Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

" வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் மாற்றத்திற்கானதாகப் பார்க்க கற்றுக் கொண்டேன்... அந்த வகையில் நான் எப்போதுமே போராளிதான் "

பொங்கு தமிழ் நிகழ்வு பெண் போராளி - முன்னணி இதழுக்காக பிரத்தியேகமாக வழங்கிய பேட்டி இது.

வவுனியாவில் இருந்து நான் காலை எட்டு மணிக்கு ஏறிய இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து மூன்று மணித்தியாலங்களின் பின் தம்புள்ள நகரை சென்றடைந்தது. நகரத்தின் மத்திய பஸ் தரிப்பு நிலையத்தில் இறங்கிய எனக்கு திசை ஒன்றும் விளங்கவில்லை. இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன் தம்புள்ளைக்கு வந்ததாக நினைப்பு. இன்று யாழ்பாணத்தை விட, ஏன் அனுராதபுரத்தை விட வளர்ச்சி அடைந்த நகராக காட்சி தருகிறது. வன்னி ஒரு காலத்தில் இலங்கையில் அரிசிக்களஞ்சியம் என்பது போல தம்புள்ள இப்போதும் இலங்கையில் மரக்கறித் தோட்டமாக விளங்குகிறது.

கிட்டதட்ட இலங்கையில் நடுப்பகுதில் அமைத்துள்ள தம்புள்ள இன்று நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு மரக்கறியை விநியோகிக்கும் சந்தையாக மட்டுமல்லாமல் பல சேவைகளை வளங்கும் நவீன நகரமாகவும் இயங்குகிறது. யுத்தத்துக்கு பின்னான இன்றைய காலத்தில் அரசினாலும் சர்வதேச நிறுவனங்களாலும் உல்லாசப்பயணிகளை கவரும் நகராக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. இன்று தம்புள்ள சிங்கள மக்களின் வாழ் பிரதேசமாகவே பலராலும் அறியப்பட்டுள்ளது. இன்றுள்ள மக்கள் தொகையில் பெரும்பான்மயானவர்கள் சிங்களவர்களாகவும், அடுத்து முஸ்லீம்களும், தமிழர்கள் சில ஆயிரம் பேரும் தம்புள்ளையில் வசிக்கின்றனர்.

ஆனால் பத்தாம் நூறாண்டில் இருந்து 1980 ஆண்டு வரை தமிழர்களின் செல்வாக்கு மிகுந்த பிரதேசமாக தம்புள்ள விளங்கியது. தம்புள்ளை என்று தமிழர்களால் அழைக்கப்பட்ட இன்றைய டம்புள ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் போன்றோரால் ஆளப்பட்டுள்ளது. தென்னிந்திய கலாச்சரா சின்னங்களும் எச்சங்களும் இன்றும் தம்புள்ளையில் காணக்கூடியதாக உள்ளது. இன்று தம்புள்ள பல நூறாண்டுகளின் பின் அரசியல் சர்ச்சைகளின் நிலமாகவும் மாறி வருகிறது. இதனால் வடக்கினில் குறைக்கப்பட்டு வரும் படையினரைக் கொண்டு நகரின் வெளிப்புறத்தை அண்டி இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகிறது. குறிப்பாக கடந்த வருடத்தின் இறுதி பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக நடைபெற்ற விவசாயிகளின் போராடத்தின் பின் படையினரினதும், புலனாய்வு பொலிசாரினதும் பிரசன்னம் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.


இரண்டு மணித்தியாலங்கள் நகரின் மத்திய பிரதேசத்தை சுற்றி பார்த்ததுடன், ஒட்டோ சாரதிகள், சாப்பாட்டு கடை ஊழியர்கள், சந்தையில் வியாபரிகள் சிலருடன் உரையாடியதில் மேற்கண்ட தகவல்களை அறிந்து கொண்டேன். நான் தம்புள்ள வந்ததன் நோக்கம் சைந்தவி ராஜரத்தினம் என்ற முன்னால் யாழ் பல்கலைக்கழக மாணவியை முன்னணி இதழுக்காக பேட்டி எடுப்பதற்காகவும் இன்றைய மத்திய இலங்கையில் அரசியல் சூழலை விளங்கி கொள்வதற்காகவுமாகும். கடந்த இதழில் முன்னாள் பல்கலைக்கழக மாணவியும் போராளியுமான ஜனனி செல்லத்துரை பேட்டி கண்டிருந்தேன். அவரை போலவே சைந்தவி ராஜரத்னமும் எனக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியாக அவர் இருக்கும் போது 2004 எனக்கு அறிமுகமானார். அவரை நான் வடபகுதி "தமிழ் இளையோரும் தற்கொலையும்" என்ற தலைப்பிலான எனது களஆய்வுக்காக பேட்டி கண்டிருந்தேன். இன்று சைந்தவி தனது பிறப்பிடமான தம்புள்ளயில் வசிக்கிறார். சைந்தவி சொன்னபடி தம்புள்ளை நகரை ஊடறுத்து செல்லும் A9 பாதையில் அமைத்துள்ள உல்லாசப்பயணிகள் விடுதியின் சிற்றூண்டிச்சாலையில் என்னை சந்திக்க வந்திருந்தார். சிங்கள பெண்கள் அணியும் முறையில் சேலை உடுத்திருந்தார்.


