Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

கொரோனோவுக்கும் - மூலதனத்துக்கும் இடையில் சிக்கி மரணிக்கும் மக்கள்

கொரோனோ வைரஸ் முழு உலக மக்களையும் தாக்கினால் என்ன நடக்கும்? சீனா தரவுகளின் படி – அதாவது 3.5 சதவீத மரணம் நிகழுமெனில் 30 கோடி மக்கள் மரணிப்பார்கள். இத்தாலி மரண வீதப்படி குறைந்தது 60 கோடி மக்கள் மரணிப்பார்கள். மருத்துவ வசதி உள்ள பிராந்திய புள்ளிவிபரங்கள்; இவை. மருத்துவ வசதியில்லாத இடங்களில் மரணம் நிகழும் போது, அது 100 கோடியை தாண்டாது என்பதனை அறிவியல் ரீதியாக மறுக்க முடியாது. நோய் மீண்டும் மீண்டும் - இடைவிடாது தாக்கக் கூடியது. இது கற்பனையல்ல. ஏகாதிபத்திய அரசுத் தலைவர்கள் மக்களுக்கு மரணத்தை பரிசளிக்கும் மூலதனத்தின் எடுபிடிகளாக இருந்தபடி - தொடர்ந்த மரணத்தின் மேல் மூலதன அரசியல் நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.

கொரோனோ வைரஸ்சின் பரவலுக்கும் - மனித உயிர் பலியிடலுக்குமான பின்னணியில், வெறிபிடித்த ஏகாதிபத்திய மூலதனங்களே இயங்குகின்றது. மூலதனம் படுக்கையில் வீழ்வதையும் - மரணிப்பதையும் விரும்பாத மூலதனங்கள்; - கொரோனோ வைரஸ்சின் பரவலைத் தடுக்க முனையவில்லை. மாறாக அலட்சியப்படுத்தியதுடன், தொடர்ந்தும் அலட்சியப்படுத்துகின்றனர். இன்று கட்டுக்கடங்காத உலக தொற்று நோயாக மாறியுள்ளது. ஏகாதிபத்திய அரசுகளால், இனி கொரோனோ வைரஸ்சை மூடிமறைக்க முடியாது போயுள்ளது.

பிற நோய்களின் மரண எண்ணிக்கைகளைக் கொண்டு கொரோனோ வைரஸ்சினால் மரணித்த எண்ணிக்கையைக் குறைத்து (போலிப் புள்ளி விபரங்கள்) மதிப்பட்டுக் காட்டிய அரசுகள், முழுமையாக கொரோனோ வைரஸ் தாக்கினால் உலக மக்கள் தொகையில் குறைந்தது 20 சதவீதமான மக்களைக் கொன்று விடும் என்ற உண்மையை மூலதனத்துக்காக குலைக்கும் அரசுகள் கண்டு கொள்ளவில்லை. மருத்துவ அறிவியல், மரணங்கள் குறித்து - அதன் பயங்கரமான உண்மையைக் கூறத் தொடங்கியதை அடுத்தே, மூலதனம் உற்பத்தியை நிறுத்த இணங்கியது. கொரோனா வைரஸ் உற்பத்தி நடவடிக்கைக்காக உழைக்கும் மக்கள் ஒருங்கிணையும் போதுதான் பரவுகின்றது என்பதால் - சுரண்ட முடியாத மூலதனத்தின் நெருக்கடியாக மாறுகின்றது.

கொரோனா வைரஸ்சின் பரவல் குறித்து, சீனா ஏகாதிபத்திய மூலதனமே முதலில் மூடிமறைத்ததுடன் - அதை அலட்சியப்படுத்தியது. அலட்சியப்படுத்தல் மூலம் கட்டுப்படுத்த முடியாத புதிய வைரஸ்சாக, சீன மூலதனம் வைரஸ்சையும் சந்தைப்படுத்தியது.

மக்களின் பீதியும் - மரணங்களும் எல்லை மீறிய போது, அதை சீன மூலதனத்தால் மூடிமறைக்க முடியவில்லை. சீனா மற்றும் சீனாவில் குவிந்துள்ள பிற ஏகாதிபத்திய பன்நாட்டு மூலதனம் நிலைதடுமாறத் தொடங்கிய போது, முழு சீன மூலதனமும் படுக்கையில் விழுவதைத் தடுக்க, அவசரமாக மூலதனத்துக்காக உழைக்கும் செயற்பாடுகளை நிறுத்தி கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. இது உலக மூலதனத்தில் பாரிய அதிர்வை ஏற்படுத்தியது உழைக்கும் மக்கள் மீதான கட்டுப்பாடுகள், சீன மக்கள் மேலான ஒடுக்குமுறை மூலம் கட்டமைக்கப்பட்டது. மக்கள் நலனில் இருந்து - கட்டுப்பாடுகள் கையாளப்படவில்லை, மூலதன நலனில் இருந்தே, கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டது.

