Thu10062022

Last updateSun, 19 Apr 2020 8am

வாக்குறுதிகளால் வந்த 'மாற்றம்" - 'மாற்றம்" வழங்கும் ஏமாற்றங்கள்

கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றிய போது சர்வாதிகாரத்திற்கு எதிரான பொது வேட்பாளராக நிற்பதற்குத் தானாகவே முன்வந்தவர் அண்மையில் மறைந்த வணக்கத்ததுக்குரிய மாதுலுவாவே சோபித தேரர் அவர்கள் ஆகும். "சமூக நீதிக்கான மக்கள் இயக்கம்" என்ற அமைப்பைத் தோற்றுவித்து இலங்கையின் அனைத்துக் குடிமக்களுக்காகவும் குரல் கொடுத்தவர் அவர். "ஆறு மாதங்களில் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது" என்பது அவரது முதலாவது வாக்குறுதியாக இருந்தது. அனைத்து மக்களுக்கும் சம உரிமை உண்டு என்பதும் அவரது கொள்கைகளில் முக்கியமானதாக அமைந்திருந்தது. ஊழல்கள்-மோசடிகள் களையப்படல் வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாகவே இருந்தார்.

தென்னிலங்கை மக்கள் மத்தியில் கணிசமாக அவருக்கு இருந்த ஆளுமையும் அபிமானமும் இன்றைய ஆட்சிமாற்றத்திற்கான பிரதான காரணிகளாக அமைந்திருந்தன. ஆனால் நிறைவேற்றுவோம் எனக் கூறி வாக்குறுதிகளை வழங்கி அவருடைய ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள் தங்கள் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டுள்ளனர். மக்களுக்காகத் தனது உயிரைப் பணயம் வைத்து தான் முன்னெடுத்த முயற்சிகளை அரசியல்வாதிகள் தங்கள் சுயநல நோக்கங்களை நிறைவேற்றப் பயன்படுத்திக் கொண்டதை நேராகவே பார்த்த சோபித தேரர் அவர்கள் பின்னைய காலங்களில் மனம் உடைந்து சோர்வடைந்திருந்தார். தினமும் நாட்டில் நடக்கும் அரசியல் நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருக்க தனக்கு விருப்பவில்லை என்பதை உணர்த்துவது போல் அந்நிய நாடொன்றிலேயே தனது சுவாசத்தை நிறுத்திக் கொண்டார். அவர் உயிருடன் இருந்த போது அவருடைய அறிவுரைகளை மதிக்காத நல்லாட்சி ஆட்சியாளர்கள் அவரது மரணத்தையும் தங்களுக்கு விளம்பரமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை நீக்கப்படவில்லை. இனப்பிரச்சனைத் தீர்வு தொடர்பான சிறு சிந்தனை கூட காணப்படவில்லை. ஊழல்கள் மோசடிகள் மூடி மறைக்கப்பட்டு அவை தொடர்ந்தும் இடம்பெறும் வண்ணம் அணுகுமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. மக்களின் பிரச்சனைகள் பின் தள்ளப்பட்டு புதிய தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டப்படுகிறது. அதற்குத் தக்க வகையில் ஆட்சியதிகாரத்தை தக்க வைப்பதற்காக ஆட்சியாளர்கள் தங்கள் அரசியல் அணுகுமுறைகளைக் கையாண்டுவருகின்றனர்.

காவல் துறையினர் பழைய பாணியிலேயே மனித உரிமைகளை மதிக்காமல் செயல்படுகின்றனர். சட்டம் ஒழுங்கு செயற்பாடுகளில் பாரபட்சம் தொடர்ந்தும் காட்டப்பட்டு வருகிறது. மனித உரிமைகள் அடிப்படையில் வைக்கப்படும் கோரிக்கைகள் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை கருதி முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டு வருகிறது. மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் அலட்சியப்படுத்தப்பட்டு குற்றமிழைத்தவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பது பற்றிய முன்னெடுப்புக்கள் இடம்பெறுகின்றன. மக்களின் ஜனநாயகப் போராட்டங்கள் அரச வன்முறைகளால் அடக்கியொடுக்கப்படுகின்றன. பழைய அராஜக ஆட்சியில் ஊழல் மோசடி குற்றச்சாட்டில் சம்பத்தப்பட்ட பலர் இப்போதைய ஆட்சியிலும் பதவிகளில் உள்ளனர்.

