Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

வழக்கு விசாரணையில் குமார் குணரத்தினத்தின் கைதுக்கான உண்மை தெரிய வந்துள்ளது

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினரான குமார் குணரத்தினம் இலங்கை குடிவரவு விதியினை மீறிய குற்றச்சாட்டில் நடந்த வருடம் கார்த்திகை மாதம் 4ம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  பொதுமக்கள், மனித உரிமையாளர்கள், இடதுசாரி அமைப்புக்கள் அவருக்கு மீள குடியுரிமை வழங்கப்பட்டு; அவரின் அரசியல் செய்யும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதி, பிரதமர் முதல் எம.பிக்கள் வரை அவருக்கு பிரஜாவுரிமை கொடுக்க வேண்டும் எனக் கூறுவதுடன்; இது குடிவரவு திணைக்களம் சம்பந்தமான விடயம் என தமக்குள்ள பொறுப்பை திசை திரும்பி விடுகின்றனர். ஆனால் குடிவரவு அமைச்சு குமார் குணரத்தினம் பிரஜாவுரிமையினை மீளப் பெற விண்ணப்பித்த பத்திரத்திற்க்கான பதிலை வழங்காது மௌனமாகவுள்ளது. நீதிமன்றமோ இது நீதிமன்றத்தால் தீர்வு கூற முடியாத பிரச்சினை, இது அரசியல் பிரச்சினை இதற்கு அரசாங்கம் தான் தீர்வு கொடுக்க வேண்டும் என கூறி வந்தது.

கைது செய்யப்பட்டு 100 நாட்களை கடந்த நிலையில் கடந்த 15ம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு கேகாலை நீதி மன்றத்தில் விசாரணை இடம்பெற்றது. அன்றைய தினம் கேகாலை பொலிஸ் பொறுப்பதிகாரி விசாரணைக்கு உட்படுத்தபட்ட போது, அவர் தமக்கு ஒரு உளவு செய்தி கிடைத்ததன் பேரில் ஒரு வீட்டை சுற்றி வளைத்ததாகவும், அந்த வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததாகவும் தாம் கதவை தட்டிய போது திறந்தவரிடம் அடையாள அட்டை கேட்ட போது அவரால் அதனை கொடுக்க முடியாததன் காரணமாக அவரை கைது செய்ததாக கூறியிருந்தார். அப்போது தாம் கைது செய்த நபர் குமார் குணரத்தினம் என தமக்கு தெரிந்திருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

குமார் தரப்பு சட்டத்தரணி பொலிஸ் அதிகாரியை நோக்கி ஒருவர் தனது அடையாள அட்டையினை வைத்திருக்க தவறுவாராயின் அவரை கைது செய்ய சட்டத்தில் இடமுண்டா என கேள்வியை எழுப்பிய போது அதற்கு பதிலாக மௌனத்தை பொலிஸ் அதிகாரி கடைப்பிடித்திருந்தார்.

இறுதியில் தம்மிடம் குடிவரவு திணைக்களத்தினால் குமார் குணரத்தினத்தை கைது செய்யுமாறு கோரிய உத்தரவு இருப்பதாக வழக்கமான பொலிஸ் விடுகின்ற கதையை கூறினார். நீதிபதி அவர்கள் அதனை இன்றைய தினம் 23-02-2016 நீதிமன்றில் சமர்ப்பிக்கும் படி தெரிவித்து வழக்கை இன்று மீண்டும் தொடர்ந்தார்.

இன்றைய தினம் பொலிஸ் தரப்பில் சமர்பிப்பதாக கூறிச் சென்ற குடிவரவு திணைக்களத்தின் குமாரை கைது செய்வதற்க்கான உத்தரவு சான்றிதழுக்கு பதிலாக முரண்பாடாண சான்றுகளை சமர்பித்திருந்தது. குமாரை கைது செய்ததற்கு பொலிஸ் தரப்பில் கூறிய காரணங்களிற்கு முற்றுமுழு எதிரான காரணங்களை குமாரின் கைதுக்கான காரணமாக இன்று சர்ப்பித்திருந்த ஆவணங்கள் தெளிவாக்கின.

குடிவரவு திணைக்கள அதிகாரி ஒருவரை விசாரணைக்கு உள்ளாக்கிய போது, குமார் குணரத்தினத்திற்கு பிரஜாவுரிமையினை மீள வழங்க வேண்டாம் என உள்நாட்டு அமைச்சின் செயலாளரிடமிருந்து தமது திணைக்களகத்திற்கு உத்தரவு வந்ததிற்கு அமைய தாம் பிரஜாவுரிமையினை மீள வழங்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் பலர் சாட்சியம் அளித்ததுடன் விசாரணைக்கும் உள்ளாக்கப்பட்டனர்

இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில், குமாரை கைது செய்தற்க்கான காரணம் அரசியல் ரீதியானதே ஒழிய, அவருக்கு பிரஜாவுரிமை கிடைக்கவில்லை என்பதோ அல்லது அவர் விசா கால எல்லையினை தாண்டி தொடர்ந்தும் நாட்டில் இருப்பதோ அல்ல என்ற உண்மை தெளிவாக தெரிய வந்துள்ளது.. வழக்கு மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.