Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

முதியவர்களைக் கொல்ல - கொரானா வைரஸ்சை மூலதனம் பாவிக்கின்றதா!?

மக்களைத் தனிமைப்படுத்தி கோவிட் 19 (கொரோனோ வைரஸ்சை) கட்டுப்படுத்த அரசுகள் தவறுகின்ற, தாமதப்படுத்துகின்ற ஒவ்வொரு நிமிடம், முதியவர்கள் கொல்லப்படுகின்றனர். பலர் நோய்க்கு உள்ளாகின்றனர். மனவுளைச்சலுக்கு மனிதர்களை தள்ளிவிடுகின்றது.

இதை ஏன் அரசுகள் செய்கின்றன? அரசுகள் மக்களுக்கானதல்ல, மாறாக மூலதனத்துக்கானது என்ற உண்மைதான், எல்லா முடிவுகளையும் நிர்ணயம் செய்கின்றது. மக்கள் அரசு குறித்து, தங்கள் அனுபவவாதத்தில் இருந்து முடிவுகளை எடுக்கின்றனர்.

இந்த வகையில் வைரஸ்சுக்கு கொல்லப்படுபவர்களில் பெருமளவில் முதியவர்கள் என்பதால், அவர்களின் ஓய்வூதியத்தை திருட அரசு தனிமைப்படுத்துவதை தாமதப்படுத்துகின்றது என்று நம்புமளவுக்கு, அரசு குறித்த மனநிலை மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

அரசுகளும், மூலதனமும் ஓய்வூதிய வயதை அதிகரிக்கவும், ஓய்வூதியத்தைக் குறைக்கவும் செய்யும் இடைவிடாத முயற்சியின் பின்னணியில் இருந்து, இந்தக் கருத்து உருவாகின்றது. மக்களின் உழைப்பில் உருவான ஓய்வூதிய நிதியை மூலதனம் கொள்ளையிடுகின்ற பொதுப் பின்னணியை புரிந்துகொள்ளும் அனுபவவாதம், கொரோனொ மூலம் மக்களைக் கொன்று ஒய்வூதியத்தை திருட முனைவதாக மக்கள் நம்புகின்றனர்.

இந்தப் பார்வை சரியானதா - உண்மையானதா என்பதை விளங்கிக் கொள்ள முன், இதையொத்த இன்னுமொரு உரையாடலை நான் கேட்க முடிந்தது.

08.03.2019 நான் உள்ளடங்க 15 பேர் கொண்ட கூட்டம் ஒன்று நடந்தது. அந்தக் கூட்டம் முடிந்த பின், கொரோனோ குறித்த பலரும் தங்கள் கருத்தை முன்வைத்து உரையாடினர். அப்போது சமூக மேடைகளில் பல்வேறு பொதுக் கருத்தை முன்வைக்க கூடிய ஒருவர் "இரயா நீங்கள் இடதுசாரி, உங்களுக்கு தெரியும்" சீனக் கம்யூனிஸ்ட்டுகள் 1960களில் முதியவர்களை சமூகத்துக்கு அவசியமற்றவராக அறிவித்து, கொன்றுவிட வேண்டும் என்று கூறியதாக - கூறியதுடன், சீனா முதியவர்களை கொல்ல கொரோனோவை உருவாக்கி இருக்க முடியும் என்ற கருத்துப்படக் கூறினார். அத்துடன் கம்யூனிச சீனாவில் ஓய்வூதியம் கிடையாது, முதுமை வரை உழைத்து தான் சாப்பிட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தார்.

அந்தச் சூழலில் இதை மறுத்து கருத்து கூறக் கூடிய சூழல் இருக்கவில்லை. ஆனால் இந்தக் கருத்து எனக்கு ஆச்சரியமாக இருந்ததுடன், யாழ் மையவாத சிந்தனை இப்படி எப்படி கட்டமைக்கப்படுகின்றது என்ற கேள்வி, என் முன் எழுந்து நிற்;கின்றது.

எந்த அடிப்படை ஆதாரமுமற்ற இப்படி எதையும் சொல்லுமளவுக்கு - நம்புமளவுக்கு, யாழ்மையவாத சமூகத்தின் சிந்தனைமுறை கட்டமைக்கப்பட்டு இருக்கின்றது. எல்லாவற்றையும் குறுகிய சிந்தனைக்குள் பொருத்திக் காட்டுகின்ற அறிவாக, யாழ் சிந்தனைமுறை இருக்கின்றது.