இந்த அரசாங்கத்தின் மக்களுக்கு எதிரான ஆட்சிமுறைக்கு இசைவாகவே சிங்கள-தமிழ் கட்சிப் பிரதிநிதிகள் தங்கள் அறிக்கைகளையும் நடவடிக்கைகளையும் வெளிக்காட்டி வருகின்றனர். இரு பக்கத் தேசியங்களும் தொடர்ந்தும் மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் அரசியல் தந்திரம் தொடர்கிறது. ஆட்சியாளர்கள் தங்கள் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக தமிழ்ப் பேசும் மக்களின் அபிலாசைகளைக் கணக்கில் எடுக்கவில்லை. தமிழ்ப் பேசும் மக்களின் பிரதிநிதிகளும் தங்கள் பதவிகளைத் தக்க வைப்பதற்காக தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளைக் கணக்கில் எடுக்கவில்லை.

இந்நிலையில் நாட்டின் நிலைமை பற்றியும் ஆட்சியாளர்களின் போக்குகள் பற்றியும் தென்னிலங்கை மக்கள் காட்டும் கரிசனமும் அதனடிப்படையில் அவர்கள் முன்னெடுக்கும் போராட்ட நடவடிக்கைகளும் வட-கிழக்கு மக்களிடம் எதுவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. வாக்களித்த வட-கிழக்குத் தமிழர்கள் அரசன் ஆண்டால் என்ன? ஆண்டி ஆண்டால் என்ன? என்ற பழைய மனப் போக்கிலேயே அவரவர் தான் தான் தப்பினால் போதும் என்று அலுவல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழர் பிரதிநிதிகள் மக்களின் சிந்தனைகளை தங்களது சுயலாப சில்லறைப் போட்டி விவாதங்களை நோக்கி திசைதிருப்பி விட்டு ஆட்சியாளர்களுக்கு ஆபத்து வராத முறையில் அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளாமலேயே மக்களால் கிடைக்கப் பெற்ற வசதிகளையும் சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

68 வருட ஏமாற்று அரசியல் பயணம் அணுவளவும் மாற்றமின்றி தொடருகிறது. இலங்கையின் அரசியல் கிராதகர்களால் இரு பக்கங்களிலும் ஏமாற்றப்படும் சாதாரண மக்கள் ஒன்றிணைவதைத் தடுக்கும் வகையிலேயே இன்றைய 'அரசியல் மாற்றம்" நாட்டில் தனது காரியங்களை ஆற்றி வருகிறது.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவில்லை. (பதிலாக புதிய தேசப் பற்றுச் சட்டம் முன் மொழியப்பட்டுள்ளது)

விடுதலை செய்யப்பட வேண்டிய அரசியல் கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படவில்லை.

காணாமல் போன-கடத்தப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

சாட்சியம் வழங்குவோர் சந்தேக நபர் ஆக்கப்படுகிறார்கள்.

சாதாராண பிரசை சந்தேகநபர் என்றால் தடுப்புக் காவல் சிறை.

சந்தேகப் பேர்வழிகள் முன்னாள் அமைச்சர்கள் என்றால் விசாரணை மட்டுமே.

"ஆட்சி மாற்றம்" ஏற்படுத்தித்தரும் என தேர்தல்களில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக இலங்கைக் குடிமக்கள் முற்றுமுழுதாக ஏமாற்றப்பட்டுள்ளனர்.