Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மணியை ஆட்டு! மூத்திரத்தைக் குடி!! மதவெறியுடன் அலட்டு!!! இனவெறியுடன் கற்பி!!!!

அமெரிக்க ஜனாதிபதியின் இனவெறி, கொரோனாவை "சீனா வைரஸ்" என்று கற்பிக்கின்றது. யாழ் வெள்ளாளியப் பன்னாடைகள், மதவெறியுடன் கொரோனாவை காண்பிக்கின்றது. இந்திய பார்ப்பனிய இந்துப் பன்னாடைகள் மணியை ஆட்டி, சத்தத்தை எழுப்பி கொரோனாவை விரட்ட முடியுமென்கின்றது. மூத்திரத்தைக் குடி, கொரோனா தொற்றாது என்கின்றனர்.

மத நம்பிக்கை உனக்கு மட்டுமானது. அதை பிறருக்கு திணிக்க முடியாது - பிறரை திட்டவும் முடியாது. இப்படி அடிப்படை ஜனநாயகம் இருக்க, இதை மறுதளிக்கும் வண்ணம் நம்பிக்கைகளைக் கொண்டு பிறர் வாழ்வில் தலையிடுகின்றனர். இப்படி தலையிடும் மத, இன, சாதி நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகள், இயல்பாகவே சுயநலமானது, சமூக உணர்வுமற்றது.

இப்படி ஆளுக்காள் இஞ்சி, மஞ்சள், உள்ளி … சாராயம் என்று எத்தனையோ புரட்டுகள், நம்பிக்கைகள், அனுமானங்கள், முடிவுகள் எல்லாம் நடைமுறை வாழக்கையில் பொய்யாகி, புரட்டாகி, மோசடியாகிய போதும், பயம், அறியாமை, வெறும் நம்பிக்கை இன்னமும் சமூகத்தை கட்டிப் போடுகின்றது.

வாழ்வின் எதார்த்தம் என்ன? உலகெங்கும் உள்ள எல்லா மதவழிபாட்டு மையங்களும் மூடப்பட்டு வருகின்றன, தனிமனித நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட வழிபாடு மூலம், கொரோனா வைரஸ் பரவுவதையும், அதற்கு பலியாவதையும் தடுக்க முடியாது என்பதால் லைரஸ் மக்களை வீட்டுக்குள் சிறைவைக்கின்றது. கூட்டமாக கூடும் மத வழிபாட்டினால் வைரஸ் பரவி பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து வழிபடக் கூடினால் பலரைக் கொன்றுவிடும் என்ற அறிவியல் உண்மைகள், மனிதனின் எதார்த்த வாழ்வியலைத் தீர்மானிக்கின்றது. கற்பனைகள், நம்பிக்கைகள் உயிரையே பறித்துவிடும் என்ற உண்மையை யாரும் மீறத் தயாராகவில்லை.

இந்த எதார்த்த உண்மையை மதவாதிகளாலும், மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்வோராலும், மதத்தை முன்னிறுத்திய அரசுகளாலும் ஜீரணிக்க முடிவதில்லை. இதனால் அவர்கள் நடத்துகின்ற கூத்துக்கள், புதிதாக வைரஸ் பரவவும் - மரணங்கள் நிகழவும் காரணமாகி வருகின்றது.

இன, மத, சாதி பழக்க வழக்கங்களும், உணவுகளும், மருந்துகளும் வைரஸ்சுக்கு எதிரான தீர்வில்லை என்பதும், அறிவியில்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தன்னைத்தான் தனிமைப்படுத்தல் மட்டும் தான் வைரஸ் தொற்றை தடுக்கும் என்பதும், இயற்கையான உடல் நோய் எதிர்ப்பு சக்தி மட்டும் வைரஸ்சை எதிர்த்துப் போராடும் ஒரே ஆயுதம் என்பதும் - அறிவியல்பூர்வமான உண்மையாக இருக்கின்றது. இதுவரை எந்த மருந்தும் இதற்கு கண்டுபிடிக்கப்படவில்லை. கியூபாவிலும் கிடையாது. அமெரிக்காவிலும் கிடையாது. சீனாவிலும் கிடையாது. நாடுகளின் வேறுபட்ட மருத்துவ கொள்கைகள் – நடைமுறைகள், பரவல் மற்றும் மரணத்தின் வீதத்தை தீர்மானிக்கின்றது.

