Tue01282020

Last updateTue, 10 Dec 2019 10am

மக்கள் விரோத மகிந்த குடும்ப சர்வாதிகார ஆட்சி...!

அரசு எதிர்காலத்தில் மகிந்த சிந்தனையை மீறி செயற்படின் அரசுடனான உறவு முடிவுக்கு வருமென அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிகெல உறுமய மகிந்தாவிற்கு எச்சரிக்கை செய்கின்றது.

கசாப்புக்கடை நடாத்தும் இரு நண்பர்களுக்கிடையில் கொள்கை முரண்பாடு வந்தால் எது நடக்குமோ எவ்வெச்சரிக்கை கொண்ட சமிக்கையைக் காட்டுமோ, அதுபோன்றதொரு எச்சரிக்கையைத்தான் ஜாதிகெல உறுமயவின் உறுமலுக்கூடாக காணமுடிகிறது.

சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் இனவெறி கொண்ட ஆகப் படுமோசமான, படுபிற்போக்கு அரசியல் செயற்பாட்டகத்தின் மொத்த உருவகம்தான் ஜாதிகெல உறுமய. அதை அரவணைத்த அரசியல்தான் மகிந்த சிந்தனை.!

இன்றைய நடைமுறையிலான தனிநபர் பாசிச சர்வாதிகாரம் கொண்டுள்ள அரசியலமைப்பை ஜே.ஆர். அன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையாகக் கொண்டு வந்தார். அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் ஜனாதிபதிகளை விட அதிக நிறைவேற்று அதிகாரங்களை உடைய ஜனாதிபதி யாகவே ஜே.ஆர். அதனைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதனை அன்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியானது கர்ன கொடூரமாக எதிர்த்தது. அதில் முன்னின்ற கடும் எதிர்ப்பாளர்களில் முக்கியமான ஒருவர்தான் மகிந்த ராஜபக்சா. இச் சிந்தனையாளன் 2010-ம் ஆண்டு கொண்டு வந்த 18-வது திருத்தச் சட்டத்தின் மூலம் இச் சர்வாதிகாரத்திற்கு உரமும் வலுவும் சேர்த்துக் கொண்டார். முன்பு ஜே.ஆர். ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் கொண்டு வந்ததை, மகிந்த ராஜபக்ச மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கொண்டு வந்தார். இதற்கூடாக இரண்டு தடவையல்ல அதற்கு அப்பால் எத்தனை தடவையும் ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிடலாம் என்ற ஆயுள் அரச அதிகார வாழ்விற்கு வழிவகுத்தார்.


ஆட்சி அதிகாரத்திற்கு வருமுன் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும், மக்கள் சார்பு செயற்பாட்டையும் கைகளில் தூக்கிய ஒரு கடும்போக்குடைய தேசியவாதியாகத்தான் மகிந்தா அரசியல் அரங்கிற்கு வந்;தார். அரசுக்கட்டிலேறி சர்வாதிகாரப் படிநிலைகளுக்கூடாக உச்சத்தை அடைந்து கொண்டதிலும் பாசிச வழிமுறைகளைப் பின்பற்றத் தயங்குவதில்லை என்பதிலும்; மகிந்தாவை விட இன்னொருவர் இலங்கையின் அரசியல் தளத்தில் பிரசன்னமாகவில்லை என்றே சொல்லலாம். 2009-மே-மாத முள்ளிவாய்க்காலின் இனப்படுகொலை இதற்கோர் பெரும் எடுத்துக்காட்டாகின்றது. சர்வதேச யுத்த விதிகளை மீறி புலிகளை அழித்தவிதம் கொலைவெறிப் பாசிசத்தின் உச்சம்தான் மறுபுறத்தில் இன்றும் பிரதான முரண்பாடாகவும், பிரச்சினையாகவும் இருந்துவரும் தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை மகிந்தாவும் அவரது அரசும் கண்டடையவில்லை. மாறாக பாஸிச இனவெறி கொண்டு பலவற்றைச் செய்கின்றது.


வட-கிழக்கின் எல்லா முக்கிய இடங்களிலும் இராணுவ முகாம்களை அமைத்து, அவை மக்களைப் பாதுகாப்பதுடன், அம்முகாங்களின் ராணுவத்தினரை சமூக சேவையில் ஈடுபடுத்தியுள்ளோம். மக்களுக்காக சேவை செய்யும் மக்கள் ராணுவத்தை எக்காலத்திலும் எடுக்கோமென அரசு சொல்லுகின்றது. இதுவுமொரு மகிந்த சிந்தனை வியாக்கியானம் தான்.

 

  • இதற்கூடாகவடகிழக்கு மக்களின் காணிகளை அபகரிப்பதும், தமிழ் பகுதி முழுவதும் இராணுவப் பிரசன்னத்தை உருவாக்கி, ராணுவத்தின் சப்பாத்துக் கால்களுக்குள் தமிழ் மக்களை வைத்திருப்பது முதலாவது அம்சம்.

 

  • இராணுவத்தினரின் துப்பாக்கிக் கரங்களால் அரவணைத்து அவர்களுக்கு சமூகசேவை என்பதன் மூலம் தமிழ் மக்களைக் கபளீகரம் செய்து காலப்போகக்கில் சிங்களமயமாக மாற்றிவிடுவது எனும் உள்ளடக்கம் இரண்டாவது அம்சம் ஆகும்.