1971 ஜே.வி.பியின் ஆயுதக் கிளர்ச்சி நடந்த காலத்தில் இது போன்ற கதையை நான் கேள்விப்பட்டது உண்டு. 55 வயதுக்கு மேற்பட்டவர்களை சேகுவோராப் புரட்சிக்காரர்கள் கொன்று விடுவார்கள் என எங்கள் ஊரில் கதைத்ததை, எனது இளைமைக் காலத்தில் கேட்க முடிந்தது. இப்படி யாழ்மையவாத சிந்தனை முறையானது கம்யூனிசம் மீதான காழ்ப்;புடன் கூடிய, அறியாமையைக் கொண்டு கட்டமைக்கப்பட்டு இருக்கின்றது, வருகின்றது.

கம்யூனிசம், கம்யூனிசக்கட்சி, கம்யூனிச அரசு, கம்யூனிச நாடு.. குறித்த கற்பனையான புரிதல் மூலம் கட்டமைக்கப்பட்ட முதலாளித்துவ அவதூறுகள் இவை. கம்யூனிசம் வானத்தில் இருந்து உதிப்பதில்லை. உழைக்கும் மக்கள் தங்கள் உழைப்பை, தாங்களே நிர்வாகம் செய்கின்ற முறை தான் கம்யூனிசம். முதலாளிக்கு தங்கள் உழைப்பை கொடுப்பதற்கு பதில், தாங்களே தங்கள் உழைப்பை பற்றி முடிவெடுக்கின்ற முறை தான் கம்யூனிசம். உழைக்கின்றவர்கள் தங்களுக்கான அரசுகளை உருவாக்கிக் கொள்ளும் போது, அது கம்யூனிச அரசாக, நாடாக மாறுகின்றது. இப்படி மக்கள் தாங்கள் உருவாக்கும் அரசு மூலம், முதிர்ந்த தங்கள் சொந்தங்களையும், உறவுகளையும் கொல்லப் போவதாக கூறுவதும், திட்டம் போட்டதாக கூறுவதும் அறியாமை என்பதா அல்லது திட்டமிட்ட அவதூறா என்பதற்கு அப்பால் - முதலாளித்துவ சிந்தனைமுறையில் இருக்கக்கூடிய இது போன்ற கண்ணோட்டத்தை கம்யூனிசத்தின் கண்ணோட்டமாக கூறுவதாகும்.

முதலாளித்துவ (முன்னாள் கம்யூனிச) சீனாவில் ஓய்வூதியம்; கிடையாது என்று கூறுவது அபத்தம். முதலாளித்துவம் ஓய்வூதியத்;தை தந்ததான பூர்சுவா கற்பனையில் இருந்து உதிக்கும் அபத்தம். ஓய்வூதியம் உழைக்கும் மக்களால் போராடிப் பெறப்பட்டது. ஓய்வூதிய நிதி உழைக்கும் மனிதனின் உழைப்பில் இருந்து திரட்டப்பட்டதே ஒழிய முதலாளியோ, அரசோ கொடுப்பதல்ல. உழைக்கும் வர்க்கம் ஓய்வூதியத்தை போராடிப் பெற்ற பின்னணியில், கம்யூனிஸ்டுகள் இருக்கின்றனர் என்பதே உண்மை. கம்யூனிஸ்டுகள் போராடி பெற்ற உரிமைகளை, கம்யூனிச நாடுகளில் இல்லை என்று கூறுகின்ற யாழ்மையவாத சிந்தனை என்பது - முதலாளித்துவத்தின் வழித்தடங்களையே கொண்டது.

இலங்கை, இந்திய சிந்தனைமுறையில் கட்டமைக்கப்பட்ட இந்த யாழ் மையவாத சிந்தனையானது, இலங்கை இந்தியாவில் பெரும்மபான்மை மக்களுக்கு ஓய்வூதியம் எதுவும் கிடையாது என்ற உண்மையை கண்டுகொள்ள மறுப்பது ஏன்? முன்னாள் கம்யூனிச நாட்டைக் குறித்து கருத்துச் கூறும் போது, அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பொதுப்புத்தி கூட இன்றி இவ்வாறு கூறுவது நிகழ்கின்றது. மேற்கத்தைய நாட்டு ஓய்வூதிய வயதை விட, சீனாவின் ஓய்வூதிய வயது குறைவு என்பதுடன், அங்கு ஓய்வூதியம் உண்டு. இன்று சீனா முதலாளித்துவ நாடு. சீனா சோசலிச நாடாக இருந்த காலத்தில், உற்பத்தி அனைத்தும் அரசுதுறையாக இருந்த பின்னணியில், அனைவருக்கும் வேலை உத்தரவாதம் இருந்தது போல் - ஓய்வூதியத்தை அனைவருக்கும் வழங்கிய நாடு.

