Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கேட்டுப் பெறுவது நலன்கள், நிலை நாட்டப்படுவது உரிமைகள்!

கடந்த ஜனவரி 8 முதல் இலங்கையில் ஜனநாயகம் மீட்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதி-சட்டம்-ஒழுங்கு முறைகள் சுதந்திரமாக இயங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றி ஆராயப்படுவதாகவும் ஊடகங்களில் தினமும் அறிக்கைகளும் உத்தரவாதங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த ஜனநாயக மீட்பு இலங்கைக் குடிமக்கள் அனைவரும் தங்கள் இன-மதமொழி-பால்-வர்க்க-பிராந்திய வேறுபாடுகளைத் தாண்டி சிந்தித்துச் செயற்பட்டதனாலேயே ஏற்பட்டது. எனவே தெரிவு செயப்பட்ட புதிய ஜனாதிபதி தான் கூறிய உறுதிமொழியின் பிரகாரம் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்படும் ஒரு அரசாங்கத்தை நெறிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.

ஆனால் இன்று நாட்டில் பழைய ஆட்சிமுறையே தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது. தோற்றம் மாறியிருக்கிறது. உள்ளடக்கம் மாறவில்லை. நடிகர்கள் மாறியுள்ளனரே ஒழிய நாடகத்தின் கதை மாறவில்லை. வசனங்கள் மாறியுள்ளதே தவிர நாடகத்தின் கரு மாறவில்லை. தேர்தலில் வாக்குகளை மட்டும் போட்டுவிட்டு நாம் தலைவர்களின் பேச்சுக்களை நம்பி வீட்டுக்குள் இருந்தோமானால் நமது வாழ்வில் எதுவும் மாறப்போவதில்லை. மாறாக இருப்பதையும் இழந்துபோவோம். அதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்படத் தொடங்கி விட்டன.

இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எந்த ஒரு அரசாங்கமும் இதுவரை தனது குடிமக்களுடைய நலன்களைக் கருத்தில் வைத்துச் செயற்பட்டது கிடையாது. மாறாக தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு அரசாங்கமும் தனது குடிமக்களின் உரிமைகளைப் படிப்படையாக பறித்துக் கொண்டுதான் வந்துள்ளதை வரலாறு மிகத் துல்லியமாகக் காட்டி நிற்கிறது.

1948ல் கிடைத்த சுதந்திரம் இலங்கைக் குடிமக்களின்களை நலன அடிப்படையாகக் கொண்டதல்ல. ஆங்கிலேய ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்கள் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிச் சென்றபோது தங்கள் நலன்களை தொடர்ந்தும் பாதுகாத்து (திருகோணமலைத் துறைமுகத்தை தங்கள் கையில் வைத்துக் கொண்டு) தங்களுக்கு விசுவாசமாக இலங்கையின் வளங்களைத் தொடர்ந்தும் சுரண்டும் பின்-காலனித்துவக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கூடிய ஆட்சிமுறையை அன்றிருந்த சிங்கள-தமிழ் முதலாளித்துவ மேலாதிக்க அரசியல் சக்திகளிடம் ஒப்படைத்துச் சென்றனர். அன்று முதல்கொண்டு இன்றுவரை சிங்கள-தமிழ் மக்களின் நலன் என்ற கோஷங்களுடன் தமிழ்-சிங்கள ஆதிக்க-ஆளும் பரம்பரைக் கூட்டம் இலங்கைக் குடிமக்களை ஏறி மிதித்து மக்களின் அடிப்படை வாழ்வாதார, பொருளாதாரத் தளங்களை அதன் வளங்களை அந்நியருக்குத் தாரைவார்த்துக் கொடுப்பதற்காக இனக்குரோத அரசியலைக் கையாண்டபடி உள்ளது.

இதனால் இன்று தமிழ்-சிங்கள சாதாரண மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.முன்னைய ஆட்சியிலும் சரி இன்றைய ஆட்சியிலும் சரி புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இனிமேலாவது குடிமக்கள் தங்களது ஜனநாயக பலம் என்ன? பலவீனம் யாது? என்பதனை உணர்ந்து செயற்படாவிட்டால் மக்களுக்கு விமோசனமோ அன்றி விடிவோ கிடைக்காது.

இன்றுவரை தமிழ்ப் பேசும் மக்களின் பெயரால் அவர்களது பிரதிநிதிகள் நடாத்திவரும் அரசியற் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்ற ஒரு சிறிய கூட்டத்தினரின் நலன்களைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டிருக்கும் வகையிலேயே முன்னெடுக்கப்படுகிறது.

