Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சயிட்டம் தனியார் திருட்டு பட்டக்கடை - யாழில் விழிப்பு பிரச்சாரம்

மாலபேயில் அமைந்துள்ள சயிட்டம் மருத்துவக் கல்லூரியை உடனடியாக மூடக்கோரியும், இலவசக் கல்வியை உறுதி செய்யக் கோரியும், கல்விக்கு பட்ஜட்டில் 6% தத்தை ஒதுக்கும் படி கோரியும் பல்கலைக்கழக மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் கடந்த ஒருவருடமாக தொடர்ச்சியாக நடைபெற்று வருவதுடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து போராடி வருகின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள், தனியார் பல்கலைக்கழகங்களினால் இலவச கல்விக்கு ஏற்படவுள்ள கழுத்தறுப்பு குறித்து பல பாதயாத்திரைகள், பிரச்சாரங்கள் மூலமாக மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் பெறுபேறாக அண்மைக்காலங்களில் பொதுமக்களும் தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று வருவதனையும் சில இடங்களில் சிவில் அமைப்புக்கள் சயிட்டம் மருத்துவ கடைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருவதனையும் காண முடிகின்றது. எதிர்வரும் 9ம் திகதி நுகெகொடையில் பொது மக்கள் - மாணவர்கள் இணைந்து பாரிய பொதுக் கூட்டம் ஒன்றினை  சயிட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிராக நடாத்த உள்ளனர்.

இன்று (7/2/2017) யாழ நகரில் சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை உடனடியாக மூடக்கோரியும், இலவசக் கல்வியை உறுதி செய்ய மக்களை விழிப்புணர்பு ஊட்டும் முகமாக பிரச்சாரங்கள் நடாத்தப்பட்டன. துண்டுப்பிரசுர விநியோகம், கலந்துரையாடல், தெருமுனைக் கூட்டங்கள் என்பன பல இடங்களில் இடம்பெற்றன. 

இறுதியாக தனியார் பல்கலைக்கழகங்களை திறக்க அனுமதியளித்து வரும் பிரதமரின் கொடும்பாவி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு யாழ் நகரின் மையப்பகுதியில் வைத்து தீ இடப்பட்டது.