Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சர்வதேச சமூகமும்-ஈழத் தமிழ் சமூகமும்:  பெண்விடுதலைக்கான முன்னெடுப்புகள்

2019 ஆண்டின், அனைத்து ஒடுக்கப்படும் பெண்கள் மற்றும் உழைக்கும் பெண்கள் தினம் முடிந்து விட்டது. உலக நாடுகள் அனைத்திலும் சர்வதேச ஒடுக்கப்படும் பெண்கள் மற்றும் உழைக்கும் பெண்கள்தின ஆர்ப்பாட்ட பேரணிகள் மற்றும் நிகழ்வுகளில் - 1970-களின் பின் இவ்வருடம் பெருமளவில் மக்கள் பங்கெடுத்துள்ளனர். குறிப்பாக வளர்ந்துவரும் புதிய தலைமுறைப் பெண்கள் அதிகளவில் பங்குகொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

பெர்லின் மாநகரில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் நேற்று ஈடுபட்டனர்.  அத்துடன், பெர்லின் உள்ளூராட்சி அரசு சர்வதேச பெண்கள் தினத்தை விடுமுறை நாளாக  அறிவித்துள்ளது. இஸ்தான்புல் நகரில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஆர்ப்பாட்டம் பொலிசாரினால் தடுக்கப்பட்டபோது அங்கு வன்முறை அரச  ராணுவத்தினால் அரங்கேற்றப்பட்டது. இஸ்தான்புல் பேரணியில் பங்குகொண்ட சில ஆயிரம் பெண்கள்  காயமடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முதலாளித்துவ கட்டமைப்புக்குள், பெண்கள்   பெறக்கூடிய உரிமைகள் அனைத்தும் பெற்றதாக குறிப்பிடப்படும் ஸ்கண்டிநேவிய நாடுகளிலும் பாரிய  ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்றன. தற்போதுள்ள வலதுசாரிய- கிறிஸ்தவ ஜனநாயக அரசு,   சுயமுடிவிலான கருக்கலைப்பு செய்யும் உரிமையை தடைசெய்ய முயன்று வருகிறது. இதற்கு எதிராக  நோர்வேயின் தலைநகரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவின் பல மாநிலங்களில் இடதுசாரிகளால் முன்னெடுக்கப்பட்ட் சர்வதேச  உழைக்கும் பெண்கள் தினத்தில், வரலாறுகாணாத அளவில் பெண்கள் பங்குபற்றியுள்ளனர். தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் கூட தொடர்ச்சியாக சர்வதேச பெண்கள் தினம் சார்ந்த நிகழ்வுகள்  நடைபெற்று வருகின்றன.

இலங்கையில்; முன்னிலை சோஷலிஸ கட்சியின் பெண்கள் முன்னணியான சுதந்திரத்திற்கான  பெண்கள் இயக்கம், கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தை  நடாத்தியது. இதில் மும்மொழியிலான     உரைகள் நிகழ்த்தப்பட்டது. தமிழில் ஆற்றப்பட்ட உரை, மலையகத்தின் உழைக்கும் வர்க்க  பெண்களின் மீது நிகழ்த்தப்படும் சுரண்டல் பற்றியதாக அமைந்தது. மேலும், இலங்கை அரசினால்  வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக அனுப்பப்படும் நமது நாட்டின் தொழிலாள வர்க்கப் பெண்களின்  நிலை பற்றியும், சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் போராட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.  இப்போராட்டத்தில் பங்குகொண்டவர்களில் பெரும்பான்மையினர் சிங்களமொழி பேசும் சகோதர- சகோதரிகளே! பங்குகொண்ட தமிழர்களை கைவிட்டு எண்ணிவிடலாம்.

தமிழ்மொழி சார்ந்த சமூகங்களில்; பெரிய அளவில் பெண்விடுதலைக்கான சிந்தனை சார்ந்த முன்னெடுப்புகளுக்கு பாரம்பரியம் கிடையாது. சிங்கள சமுதாயத்தில், இடதுசாரிக் கட்சிகளால் 50-ஆம் ஆண்டுகளிலேயே பெண்ணுரிமைக்கான போராட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. எழுபதுகளில், ஜேவிபி போன்ற இயக்கங்கள்; பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், மற்றும் சமுதாய நிறுவனங்களில் பெண்ணுரிமை பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். இதன் விளைவாக இன்று பலதரப்பட்ட வகையிலான- பன்முகப்படுத்தப்பட்ட பெண்ணிய சிந்தனையின் அடிப்படையிலான் பெண் விடுதலைக்கான இயக்கங்கள் தெற்கில் இயங்கி வருகின்றன. இவ்வியக்கங்கள் சிந்தனை ரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும் வளர்ச்சி அடைவதற்கு பல வழிகளில் சிங்கள மொழி சார்ந்த, புத்திஜீவிகள், பல்கலைக்கழகங்கள், இலக்கியவாதிகள், சமூக நிறுவனங்கள் உதவியாக இருந்து வருகின்றன.