அத்தோடில்லமால் தமிழர் தாயகமெங்கும் மதவெறி கொண்ட புத்தமத மயமாக்கல் நடைபெறுகின்றது. புனிதப் பிரதேசம் எனும் காலத்திற்கொவ்வா பொருள் கொண்டு பிற மத அழிவாக்கம் நடைபெறுகின்றது. இது கொலனியல் கால மதஅழிப்புக் காலம் போன்று, பிறமதத்தின் அடையாளச் சின்னங்கள் அழிக்கப்படுகின்றன. பிறமதத் தலைவர்கள் தாக்கப்படுகின்றார்கள். அதுவும் .புனிதப் பிரவாகம் கொண்ட புத்த மதத் துறவிகளின் சண்ட மாருதத்தால்; தவிரவும் தென்னாசியாவில் அரசு இயந்திரத்தைப் பலப்படுத்துகின்ற இராணுமயமாக்கலில், இலங்கையே முன்னணியில் உள்ளது. ஏனிந்த நடவடிக்கை?


மகிந்த அரசாட்சியின் வரலாறு மக்கள் விரோதமாகவே தொடர்கின்றது. நாடு என்றுமே கண்டிராத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. வட்டியுடன் கூடிய உள்நாட்டு-வெளிநாட்டுக் கடன், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவிற்கேற்ற பணிந்த பொருளாதார நடவடிக்கைகள், இதனூடான பொருளாதாரக் கொள்கையிலான நெருக்கடியின் சுமைகளை மக்கள் சுமக்கின்றார்கள். இதற்கெதிராக மக்கள் வீதிக்கு வந்து போராட்டங்களை நடாத்தின், அவற்றை நடாத்தும் கட்சிகள், வெகுஐன அமைப்புக்கள் குண்டர்கள் கொண்டு தாக்கப்படுகின்றார்கள். இவ் ஐனநாயக விரோதங்களை கண்டித்து எழுதும் ஊடகங்கள் இல்லாதாக்கப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றார்கள், வெள்ளைவான் கொண்டு கடத்தப்படுகின்றார்கள், இல்லாதாக்கப்படுகின்றார்கள். நாட்டின் சகல இனமக்களுக்குமான பேச்சு, எழுத்து, கருத்துச் சுதந்திரம் கொடுங்கோல் கொண்டு இல்லாதாக்கப்படுகின்றது. இதனால் மக்களின் கோபத்திற்கு அரசு ஆளாகின்றது. இவற்றிற்கும் இதன் இன்னோரன்ன மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு பதில் சொல்ல இரும்புக் கரம் கொண்டு அடக்க பாசிச சர்வாதிகாரம் கொண்ட இராணுவமயமாக்கல் தேவைப்படுகின்றது.

பாஸிசம் என்பது கடிவாளம் இல்லாத இனவெறியும், ஆதிக்க வெறியும் பிடித்த யுத்தமாகும். தொழிலாளி வர்க்கத்தின் சகல உழைக்கும் மக்களின் கொடிய விரோதியாகும், என்கின்றார் டிமிட்ரோவ் அவர்கள். இக்கணிப்பானது எம்நாட்டின் மகிந்த அரசின் சமகால சர்வாதிகார அரசியலின் பிரதிபலிப்பை படம் பிடித்துக் காட்டுகின்றது. எமது நாட்டின் தமிழ்-முஸ்லிம் பாராளுமன்ற சந்தர்ப்பவாதக் கட்சிகள், அதிலும் பாராளுமன்ற இடதுசாரிகள் அரசுடன் வர்க்க சமரசம் செய்து, உடந்தையோடு (மக்கள் விரோத-பாசிஸ-சர்வாதிகார) இருக்கும் கொள்கை-கோட்பாடுடன் சங்கமமாகியுள்ளனர். இதனால் பேரினவாத அரசியல் மிகச் சுலபமாக சிறுபான்மை தேசிய இனங்களை, சிங்கள மக்கள் மத்தியில் இருந்து பிளவுற வைக்கின்றது. அத்துடன் சிறுபான்மை தேசிய இனங்களுக்கிடையிலும் இன-மத-மொழி-சாதிய ரீதியிலும், பிரதேச ரீதியிலும் உள்ள முரண்பாடுகளை கூர்மையாக்கி மோத விடுகின்றது. இதனால் எம்நாட்டின் போராடும் சக்திகளான அடக்கி ஒடுக்கப்படும் மக்கள் அரசியல் ரீதியிலும், ஸ்தாபன ரீதியிலும் வலுவிழந்து நிற்கின்றார்கள்;. இத்தயைதொரு சமுதாயக் கட்டமைப்பிலேயே, மகிந்த அரசின்; பாசிஸ-சர்வாதிகாரப் போக்கு தலைவிரித்தாடுகின்றது, மக்களை அடக்கி ஒடுக்குகின்றது.


ஆகவே இத்தகைய நிலையின் இன்றைய இப்போக்குடன் மக்கள் இசைந்து ஒத்தோடுவார்களா? இல்லையென்பதையே, மத்திய கிழக்கு மக்களின் வெகுஐனப் போராட்டக் கிளர்ச்சிகள் போன்ற அண்மைய சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களின் அரசுக்கெதிரான எழுச்சிகள்; போராட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன. நிருபிக்கின்றன. இதனால்தான் என் நாட்டின் மக்கள், என்னை கடாபிபோல் சாகடிக்கமாட்டார்கள் என்கின்றார் மகிந்தா. இது எதைத்தான் பிரதிபலிக்கினறது.? முதலாளி வர்க்கத்தின் இயல்பான பலவீனத்தை வெளிப்படுத்துகின்றது., ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் ஒன்று உருவாகப்போவதை கண்டு பயப்படுகின்றது.


- அகிலன்.