Sun10022022

Last updateSun, 19 Apr 2020 8am

தேசத்தவரை விற்று தேசத்தை அடகு வைக்கும் தேசியம்

ஆங்கிலேயர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதிகளில் இன அடிப்படையில் அரசியல்வாதிகள் செயற்படத் தொடங்கிய போது இனவாதம் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் என உணர்ந்த - மக்களை நேசித்த பல அறிவாளர்கள் தெற்கிலும் வடக்கிலும் இனவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிய தீவிரமாகச் செயற்பட்டார்கள். அந்த செயற்பாடுகளை வடக்கில் 'யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்" தொண்டர்களும் தெற்கில் இடதுசாரிச் தொண்டர்களும் இணைந்து நின்று முன்னெடுத்தனர்.

இந்த முன்னெடுப்புகளில் இவர்கள் ஒரே அணியில் இணைந்து நின்றமைக்கான காரணம் இலங்கை மக்களை நேசித்தமையே. இலங்கை மக்களை அவர்கள் மனிதர்களாக மண்ணின் மைந்தர்களாக மட்டுமே பார்த்தார்கள். மனித நேயமும் மனிதாபிமானமும் கொண்டிருந்த அவர்கள் இன-மத-பால்-சாதி-பிராந்திய-உயர்வு-தாழ்வுகளைக் கடந்து நின்று "எல்லோரும் இந்நாட்டு மன்னர்-சுதந்திரம் அனைத்து மக்களுக்கும் உரியதாக அமைய வேண்டும்" என்று கூறியே மக்களை அணி திரட்டினார்கள். மக்கள் மத்தியில் சமத்துவம்-சம உரிமை நிலவவேண்டும் என்பதே அவர்களின் தாரகமந்திரம் ஆக இருந்தது.

ஆனால் தனது மக்களை மறந்து பிற மக்களை வெறுப்பதை முதன்மையாகக் கொண்டிருந்த சிங்கள-தமிழ் தேசிய வாதக் கும்பல்களினால் மக்களை நேசித்தவர்கள் திட்டமிட்டுப் படிப்படியாகத் தோற்கடிக்கப்பட்டார்கள். அன்று அவர்களைத் தோற்கடிப்பதற்காக அந்தத் தேசியவாதிகள் பாவிக்கத் தொடங்கிய அரசியல் மொழிதான் இன்று வரை எமது நாட்டை இந்த அழிவு நிலைமைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்நியரின் தலையீட்டையும் மிக ஆழமாக ஏற்படுத்தித் தந்துள்ளது. தேசியவாதம் இன்று அனைத்து இலங்கை மக்களின் சுய இருப்பை உலக ஏகாதிபத்திய சக்திகளின் கைகளில் கொடுத்து அதனை ஊசலாடும்படி செய்ய வைத்துள்ளது.

சிங்களவன் என்று உச்சரிக்கும் ஒரு தமிழர் ஒருபோதும் தமிழ்ப் பேசும் மக்களை நேசிப்பவராக இருக்க முடியாது. தமிழன் எனப் பேசும் ஒரு சிங்களவர் ஒருபோதும் சிங்கள மக்களை நேசிப்பவராக இருக்க முடியாது. இரு பக்கத்திலும் உள்ள இந்தத் தேசியவாதிகள் இன்று வரைக்கும் இலங்கை மக்களைக் கொன்று குவிக்கும் அரசியல் பாதையிலேயே நடை போட்டு வருகின்றனர். தொடர்ந்தும் அதே பாதையில் செல்வதற்கான அரசியல் மொழியைத்தான் இன்றும் பேசுகின்றனர். 

இந்த தமிழ்த் தேசியம் சிங்கள மொழியைப் படிக்காதே என்று சொல்லி பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் அரச உத்தியோகத்திற்கு ஆப்பு வைத்து அவர்கள் குடும்பங்களின் வாழ்க்கையை சீர்குலைத்தது. அதே தமிழ்த் தேசியம்தான் சிங்களத் தேசியத்தைச் சீண்டி விட்டு தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழர்களுக்கெதிரான கலவரங்களுக்குக் காரணமாக அமைந்திருந்தது. சிங்கள-தமிழ் தேசியங்களின் போட்டிதான் 15லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை நாட்டை விட்டு ஓட வைத்தது. இன்னமும் ஓட வைப்பதற்கான முன்னெடுப்புகளில் ஈடுபட்டுள்ளது. தென்னிலங்கையில் வாழும் மக்களை தொடர்ந்து அச்சத்துடன் வாழும் சூழலை - இனவாதத் தணலை தொடர்ந்து தக்க வைத்தபடி உள்ளது.

