Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசுதுறை மட்டும் தான் கோவிட் 19 (கொரோனா) வைரஸ்சில் மக்களை மீட்கும்

உலகளாவில் வேகமாக பரவுகின்ற கொரோனா வைரஸ், அரசுகளின் பொறுப்பற்ற - செயற்பாடற்ற மக்கள்விரோத சந்து பொந்துகளில் புகுந்து, பலமடங்காக வேகம் பெற்று பரவி வருகின்றது. பாரிய உயிரிழப்புகளை நோக்கி பயணிக்கும் கோவிட் 19 வைரஸ் தாக்குதலை, தாராளமய தனியார்மயம் தடுத்து நிறுத்த எதையும் செய்யவில்லை. தாராளமய தனியார்மயத்திற்கு பணத்தை கறக்கவும் - திருடவுமே தெரியும்.

அரசுதுறை மருத்துவத்தால் மட்டும்தான் மக்களுக்கு மருத்துவம் செய்ய முடியும் என்ற உண்மை, உலகெங்குமான நிகழ்ச்சிநிரலாகி வருகின்றது. அரசுதுறை என்றால் செயலற்றது, இலஞ்சம் நிறைந்தது, சமூகப் பொறுப்பற்றது, ஊழல் நிறைந்தது என்று, தனியார்மய ஆதாரவாளர்கள் கூறுகின்ற சில உண்மைகளால் மூடிய பொய்யை, அரசுதுறை தவிடுபொடியாக்கி வருகின்றது. தாராளவாத தனியார்மயமாக்க அரசு தான் திட்டமிட்டு இலஞ்சத்தையும், ஊழலையும் அரசுதுறையில் அனுமதித்து, அதை செயலற்றதாக்குகின்ற சதிகளையும், தனியார்மயத்தில் ஊழல், இலஞ்சம் கிடையாது என்று கூறி, அரசுதுறையை திட்டமிட்டு தனியார் மயமாக்குகின்ற உண்மையையும், அரசுதுறை தனது செயலாற்றல் மூலம் மெய்ப்பித்து வருகின்றது.

இன்று உலகளாவில் வைரஸ் தாக்குதலானது தாராளமய தனியார்மயத்தின் செல்வக் குவிப்பை தடுத்து நிறுத்துமளவுக்கு வீரியம் கொண்டு தாக்குகின்ற நிலையில், தாராளவாத தனியார்மயத்தை மீட்டெடுக்க அரசுதுறையை அரசுகள் முடுக்கிவிட்டு இருக்கின்றது. தாராளவாத தனியார்மயமான மருத்துவத்துறையால் வைரஸ்சைக் கட்டுப்படுத்த முடியாது என்ற உண்மையை, இதன் மூலம் போட்டுடைத்திருக்கின்றனர்.

அரசுதுறை மூலம் தான் வைரஸ்சைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்கு குறைந்தபட்சம் மருத்துவத்தையாவது வழங்க முடியும் என்ற உண்மையை இனி யாராலும் மறுக்க முடியாது. அரசு மருத்துவத்துறை செயலூக்கம் கொண்ட - சமூகப் பணியாக மாறி, தன்னை முன்னிறுத்தி வருகின்றது.

அரச மருத்துவம் இலஞ்சம், ஊழல் கடந்த செயலாற்றலுள்ள துறையாக, சமூக அர்ப்பணிப்பு கொண்ட ஒன்றாக, தன்னை மெய்ப்பிக்கும் கடந்த வரலாற்றில், மீள காலடிகளை எடுத்து வைத்திருக்கின்றது.

தனியார் மருத்துவமானது செயலற்ற ஒன்றாக – பணம் சம்பாதிக்கும் திருடர் குகையாக இருப்பதைக் கடந்து, எதையும் சமூகத்துக்கு தியாகம் செய்ய வக்கற்றுக் கிடக்கின்றது. பணம் கொடுத்தால் மருத்துவம் என்று கூறுகின்ற அளவுக்கு, சமூக உணர்வற்ற சுயநலம் கொண்ட துறையாக இருப்பதை நடைமுறையில் காண்கின்றோம்.