Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசுகளின் கோமாளித்தனமான கொள்கை முடிவுகளுக்கு, வைரஸ் கட்டுப்படுமா!?

இயற்கையின் உயிரியல் விதியையும் - உயிரியல் குறித்த மருத்துவ அறிவியலையும் கொச்சைப்படுத்தும் அரசியல் முட்டாள்தனங்களே - அரசுகளின் மருத்துவக் கொள்கையாக, முடிவுகளாக இருக்கின்றது. கொரோனா வைரஸ் தன் சொந்த உயிரியல் விதியில் இயங்குகின்றது. அது இயற்கையில் நெடு நேரம் இயல்பழியாது இருக்கும் எல்லா நிகழ்தகவுகளையும் தனக்குள் கொண்டுள்ளது. அது மனித உடலில் மட்டும் தன்னை உயிர்ப்படுத்தி வாழ்வதில்லை. சடப்பொருளில் தங்கி தன்னை தேக்கிக் கொண்டு, மனித உடலைச் சென்றடையும் ஆற்றல் கொண்டது. பொருள் உலகமே மனிதனின் ஆன்மாவாகிவிட்ட உலகில், பொருள் மூலமும் வைரஸ் தன்னை தகவமைத்துக் கொண்டு பரவுதன் மூலம் மனித உடலில் உயிர் வாழ முனைகின்றது. உண்மை இப்படி இருக்க, மனிதனை மட்டும் தனிமைப்படுத்தும் மேற்குலக அரசு மூலதனக் கொள்கைகள், மனித அறிவியலையே கேலி செய்கின்றது.

உதாரணமான நான் வாழும் பிரான்ஸ் நாட்டையே எடுப்போம். பிரான்சு அரசு எப்படிப்பட்ட முட்டாள்தனமாக, அறிவியலைக் கேலி செய்கின்றது என்று பார்ப்போம். வைரஸ் மனிதர்களுக்கு இடையிலான நேரடி தொடர்பு மூலமாகத் தான் பரவுகின்றது என்று வரையறுக்கும் அறிவியலுக்கு எதிரான கொள்கை முடிவுகளானது, அதிஸ்டமிருந்தால் மட்டும் தான் வெற்றி பெறும். அரசின் இந்த முடிவுக்கு அமைய மனிதர்களுக்கு இடையிலான நேரடி தொடர்புகளை தடுப்பதன் மூலம், வைரஸ் தொற்று ஏற்படுவதை தடுக்கும் திட்டமே தனிமைப்படுத்தும் நடைமுறையாகும். இது சீன மாதிரியில் இருந்து வேறுபட்டது. பிரான்சில் தனிமைப்படுத்தலை நடைமுறைப்படுத்தி, அண்ணளவாக ஒரு வாரமாகின்றது.

இதனால் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாங்கள் சொந்த வீடுகளில் பாதுகாப்பாக இருக்கின்றோமா எனின் இல்லை. ஆனால் அப்படி இருப்பதாக நம்ப வைக்கப்படுகின்றது. உண்மையில் வைரஸ் தொற்றை மட்டுப்படுத்தி இருக்கின்றனரே ஒழிய, வைரஸ் மனிதர்களுக்கு மனிதர் பரவுவதை தடுத்து நிறுத்த போதுமானதல்ல. இது எப்படி பிற வழிகளில் பரவுகின்றது என்பதைப் பார்ப்போம்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து அரசுகள் முன்வைக்கும் திட்டம், வைரஸ் பரவுகின்ற வழிகள் மூடிமறைக்கப்பட்ட சில உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது. அதாவது வைரஸ் தொற்றுள்ள மனிதன் தொடுதல் தொடங்கி வாய் மூக்கு கண் போன்றவற்றினால் வைரஸ் தொற்று ஏற்படுகின்றது என்பதே. இது மிகச் சரியான தகவல்;. இதன் மூலம் மட்டும் தானா, வைரஸ் பரவுகின்றது எனின் இல்லை என்பதே மருத்துவ அறிவியல்.

வைரஸ் தொற்றுள்ள மனிதன் கையாளும் எல்லா பொருட்கள் மூலமும், கொரோனா வைரஸ் பரவக் கூடியாது. வைரஸ் அதிக பட்சம் 10 நாட்கள் (இன்றைய அறிவியல்படி) மனிதன் அல்லாத, மனிதன் கையாளும் சடப்பொருட்களிலும் “உயிர்” வாழும் தகவமைப்பைக் கொண்டது.

வைரஸ் தொற்று மனிதன் கையாளும் பொருட்கள் மூலமும் நிகழும். தனிமைப்படுத்தப்பட்ட மனிதர்கள் கையாளக்கூடிய பொருட்கள், வெளியில் இருந்து உள்ளே வரும் போது வைரஸ் சேர்ந்து வருவதைத் தடுக்காது. இது பற்றி எந்த முன்னெச்சரிக்கையோ, இதைத் தடுக்கின்ற வழிமுறைகளையோ கொண்டிருக்காத சூழலில், வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்குள் வருவதற்கான வாய்ப்பை உருவாக்கி இருக்கின்றது. எங்கள் அறிவுக்;கு தெரியும் மருத்துவ, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தி மையங்களில் வைரஸ் - பக்றீரியா தொற்று ஏற்படாமல் இருக்க கையாளும் நடைமுறைகள் எதுவும், பொது இடங்களில் கொரோனா வைரஸ்சுக்கு எதிராக முன்னெடுக்கப்படவில்லை.

