென்கொரியா ஜனவரி 19ம் திகதி, இத்தாலி ஜனவரி 29ம் திகதி, அமெரிக்கா ஜனவரி 20ம் திகதி, பிரான்ஸ் ஜனவரி 23ம் திகதி, ஸ்பெயின் ஜனவரி 30ம் திகதி, ஜெர்மனி ஜனவரி 26ம் திகதி, பிரிட்டன் ஜனவரி 30ம் திகதி, இந்தியா ஜனவரி 29ம் திகதி, இலங்கை ஜனவரி 26ம் திகதி,…. இப்படி இருக்க நாடுகள் கையாண்ட வழிமுறைகள் வேறுபட்டதும், நாடுகளின் தயார் நிலை என்னவாக இருந்தது .. என்பதை ஆராய்ந்தால், அரசுகள் எதை முதன்மைப்படுத்தி மக்களை அலட்சியப்படுத்தியது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

தென்கொரிய அரசு வைரஸ் தொற்றைச் தேடிச்சென்று கட்டுப்படுத்தும் முறையை அமுல் செய்ய, மேற்கு அரசுகள் வைரஸ் தொற்று தம்மைத் தேடி வரும் வரை காத்து இருந்து, பின் அவரைச் சுற்றித் தேடினர். அதேநேரம் வைரஸ் தொற்றை உறுதி செய்யும் வைத்திய உபகரணங்களையோ, தொற்றுப் பரவலைத் தடுக்கும் பாதுகாப்பு மருத்துவ உபகரணங்களையோ உருவாக்காமல் இருந்ததுடன், நோய்த் தொற்றுக்குள்ளானவரைச் சுற்றி இருந்தவர்களையும் தனிமைப்படுத்தும் முறையைக் கையாளவில்லை. தனிமனிதனின் நடமாடும் சுதந்திரத்துடன் வைரஸ்சும் சுதந்திரம் பெற்றது.

வைரஸ் தொற்றை மூன்று கட்டங்களாக வகுத்துக் கொண்டு, ஒருவர் மூன்று பேருக்குத்தான் கடத்துவர் என்ற சுய புள்ளிவிபரத்தை உருவாக்கி வைத்துக் கொண்டு - காலத்தைக் கடத்தினர். இப்படி மூன்று காலகட்டத்தை உருவாக்கியவர்கள் - அக்காலத்தில் எந்த முன்தயாரிப்புமின்றி இரண்டு மாதங்களை வீணாக்கினர். மருத்துவரீதியாக வசதிகள் இல்லாத சூழலில், அவர்கள் மூன்றாம் கட்டம் வரை வைரஸ் பரவலை அனுமதித்தனர். முதல் கட்டத்தில் இன்றைய நடவடிக்கையை எடுத்திருந்தால், இன்று மரணித்த பலரும், மரணித்துக் கொண்டுள்ளவர்களும் எம்முடன் உயிருடன் இருந்திருப்பார்கள். இன்றைய இந்த மருத்துவ நெருக்கடி ஏற்பட்டு இருக்காது.

எடுக்கவேண்டிய நடவடிக்கையை காலம் தாழ்த்தி எடுத்ததுடன், அதேநேரம் மருத்துவ ரீதியாக தங்களை தயார் செய்யாமலும் இருந்தனர். வைரஸ் பரவலை கண்டும் காணாமல் அனுமதிக்கும் கொள்கை முன்நகர்த்தப்பட்டது. சீனா மாதிரி முற்றாக முடக்கி முதலாளித்துவம் இலாபமின்றி இருப்பதை கற்பனையில் கூட நினைக்க முடியவில்லை. அதேநேரம் தென்கொரியா போல் வைரஸ்சை தேடிக் கண்டறியும் முறைமைக்கு செலவு செய்வதையும், முதலாளித்துவம் விரும்பவில்லை.

