Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

தொடர் சத்தியாகக்கிரக எதிர்ப்பு போராட்டத்திற்கு இன்று 100வது நாள்!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரி – ரணில் கூட்டணியினர் மகிந்த ஆட்சியில் அரசியல் காரணங்களினால் உயிராபத்து காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய அனைவரும் திரும்ப வந்து செயற்படலாம் என உறுதி அளித்திருந்தனர். ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி, மகிந்த அரசால் அரசியல் காரணமாக உயிராபத்தை எதிர் நோக்கி நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவில் வசித்த குமார் குணரத்தினம் நாட்டிற்கு திரும்பி வந்திருந்தார். மேலும் தனது இலங்கை பிராஜாவுரிமையினை மீளப்பெற குடிவரவு திணைக்களத்தில் விண்ணப்பித்திருந்தார். குடிவரவு திணைக்களம் அவரின் விண்ணப்பத்திற்க்கான பதிலை வழங்காது மௌனத்தை கடைப்பிடித்திருந்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 4ம் திகதி அவரது நோயுற்றிருந்த தாயாரை பார்வையிட சென்றிருந்த வேளையில் கேகாலை பொலீசாரால் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மைத்திரி  - ரணில் கூட்டாட்சி தேர்தல் கால வாக்குறுதிக்கு மாறாக இன்று அவரை ஒரு அரசியல் கைதியாக சிறைப்பிடித்து வைத்திருக்கின்றது.

குமார் குணரத்தினத்தை கைது செய்ததனை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்து அவரின் அரசியல் செய்யும் உரிமையினை உறுதி செய்யுமாறு கோரி மைத்திரி – ரணில் கூட்டாட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடைபெறும் தொடர் எதிர்ப்பு சத்தியாகக்கிரகப் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இன்றைய தினம் குமார் குணரத்தினத்தினை உடனடியாக விடுதலை செய்து, அரசு உறுதியளித்த ஜனநாயகத்தை நிலைநாட்ட கோரி இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட எதிர்ப்பு போராட்டம் சத்தியாகக்கிரக மேடையில் இடம்பெற்றது.

இங்கு உரையாற்றிய முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் சமீரா கொஸ்வத்த:

மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் குமார் குணரத்தினத்தினை அரசியல் காரணங்களிற்க்காகவே கைது செய்திருக்கின்றது. குமார் குணரத்தினம் உறுப்பினராகவுள்ள முன்னிலை சோசலிச கட்சி இந்த அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாடுகளை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக குமார் குணரத்தினத்தை அரசியல் கைதியாக சிறைப்பிடித்துள்ளது. இவர்கள் கூறிய ஜனநாயகம் என்பது நாட்டை கொள்ளையிட ஒத்துழைக்கும் கூட்டாளிகளிற்கு மாத்திரமே. இவர்களிற்கும் மகிந்தாவிற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. எமது இந்தப் போராட்டமானது குமார் என்ற தனிநபரின் உரிமைக்கானது அல்ல. இந்நாட்டின் சகல மக்களிற்கும் ஆன உண்மையான ஜனநாயகத்தை உறுதி செய்வதற்க்கான போராட்டமே. அதனது தொடக்கமே எனத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய மஹிந்த தேவகே:

குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகிறது. விமல் வீரவன்சவுக்கு இரண்டு கடவுச்சீட்டுகள் இருந்தன. எனினும் வீரவன்ச விடுதலை செய்யப்பட்டார். கோட்டாபய, பசில் போன்றவர்களுக்கும் குடியுரிமை தொடர்பான பிரச்சினைகள் இருக்கின்றன. இவை பிரதமருக்கு பிரச்சினையில்லை. ஜனாதிபதி ஜேர்மனிக்கு சென்று அரசியல் பிரச்சினை காரணமாக அந்த நாட்டுக்கு இடம்பெயர்ந்த இலங்கையர்களை தாயகம் வருமாறு அழைக்கின்றனார். இலங்கைக்கு வந்த குமார் குணரட்னத்தை கைது செய்துள்ளனர். இது கேலிக்கூத்தானது என்றார்.

இங்கு உரையாற்றிய விக்ரமபாகு கருணாரட்ன:

ஜனாதிபதியும், பிரதமரும் உலக நாடுகளுக்கு சென்று நாட்டில் அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுகின்றனர். ஜனநாயகம், மனித உரிமைகள் பற்றி பெரிதாக பேசும் இவர்கள் குமார் குணரட்னத்தை 100 நாட்களாக தடுத்துவைத்துள்ளனர். குமார் குணரட்னம் போன்ற அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு என்ன கிடைக்கின்றது என்று நாங்கள் கேட்கிறோம். இதனால் குமார் குணரட்னத்தை விரைவாக விடுதலை செய்து அவரது அரசியல் உரிமைகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என குறிப்பிட்டார்.