நடைமுறை உதாரணமூடாக பார்ப்போம்.

தனிமைப்படுத்தப்பட்ட சூழலிலும் சுப்பர் மாக்கற்றுகள் திறக்கின்றன. அங்கு வரும் பொருட்கள், அதை விற்பனைக்காக அடுக்கும் ஊழியர்கள், பொருட்களை தேர்வு செய்து எடுக்கும் மக்கள், அதை கையாளும் காசாளர்கள்… என்று பல சங்கிலித் தொடரான செயற்பாடுகளில், தொடர்ச்சியாக பல கைகள் மாறுகின்றன. வைரஸ் பாதிப்பு உள்ள ஒருவர் அதைத் தொட்டால், பொருட்கள் மூலம் வைரஸ் மற்றவருக்கு சென்றுவிடும். பணத்தாள், சில்லறை என பல வழிகளில் வைரஸ் கைமாறலாம். அதிஸ்;டம் மட்டும் தான் வைரஸ் தொற்றை இல்லாதாக்கும். இங்கு கையுறை போட்டால் சரி என்று கருதுகின்ற மனப்பாங்கு பொய்யானது. வைரஸ் கையுiறைகளிலும் படிந்து பொருட்களில் ஒட்டி பயணிக்கும். உண்மையில் முதலாளிகள் தங்கள் வியாபாரம் சேதமின்றி தொடர்வதற்கு, கையுறை வழங்கும் நாடகங்களை நடத்துகின்றனர்.

உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன? வைரஸ் தொற்றுள்ளவரை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அவர்களை தனிமைப்படுத்து என்கின்றது. உலக சுகாதார அமைப்பின் இந்த அறிவுறுத்தலை, பெரும்பாலான அரசுகள் கடைப்பிடிப்பதில்லை. இதை கடைப்பிடித்தால் பொருள் பரிவர்த்தனையில் உள்ள ஊழியர்களையும், நுகர்வுக்காகக் கூடும் மக்களை மருத்துவரீதியாக கண்காணிப்பதன் மூலமும், வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க முடியும். பொது இடங்களை முகக் கவசம் இன்றி, கிருமிநீக்கி இன்றி பயன்படுத்துவதை தடைசெய்ய வேண்டும்.

பொதுப் போக்குவரத்தை எடுத்தால் ஒருவர் அமர்ந்த இடம், கை பிடித்த இடம் எங்கும் வைரஸ் பரவக்கூடிய அபாயத்தை கொண்டதாகவே இருக்கின்றது. தொற்றுநீக்கியைக் கொண்டு லைரஸ்சை அழிக்கும் நடைமுறைகள் எதுவும் கிடையாது. வைரஸ் வீடு வரை வரும்.

முகக் கவசம் இன்றி இலட்சக்கணக்கான பொலிசார் பணியாற்றுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்கின்றனர். அரசு கூறுவது போல் முகக்கவசம் தொற்று உள்ளவருக்கு தான் அவசியம், மற்றவர்களுக்கு முகக் கவசம் அவசியமில்லை என்றால், ஏன் மக்களை தனிமைப்பபடுத்த வேண்டும்? முகக்கவசத்தை தர வக்கில்லாத தங்கள் அரசியல் கொள்கை முடிவுகளை மூடிமறைக்க, இப்படி ஒரு வக்கிரமான விளக்கம்.

சில உணவகங்கள் மருத்துவத் துறையினருக்கு, சமூக நோக்கில் இலவசமாக உணவை விநியோகிக்கின்றனர். பொருள் மூலம் வைரஸ் பரவும் என்ற எந்த முன்னெச்சரிக்கையுமின்றி இந்த உணவு விநியோகம் நடக்கின்றது. உணவைக் கொண்டு செல்லும் பை (பாக்) மூலம், வைரஸ் உட்சென்று மொத்த மருத்துவமனையையே தொற்றுக்கு உள்ளாக்கி விடலாம்.

எண்ணற்ற பலவழிகளில் - பல வடிவங்களில் வைரஸ் ஊடுருவுவதற்கான எல்லாக் காரண காரியங்களுடன் தனிமைப்படுத்தல் என்பது, அறிவியலுக்கு புறம்பான பொய்யான போலியான வடிவங்களுடன் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் விளைவு சீனா போல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது. சீனாவை மிஞ்சிய மேற்கின் மரணங்கள் போல், எல்லையற்ற வரையறுக்க முடியாத காலத்தைக் கொண்டு தனிமைப்படுத்தலாக சீரழியும் வாய்ப்பை அறிவியல்ரீதியாக மறுக்க முடியாது. இந்த வழிமுறையில் தப்பிப்பிழைத்தால் அது அதிஸ்;டம், அந்த அதிஸ்டம் சரியான மருத்துவக் கொள்கையாக ஒரு நாளும் இருக்கப்போவதில்லை.