தேசியம் தமிழ்நாட்டின் அகதிமுகாம்களில் நாயினும் கேவலமாக நடாத்தப் படும் தமிழர்கள் பற்றியோ அங்குள்ள சிறப்பு முகாம் சிறைகளில் வதைபடும் மக்கள் பற்றியோ கவலைப்பட்டது கிடையாது. அதற்கு இலங்கைச் சிறைகளில் வாடும் அரசியல் கைதிகள் விடயத்தில் கூட ஆழமான அக்கறை இல்லை. யுத்தத்தால்  பாதிக்கப்பட்டவர்கள் - அகதிமுகாம்களில் வாழ்பவர்கள் - காணாமல் போனவர்கள்  கடத்தப்பட்டவர்கள் இந்த தமிழ்த் தேசியத்தின் கண்ணுக்கு தெரியவேயில்லை.

தேசியத்தின் பெயரால் நடாத்தப்பட்ட யுத்தத்தினால் இருபக்கங்களிலும் கோடீஸ்வரர்கள்தான் உருவாகியுள்ளார்களே ஒழிய சாதாரண-ஏழை எளிய மக்கள் நாளாந்த கஞ்சிக்கு பாடாய் அலைகிறார்கள். இலங்கையின் இரு இனங்களிலும் தோன்றி மறைந்த ஆயுத மோதல்கள் யாவும் சிங்கள-தமிழ் தேசியத்தின் உற்பத்திகளே. தேசியவாதிகளால் ஏமாற்றப்பட்டு விரக்தி அடைந்த இளைஞர்கள்தான் ஆயுதத்தை கையில் எடுத்தனர். ஆனால் இன்று வரை தேசியம் தனது பிழைப்பைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்காகத்  தான் விட்ட தவறை மறைத்து  இளைஞர்களின் செயற்பாடுகளைத் தனியே 'பயங்கரவாதம்" என்ற முத்திரை குத்தி சொந்த மக்களையே கொன்றழித்துவிட்டு சர்வதேச நிறுவனங்கள் இடும் கட்டளைகளை சற்றும் பிசகாமல் நிறைவேற்றி வருகிறது.

தேசியத்தின் அடி ஆதாரம் வெறுப்புணர்வாகும்.  வெறுப்பை ஊட்டி அதற்குத் தீயை மூட்டிச் சுவாலை விட்டு எரியச் செய்து அதில் குளிர் காய்வதொன்றே அதன் இயல்பாகும். இதே தேசியம்தான் 'நூறு பேர் மிகுதியுடன் நாட்டை மீட்டெடுக்க நேர்ந்தாலும் அதனை மீளக் கட்டியெழுப்புவோம்" எனக் கூற அதனை ஆமோததித்தவர்கள் நாம். தொடர்ந்தும் இதன் பின்னால் நாமும் நமது சுயநலத்தைப் பாதுகாக்கும் சமூகக் கட்டுமானங்களைச் சுமந்து கொண்டு ஓடும் வரைக்கும் ஓப்பாரியும் ஓட்டமும் ஓலமும்தான் கிடைக்கும்.

தேசியத்தின் சிறப்பம்சம் யாதெனில் அது ஜனநாயகத்திலும் சரி சர்வாதிகாரத்திலும் சரி தனது பிழைப்பை நிலைநிறுத்திக் கொள்ளும்;. தனது மக்களை விழிப்புணர்வு அடையவிடாமல் அவர்கள் மத்தியில் இன-மத-சாதி-பிராந்திய-வர்க்க குணாம்சங்களை ஊக்குவித்து அவர்களுக்குள் மோதல்களை உருவாக்கித் தனது அதிகாரத்திற்கு ஆபத்து வராத வண்ணம் பார்த்துக் கொள்ளும். ஏகாதிபத்தியம் தனது சுரண்டல் பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டி உலகம் பூராவும் இந்த தேசியத்தைக் உருவாக்கிப் பாதுகாப்பதற்காக ஜனநாயகம்-மனித உரிமைகள்-உதவி-ஒத்துழைப்பு-நட்புறவு என்ற வடிவங்களில் செயற்படுகிறது. இலங்கையில் தேசியங்களின் பெயரால் இன மோதலை வளர்த்ததும் - முடித்ததும் பின்பு பாதிப்புக்குள்ளான மக்ககளுக்கு உதவுவதும் அதே ஏகாதிபத்தியமே.

