Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

வைரஸ்சுக்கு எதிரான அரசு நடவடிக்கைகள் எதிர்க்கப்பட வேண்டுமா!?

அரசு அதிகாரம் மூலம் மக்களைப் பாதுகாத்தீர்களா, பாதுகாக்கின்றீர்களா என்பதை அரசுகளிடம் கேட்கத் தவறுகின்றவர்கள், குவியும் அரசு அதிகாரம் ஆபத்தானது என்று அரசியல் வகுப்பு எடுக்கின்றனர். சமூகமாக தன்னைத்தான் உணராத தனிமனித சுயநலனை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் பொதுநடத்தையைக் கேள்வி கேட்பதற்கு பதில், தனிமனித சுதந்திரங்கள் குறித்த பாடம் எடுக்க முனைகின்றனர். என்ன முரண். இதுதான் திரிபு.

மக்களை எதார்த்தத்தின் மீது சிந்திக்கவிடாது, நாளை குறித்த கற்பனை உலகிற்குள் நகர்த்துவது. ஆழ்ந்து புரிந்துகொள்ள விடாது, அடுத்தடுத்து புதிய விடையத்துக்குள் நகர்த்துவது. புதிய அதிகாரங்களைப் பற்றிப் பேசுவதன் மூலம், பழைய அதிகாரம் இழைத்துக் கொண்டிருக்கும் குற்றத்தை கண்டுகொள்ளாது இருப்பது - மறைப்பது.

என்ன நடக்கின்றது, தனிமனித சுதந்திரங்களே வைரஸ்சை பரப்புகின்ற சமூகக் கூறாக மாறி நிற்க, சமூகத்தின் சுதந்திரம் குறித்து சிந்திக்கின்றவர்கள் வைரஸ் பரவுவதை தடுக்க முனைகின்றனர். அரசு தனிமனித சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட மூலதனத்தைப் பாதுகாக்க, மக்களை பலியாடாக்கி இருக்கின்றது. இது தான் எங்கும் தளுவிய உண்மை.

இப்படி இன்று வைரஸ்சுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்து, அது அதிகாரத்தை மய்யப்படுத்தவும், மக்களை ஒடுக்கவும், மக்களை கண்காணிக்கவும், தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகவும்.. கூறி எதிர்க்கின்ற சமூகப் பொறுப்பின்மையை இடதுசாரியத்தின் பெயரில் முன்வைக்கின்றனர். வேறு சிலர் ஒன்றுமில்லாத ஒன்றை ஊடகங்களும், அரசுகளும் ஊதிப் பெருக்கியதாக கூறி, கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கையை அலட்சியப்படுத்துவதன் மூலம், அரசுகளின் குற்றங்களை மூடிமறைக்க முனைகின்றனர்.

அரசு கட்டமைப்பில் உருவாகும் புதிய அதிகாரங்கள் குறித்து பேசுகின்றதன் மூலம், அரசும் - முதலாளித்துவ சமூக பொருளாதாரக் கட்டமைப்பும் மனிதகுலத்திற்கு எதிராக எடுத்த முடிவுகளையும் அதன் எதார்த்தப் பின்னணியையும் மூடிமறைக்க முனைகின்றனர். தங்களிடம் இருந்த அரச அதிகாரத்தை மக்கள் சார்பாக பயன்படுத்தத் தவறி, மூலதனத்தின் குறுகிய நலனை முன்வைத்து இழைத்த குற்றங்களையும், தொடர்ந்து அது இழைக்கின்ற தவறுகளையும் ஏதுமற்றதாக்க முனைகின்றனர். மக்களைக் கண்காணிக்கும் புதிய அதிகாரங்கள் நாளை என்ன செய்யும் என்ற கற்பனை உலகிற்குள் போய் மயிரைப் புடுங்குகின்றனர். இதன் மூலம் இன்று இருக்கின்ற அதிகார வடிவங்களும் - அதன் நடவடிக்கையும், மக்களைக் கொல்லவும் வைரஸ் தொடர்ந்து பரவவும் காரணமாக இருக்கின்ற உண்மைகள் தெரியாது இருக்க - புதிய அதிகாரங்கள் என்ன செய்யும் என்பது குறித்து பேசுகின்றனர்.