இப்படி சீன மூலதனம் கொரோனா வைரஸ்சுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை வேடிக்கை பார்த்த மேற்கு மூலதனம்;, அதை தங்கள் மேலாதிக்க ஏகாதிபத்திய நலன் சார்ந்து அணுகியது. ஜனநாயகத் தன்மையற்ற "பொய்களின் மேலான உண்மைகள்" என்று மேற்கத்தைய ஊடகங்களும் - மூலதனமும் வசைபாடின. அதேநேரம் மேற்கத்தைய மூலதனங்களுக்கு - புதிய சந்தைக்கான வாய்ப்பாக கருதி, எந்த மருத்துவ எச்சரிக்கையுமின்றி – மருத்துவ தயாரிப்பு இன்றி, தங்கள் மூலதனத்தை ஏற்றுமதி செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். கொரோனா வைரஸ்சை அலட்சியப்படுத்தியதுடன், அதை எதிர்கொள்ள எந்த தயாரிப்புமின்றி விட்டனர்.

இந்தப் பின்னணியில் இன்று ஐரோப்பிய மூலதனத்தை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு கொரோனா வைரஸ் தாக்கத் தொடங்கி இருக்கின்றது. இத்தாலியில் கொரோனா வைரஸ்சை எதிர்கொள்ளத் தேவையான அடிப்படை மருத்துவ உபகரணங்களே கிடையாது. மருத்துவ உபகரணங்கள் இன்றி மக்கள் மரணிக்க விடப்படுவதாக செய்திகள் வெளிவருகின்றது. சீனாவில் இருந்து பொருட்கள் அவசரமாக, தரை இறங்குகின்றது.

மருத்துவத்தை தனியார்மயமாக்கி ஆட்குறைப்புக்குள்ளாக்கி வரும் ஐரோப்பிய மருத்துவ முறையானது - கொரோனா வைரஸ்சினை எதிர்கொள்ளப் போதுமான மருத்துவ ஊழியர்கள் இன்றி - மரண எண்ணிக்கையை வேகப்படுத்தி இருக்கின்றது. நோயின் கட்டுப்பாடற்ற பரவலுக்கு, இது வித்திட்டுள்ளது.

ஐரோப்பா எங்கும் இதே நிலை. வேகமாக பரவும் கொரோனோ வைரஸ்சை எதிர்கொள்ளவும் – தடுக்கவும், எந்த முன் தயாரிப்யும் கிடையாது. குறிப்பாக கையை சுத்தம் செய்யக் கோரும் வைரஸ் தொற்று நீக்கி - இன்று வரை பெற முடியாதுள்ளது. கொரோனா வைரஸ் காவியாக கையிருக்க – பரவலை வேகப்படுத்தும் தடுப்புக் கிருமி நீக்கி இன்றி - தொடர்ந்து மூலதனத்துக்காக நாள்தோறும் உழைக்கக் கோரப்படுகின்றது. 150 இலட்சம் மக்கள் தொகை கொண்ட பாரிஸ், எந்த முன்னெச்சரிக்கை தடுப்புமின்றி இயங்குகின்ற பின்னணியில் - சில நாட்களில் கொரோனோ வைரஸ் தாக்கத்தை எதிர்கொளள் முடியாத தடுமாறும் சூழலுக்குள் வாழ்வதை நாம் தடுக்க முடியாது என்றே கூறப்படுகின்றது. ஐரோப்பா எங்கும் இது தான் நிலை. சீனாவை விட ஐரோப்பாவில் மரண வீதம் அதிகமாக இருக்குமளவுக்கு - மருத்துவ உபகரணங்கள் முதல் மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறையென்பது, தனியார்மயத்தின் பொது விளைவாகவும் - மூலதன ஆட்சிகளின் மனிதவிரோதக் கூறும் வக்கிரமடைந்து கிடப்பதை ஏகாதிபத்திய "ஜனநாயகம்" மூலம் மூடிமறைக்க முடியாது.