Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

காவிப் பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் மத அடையாளங்களைத் துறத்தல்

காவிப் பாசிட்டுகள் தாங்கள் இந்து மதத்தையும் - அந்த மதத்தைப் பின்பற்றக்கூடிய மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறுகின்றனர். இந்து மதத்தை முன்னிறுத்துவதன் மூலமே, காவிகள் தங்கள் காப்பரேட் பாசிசத்தை மறைக்கின்றது. அதேநேரம் இந்து அல்லாத மக்களையும், பிற மதங்களையும் இழிவுபடுத்தி ஒடுக்குவதன் மூலம், பாசிசமே அரச அதிகாரமாகி விடுகின்றது.

காவிப் பாசிசம் இந்து அடையாளங்களை உயர்த்தி ஒடுக்கும் அதேநேரம், ஒடுக்கும் பாசிசமே இந்துக்களின் அரசாக நம்பவைக்கின்றது. இதன் மூலம் காவிகளின் அதிகாரமாக அரசு மாறுகின்றது. மத அடையாளங்கள் மூலம், ஒடுக்குமுறைகள் கட்டமைக்கப்படுகின்றது.

உதாரணமாக பார்ப்பனிய சிந்தனையிலான படிமுறை ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்ட சாதிய சமூக அமைப்பில், பார்ப்பான் சாதி ரீதியாக தன்னை உயர்ந்தவனாக காட்டிக்கொள்ள பூணூல் அணிந்து கொள்கின்றான். பூணூல் மூலம் தன்னை வேறுபடுத்திக் காட்டுகின்றான். இது போன்று எல்லா சாதிகளும் தனி அடையாளங்களைக் கொண்டு தங்களை தனிமைப்படுத்திக் காட்டுவதன் மூலம், அடையாளங்கள் கூட ஒடுக்குமுறையாக இருப்பதுடன் - ஓடுக்குமுறையாளன் ஒடுக்கப்பட்டவர்களை அடையாளப்படுத்த அடையாளங்களையும் திணிக்கின்றான்.

இந்தப் பார்ப்பனிய சிந்தனையிலான காவிப் பாசிசம் - மக்களுக்கு மத அடையாளத்தைக் கொடுக்கின்றது. காவிப் பாசிசம் பார்ப்பனிய சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட அடையாளங்களை தனக்குள் கொண்டு இயங்கும் அதேநேரம், காவி மூலம் சுய பார்ப்பனிய சாதிய ஒடுக்குமுறையை மூடிமறைத்துக் கொள்ள - பிற மதங்களில் இருந்து தன்னை வேறுபடுத்தும் மத அடையாளத்தை முன்னிறுத்துகின்றான். பிற மத அடையாளங்களை தனிமைப்படுத்தி இலக்கு வைக்க, பிற மதங்களுக்கு மத அடையாளத்தை கொடுக்க விரும்புகின்றது. இங்கு காவிப் பாசிசம் மத அடையாளத்தை அழிக்க விரும்புவதில்லை. இதன் பொருள் முஸ்லீம் மத அடையாளத்தை காவிப் பாசிசம் அழிக்காது, மாறாக அதைத் திணிக்கும்.

 

 

ஜெர்மனியில் நாசிகள் இதையே செய்தனர். பாசிசத்துக்கு எதிராக யூத மக்கள், தங்கள் யூத அடையாளங்களை துறக்க முற்பட்ட போது, யூத அடையாளத்தை கட்டாயப்படுத்தி திணித்தனர். ஜெர்மனிய நாசிகள் அதிகாரத்துக்கு வந்து பாசிமாக மாறி ஒடுக்கத் தொடங்கியவுடன், யூத மத மக்கள் யூத அடையாளங்களை கட்டாயமாக அணிந்து கொள்ள வேண்டும் என்று கூறியதுடன் - அதை அணிவித்தனர். யூதர்களைக் கண்டுபிடிக்கும் வண்ணம் தனித்தனியாக அவர்களுக்கு இலக்கமிட்டு - அதை அவர்களின் உடலில் பச்சை குத்தினர்.

இதன் முரண் யூத மதமானது தங்களைத் தாங்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, சமூகத்தில் இருந்து தனித்து இயங்கும் குறுகிய அடிப்படைவாத மதச் சிந்தனை முறையை - நாசிசம் தனதாக்கிக் கொண்டு யூத மக்களை ஒடுக்கியது. பிற சமூகத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட யூத மத வாழக்கை முறை - நாசி பாசிச ஒடுக்குமுறையை எதிர்கொண்ட போது, தனிமைப்பட வைத்தது. பாசிசத்தின் முன்னால் தன் மத அடையாளத்தை மூடிமறைக்க முற்பட்ட போது - யூத அடிப்படைவாதம் உருவாக்கிய அடையாளத்தை மறைக்க முடியவில்லை. அதேநேரம் நாசிகள் அடையாளங்களை கைவிடுவதை அனுமதிக்கவில்லை.