சோசலிசத்தில் இருந்து கம்யூனிசமாக மாறும் போது (அது எந்த நாட்டிலும் நடக்கவில்லை), வேலை நேரக் கட்டுப்பாடு எதுவும் இருக்காது. விரும்பியவரை, இயலுமான வரை சமூகத்துக்கான உழைப்பு, ஓய்வு என்ற கொள்கையே இருக்கும். தனக்கான தேவையை சமூகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளும ;முறை தான் இருக்கும். இதை முதலாளித்துவ சிந்தனைமுறையால் விளங்கி கொள்ளவே முடியாது.

முதியவர்களைக் கொன்று ஓய்வூதியத்தை மறுக்கும் சிந்தனைமுறை, முதலாளித்துவ கண்ணோட்டத்திலேயே சாத்தியம். அனைத்தையும் பணம், இலாப நோக்கில் அணுகுவது முதலாளித்துவ சிந்தனைமுறை. இந்த வகையில் முதியவர்களை கொன்று ஓய்வூதியத்தை அபகரிக்க, கொரோனாவை மேற்கு பயன்படுத்துகின்றதா எனின் இல்லை.

அது தவறான புரிதல், முதலாளித்துவம் குறித்த அனுபவவாதத்தை முழுமையில் பொருத்திப் பார்க்க முடியாத, அறியாமையின் விளைவு.

மாறாக உற்பத்தியை முடக்கி வைரஸ்சை ஒழிக்கும் திட்டம் என்பது - முதலாளித்துவத்தின் இலாப வீதத்தை குறைத்துவிடும் என்ற உண்மை, முதியவர்கள் செத்தாலும் பரவாயில்லை உற்பத்தி நிற்கக் கூடாது என்ற மனநிலைக்கு முதலாளித்துவமும் - அதற்கு தலைமை தாங்கி நிற்கும் அரசுகளின் முடிவாகவும் இருக்கின்றது.

இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தி மூலம் வைரஸ்சைக் கட்டுப்;படுத்துதல், இயற்கைக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள் இறந்தால், அரசு பொறுப்பல்ல என்ற கருத்தை மக்கள் மத்தியில் உருவாக்க முனைகின்றனர். உற்பத்தியை நிறுத்தாது, மருத்துவ ரீதியாகவும் கைவிடுதலே முதலாளித்துவத்தின் (மூலதனத்தின்) கொள்கை. இந்த வகையில் மருத்துவ ரீதியாக காப்பாற்ற போதியளவு மருந்துகளையோ, உபகரணங்களையோ கூட கொண்டிருக்காத சூழல், மேற்கில் நிலவுகின்றது. மருத்துவ ரீதியாக நோயுற்ற மக்களைப் பொறுப்பெடுக்க அரசு தயார் இல்லை என்ற உண்மை, மக்கள் மத்தியில் அச்சமாக - பீதியாக மாறி வருகின்றது.

ஏகாதிபத்திய மூலதனத்தில் புரண்டு படுக்கும் மருத்துவர்களும்;, பன்நாட்டு ஊடகங்களில் உளறும் அறிவியல் பன்னாடைகளும்;, பங்குச்சந்தையில் மருத்துக் கம்பனிகளை நடத்தும் .. கும்பல்களும் எதைத் தீர்மானிக்கின்றதோ, அதுதான் அரசியல் முடிவாக மாறுகின்றது.

முதலாளித்துவ சீனா வைரஸ்சை ஒரு பிராந்தியத்துக்குள் முடக்கி, அதை விரைவாக கட்டுப்படுத்திய முன்மாதிரியான விரைவான நடைமுறையே, மேற்கு மூலதனத்தை அச்சுறுத்தி நிற்கின்றது. சீன முன்மாதிரி ஒன்று உலகத்தின் முன் இல்லையென்றால், மேற்கு மூலதனம் இலட்சக் கணக்கில் மக்களைப் பலியிட்டு இருக்கும் என்பதே எதார்த்தம்;. சீனா தான் மேற்கத்தைய முதலாளித்துவத்தின் இலாபவெறி கொண்ட கொள்கையை தடுமாற வைத்து, பல ஆயிரம் மக்கள் வைரஸ்சால் கொல்லப்படுவதை தடுத்திருக்கின்றது என்பதே உண்மை. சீனா மாதிரி வைரஸ்சைக் கட்டுப்படுத்த மறுத்தால், மேற்கு அரசுகளுக்கு எதிரான மக்கள் எழுச்சிக்கு அது இட்டுச்செல்லும்.