Wed12072022

Last updateSun, 19 Apr 2020 8am

ஜனநாயகத் தேர்தலின் இனவாத சங்கீதம்

எதிர்வரும் ஆகஸ்ட் 17ல் இலங்கையின் 15வது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஆரவாரங்களிலும் மக்களை மயக்கும் வித்தைகளிலும் பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் 14அக்டோபர் 1947ல் இடம்பெற்றது. அந்நாள் முதல் இந்நாள் வரை இலங்கைக் குடிமக்கள் இனவாத முரசொலிகளை உள்வாங்கி உணர்ச்சிப் போதை ஊட்டப்பட்ட மனோநிலையில்தான் தங்கள் வாக்குகளை அளித்து வந்துள்ளனர்.

குடிமக்களை பிரித்து வைத்து அடிமைப்படுத்தி அவர்களை ஆளும் சிங்கள-தமிழ் மேலாதிக்க வாத மேட்டுக் குடியினருக்கு இனவாதம் என்ற சங்கு இன்று வரை கை கொடுத்தே வந்துள்ளது. சிங்கள மேலாதிக்க ஆளும் மேட்டுக் குடிகளின் அதிகாரப் போட்டிகளுக்கு ஆலவட்டம் வீசும் வகையிலேயே தமிழ் மேலாதிக்க ஆளும் மேட்டுக்குடிகளின் அரசியல் போராட்டங்களும் வடிவமைக்கப்பட்டு வந்துள்ளன.

இம்முறை தெற்கில் தோன்றியுள்ள அரசியல் காலநிலை தமிழ் தலைமைகளுக்கு தங்கள் சுயநல அரசியல் அறுவடையை வட-கிழக்குப் பிரதேசத்தில் லாபகரமாக செய்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. மக்களை நம்ப வைப்பதற்கு இவர்களுக்கு இம்முறை மகிந்தா-யுத்தக்குற்ற விசாரணை-ஜ.நா. தீர்மானம்-மீளக் கட்டுமானம்-அபிவிருத்தி ஆகிய உரங்கள் இலவசமாகக் கிடைத்துள்ளன.

கடந்த 14 தேர்தல்களைப் போன்று இம்முறையும் எமது தலைமைகளின் இனவாத முரசொலியின் உணர்ச்சிப் பிரவாகத்தில் மூழ்கடிக்கப்படப் போவது மக்களின் உரிமைகளே. எனவே கடந்த 68 வருட கால இனவாத ஆளும் அதிகார வர்க்கத்தினரின் மக்கள் விரோத அடக்குமுறை ஆட்சிப் போக்கை மாற்றியாக வேண்டிய கட்டாயக் கடமை எமக்கு உண்டு. இதனைச் செய்வதற்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அது மக்களாகிய நாம் எமக்கான அரசியலைக் எமது கையில் எடுக்க வேண்டும். சிங்கள மக்களும் தமிழ் மக்களும் சந்தித்து பரஸ்பரம் அவரவர் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயற்படும் நடைமுறை அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும். அதனடிப்படையில் ஒரு புதிய அரசியல் யாப்பை எழுதவேண்டும்.

இந்த மக்கள் யதார்த்த அரசியலை நாம் கட்டியெழுப்ப வேண்டுமானால் இம்முறைத் தேர்தலை இதற்கான அடித்தளமாக மாற்றவேண்டும.; அதனைச் செய்யவேண்டுமானால் வீர வசனங்களை-உணர்ச்சி உரைகளை-கவர்ச்சியான திட்டங்களை-எதிர்ப்பு அல்லது இணக்க அரசியல் அணிதிரட்டல்களை-நாட்டுக்கு வெளியே உள்ள சக்திகளை-நாட்டிற்கு வெளியே இருந்து தரப்படும் அழுத்தங்களை நாம் நிராகரிக்க வேண்டும். எங்களுக்கு அச்சமில்லாத வாழ்வையும் நிரந்தரமான அமைதியையும் சுபீட்சம் நிறைந்த எதிர்காலத்தையும் பெற்றுத் தரக்கூடிய வேட்பாளர் ஒருவருக்கு நாம் வாக்களிக்க வேணடும்;. அப்படி ஒருவர் வேட்பாளராக நமக்கு முன் இல்லையெனில் எமது வாக்கை செல்லுபடியற்றதாக ஆக்கி வாக்குப் பெட்டியில் போடவேண்டும்.