2004 இக்கு பின்னான உங்களது சீவியம் இன்று எப்படி உள்ளது? தனிமனித, சமூதாய, அரசியல் கண்ணோட்டத்தில் பதிலை எதிர்பார்கிறேன். உதாரணமாக, உங்களை 2004 இல் சந்திக்கும் போது தமிழ்.., தமிழ்.., தமிழ்ஈழம் என்று நீங்கள் தமிழ் தேசியவாதியாக உங்களை உருவாகப்படுத்தினீர்கள். இன்று உங்கள் உருவமே மாறியுள்ளது. சிங்கள சாறியும் நெற்றி பொட்டும் இல்லாமல் வந்துள்ளீர்கள் .... சிரித்தபடி பதில் சொல்ல ஆரம்பிக்கிறார் சைந்தவி.


முதல்ல ஒரு கண்டனம். நான் ஆணாக இருந்திருந்தால் நீங்கள் நான் எந்த உடையில் வந்திருந்தாலும் அதைப்பற்றி கேட்டிருக்க மாட்டீர்கள். பெண்கள் இன, மொழி, பிரதேச, சாதி அடையாளங்களை காவ வேண்டுமென்ற ஆணாதிக்க சமூதாய சிந்தனையின் வெளிப்பாடுதான் உங்கள் கேள்வியின் பின்னணியில் உள்ளது. அதுவும் இடதுசாரி அரசியல் பின்னணி கொண்டவராவும் ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து  தேசிய சமூக முரண்பாடுகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் இனங்களுக்கிடையிலான ஐக்கியம் வளர்க்கப்பட வேண்டுமெனவும் கதைக்கும் நீங்கள் நான் சிங்கள சாறியில் நெற்றி பொட்டில்லாமல் வந்தது பற்றி கேட்டதை கண்டிக்கிறேன். தம்புள்ள ஒரு பல்லின சமூகம். இங்கு பிறந்து வளர்ந்த எனக்கு எந்த உடை அணிவதென்ற பிரச்சனை எந்த காலத்திலும் இருந்ததில்லை. இப்போ நான் கணக்காளராக இங்குள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறேன்.


மற்றது நான் எந்தகாலத்திலும் தமிழ் ஈழ தேசியவாதியாக என்னை காட்டிக் கொள்ளவில்லை. நான் யாழ்ப்பாணத்தில் படித்த காலத்தில் (1999 -2006), அரச படைகளின் கட்டுப்பாடில் யாழ்ப்பாணம் இருந்தாலும் அங்கு புலிகளின் கை ஓங்கி இருந்தகாலம். அங்கு சீவித்த அனைவரும் அவர்களின் கொள்கைக்கு இணங்கியவர்களாக காட்டிக்கொள்ள வேண்டிய தேவை இருந்தது. குறிப்பாக யாழ்பாண பல்கலைகழகத்தில் என்னை போன்ற வடக்கு - கிழக்குக்கு தவிர்ந்த வெளி மாவட்டங்களில் இருந்த கல்விகற்றவர்கள் பலர் தமிழர் களாக இருந்தாலும் சந்தேக கண்ணுடன் பார்க்கப்பட்டோம். வெளிமாவட்ட ஆண் மாணவர்கள் சிலரை இலங்கை அரச புலனாய்வு நிறுவனங்களின் உறுப்பினர்கள், என எமது சக மாணவர்களே புலிகளிடம் கோள் மூட்டி கொடுத்தார்கள்.


