Sun10022022

Last updateSun, 19 Apr 2020 8am

எரிகின்ற வீட்டில் பிடுங்குவோர்…………

அண்மையில் கிளிநொச்சி பொதுச்சந்தைக் கட்டிடம் தீப்பற்றி எரிந்த போது பொருட்கள் களவாடப்பட்டதாக கூறப்பட்டது. அது பற்றி வருந்தியவர் பலர். சமூகம் பற்றிய பார்வை உள்ளவர்களுக்கும்-கரிசனம் கொண்டவர்களுக்கும் அது வேதனைப்பட வேண்டிய விடயம்.

30வருட கால யுத்தத்தையும் அதன் இறுதியில் ஏற்பட்ட பேரழிவையும் நேரில் கண்டு அனுபவித்து பலவிதமான இழப்புக்களின் மத்தியில் தாங்கமுடியாத சோகங்களுடன் தங்கள் வாழ்வை மீளக்கட்டியெழுப்ப முயலும் வேளையில் இப்படியான சமூக விரோத செயல்கள் இடம்பெறுவது என்பது நமது சமூகம் நோய்வாய் பட்டிருப்பதனையே காட்டி நிற்கிறது.

நான் நீ என முந்திக் கொண்டு கவலைகளும்-கண்டனங்களும்-காரசாரமான அறிக்கைகளும் விடப்படுகின்ற அதே சமயம் இச் செயல்களை நிறுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் முன்னர் எவராலும் எடுக்கப்பட்டதாகவோ அன்றி இப்போது எடுக்கப்படுவதாகவோ அறிய முடியவில்லை. ஆனால் அதற்கு மாறாக இச்சம்பவங்களை வைத்து அவற்றைத் தங்கள் அரசியலுக்கு மூலதனமாக்கி அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

நாட்டில் நீதி-சட்டம்-ஒழுங்கு-பாதுகாப்பு தொடர்பான துறைகள் சீரழிந்து போய் உள்ளது உண்மை. நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதும் உண்மை. குற்றவாளிகள் நாட்டின் அதிகார பீடத்தில் அமர்ந்திருப்பதும் உண்மை. நாட்டின் குடிமக்களே அவர்களைத் தெரிவு செய்து தங்களை ஆள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதும் உண்மை. எனவே குற்றச் செயல்கள் உற்பத்தியாவதற்கான அடிப்படைக் காரணங்கள் நமது சமூகத்தின் மத்தியிலேயே இருந்து தோன்றுகிறது என்பதும் அவற்றைத் தடுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் தரமும்-தகுதியும்-தேவையும் இந்த அரசாங்கத்திற்கு இல்லை என்பதும் உண்மை.

இப்படியான ஒரு ஆட்சி முறை தொடருவதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யாத வரைக்கும் நாட்டில் களவு-கொள்ளை-கொலை-வன்முறை-பாலியல் பலாத்காரம்-ஏமாற்று மோசடி-ஊழல் என்பன தொடரவே செய்யும்.

“தன்னைத் திருத்திக் கொண்டால் சமூகம் தானாகத் திருந்தும்” என்பதனை நாம் புரிந்து கொண்டு செயற்படாத வரை எதுவித மாற்றமும் ஏற்பட வழியில்லை. “நான் மட்டும் தப்பினால்-பிழைத்தால் போதும்” என்றுதான் இன்னும் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். “எரிகிற வீட்டில் பிடுங்கியபடிதான்” நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

யுத்தத்தினால் மக்கள் ஊர்களை விட்டு இடம் பெயர்ந்த போது படையினரால் அபகரிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பொருட்கள் பல இடம் பெயராத மக்களின் வீடுகளில் காணப்பட்டதும்-கை விட்டு விட்டு வந்த தனது சொந்த வீட்டுப் பொருட்களையே இடம் பெயர்ந்து தரித்திருந்த ஊரில் தானே விலைக்கு வாங்கியதும் போன்ற சம்பவங்கள் நாட்டின் வரலாறாக அமைந்துள்ளது.

யுத்தத்தை வைத்து பணக்காரர் ஆனவர்கள் பார்க்குமிடம் எங்கும் நிறைந்துள்ளனர். யுத்தம் குடிமக்களைத்தான் பாதித்துள்ளதே அன்றி ஆளும்-அதிகாரத்தில் உள்ளவர்களை அல்ல. அடக்குமுறைச் சட்டங்களும் அராஜகங்களும் சாதாரண குடிமக்கள் மீதுதான் பாய்கிறதே ஒழிய மக்களை மேய்ப்பவர்கள் மீதல்ல.

இன்று நாட்டில் விளம்பர நுகர்வுப் பொருளாதாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அது சுய உழைப்பை நம்பி வாழ்ந்த மக்களைக் கூட கடனாளியாக்கி விட்டுள்ளது. தொழில் வளங்கள் யாவும் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு குத்தகைக்கும்-கொமிசனுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. நன்கு திட்டமிட்ட வகையிலும் - இலைமறை காயாகவும் இளம் சமூகத்தினர் தவறான வழியில் திசை திருப்பப்பட்டுள்ளனர்.

ஆனால் சமூகம் பற்றிய அக்கறையும்-சிந்தனையும் மக்கள் மத்தியில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் எமது மக்கள் பிரதிநிதிகள் மிகவும் கண்ணும் கருத்துமாக உள்ளனர். நாட்டையும் அதன் குடிமக்களையும் அந்நியர்களுக்கு அடகு வைக்கும் அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டங்கள் பற்றி மக்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்பதில் மிகவும் அவதானமாக செயற்படுகிறார்கள். அதற்கேற்றவாறே அவர்களின் அரசியல் முனைப்புக்கள் அமைந்துள்ளன.

நல்லிணக்க அரசியலில் பங்கேற்பவர்கள் குடிமக்கள் மத்தியில் நல்லுறவை வளர்த்தெடுப்பதற்கான எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மாறாக அவ்வகை முயற்சிகளை முன்னெடுக்கும் சக்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமல்லாது இனப் பகையை நாட்டில் தொடர்ந்தும் தக்க வைக்கும் அரசியல் போக்கையே கடைப்பிடிக்கின்றனர்.

இனச் சிக்கல் காரணமாக நாடு தனது இறைமையை இழந்து நிற்கிறது. குடிமக்கள் உலக வங்கியின் கட்டுப்பாடுகளுக்கும் கடனுதவி வழங்கும் நாடுகளின் அழுத்தங்களுக்கும் அடி பணிந்து தங்கள் உழைப்பை விற்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். நாடு பூராவும் மக்கள் வாழ்வாதாரம் வேண்டி போராடிக் கொண்டிருக்கிறார்கள்

நாட்டின் அரசியல் தலைமைகள் குடிமக்களை யுத்தத்தின் பின்னரான பாதிப்புகளில் மூழ்கடிக்க வைத்துக் கொண்டு சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடமே எனக் கூறிக் கொண்டு மக்களுக்காக அரசு அனுமதிக்கும் நிதி ஒதுக்கீடுகளை வாரிச் சுருட்டுகிறார்கள்.

இதுவும் ‘எரிகிற வீட்டில் பிடுங்கிற’ எமது சமூகக் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பே.