நலன்களும் உரிமைகளும்

தமிழ்-சிங்கள மேட்டுக்குடிகளின் நலன்களுக்கான போட்டியே இலங்கையில் இனப்பிரச்சனையாக வளர்த்துப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் லாபம் அடைபவர்கள் வெளிநாட்டு-உள்நாட்டு பெரும் முதலாளிகளும் அவர்களின் முகவர்களாக செயற்படும் உள்நாட்டு அரசியல் தலைமைகளும் ஆகும். எனவே எக்காலத்திலும் இந்தத் தலைமைகளினால் இலங்கையின் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது. இவர்கள் பிரச்சனையை நீறுபூத்த நெருப்பாகவே வைத்திருப்பார்கள். இன்றைய புதிய ஆட்சியின் கீழ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சம்பவங்களும் - வெளிவந்துகொண்டிருக்கின்ற அறிக்கைகள், பேச்சுக்கள் யாவும் தீர்வு வந்துவிடக்கூடாது என்பதில் பிரித்தாளும் சக்திகள் யாவும் உறுதியாக இருப்பதனையே காட்டி நிற்கின்றன.

எமது தமிழ்த் தலைமைகள் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்று கூறிக்கொண்டு தங்கள் தங்களது வர்க்கம் சார்ந்த நலன்களுக்காகவே அரசியலைக் கையாண்டு வருகின்றனர். இவர்கள் உண்மையிலேயே மக்களின் உரிமைக்காக செயற்பட்டிருந்தால் இன்று மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசவேண்டும். மாறாக மக்கள் இன்று முன்னரைவிட மேலும் பல பிரிவுகளாக பிளவுபட்டு நின்றுகொண்டு இனப்பிரச்சனையை மேலும் தூண்டி எரியவிட்டு அதில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் சம அந்தஸ்து என ஐம்பதுக்கு ஐம்பது கேட்டுத் தொடங்கி தமிழரசு அமைத்து சத்தியாக்கிரகம் நடாத்தி சோசலிச தமிழீழம் என பிரகடனம் செய்து 30 வருடகால ஆயுதப் போராட்டம் நடாத்திவிட்டு மீண்டும் மறுபடி "வேதாளம் முருங்கை மரத்தில்" ஏறியதுபோல் ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் மக்களை ஆளும் அதிகாரத்தை எங்களிடம் தா என்று அதே கோரிக்கை வைப்பவர்களுக்கும்--- இருந்தவற்றையும் இழந்து கூடப் பிறந்தவர்களையும் பறிகொடுத்து விட்டு வீட்டுக்குள் கூடத் தாம் நினைப்பதைப் பேசக்கூட சுதந்திரம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கும் மத்தியில் காணப்படுவது அவரவர் நலன்களா? அல்லது மக்களின் உரிமைகளா?

தமிழ் பேசும் மலையக மக்களின் நலன்கள் வேறுபட்டதால் நாம் அவர்களை மறந்தோம். இஸ்லாமியத் தமிழர்கள் நலன்கள் வேறுபட்டதால் அவர்களை வெளியேற்றினோம். கிழக்குத் தமிழர்கள் நலன்கள் வேறுபட்டதால் அவர்கள் பிரிந்தே போனார்கள். வடக்கிலும் தற்போது உள்நாட்டு-அண்டைநாட்டு-வெளிநாட்டு நலன்களைப் பிரதிபலித்தே காரியங்கள் நடைபெறுகின்றன. இதற்குள்ளே மக்களின் உரிமைகள் எங்கே?

இலங்கையில் அதன் குடிமக்களுக்கான உரிமைகள் எல்லோருக்கும் சமமாகவே இருக்க வேண்டும். சமஉரிமைகள் இனம்-மதம்-பால்-பிராந்தியம்-பிரதேசம் கடந்து செங்குத்தாகவும் சமாந்திரமாகவும் மக்கள் மத்தியில் நிலவ வேண்டும். இன்று இலங்கையை உலகமயமாக்கல் பொருளாதாரம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அதற்கு ஏற்றவகையிலேயே ஆட்சியதிகாரம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் ஆங்கிலேயர் காலம் முதல் இன்றுவரை பெருந்தோட்டத்துறை வருமானத்தின் பெரும் பகுதி வெளிநாட்டு நிறுவனங்களுக்கே சென்றடைகின்றன. அதனால் தான் மலையக மக்களுடைய நவீன அடிமைத்தன வாழ்க்கை இன்னமும் தொடருகிறது.

1977முதல் எமது நாட்டின் கல்வி-சுகாதாரம்-விவசாயம்-மீன்பிடி போன்ற அனைத்துத் துறைகளும் ஏனைய இயற்கை வளங்களும் புதிய தாராளவாதக் பொருளாதாரக் கொள்கையின்படி அபிவருத்தி என்ற போர்வையில் மக்கள் உரிமைகளைப் பறிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை இலங்கைக் குடிமக்கள் புரிந்துகொண்டு தங்கள் உரிமைகளுக்காக ஒன்றுபட்டுப் போராடுவதைத் தடுக்கும் வகையிலேயே இனப்பிரச்சனையும் அதற்கான தீர்வும் மக்களின் பிரதிநிதிகளால் கையாளப்பட்டு வருகிறது.

