Fri12082023

Last updateSun, 19 Apr 2020 8am

மாற்றட்டும் நமது தலையெழுத்தை எமது வாக்குகள்

இலங்கைக் குடி மக்களின் கருத்தறியாமல் சிங்கள-தமிழ் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் எழுதப்பட்ட ஒரு அரசியல் அமைப்பின் கீழ் ஜனநாயகம் என்ற போர்வையில் மீண்டும் ஒரு தேர்தல் நடைபெறவுள்ளது. இனப்பாகுபாட்டை ஊக்குவிக்கும் அரசியல் யாப்பின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்ட அரச கட்டமைப்பினால் கடந்த 68 வருடங்களாக இனவாதக் கோஷங்களை முன்னிறுத்தி நடாத்தப்பட்டு வரும் 15வது தேர்தல் இதுவாகும்.

"குண்டாந்தடிக்கு அஞ்சமாட்டோம்" -"சிறைச்சாலை பூஞ்சோலை" - "துப்பாக்கிக் குண்டு விளையாடும் பந்து" என்ற கோஷங்களுடன் எம்மையெல்லாம் உசுப்பேற்றி எமது வாழ்வைத் தாரைவார்த்துக் கொடுத்துத்  தங்களையும் தங்கள் சுற்று வட்டாரங்களையும் வளமுடன் வாழவைத்த மேட்டுக்குடிகளின் பரம்பரையினர் இன்று புதிய பல சுலோகங்களின் கீழ் எமக்கு முன்னே தோன்றி எங்களை இரட்சிக்க வந்துள்ள நாயகர்களாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுச் சத்தியப் பிரமாணம் செய்து ராஜதந்திர கடவுச் சீட்டு உட்பட அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற்று எமது தலையில் ஏறி மிதித்துக் கொண்டு எமக்கான உரிமைகளுக்காகப் போராடுவதற்காக தங்களுக்கு வாக்களிக்குமாறு வாக்குப் பிச்சை கேட்கிறார்கள்.

2010த் தேர்தலில், அதற்கு முதலாண்டில் முடித்து வைக்கப்பட்ட போரின் கொடூரங்களுக்கான நியாயம் என்று கூறி வாக்குகளை வாங்கினார்கள். இம்முறை நல்லாட்சியில் நியாயம் பிறக்கும் என்கிறார்கள். இதுவரை எங்கள் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பை இவர்களிடம் ஒப்படைத்து நாம் கண்ட பலன் என்ன என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

எமது ஒரு தலைமுறை அழிந்து போனது. உறவுகள் பிய்த்தெறியப்பட்டு பூமிப் பரப்பெங்கும் வீசப்பட்டுள்ளது. ஆணிவேருடன் ஊர்கள் யாவும் தூக்கியெறியப்பட்டுள்ளன. ஒரு பகுதி மக்கள் காணாமலேயே போய்விட்டனர். சொந்த நாட்டிலேயே நாம் அகதிகளானோம். நிச்சயமற்ற எதிர்காலத்துடன் வாழும் மக்கள். அச்சத்துடன் வாழ்வோர். தூக்கமின்றி உழலுவோர். நிர்கதியாக நிற்கும் குடும்பங்கள். பாலியல் வன்முறைகள். களவு. கொலை. குத்து வெட்டு. தற்கொலை. சித்தப் பிரமை.

இவைகள்தான் எமது வாக்குகளால் எமக்கு வழங்கப்பட்ட வாழ்க்கை. இனியாவது நாம் நமக்காக மட்டுமல்லாமல் மற்றவர்களுக்காகவும் என சிந்திக்க வேண்டிய தருணம் இது. அடுத்த எமது தலைமுறையையாவது நாம் காப்பாற்ற வேண்டிய கடமை எமக்கு உண்டு. அதற்கான முதல் நடவடிக்கையாக இம்முறை தேர்தலை நாம் பயன்படுத்தியாக வேண்டும்.

பெரும்பான்மை சிறுபான்மை என்பது தனியே சிங்கள தமிழ் இனத்திற்கு மட்டும் உரிய பதங்கள் அல்ல. அது மதம் சார்ந்ததாக,  மதத்திற்குள் பிரிவுகள் சார்ந்ததாக, சாதி சார்ந்ததாக-சாதிக்குள் பிரிவுகள் சார்ந்ததாக, உறவுகள் சார்ந்ததாக, உறவுக்குள் தரம் சார்ந்ததாக, வர்க்கம் சார்ந்ததாக, நிறம் சார்ந்ததாக மனிதர்களால் மனிதர்களை பிரித்தாளக் கையாளப்படும் ஒரு   பதமாகும். அது இடத்துக்கு இடம்-நேரத்திற்கு நேரம் ஆளும் அதிகார ஆணவம் கொண்டவர்களால் மக்களைப் பிளவுபடுத்தி வைத்திருக்கப் பயன்படுத்தப் படும் பதமாகும். 

