Thu10062022

Last updateSun, 19 Apr 2020 8am

மக்கள் விடுதலையை மனதார நேசித்த ஒரு மனிதன்

"டேவிட் ஐயா" என எல்லோராலும் அறியப்பட்ட மனிதன் மறைந்து விட்டார். 1976 களிலேயே இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் விடுதலையை சாதி-மத-பால்-வர்க்க பாகுபாடுகளைக் கடந்து நின்று தன்னிறைவுப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு ஊடாக நோக்கிய ஓரேயொரு கல்விமான் அவர் என்றால் அது மிகையாகாது. அவர் கல்வி கற்ற சூழலின் பின்னணி அவரைத் தான் சார்ந்த சமூகத்தைப் பற்றி ஆழமாக சிந்திக்க வைத்தது. இயல்பாகவே அமைந்திருந்த தன் திறமையை வளர்த்தெடுக்க அவர் விடாப்பிடியாக பற்றிக் கொண்டிருந்த உறுதி அவரை ஒரு சிறந்த ஒரு கட்டிடக் கலை நிபுணராக பரிணாமிக்க வைத்தது.

உலக நாடுகள் பல அவருடைய திறமையை மதித்து அவரது சேவையைப் பெற்றுக் கொண்டன. அவர் ஒரு சராசரி யாழ்ப்பாணத் தமிழனாக இருந்திருந்தால் இன்று நாம் "டேவிட் ஐயா" என்ற ஒருவரை அறிந்திருக்க முடியாது. வெளிநாடுகளில் பணிபுரிந்த போதும் தனது மண்ணையும் தான் சார்ந்த மக்களையும் நேசித்து அவர்களின் துயர் துடைக்க வழி தேடினார். அதன் விளைவே மக்கள் அவர்களுடைய பிரதேசங்களில் உள்ள வளங்களை கூட்டு முயற்சியுடன் அபிவிருத்தி செய்து சொந்தக்காலில் நிற்பதற்கான அத்திவாரமாக 'காந்தியம்" என்ற ஒரு செயற்பாட்டுத் தளத்தை உருவாக்கினார். அதில் இலங்கையில் இழப்பதற்கு உயிரைத் தவிர எதுவுமற்றிருந்த பாட்டாளிகளான மலையக மக்களையும் பங்காளிகளாக்கினார்.

அன்றைய சுயநலவாத மேட்டுக்குடித் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு "காந்தியம்" ஒரு அச்சுறுத்தலாகவே காணப்பட்டது. அதன் காரணமாகவே பயங்கரவாதியாக்கப்பட்டு பனாகொட இராணுவ முகாம் சித்திரவதை கண்டு வெலிக்கடைச் சிறைப்படுகொலைக்குத் தப்பித்து மட்டக்களப்புச் சிறையுடைப்பு ஊடாக அகதியாக தமிழகம் சென்றார். விடுதலைப் பயணம் வழி தவறுகிறது என உணர்ந்த போது அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

1986-87களில் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றிருந்த போதும் திரும்பித் தமிழகமே சென்றார். தமிழகத்தில் தந்தை பெரியாரின் கருத்துக்களில் திளைத்து திருவள்ளுவரின் திருக்குறளை உலகமயப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

கூட்டுறவுப் பண்ணை முறைப் பொருளாதாரக் கட்டுமானமே இலங்கைத் தமிழர்கள் தமது அடிமைத் தளையில் இருந்து வெளியேறுவதற்கு அடித்தளமாக அமையவேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தவர் டேவிட் ஐயா.

படித்துப் பட்டம் பெற்றதாக "பந்தா" எதுவும் காட்டாத மனிதர் அவர். பாமர பாட்டாளிகள் போல் தோற்றம் தரும் அவர் பழகுவதற்கு இனிமையானவர். தமிழ் சமூகம் பற்றி அதீத அக்கறையும் ஆழ்ந்து பரந்த பொது அறிவும் படைத்தவர். அவரது ஆழமான அறிவையும் பரந்த அனுபவத்தையும் தன்னலமற்ற உழைப்பையும் இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்கள் தங்கள் சுயநலப் புத்தியாலும் அறியாமையாலும் பெற்றுக் கொள்ளத் தவறிவிட்டனர்.

எமது இலங்கைத் தமிழ் சமூகம் "டேவிட் ஐயா" உயிருடன் வாழும் வரை அவரை கண்டு கொள்ளவும் இல்லை. அவரது பணிகளைக் கணக்கில் எடுக்கவும் இல்லை. ஆனால் மக்களை நேசிக்கும் மனங்களில் அவரது நினைவு என்றென்றும் மலர்ந்தபடியே இருக்கும்.