ஆனால் இனவாதிகள், மதவாதிகள், சாதியவாதிகள்.. இதை ஏற்றுக்கொள்ள முடியாது குலைப்பதும், மக்களின் அறியாமையைக் கொண்டு நக்குவதும், அரசுகள் மக்களை ஏமாற்றுவதும், பாரிய மனித அவலங்களாக மாறி வருகின்றது.

இயற்கையின் விதிதான் அனைத்தையும் தீர்மானிக்கின்றது என்பதும், இயற்கையை அறிவியல் மூலம் மனித வாழ்க்கைக்கு ஏற்ப கையாள முடியும் என்பது தான் அறிவியலாக – மனிதனின் எதார்த்த வாழ்வாக இருக்கின்றது. இந்த உண்மை மறுதளிக்க முடியாத உண்மையாக - எம் சிந்தனை மீது அறைந்து கூறுகின்றது.

கொரொனா வைரஸ் சுதந்திரமாக உலாவினால், மக்கள் தாமாக உழைப்பைக் கைவிட்டு தாமாகவே தங்களைத் தாங்கள் தனிமைப்படுத்திக் கொண்டுவிடுவார்கள். இந்த நிலைமை மூலதனத்தின் மீட்சிக்கு பதில், மக்கள் கிளர்ச்சியாக மாறும். இதனால் தான் மூலதனத்தை சேதமின்றி மீட்கவும், உற்பத்தியை விட்ட இடத்தில் இருந்து மீளத் தொடங்கவும் 12 வாரம் உழைப்பை முடக்கியாக வேண்டிய சூழலில் - உலக மூலதனம் சிக்கிக் கொண்டது.

இதனால் தங்கள் ஆன்மாவான மூலதனத்தைக் குவிக்கும் உற்பத்தியை முடக்கி, வைரஸ்சை ஒழிக்க போராடுகின்ற சூழலில், இந்தியா மணியை ஆட்டி கையைத் தட்டினால் வைரஸ்சை ஒழிக்க முடியும் என்று கூறி - மக்களை வீதிகளில் கூத்தாட வைத்திருக்கின்றனர். அமைச்சர்கள் தங்கள் வீடுகளில் மணியாட்டி - தங்கள் பார்ப்பனிய பாசிசக் கூத்தை அரங்கேற்றி, அதை உலககுக்கு காட்சிப்படுத்துகின்றனர்.

இந்திய மக்கள் தொகையைக் குறைப்பதற்கான பார்ப்பனிய காப்பரேரட் சதித்திட்டமா என்று சந்தேகிக்கக் கூடிய அளவுக்கு, காவி காப்பரேட் இந்திய அரசு நடந்து கொள்கின்றது. இப்படி தொடர்ந்தால், பாரிய மரண தேசமாக இந்தியா மாறும், அதேநேரம் வைரஸ்சை ஒழிக்க முடியாத நாடாக இந்தியா மாறி, உலகில் இருந்து தனிமைப்படுத்தப்படும்.

இன்று முற்றாக தனியார்மயமான அமெரிக்க மருத்துவம், மருத்துவ அடிப்படை வசதிகள் இன்றி - உலகில் அதிக கொரோனா மரணங்களை தரத் தயாராகி வருகின்றது. இல்லை நாங்கள் தான் அமெரிக்காவையும் மிஞ்சி மக்களைக் கொல்லும் காவி வக்கிரங்;களை கொண்டுள்ளோம் என்று, மணி கிலிக்கியும் - காலி டப்பாவில் தட்டி உலகிற்கு காட்டுகின்றனர்.

மக்களின் பிணங்களை எண்ணுவதற்காக, அமெரிக்காவும், இந்தியாவும் நாட்களை எண்ணிக் கொண்டு, தமக்குள் போட்டி போடுகின்றனர்.