அன்று ஆங்கிலேயர் காலத்திலிருந்தே இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்று குரல் கொடுத்த சிங்கள இடதுசாரிகளோடும் சரி அல்லது இன்று தென்னிலங்கையில் எமக்காகக் குரல் கொடுக்கும் இடது சாரிகளோடும் சரி எந்தக் காலத்திலுமே தமிழரசு முதல் தமிழீழம் வரை கோரிக்கை வைத்த எந்தத் தமிழர்களும் பேசியது கிடையாது. பேச விரும்பியதும் இல்லை. பேசவும் மாட்டார்கள். காரணம் எமது தலைவர்கள் சிங்கள அசாங்கத்துடன் மட்டும் பேசுவது ஆட்சியதிகாரத்தில் தங்களுக்கு சம அந்தஸ்து வேண்டியே.

இடதுசாரிகளோடு பேசினால் அவர்கள் அடித்தட்டு மக்களைப் பற்றிப் பேசுவார்கள். மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றி அக்கறை காட்டுவார்கள். அனைத்து மக்களுக்குமான சம உரிமையை வலியுறுத்துவார்கள். அது இவர்களின் சம அந்தஸ்துக் கோரிக்கைக்கு ஒத்து வராது. ஏனெனில் இந்த சம அந்தஸ்துக் கோரிக்கைக்குள் தமிழ் மக்களின் உரிமைகள் அடங்காது. இங்கேதான் நாம் நலன்கள் வேறு, உரிமைகள் வேறு என்பதனைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

தென்னிலங்கையில் சாதாரண ஒரு சிங்களக் கிராமத்து மக்கள் ஒன்றிணைந்து குடிநீர் கேட்டு அணி திரண்டதற்காக இராணுவ அதிரடைப் படை அனுப்பி அவர்களை சுட்டுக் கொன்றது சிங்களப் பேரினவாத அரசு. அரசாங்கம் அக்கிராமத்தில் குடி நீரில் நஞ்சு கலக்கக் காரணமாக இருந்த தொழிற்சாலையின்-முதலாளியின் நலன்களைப் பாதுகாக்கவே இந்த அடக்குமுறையை எடுத்துக் கொண்டது. இங்கே சிங்கள மக்களினது உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவிதமான வாதமும் இருக்கவில்லை.

வட இலங்கையிலும் ஆசிய அபிவருத்தி வங்கியினால் நிதி ஒதுக்கப்பட்டிருந்தும் கூட கடந்த இரண்டு வருடங்களாக தமிழ் மக்கள் உயிர் வாழ அத்தியாவசியத் தேவையான இரணைமடுக்குளத் தண்ணீர் திட்டத்தைவைத்து பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள் தமிழர் பிரதிநிதிகள். இங்கே போத்தல் தண்ணீர் கம்பெனிகளின் நலன்கள் பாதுகாக்கப்படுகிறது. தமிழ் மக்கள் உயிர் வாழும் உரிமை தமிழர் தலைவர்களினாலேயே மறுக்கப்படுகிறது. இதிலும் எதுவித வாதமும் இல்லை. ஆனால் இதிலும் கூட வன்னி வாழ் தமிழர்கள் நலனையும் குடாநாட்டுத் தமிழர்கள் நலனையும் ஒன்றுடன் மற்றதை மோதவிட்டு சுய ஆதாயம் தேடுகிறார்கள் அரசியல் தலைவர்கள்.

எனவே இன்றைய அரசியல் சட்ட யாப்பு வரைபுக்கமைய இயங்கும் அரசுக் கட்டமைப்பின கீழ் உருவாகும் எந்த ஒரு சுயநிர்ணய ஆட்சி அதிகாரத்தின் கீழேயும் கூட தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்படுவார்கள். சிறை வைக்கப்படுவார்கள். சுட்டுக் கொல்லப்படுவார்கள். காணாமல்போவார்கள். கொடும் சித்திரவதைக்கு ஆளாவார்கள். பெண்கள் மானபங்கப் படுத்தப்படுவார்கள். சிறுவர்கள் துன்புறுத்தப்படுவார்கள். சுற்றாடல் மாசுபடுத்தப்படும். ஆனால் இவற்றைச் செய்வது இம்முறை தமிழர்களின் பாதுகாப்புத்துறைப் போலிஸ் படையாக இருக்கும். இதனை எமது மக்கள் உணர்ந்து-புரிந்து-தெளிந்து கொண்டு செயற்படாத வரை எமக்கு விமோசனமும் இல்லை. விடிவும் இல்லை.