Thu10062022

Last updateSun, 19 Apr 2020 8am

இனவாதம் ஒரு மூலதனம்

இலங்கையின் வரலாற்றைப் சற்றுப் பின்னோக்கிப் (1919ல் இருந்து) பார்த்தோமானால் அன்றிலிருந்து இன்றுவரை எமது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியாளும் ஆதிக்க சக்திகள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இனவாதம் என்ற மூலதனத்தை முதலீடு செய்து அதனை நன்கு அபிவிருத்தி செய்து வருவது புலனாகும்.

இலங்கையில் இன்று நன்கு ஆழமாக வேரூன்றி நின்று நாட்டின் மேலாதிக்க மேட்டுக் குடியினரின் சுகபோக வாழ்வுக்கு உத்தரவாதம் அளித்து வரும் இந்த இனவாதம் சர்வதேசப் பொருளாதார முதலீட்டுச் சக்திகளினால் உலகநாடுகள்  பூராவும் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய மூலதனங்களில் ஒன்றாகும். ஒரு நாட்டின் வளங்களைச்  சூறையாடி அதன் செல்வங்களைக் கொள்ளையடிக்க இந்த இனவாதம் என்னும் மூலதனம் சகல நாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல.

இலங்கையில் ஆங்கிலேயர் இருந்தபோது ஆங்கிலேயர்களால் பயிற்றுவிக்கப்பட்ட மேட்டுக்குடியினர் (சிங்கள-தமிழ்) கூடிப் பேசி உருவானதே இலங்கைத் தேசிய காங்கிரஸ் (1919ல்) என்ற அமைப்பாகும். ஆங்கலேயர்கள் இனவாதத்தை மூதலீடு செய்தே நாட்டின் கல்வி முறைமையையும் அரச கட்டமைப்புக்களையும் ஏற்கனவே உருவாக்கி வைத்துத்தான் இலங்கையின் வளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிப் பொறுப்பை வழங்கப் போகிறார்கள் என்பது புரிந்ததுமே தமிழ்-சிங்கள மேட்டுக்குடியினர் ஆளுக்கு ஆள் அந்த இனவாதத்தைப் பங்குபோட்டுக் கொண்டு கட்சிகளை உருவாக்கினார்கள். அன்று முதல் இன்று வரை அந்தக் கட்சிகளின் வாரிசுகளும் வழித்தோன்றல்களும் வழிபாடிகளும் அடிவருடிகளுமே நாட்டின் அரசியலைத் தீர்மானிப்பவர்களாக நாட்டு மக்கள் மேல் ஆதிக்கம் கொண்டவர்களாக நாட்டின் செல்வங்களை அனுபவிப்பவர்களாக ஆட்சிபுரிந்து வருகின்றனர்.

இலங்கை இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ் (1939) (பின்னர்-1950ல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆனது)  ஐக்கிய தேசியக் கட்சி (1946)  அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் (1944) இலங்கைத் தமிழரசுக் கட்சி (1949)  சிறிலங்கா சுதந்திரக் கட்சி (1952) ஆகியவற்றின் ஸ்தாபகர்கள் அனைவருமே இலங்கைத் தேசிய காங்கிரஸின் (1919) ஆரம்ப பங்குதாரர்களே.

சிங்கள மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஐ.தே.கட்சியும் சி.ல.சு. கட்சியும் தமிழ் மக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இ.த.அ.கட்சியும் இனவாதத்தை மூலதனமாகப் போட்டுக் கிடைக்கும் அதன் லாபத்தில்தான் இன்றைய நாள் வரை நாட்டு மக்களை ஆட்டிப் படைத்து வருகின்றன.

ஆங்கிலேயரின் கல்வித் திட்டத்தின் கீழ் பட்டம் பெற்று இலங்கையில் தொழிலாளர் ஆட்சி அமைக்க வேண்டி ஆரம்பிக்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சி (1935) யிலிருந்து படிப்படியாகத் தோற்றம் பெற்ற இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (1943) இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட (1964) மக்கள் விடுதலை முன்னணி (1965) ஆகியவை கூட இறுதியில் இனவாதத்தையே மூலதனமாக்கின.

1930களில் யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ் இனவாதம் மக்களுக்கு விஷம் போன்றது என்ற கருத்தை முன்னெடுத்த கால கட்டத்தில்தான்; 1935ல் இனவாதத்தை நிராகரித்தபடி இலங்கைக் குடிமக்கள் அனைவரும் சமம் என்ற அடிப்படையுடன் கொழும்பில் இளைஞர்கள் கூடி இலங்கையில் சமதர்ம ஆட்சி வேண்டி லங்கா சமசமாஜக் கட்சியை உருவாக்கினார்கள்.