இந்தத் தேசியம் உலகம் பூராவும் கொடிகட்டிப் பறக்க விடப்பட்டுள்ளது. மக்களுக்காக எவராவது ஏதாவது நல்லது செய்யப் புறப்பட்டால் சிங்களவன்-தோட்டக்காட்டான்-மட்டக்கிளப்பான்-வன்னியான்-யாழ்ப்பாணத்தான்-தீவான்- எனத் தொடங்கி ஊர்வரைக்கும் சென்று கடைசியில் சாதிப் பட்டயங்களை அவர்கள் கழுத்தில் மாட்டித் அவர்களைத் துரோகியாக்கி ஒதுக்கித் தள்ளி விடும் இந்தத் தேசியம். 'அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்" தொடக்கம் முதல் இன்றைய 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு" வரை இதுவே வரலாறு. நாம் இனியும் பார்வையாளர்களாக இருப்போமானால் அதே வரலாறு தொடர்வது நிச்சயம்.

தேசியத்தின் இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்குபவர்களை கடத்துவதும்-காணாமல் போகச் செய்வதும்-கொல்வதும் அதன் முக்கிய குணாம்சங்களில் ஒன்றாகும். இன்று எமது நாட்டில் சிறைப்பட்டவர்கள்-கடத்தப்பட்டவர்கள்-காணாமல் போனவர்கள்-கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறைகள் யாவும் தேசியத்தின் கோர முகத்தை எமக்கு காட்டி நிற்கின்றன.

கண்ணாடி பத்மநாதன் -  துரையப்பா - மட்டக்களப்பு மைக்கல் -  சுதுமலை பற்குணன் - சுந்தரம் - இறைகுமாரன் - உமைகுமாரன் என தமிழர்கள் கொல்லப்பட்ட போது இந்தத் தமிழ்த் தேசியம் பேசாமல் பார்த்து ரசித்துக் கொண்டுதானே தனது சுயலாப அரசியலைத் தொடர்ந்து கொண்டிருந்தது? 1980களில் இராணுவச் சிறை முகாம்களில் வதைபட்டுக் குடும்பத்தினரின் சந்திப்புக் கூட மறுக்கப்பட்டு வாடி வதங்கிக் கொண்டிருந்த இளைஞர்களில் சிலரைத் தரிசித்தும் ஏனைய பலரை ஏனென்று ஏறெடுத்துப் பார்க்காமலும் போனதும் இது தேசியம்தான்..

இந்த உண்மைகள் எங்களில் ஒரு பகுதி மக்களுக்கு நன்கு புரிந்தும் புரியாதமாதிரி நடிக்கிறார்கள். புரிந்து கொண்ட ஒரு பகுதியினர் தங்கள் தங்கள் நலன்களைப் பாதுகாக்கும் அரண்களுக்குள் நின்று கொண்டு தாங்கள் தப்புவதற்கான காரணங்களை அவரவர் பாரம்பரிய குணாம்சங்களின் அடிப்படையில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். புரிந்து கொண்டு போராடப் புறப்படும் சாமானிய மக்களை தேசியம் பல முனைத் தாக்குதல்கள் மூலம் அடக்கியொடுக்க முற்படுகிறது.

இந்த அடக்குமுறைகளை நாம் எதிர்கொள்வதற்கான ஒரேயொரு வழி நாம் ஒவ்வொருவரும் பரஸ்பர நம்பிக்கையுடன் இலங்கைத் தேசத்தவராக  இணைந்து நின்று போராடுவதேயாகும்.

தேசியங்களை நொறுக்கித் தேசத்தை நிர்மாணிப்போம்.