எனவே வேற்று நாட்டு இனமக்கள் மத்தியில் எமது சந்ததியினரை ஏற்றுமதி செய்து கொண்டு நமது நாட்டின் சகோதர இன மக்களை விரோதிகளாகப் பார்க்கவேண்டியதில்லை. அவர்கள் எமது எதிரிகள் அல்ல.  எம்மை இரு இனங்களாகப் பிரித்து வைத்து அவர்களையும் எங்களையும் அடக்கி ஆளுபவர்கள்தான் எதிரிகள். அதற்குத் துணை போகிறவர்கள்தான் எமது எதிரிகள்.  பெரும்பான்மை சிறுபான்மை எனக் கூறி வாக்குகளின் மூலம் எம்மை மோத வைத்து தங்களுக்கு வேண்டிய ஆட்சியை அமைப்பவர்கள்தான் எமது எதிரிகள்.  பிற மொழியை கற்றுக் கொள்ளும் எமது சுதந்திரத்தை தடுத்ததன் மூலம் அம்மக்களுடனான தொடர்பை அறுத்தவர்கள்தான் எமது எதிரிகள். 

சிங்கள மக்களும்தான் சிங்கள அடக்குமுறை அரச படைகளினால் இரு தடவைகள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்டனர். அவர்களும்தான் அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளை அனுபவித்தனர். எனவே ஆட்சியாளர்களையும் அந்நிய சக்திகளையும் விட அவர்கள் எங்களைப் புரிந்து கொள்வது எளிது. 

இங்கே மொழி ஒரு தடை கிடையாது. கொல்லப்பட்டவர்களுக்காக-கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுக் காணாமல் போனவர்களுக்காக-விசாரணையின்றி சிறையிருப்பவர்களுக்காக-அடிப்படை உரிமைகளுக்காக அவர்களும்தான் போராடுகிறார்கள். அவர்களும் நாமும் சேர்ந்து போராடுவதால் நமது பலம் இன்னும் அதிகமாகும். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் நிலைமையும் உருவாகும். அப்போதுதான் இலங்கையின் அரசியல் அமைப்பை மாற்றி இலங்கைக் குடி மக்களுக்கான சரியான அரசியல் ஜனநாயக நடைமுறையை கொண்டு வரமுடியும்.

இன்று நாட்டின் சகல அரசியல் வியூகங்களுக்குப் பின்னாலும் உள்-வெளி நாட்டு பணம்  தங்கு தடையின்றிப் தாரரளமாகப் பாய்கிறது. இது எமது நலன் சார்ந்தது அல்ல. எம்மை-இந்நாட்டின் குடி மக்களை உலகப் பொருளாதார புதிய தாராளவாத திட்டங்களுக்குள் சிக்க வைத்து தொடர்ந்தும் எமது மண்ணின் வளங்களை சுரண்டும் செயற்பாடேயாகும்.

அதிகாரங்களைக் கைப்பற்றியுள்ள சபைகளில் மக்களுக்குப் பயன்தரக் கூடிய வகையில் நிர்வாகம் நடாத்துவதை விடுத்து சாத்தியப்படாத தீர்மானங்களை மொழிந்து கொண்டு மேட்டுக்குடி ஆணவப் போக்கையும் சாதித் திமிர்த் தனத்தையும் காட்டும் எமது பிரதிநிதிகளை நிராகரிப்போம்.  நாம் இனவாதிகள் இல்லை என்பதை இத்தேர்லில் நிரூபித்துக் காட்டுவோம். நாமும் இந்நாட்டு மக்கள்தான் என்பதை எமது வாக்குகளின் மூலம் உறுதிப்படுத்துவோம். இதனூடாக இலங்கையில் ஒரு புதிய அரசியல் சகாப்தத்திற்கான அத்திவாரத்தின் மூலைக் கல்லை நாட்டி வைப்போம். 

"கல்வி-தொழில்-அபிவிருத்தி-வளங்கள்-ஜனநாயகம்-அரசு யாவும் இலங்கை மக்களுக்கே" என்பதே எமது தாரக மந்திரமாக அமையட்டும்.