வடக்கில் துளிர் விட்டுச் செழித்து வளர்ந்து வந்த சமதர்ம சமூகம் இனவாத தமிழ் அரக்கர்களின் கால்களினால் 1940களில் நசுக்கி அழிக்கப்பட்டது. தெற்கில் அணிவகுத்து நடைபயின்று வந்த இடதுசாரிகள் 1970ல் சிங்கள இனவாத பெருவெள்ளத்தில் அள்ளுண்டு போயினர்.

இலங்கையில் இன்று அமைக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கம் முன்னைய இனவாத ஆட்சியாளர்களின் ஒரு தொடர்ச்சியே.  ஐ.தே.கட்சிக்கும் சிங்கள-தமிழ் மக்களைக் கொன்று குவித்த இரத்தக் கறை உள்ளது. சி.ல.சு.கட்சிக்கும் அதே இரத்தக் கறை படிந்துள்ளது. இன்றைய ஜனாதிபதியும் பிரதமரும் அதே இரத்தக் கறை படிந்தவர்கள்தான்.

இன்று எதிர்க் கட்சிப் பதவியில் கொலுவீற்றிருக்கும் தமிழ் தேசியக் கூட்டணிக்கும் அதே இரத்தக் கறை உள்ளது. 68 வருடங்களாக தமிழ்ப் பேசும் மக்களைத் தங்கள் இனவாத அரசியல் பாதையில் வழிநடத்தி அவர்களைப் பலி கொடுத்த பின்பும் தொடர்ந்தும் தங்களைத் தக்க வைத்துக் கொண்டு மீண்டும் இனவாத வீச்சுடன் பாராளுமன்றக் கதிரைகளில் அமர்ந்து கொண்டு சிங்கள இனவாதிகளுடன் பேரம் பேசத் தொடங்கியுள்ளனர்.

இவற்றை மக்களாகிய நாம் தெளிவாகக் புரிந்து கொண்டும் கூட இனிமேல் தொடர்ந்தும் இதே பாதையில் பயணம் செய்யப் போகிறோமா? இல்லையா? என்ற கேள்விக்குரிய பதிலில்தான் எங்களது எதிர்கால பாதுகாப்பான சுதந்திர வாழ்வு தங்கியுள்ளது.

இன்றைய புதிய இலங்கை அரசின் உருவாக்கத்திற்கு உலகப் புதிய தாராளவாத பொருளாதார திட்டம் தனது பாரிய பங்களிப்பைச் செய்துள்ளது. 1977ல் ஜே.ஆர். ஆட்சி முதல் 2014ல் மகிந்தா ராஜபக்ச வரை இலங்கை ஆட்சியாளர்களை இந்த திட்ட வல்லுனர்கள்தான் வழிநடாத்தி வந்துள்ளனர். இன்றைய ஆட்சி மாற்றத்திற்கு அவர்களும்தான் காரணகர்த்தாக்கள்.

அதேவேளை இந்த ஆட்சிமாற்றத்தின் முக்கிய பங்காளிகள் இலங்கைக் குடிமக்களேயாகும். சர்வாதிகாரத்தை எதிர்த்து தங்களது உயிர்களைப் பணயம் வைத்து செயற்பட்டவர்கள் நல்லாட்சி வேண்டும் என்பதற்காக பசி பட்டினி பற்றிய சிந்தனைகளை நிறுத்திவிட்டு உழைத்தவர்கள் இலங்கையில் இணைவாக்கம் ஏற்படவேண்டும் என்பதனை வலியுறுத்தி நிற்பவர்கள் அனைவரும் இந்த ஆட்சிமாற்றத்தின் பங்காளர்கள். இவர்களின்றி இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்க முடியாது. இவர்கள்தான் இந்த நாட்டின் முதுகெலும்பாக செயற்பட வேண்டியவர்களும் செயற்படக் கூடியவர்களுமாவர். 

கடந்த காலங்களில் தமிழர்களாகிய நாம் தவறான பாதையிலேயே வழிநடாத்தப்பட்டு வந்துள்ளோம். கிடைத்த பல நல்ல சந்தர்ப்பங்களை பயன்படுத்தாமல் அழிவுக்குரிய வழிமுறைகளையே நாம் முன்னெடுத்தும் வந்துள்ளோம். இன்றும் கூட நாம் தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்பியுள்ள எமது பிரதிநிதிகள் எமது துன்பங்களை எமது வாழ்க்கைச் சிக்கல்களை எமது எதிர்கால நல்வாழ்வை மனதில் வைத்து செயற்படுபவர்களாகக் காணப்படவில்லை. புதிய நாடாளுமன்றத்திலும் மக்களின் நலன் கருதிச் செயற்படும் பிரதிநிதிகள் பெரும்பான்மையாக காணப்படவில்லை.