அதனால் பலர் தமது கல்வியை இடைநிறுத்தி விட்டு சொந்த ஊருக்கு போய் விட்டனர். என்னை போன்ற வெகு சிலரே அங்கு எமது கல்வி கற்கை நிறைவு செய்தோம். நீங்கள் என்னை சந்தித்த 2004 போர் நிறுத்த காலப்பகுதியில் யாழ் பல்கலைகழகம் முற்று முழுதாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது புலிகளுடன் சாராது சில மாணவர்களால் பொங்குதமிழ் என்ற சிறு நிகழ்வு உருவாகப்பட்டது. நான் பாடக் கூடியவளாக இருந்ததால் நானும் அதில் பங்கு கொண்டேன். பொங்குதமிழ் நிகழ்வை ஆரம்பித்தவர்களை மிரட்டி தமது கட்டுப்பாடில் கொண்டு வந்தனர் புலிகளின் அதிகார சக்திகளாக அங்கு வலம் வந்த புலிகளின் மாணவர் பிரதிநிதிகளான கஜேந்திரன் (குதிரை) போன்றோரும் கணேசலிங்கம் போன்ற விரிவுரையாளர்களும். புலிகளுடன் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், பொங்குதமிழ் நிகழ்வில் இருந்து விலக முடியவில்லை. அப்படி விலக முயன்றவர்கள் தண்டிக்கப்பட்டனர். சிலர் வன்னிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போதான் நீங்கள் என்னை சந்தித்தீர்கள். அதனால் தான் நான் அன்று என்னை தேசியவாதியாக உருவாகபடுத்தினேன் என நீங்கள் கூறுகிறீர்கள்.

சரி தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தை பற்றி நீங்கள் இன்று என்ன நினைகிறீர்கள் ?


அது வடக்கு - கிழக்கு தமிழர்களின் போராட்டம். குறிப்பாக அது வடக்கின் யாழ்ப்பாண மேல்தட்டு வர்க்கத்தின் போராட்டம். மேற்படி வடக்கு - கிழக்குக்கு வெளியில் எல்லைப் பிரதேசங்களில் பாரம் பரியமாக வசித்த எம்மையோ அல்லது மலையாக மக்களையோ அந்த போராட்டத்தில் எவரும் இணைக்க முயற்சி செய்யவில்லை. இலங்கை அரச இயந்திரத்தின் திட்டமிட்ட முறையில் முன்னேடுக்கப்பட்ட கொடுமைகளை அனுபவித்தவர்கள் எல்லைப்புற பகுதிகளான தம்புள்ளை, அனுராதபுரம் போன்ற நகரங்களில் வாசித்த தமிழர்கள். அதேபோன்று பல நூறு வருடங்களாக இன்றுவரையும் தொழிலாள வர்க்கமாகவும் தமிழர்கள் என்ற இன அடிப்படையிலும் ஒடுக்கப்படுபவர்கள் மலையாக மக்கள். நாம் அனுபவித்த ஒடுக்கு முறையுடன் ஒப்பிடும் போது வடபகுதி மக்கள் நேரடியாக 80களுக்கு முன் பெரிய அளவில் எந்த ஒடுக்குமுறையையும் ஒப்பிடளவில் அனுபவிக்கவில்லை. என்னை பொறுத்த அளவில் தமிழ் தேசிய விடுதலை போரட்டமானது வடபகுதி அரசியல்வாதிகளால் தமது சுயநல தேவைக்காக மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று. அதனாலேயே பாரிய புலம்பெயர்வை வடபகுதி மக்கள் மேற்கொண்டனர். அவர்கள் எவரும் அந்த போராட்டத்தை தமதாக நினைக்கவில்லை. இன்று மூன்றில் ஒருபங்கு தமிழர்கள் மேற்கு நாடுகளில் வாழ்கின்றனர்.


புலிகளின் தோல்விக்கும் இதுதான் காரணம் என்கிறீர்களா ?


பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் மக்கள் தமது போராட்டமென நினைத்து அதற்கு உரிமை கொண்டாடாத போராட்டம் எதுவும் வென்றதாக சரித்திரம் இல்லை. எந்த வர்க்கம் தேசிய போராடத்தை திணித்ததோ அதே வர்க்கம் போராட்டம் முற்றி அது வன்முறையாக மாறியபோது அதிலிருந்து தப்பியோடியது. கல்வியில் அரச பதவிகளில் சம உரிமை இல்லாமல் போய் விட்டதென காரணம் காட்டி போராட்டத்தை ஆரம்பித்த வர்க்கம் புலம் பெயர்ந்த நாடுகளில் அனைத்து வசதியையும் அங்கு பெற்று கொண்டது. புலம் பெயர்த்த மக்கள் புலிகளுக்கு காசு கொடுத்து ஒருவகை PROXY போராடத்தை இங்கு முன்னெடுத்தார்கள். அடிப்படை வசதிக்காக அன்றாடம் போராடிய மக்கள் தலையில் தேசிய இனப்பிரச்சனையும் போரும் சுமத்தப்பட்டது. அதற்கு பலியானவர்கள் சமூதாயத்தில் ஏற்கனவே மேற்படி புலம்பெயர்ந்த மேற்தட்டு வர்க்கத்தால் சாதி சமூதாய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களே. அதே போன்று மறுபக்கத்தில் பேரினவாத மேற்தட்டு வர்க்கத்தின் அதிகார வெறிக்கு உழைக்கும் சிங்கள மக்களின் எதிர்காலமும் அவர்களின் பிள்ளைகளின் உயிரும் பலியிடப்பபட்டது. ஆகவே தமிழ் தேசிய போராட்டமென்பது கருவிலேயே சிதைவடைந்த போராட்டம். புலிகள் தலைமை தாங்கினால் என்ன வேறு யாராவது தலைமை தாங்கினால் என்ன அது இறுதியில் அழிவையே முடிவாக கொண்டிருக்கும்.