ஆனால், ஒடுக்கப்படும் தேசிய இனமான தமிழ் மக்கள் மத்தியில் பெண்ணிய வெளிப்பாடுகள்   மிகவும் அரிதானதாகவே உள்ளது. கடந்த 50-வருட காலத்தில், தமிழ் தேசிய விடுதலை சார்ந்து பல இயக்கங்கள் உருவாகின. அதில் ஒரு சில இயக்கங்கள் மட்டுமே பெண்களின் விடுதலைக்கான ; தனித்துவமான அமைப்பு உருவாக்கம் தேவை என்று கருதினர். ஆனாலும், அவ்வியக்கங்கள் கூட  பெண்களைத் தமது அரசியல்- ராணுவ தேவைக்கு மட்டுமே பயன்படுத்தினர். தமிழ் தேசிய இயக்கங்களின் ஒட்டுமொத்தமான அழிவு 2009 -இல் முடிவுக்கு வந்தது. இதன்பின், பெண் விடுதலைக்கான ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலான எந்தவித நடைமுறை- வேலைத்திட்டங்களும் தமிழ் சமூகத்தில் கிடையாது. 

இன்று, தமிழ் பிரதேசத்தில் சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்கள்(Nபுழு), சில அரசு நிறுவனங்கள், மற்றும் ஒருசில கட்சிகளால், சர்வதேச பெண்கள் தினம் என்ற பெயரில், களியாட்ட விழாக்கள் நடாத்தப்படுகின்றன. அதில் ஒன்று கடந்த கிழமை பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அது பற்றிய ஒரு தனிப்பதிவை நான் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். அந்த பதிவு சார்ந்து,முகப்புத்தகத்தில் சில கருத்துகள் வெளியிடப்பட்டன. அதில் ஒரு பதிவில், கற்பு  மற்றும் கற்பழிப்பு போன்ற சொற்கள் தமிழ் சமூகத்திலிருந்து- சமூகத்தின் பாவனையிலிருந்து இல்லாதொழிக்கப்பட்டு விட்டதா? என்ற கேள்வியை முன்வைத்தது. அப்பதிவானது கற்பழிப்பு, கற்பு போன்ற சொற்கள் தமிழ் சமூகத்தில் பாவனையில் இன்றும் இருப்பதனால், அச்சொற்களை பாவிப்பதில் எந்த தவறும் இல்லை, என நியாயப்படுத்தியது.

இந்த பதிவிற்கு, ஆதரவாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும்- தம்மை பெண்ணியவாதிகள் என்று முன்னிறுத்திக் கொள்ளும் சிலரும் தமது விருப்பை தெரிவித்திருந்தனர். இதே நபர்கள், தொண்ணூறுகளின் இறுதியில் இடதுசாரிகள் பெண்ணியம் பற்றி விவாதித்தபோது, அதற்கெதிராக கொடி பிடித்து, பெண்ணியம் என்பது "ஒவ்வொரு தனிநபரின் சுயவிருப்பில் ஆன- வாழ்வதற்கான உரிமை" என வாதிட்டனர். சமூக விடுதலைக்கும்-பெண்களின் விடுதலைக்கும் சம்பந்தம் இல்லை என்ற கருத்தை முன்வைத்தனர். ஒருவகையில், அவர்கள் முன்வைத்தது வலதுசாரிய பெண்ணியவாதம் என்பது என் கருத்து. எச்ச சொச்ச நிலப்பிரபுத்துவ, சைவ சனாதன சிந்தனை கொண்ட தமிழ்ச் சமூகத்தில், தனிமனிதம் சார்ந்த உரிமைகள் பற்றிய கருத்தை முன்வைப்பது ஒரு ஒருவகையில்  முற்போக்கானது.