கடந்த தேர்தலில் சகல தரப்பினராலும் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் என்ற ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இன்றைய புதிய அரசுக்கு அல்லது  நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கு இதனைச் செய்வதற்கான அறிவு ஆற்றல் அத்தியாவசியத் தேவை உள்ளதோ இல்லையோ இந்நாட்டில் நல்லாட்சியை வேண்டி நிற்கும் குடிமக்களுக்கு அது அடிப்படையான அத்தியாவசியத் தேவையாக உள்ளது.

பரந்துபட்ட சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒரே புள்ளியில் (புதிய அரசியல் யாப்பு) வந்து சந்தித்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தை பலவீனமான நிலையில் நிற்கும் நாம்தான் பக்குவமாகப் பயன்படுத்த வேண்டும். "அடுத்தவரை"  "அந்நியர்களை"  "வெளியாரை"  நம்பி நாம் அழிந்தது போதும். இன்றாவது நாம் இனவாத சங்கெடுத்து ஊதுவதை தவிர்த்து பரஸ்பர புரிந்துணர்வுக்கான முயற்சிகளை முன்னெடுப்பதன் ஊடாக இரு இனங்களுக்கும் இடையிலான தடுப்புச் சுவரை உடைத்து மக்களிடையே இணைவாக்கம் ஏற்படுத்த வேண்டும்.

இதற்கு முன் நிபந்தனையாக இனவாத மூலதனத்தை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களை நாம் நிராகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். யுத்தக் குற்ற விசாரணையும் அதன் பாதிப்புக்களுக்கான நிவாரணங்களும் நிச்சயம் தேவைதான். அதளைக் கோரி நிற்கிற வேளையில் எங்கள் வீடுகளில் அடுப்பும் எரிய வேண்டும். எமது சந்ததிகளும் படித்து முன்னேற வேண்டும். நிச்சயமில்லாத கண்ணுக்குப் புலப்படாத ஒன்றுக்காக அடம் பிடித்து அழிவதை விட கையில் எடுக்கக் கூடியதை எடுத்துக் கொண்டு படிப்படியாக முன்னேறுவதே யதார்த்தமான நியாயமான சாத்தியமான அணுகுமுறையாகும்.

இந்த அணுகுமுறை என்பது  கூட்டம் போட்டுக் கத்துவதாகவோ - வீராவேச அறிக்கை விடுவதாகவோ -  நானா? நீயா? எனப் போட்டி போடுவதாகவோ -  கவனயீர்ப்பு நாடகங்களை மேடையேற்றுவதாகவோ  அமைந்துவிடக் கூடாது. இது எமது நாளாந்த வாழ்வு முறையோடு சேர்ந்த சிந்தனை நடவடிக்கையாக அமைய வேண்டும். எமது இன்றைய நிலைமைக்குக் காரணம் யாது?  இனவாத மூலதனம் யாரை வாழவைத்தது?  வாழவைக்கிறது?  யாரை அது மாள வைத்தது?  மாள வைக்கிறது? இவற்றிற்கான விடைகளை நாம் தேடுவதன் ஊடாகவே எமது எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும்.

"இனவாதம் என்பது முற்றிலும் சுயநலம் கொண்ட குறுகிய சிந்தனையாகும். நஞ்சு போன்று ஆபத்து நிறைந்ததாகும். அதன் இயல்பே அதுதான். அது தேசியவாதத்திற்கு முற்றிலும் முரண்பாடானதாகும். இனவாதப் பாதையை நாடுபவர்கள் ஆட்சியாளர்களின் வெட்கமில்லாத கருவிகள் அல்லது அவர்கள் பெரிய ஸ்தானங்களில் உள்ளவர்களின் பரிவின் மூலம் பட்டம் பதவிகளை விரும்பி நிற்பவர்கள் ஆவர். இனவாதம் அரசியலுக்கு நஞ்சூட்ட வல்லதென்பதால் அதனை யாழ்ப்பாண இளைஞர்கள் நிராகரிக்க வேண்டும்."

(1928ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கீரிமலை வைத்தியலிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற மாணவர் காங்கிரஸின் நான்காவது வருடார்ந்த மாநாட்டில் திரு சத்தியமூர்த்தி இனவாதம் என்னும் தலைப்பில் கீழ் ஆற்றிய உரையிலிருந்து)