தகுதியில்லாத வேட்பாளர்களை தெரிவு செய்வதும் - வாக்களிப்பை பகிஷ்கரிப்பு செய்வதும் தென்னிலங்கை அரசியலில் பாதிப்பு எதனையும் ஏற்படுத்தாது. ஆனால் செல்லுபடியற்றதாக்கும் வாக்குகள் சிங்கள மக்கள் தமிழ் மக்களைப் புரிந்துகொள்வதற்கான வாசல்களை திறந்து விடும். தமிழர்களும் தங்களைப் போல் இலங்கையின் குடிமக்கள் என்ற உண்மையை சிங்கள மக்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தும். தமிழ்ப் பேசும் மக்கள் இனவாதிகள் இல்லை என்ற யதார்த்தத்தை அவர்கள் தாமாக உணர்ந்து கொள்ளும் நிலை உருவாகும்.

இன்று எமது நாட்டில் வாழும் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கும்-பேசுவதற்கும்-புரிந்து கொள்வதற்கும் ஏற்ற வழிமுறைகள்-முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம் முயற்சிகள் பலத்த-ஆபத்தான எதிர்ப்புகள் மத்தியில் தெளிந்த சிந்தனையும்-அனுபவ அறிவும்-துணிச்சலான செயற்திறனும்-திடமான நெஞ்சுறுதியும் கொண்ட குடிமக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவர்களின் இலக்கு இலங்கைக் குடிமக்கள் அனைவருக்கும் அவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும் ஒரு புதிய அரசிசியல் சாசனத்தை இலங்கையின் வரலாற்றில் பதிப்பிப்பதேயாகும்.

இந்த இடத்தில் தமிழ் இனவாத சிந்தனையாளர்கள் 'பெரும்பான்மை சிங்களவர்களை எப்படி நம்புவது?" என ஒரு கேள்வியை முன் வைக்கிறார்கள். கடந்த 68 வருட காலமாக நாம் யாரை நம்பினோம்? நாம் நம்பிக்கை வைத்தவர்கள் இன்று எமக்குப் பெற்றுத் தந்த வாழ்வு என்ன? இன்று 50 வீதமான தமிழர்கள் சிங்கள மக்கள் மத்தியில்தான் வாழ்கிறார்கள். எமது தலைமைகள் எம்மை ஏமாற்றிப் பிழைப்பது போல் சிங்கள மக்களும் அவர்களுடைய தலைமைகளால் ஏமாற்றுப்பட்டு வருகிறார்கள். இந்த உண்மையை இரு பகுதி மக்களும் புரிந்து கொள்வதைத் தடுக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியின் கருவியே இந்த 'இனவாதமாகும்"

இந்தப் பிரித்தாளும் தந்திரம் சர்வதேசம் மட்டம் முதல் நாட்டின் சாதாரண கிராம சபை வரை பல விதமான பரிமாணங்களிலும் விதம் விதமான வடிவங்களிலும் பல் வேறு படி நிலைகளிலும் உலகப் புதிய தாராளவாதக் கொள்கை வகுப்பாளர்களால் கையாளப்பட்டு வருகிறது. இதனைத் தற்போதைய ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் சையத் ராட் அல் உசேன் அவர்கள் இலங்கையில் 2009ல் இடம்பெற்ற இறுதியுத்தத்தில் ஐ.நா.வின் பங்கு பற்றிச் சுட்டிக்காட்டிய கூற்று உறுதிப்படுத்துகிறது.

ஆகவே இலங்கைக் குடிமக்கள் தங்களைத் தாங்களே நம்பி செயற்பட்டால் அன்றி இலங்கையில் சமாதானமும் அமைதியும் சுபீட்சமான வாழ்வும் உருவாக முடியாது.

'நன்றும் தீதும் பிறர் தர வாரா"