அரசின் கொள்கையானது மனிதகுலத்தில் பல பத்துக் கோடி மக்களை கொன்றுவிடும் என்ற மருத்துவ உலகின் தொடர் எச்சரிக்கைகளும் - இது வர்க்க அமைப்பையே தகர்;த்துவிடும் என்ற முதலாளித்துவ பொருளாதாரவாதிகளின் எச்சரிக்கையும், மனிதப் பிணங்களை எண்ணத் தொடங்கியதை அடுத்தே - மேற்கு முதலாளித்துவம் மெதுவாக செயற்படத் தொடங்கியது.

சீன வடிவத்தை செய்யாது தென்கொரிய வடிவத்தை விரும்பிய போதும், அதை அமுல் செய்ய அதற்கான அடிக்கட்டுமானம் இருக்கவில்லை. இதனால் சீன வடிவத்தை அரைகுறையாக அமுல் செய்த போதும், சீனா மாதிரி மருத்துவ ரீதியாக எதுவும் இருக்கவில்லை, இருந்த போதும் தற்காலிகமாக மூடிமறைக்க முடிந்தது.

மருத்துவமனைகள் முட்டிப் பிதுங்கி, நோய்த் தொற்றுள்ளவர்கள் கைவிடப்பட்ட நிலையில், மருத்துவ உபகரணங்கள் இன்றி மரணங்கள் நிகழத் தொடங்கிய போது, மேற்கின் கொள்கைகள் அம்மணமாகின.

இப்படி சீன முறையை மேற்கில் அரைகுறையாக அமுலுக்கு கொண்டு வந்தவர்கள், இதன் பின்னும் மருத்துவ உற்பத்தி அடிக்கட்டுமானத்தை உள்நாட்டில் உருவாக்குவதற்குப் பதில் இறக்குமதியையே முன்னிலைப்படுத்தினர் தங்கள் இந்த கொள்கை முடிவால் - இறக்குமதியை நம்பிய அரைகுறை தனிமைப்படுத்தலுக்குள் நாடு சிக்கித் திணறுகின்றது.

சீன வடிவத்தை அரைகுறையாக எடுத்து கையாண்டுள்ள மேற்கு அரசுகளின் கொள்கை, அதன் மூலம் வைரஸ்சைக் கட்டுப்படுத்துவது நோக்கமல்ல. மாறாக தென்கொரிய வடிவத்துக்கு மாறுவதற்கு தேவையான அடிக்கட்டுமான மருத்துவ தயாரிப்பை முடுக்கிவிட்டுள்ளது. இது தயார் நிலைக்கு வந்தவுடன் அரைகுறையான தங்கள் சீன வடிவத்தை கைவிட்டு, முதலாளிகளின் சுரண்டலை மீள முடுக்கிவிடவுள்ளனர்.

மனிதர்களை தனிமைப்படுத்தி வைரஸ் பரவலை தடுக்கும் முறையை கைவிட்டு, சுதந்திரமான மனித நடமாட்டத்துடன் வைரஸ் தொடர்ந்து சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கும் கொள்கை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. அதேநேரம் தென்கொரிய அணுகுமுறையை முன்னெடுக்கவுள்ளனர். ஆனால் அதையும் அரைகுறையாகவே கையாளும் சமிக்கைகளை கொண்டுள்ளது. இதன் மூலம் மரணங்களை மட்டுப்படுத்தியபடி வைரஸ்சை நீண்ட நாட்கள் பின்தொடர முடியும் என்று நம்புகின்றனர். இக் கொள்கை தோல்வி பெறும் பட்சத்தில் என்ன நடக்கும்? மீளவும் சீன முறையில் தனிமைப்படுத்தும் தெரிவைத் தவிர, மருத்துவ ரீதியான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தால் மட்டும் தான், மனிதகுலம் நிம்மதியாக மூச்சுவிட முடியும். அது வரை நோய்த் தொற்று மரணமும், முதலாளித்துவ சந்தைக்கு ஏற்பவும் பலியிடுவார்கள்.