அடையாளங்களைக் கடந்து மனிதனாக பொது சமூகமாக கலந்துவிடக் கூடாது என்பது நாசிச பாசிச சிந்தனையாக இருந்தது. காவி பாசிசம் இதற்கு விதிவிலக்கல்ல. முஸ்லீம் இல்லை என்றால் நீ இந்துவல்ல என்ற உண்மை எப்படியோ, அப்படித்தான் மத அடையாளங்களை துறந்தால் காவி பாசிசத்தால் இயங்க முடியாது. இதை ஒடுக்கப்படும் முஸ்லீம் மக்கள் முதல்; ஒடுக்கும் தரப்பைச் சேர்ந்த இந்து மக்களும் புரிந்து கொண்டு – எல்லா மத அடையாளங்களையும் துறத்தல் அவசியமாகும். கடவுள் என்பது தனிமனித நம்பிக்கை, அதை பொது வெளியில் அடையாளப்படுத்துவது என்பது - பிறரை ஒடுக்குவது தான். மதப் பெயரோ, அடையாளங்களோ.. கடவுள் நம்பிக்கைக்கு எதிரானது. பொதுமை மறுக்கும் மனித இழிவுகள்;.

காவி பாசிச ஒடுக்குமுறை நிலவும் சமூகத்தில் - இந்துவின் பெயரால் ஒடுக்கப்பட வேண்டியவர்களை மத அடையாளங்களைக் கொண்டு தான் வேறுபடுத்த முடியும். இதனால் இந்துவுக்கு மத அடையாளங்களை கட்டாயப்படுத்தும் காவிப் பாசிசம், உணவு பழக்க வழக்கங்களைக் கூட மத அடிப்படையில் வேறுபடுத்த முனைகின்றது.

காவிகள் இந்துவுக்கு கொடுத்த சுய அடையாளம் மூலம் சமூகத்தை காவி யயமாக்கும் அதேநேரம், பிற மத அடையாளங்களை எதிரானதாக காட்டி அதை இலக்கு வைக்கின்றது. மதங்கள் அடையாளத்தை துறந்தால், காவிப் பாசிசம் இயங்க முடியாது.

இன்று காவிப் பாசிசம் எப்படி இயங்குகின்றதோ - அப்படித்தான் பிற மதங்களிள் அடிப்படைவாதங்களும் தன்னை மதம் மூலம் அடையாளப்படுத்துக் கொண்டு இயங்குகின்றது. பாசிசம் செழித்து வளர்வதற்கான ஊட்டச்சத்தாக மத அடிப்படைவாதங்கள் இருப்பதுடன், இந்து - முஸ்லிம் அடிப்படைவாதமானது - ஒரு நாணயத்தின் இரு பக்கமாக இருக்கின்றது.

காவிப் பாசிசத்துக்கு எதிரான போராட்டங்கள் மத அடையாளங்கள் பெறுவது என்பது, தனிமைப்படுத்தி ஒடுக்குவதற்கு இலகுவானதாக மாறுகின்றது.

காவி காப்பரேட் பாசிசத்தை மூறைமறைக்க - குடியுரிமைச் சட்டம் முஸ்லிம்களை இலக்குவைத்து கொண்டுவரப்பட்ட ஒடுக்குமுறைச்சட்டம் என்பது வெளிப்படையானது. அதை எதிர்த்துப் போராடும் போது - முஸ்லீம் மத அடையாளங்களைக் கொண்டு எதிர்த்து நிற்பது, தற்கொலைக்கு ஓப்பானது. காவிகளின் ஓடுக்குமுறை வெற்றியளிப்பதும் - பெரும்பான்மை இந்து சமூகம் மௌனமாக இருக்கின்ற பொதுப் பின்னனியில் தான். இங்கு மத அடையாளங்கள் பொதுத் தன்மையை அழிக்கின்ற அதேநேரம் - போராட்டங்களை தனிமைப்பட்டுப் போக வைக்கின்றது. போராட்டத்தில் பிற மதத்தினர் கலந்து கொள்ளமுடியாத வண்ணம், மத அடையாளங்கள் தடையாக மாறுகின்றது. காவிப் பாசிட்;டுகள் முஸ்லிம்களின் போராட்டமாக அவற்றை முத்திரை குத்தி தனிமைப்படுத்தி ஒடுக்க , மத அடையாளங்கள் உதவுகின்றது.

இங்கு மதம் என்பது தனிப்பட்ட மனிதனின் நம்பிக்கை. இதைக் கடந்து மதத்தை முன்னிறுத்துவது என்பதும் - குறுகிய அடையாளங்களை போர்த்திக் கொள்ளவே உதவும். உடை, உணவு, பெயர்.. என்று தங்களை வேறுபடுத்திக் கொள்ளும் குறுகிய மத அடையாளங்கள் மூலம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் முறை – அவர்கள்; நம்பும் கடவுள் நம்பிக்கைக்கு முரணானது.

அடையாளத்தை துறந்து போராடுவதன் அவசியத்தை – கடந்த நாசிய பாசிச வரலாறு உணர்த்துகின்றது. எல்லாக் குறுகிய அடையாளங்களையும் துறந்தாக வேண்டும்;. இந்த அடையாளங்கள் ஒடுக்குமுறைக்கு துணைபோவது மட்டுமின்றி, போராட்டத்தின் பொதுத்தன்மையையே அழித்து விடுகின்றது.