Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

கும்மியடிக்கும் இன, மத, சாதிய, பிரதேசவாத தேர்தலில் "தேசியம்"

ஒடுக்கப்பட்ட தேசத்தையும், தேசிய இனங்களையும் கொண்ட இலங்கையில், தேர்தல் அரசியல் என்பது மக்களை மேலும் இனவாதமாகி சிந்திக்கவும் - மோத வைப்பதுமே அரங்கேறுகின்றது. ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்கள் தலைமையை முன்வைத்து யாரும் வாக்குக் கேட்பதில்லை, மாறாக சுயநலம் பிடித்த ஒடுக்குவோரே இனவாதம் பேசி மக்களை பிரிக்கின்றனர். அதேநேரம் ஒடுக்குகின்ற தங்கள் முகமூடியை மூடிமறைக்க மதம், சாதி பிரதேசம் என்ற குறுகிய அடையாளங்களை முன்னிறுத்தி வேட்பாளரை நிறுத்துவதுடன் - சாதி, மத, பிரதேச ரீதியாக வாக்கைக் கோருகின்ற அளவுக்கு - தேர்தல் அரசியலால் மக்களை குறுக்கும் நெடுக்குமாக பிளந்துவிடுகின்றனர்.

இந்த குறுகிய மனித விரோதிகள் மத்தியில் இருந்து ஒளி தெரிவதாகக் கூறுகின்ற – காட்டுகின்ற, புலம்பல்களுக்கு குறைவில்லை. இதன் மூலம் சுயநலம் பிடித்த, தேர்தல் அரசியலை முன்வைக்கின்ற பிழைப்புவாதிகளின் பிழைப்புக்கு வழிகாட்டுகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் பிழைப்பில், யார் அது என்பதை தேர்ந்தெடுக்க கோருகின்றனர். அதில் கொஞ்சம் நல்லவராக, வல்லவராக, ஊழல் அற்றவராக பார்த்து தேர்ந்தெடுக்க கோரும் பன்னாடைத்தனம் - அறிவாக புலம்பப்படுகின்றது.

ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களில் இருந்து சிந்திக்கும் எவரும், இந்தத் தேர்தல் கூத்தாடிகள் மக்களை இனம், சாதி, மதம், பிரதேசம் என்ற பிரித்து - பிளந்து விடும் மனித விரோத கூத்துக்கு துணைபோக முடியாது. இந்த உண்மையை மக்களுக்கு சொல்லாத எவரும், மக்கள் நலனின் இருந்து சிந்திக்கவில்லை என்பதே வெளிப்படையான உண்மை.

இந்த அரசியல் - அறிவியல் பின்னணியில்

1.தேசங்களையும், தேசிய இனங்களையும் ஒடுக்குகின்றவன், ஒடுக்கப்பட்ட அந்த மக்களை ஏமாற்ற 'அபிவிருத்தி' என்று வேசம் போட்டுக் கொள்கின்றான். அபிவிருத்தி – வேலைவாய்ப்பு என்று அரசுடன் கூடிக் கும்மியடிக்கும் இந்த இன, மத, சாதி, பிரதேசவாதக் கூட்டம், நவதாராளவாத உலகமயமாகும் கொள்ளையில் - சிலருக்கு கூலி பெறும் பாக்கியத்தை பெற்றுத் தரவே - தமக்கு வாக்களிக்கக் கோருகின்றனர்.

 

2.மறுபக்கத்தில் "ஒடுக்கப்பட்ட தேசத்தின்" விடுதலை என்று ஒடுக்கும் வெள்ளாளிய சிந்தனையில் கூச்சல் போடும் கூட்டம், இனவாதம் கடந்த எந்த மக்கள்திரள் திட்டத்தையும் முன்வைக்காது - பேரம் பேசி நக்க, தங்களுக்கு பலத்தை தருமாறு கோருகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்தோ – ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான இனவாதம் கடந்த, இன, மத, சாதி, பிரதேசவாதத்துக்கு எதிரான மக்கள்திரள் பாதை குறித்து, யாரிடமும் எந்தத் திட்டமும் கிடையாது.

ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட,

1.ஒரு பகுதியினர் எலும்புகளை காட்டவும் - போடவும் முனைகின்றனர்

2.மறுபகுதியினர் "மீட்பாளர்களாக" புதிய சிலரை களமிறக்கி – மாற்றம் வந்துவிடும் என்ற வித்தை காட்ட முனைகின்றனர்.

ஆக இப்படிப்பட்ட பின்னணியில் தேர்தல் அரசியல் சூடு பிடித்திருகின்றது. தமிழ் "தேசியத்தின்" பெயரில் பாராளுமன்றத்துக்கு யாரைத் தெரிவு செய்ய வேண்டும் - யாரை தெரிவு செய்யக் கூடாது என்று தர்க்கங்கள் அரசியலாகின்றது. இனவாதமல்லாத "தமிழ்" தேசியத்தை முன்வைக்காத ஒடுக்கும் தேசியத்தை முன்வைக்கும் தங்களைத் தேர்வு செய்வதன் மூலம், அபிவிருத்தியே "தமிழ்" தேசியம் என்று எதிர்ப்பாளர்கள் முன்வைக்கின்றனர்.

இப்படி தேர்தல் அரசியலை அணுகுகின்ற தமிழ் வெள்ளாளிய சிந்தனைமுறையே, இனம், மதம், சாதி, பிரதேசவாதங்களின் பின்னணியில் இயங்குகின்றது.

தங்களை முற்போக்கான கலை இலக்கிய அரசியல் மற்றும் பத்திரிகையாளராகக் காட்டிக் கொண்டு விமர்சனம் செய்கின்றவர்கள், இந்த சாக்கடைக்குள் புளுத்து நெளிகின்றனர். மக்களை அறிவூட்டக் கூடிய, இனவாதமற்ற மக்கள்திரள் பாதையை முன்வைத்து கருத்தை முன்வைக்கும் ஒருவரைக் கூட காணமுடியாது. மக்களை குறை சொல்ல தயங்காத அறிவுத்துறை தான், இனம், மதம், சாதி, பிரதேசவாத ஒடுக்குமுறைகளின் பின்னணியில் இயங்குகின்றது. சிந்தனை ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்களை அறிவூட்டுவதற்குப் பதில், இன, மத, சாதி, பிரதேசவாதமாக மக்களை பிரித்து - பிளந்து விடுவதையே அறிவாக விதைக்கப்படுகின்றது. இந்தத் தேர்தலும் இதையே அறுவடை செய்யும்.

இரயாகரன்
11.03.2020