ஆனால், இவர்கள் பெண்ணியம் பேசியது தமது சுய வாழ்வில் ஏற்பட்ட சரிவுகள், மற்றும் வாழ்வியல் சார்ந்த தமது தனிமனித தெரிவுகளை நியாயப்படுத்துவதற்காக ஒழிய- உண்மையாகவே பெண்விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்காக அல்லவென்பது; பின்வந்த காலத்தில் நிரூபணமாகியது. இது அந்தத் தனிப்பட்ட பெண்களின் தவறு என்று கூறுவதைக் காட்டிலும்- அன்று இவர்களின் பின்னால் இருந்து, அரசியல்ரீதியாக இயங்கிய ஆண்களின் தேவைகள் சார்ந்ததாகவே இருந்தது என்பதே உண்மையாகும்.

அத்துடன், அன்று புலம்பெயர்ந்த நாடுகளில் பெண்ணியம் கதைத்தவர்களில் ஒரு பகுதியினர், புலிகளுக்கு எதிராக - தமிழ் தேசிய விடுதலையை முன்னெடுப்பதற்காக- புலம்பெயர் நாடுகளிலும், இலங்கையிலும் கட்டுவதற்கு முயற்சிக்கப்பட்ட "ஒருவகை" தமிழீழ இடதுசாரியக் கட்சியின்  செயற்பாட்டாளர்களாகவும் இருந்தனர். அந்த அமைப்புருவாக்கம் புலிகளுடன் சங்கமித்த பின், அவர்கள் கதைத்த பெண்ணியமும் காணாமல் போனது. பெண்ணிய செயற்பாடுகளில் ஈடுபட்ட அந்த அமைப்பு சார்ந்த, பெரும்பான்மையான பெண்கள் சமூக- அரசியல் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். ஒரு சிலர் தமது இருப்பைக் காத்துக்கொள்ள "இலக்கியச் செயற்பாடுகள்", மற்றும் இணையமூடாக சில பிரச்சார வேலைகளை செய்கின்றனர்.

இவ்வாறு, மிகவும் சமூக முக்கியம் வாய்ந்த பெண்கள்விடுதலைப் போராட்டமானது; எல்லா வகையிலும்  நமது சமூகத்தில் பின்னடைவு நிலையிலேயே காணப்படுகிறது. இந்நிலையை மாற்றுவதற்கு,  பழையபடி அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள எச்சசொச்ச இடதுசாரி சக்திகள் முன்வர வேண்டும் என்பதே என் கருத்தாகும். இன்று, இலங்கை பல்கலைக்கழகங்கள் பலவற்றில் பெண்ணியம் சார்ந்த கற்கைநெறிகள் கற்பிக்கப்படுகின்றன. அதேபோன்று, புலம்பெயர் சமுதாயத்தில் பரவலாக  பெண்ணியம் சார்ந்த சிந்தனையை உள்வாங்கி கொள்வதற்கான அத்தனை வசதிகளும் அங்கு வளர்ந்து வரும் தமது பிள்ளைகளுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. ஆரம்பப் பாடசாலைக் கல்வியிலிருந்து, பல்கலைக்கழகம் வரையும் இயல்பாகவே பெண்ணியம் சார்ந்தசிந்தனைகள், கோட்பாடுகளை புலம்பெயர்ந்த நாடுகளில் நமது பிள்ளைகள் கற்றுக்கொள்ள முடியும். இவ்வாறு, கற்றல் ஊடாக வளர்ந்து வரும் சமுதாயத்தை நாம் அனைவரும் ஊக்குவித்து பெண்ணியச் சிந்தனைகளை சமூகத்தில் வளர்த்தெடுக்க முன்வர வேண்டும். அத்துடன், இலங்கையைப் பொருத்தமட்டில் ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களான நாம், பல்லின- பல்கலாச்சார செயற்பாடுகளில் ஈடுபடும் தெற்கின் முற்போக்குசக்திகள், வளர்ந்துவரும் இடதுசாரி சக்திகள், முற்போக்கான சமூக நிறுவனங்கள் போன்றவற்றுடன் இணைந்து, அவர்கள் முன்னெடுக்கும் பெண்கள் விடுதலைக்கான நடைமுறை வேலைகளை நமது சமுதாயத்திலும் விரிவுபடுத்த செயலாற்ற வேண்டும்.