குறிப்பாக சீனா, தென்கொரியா, சிங்கப்பூர்.. முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் சில தனிமனித சுதந்திரத்தை பறிப்பதாக ஏகாதிபத்திய ஊடகங்கள் கழுவி ஊத்த, இடதுசாரியத்தின் பெயரில் அதை மீள வாந்தி எடுக்கின்றனர். வைரசைக் கட்டுப்படுத்த அடிப்படை மருத்துவ கட்டுமானங்கள் கூட இல்லாத மேற்கின் போலித்தனத்தை, பூசி மெழுக கையாண்ட "அறிவியல்" விளக்கங்களின் தொடர்ச்சி தான் இந்த தனிமனித "சுதந்திரம்" வக்கிரங்கள்.

அரசு என்பது மக்கள் விரோத உறுப்பாக, முதலாளித்துவத்தின் நெம்பாக இருக்கும் போது, இவை அனைத்தும் மக்களை ஒடுக்குகின்ற திசையில் கையாளும். இது புதியதோ, பழையதோ அல்ல, இங்கு அதிகாரத்தை மக்கள் சார்ந்து முன்னெடுக்க மறுக்கின்ற அமைப்பு முறை மீதான விமர்சனமும்- போராட்டமும் அடிப்படையானது.

இதைவிடுத்து முதலாளித்துவத்தை பாதுகாக்க, விடையத்தை விட்டுவிட்டு நூலில் தொங்கும் கோட்பாடு, முதலாளித்துவ தனிமனித சுதந்திரம் குறித்த வாதத்தில் இருந்து தோன்றுகின்றது. அதாவது தனிமனித சுதந்திரம் முக்கியமா? சமூகத்தின் சுதந்திரம் முதன்மையானதா என்ற கேள்விதான்.

தனிமனித சுதந்திரத்தை முன்னிறுத்தாது, சமூகத்தின் சுதந்திரத்தை முன்னிறுத்தும் சிந்தனையும் சமூக அமைப்பும், வைரஸ்சை எப்படி அணுகும். வைரஸ்சுக்கு எதிராக சமூகம் தன்னைதான் ஒருங்கிணைத்துக் கொண்டு வைரசைக் கண்காணிக்கும். தனிமனித சுதந்திரம் என்று கூறி, வைரஸ்சை பரப்பும் புரட்டுக்கும் - நடத்தைக்கும் இடமில்லை. சமூகத்தின் சுதந்திரத்தை தனிமனிதன் மீறாது இருக்கும் தனிமனித சுதந்திரம், இதை சமூகம் கண்காணிக்கும். இது வைரஸ் விடையத்தில் கையாளும் போது, நோய்ப் பரவலை தடுத்து விடும்.

தனிமனித சுதந்திரத்தை முன்னிறுத்தி சமூகம் பற்றி கவலையின்றி செயற்படும் போது, வைரஸ் பரவும். சமூகமாக மனிதனாக இல்லாத இடத்தில், வைரஸ்சைக் கட்டுப்படுத்த அரசு அதை செய்ய வேண்டிய கட்டாய கடமையாக மாறுகின்றது. இதை அரசு செய்யாது இருக்கும் போது, அரசின் குற்றமாக மாறுகின்றது. இந்த வகையில் செயற்படாத அரசுகளின் குற்றங்கள் - உலகம் முழுக்க வைரஸ் பரவக் காரணமானது. இவ்வளவு மரணங்களுக்கும் அரசுகளே பொறுப்பு. வைரஸ் என்று யாரும் தப்ப முடியாதளவுக்கு, அரசுகள் குற்றத்தை இழைத்துள்ளனர், தொடர்ந்து அவர்களின் பொறுப்பற்ற நடத்தைகள் மூலம், தொடர்ந்து குற்றத்தை இழைத்துக் கொண்டே இருக்கின்றனர்.