மேற்படி உங்கள் பதிலில் வர்க்கம் என்ற பதத்தை பல இடங்களில் பாவிக்கிறீர்கள். அப்படியானால் சிலர் சொல்வது போல வர்க்கசிந்தனையை அடிபடையாக கொண்ட சக்திகளால் தான் இனி தோற்றுப் போன தமிழ்த்தேசிய பிரச்சனை கையாளப்பட வேண்டுமென நினைக்கிறீர்களா?


எந்தவித தத்துவ பின்புலத்தை கொண்ட சக்திகள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்பது நானோ அல்லது சில தனிநபர்களோ தீர்மானிக்கும் விடயமல்ல . அது எந்தவிதமான சமூக பொருளாதார சூழல் ஒரு சமூகத்தில் நிலவுகிறதென்றதை பொருத்தது. செருப்பின் அளவுக்கு தக்கியது மாதிரி காலை வெட்ட முடியாது. அது போன்று தத்துவதுக்கு தக்கியது மாதிரி சமூக பிரச்சனைகள் தம்மை மாற்றி கொள்வதில்லை. தத்துவ பிரயோகம் தான் பிரச்சனைகளுக்கு தக்கியது மாதிரியாக அதை தீர்க்கும் முகமாக இருக்க வேண்டும். இன்றுவரை வலதுசாரி தத்துவ சிந்தனையும், முதலாளித்துவம் சார்ந்த சக்திகளும் தான் இலங்கையில் தமிழ்தேசிய பிரச்சனையில் ஆதிக்க சக்திகளாக இருந்து வருகின்றனர். அதனால் தான் போராட்டம் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் அடிப்படையில் வர்க்க பார்வையில் உலகத்தை விளங்கி கொள்ளும் தத்துவப்பார்வை கொண்ட சக்திகள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்பதே என்னை பொறுத்த அளவில் எம் முன்னுள்ள ஒரே தெரிவு.


அதாவது சிலர் சொல்வதுபோல 'சர்வலோக நிவாரணியான" மார்க்ஸ்சிஸ தத்துவம் தான் ஒரே தெரிவு என கூற வருகிறீர்கள் ?


நீங்கள் நகைப்புக்காக கூறினாலும் இன்றுள்ள உலகத்தின் முரண்பாடுகள் அனைத்தையும் அது தேசிய, சாதிய, வர்க்க, பெண்ணிலை சார்ந்த எவ்வகையான முரண்பாடாக இருக்கலாம். இவை அனைத்தையும் விளங்கி கொள்ள உதவுவதுடன் அரசியல் சார்ந்து சமூக மாற்றம் மூலம் சமூக முரண்பாடுகளை தீர்க்க வழிகாட்டுவது மார்க்ஸ்சிசமே. அத்துடன் அனைத்து முரண்பாடுகளையும் இணைத்து அவற்றிற்கு எதிராக போராட வகை சொல்வது மார்க்ஸ்சிசம் மட்டுமே. உதாரணமாக தேசிய போராட்டத்தை பெண்ணிய ஒடுக்கு முறைக்கெதிரான போராட்டத்தை வர்க்க முரண்பாட்டை தீர்க்கும் போராட்டத்துடன் இணைக்க முடியும். இன்று மலையகத்தில் மலையக மக்களை தேசிய இனமாக முன்னிறுத்தி உரிமைக்காக போராடும் குரல்கள் எழுதுள்ளன. இந்த குரல்கள் மலையக மக்களின் தேசிய உரிமையை முன்னிறுத்தும் அதேவேளை அவர் களின் வர்க்க நலனையும் உயர்த்திப் பிடிக்கின்றன. மலையக தமிழர்களின் வர்க்க மற்றும் தேசிய உரிமை பற்றி கதைக்கும் போது அங்குள்ள பெண்களின் உரிமை பற்றி கதைத்தே ஆகவேண்டும். ஆகவே நீங்கள் என்ன தான் சொன்னாலும் மார்க்ஸ்சிசம் சமூகத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண பிரயோகிக்க கூடிய தத்துவம். எனது இந்த கருத்தை ஏற்பதும் ஏற்காததும் அவரவரது வர்க்கம் சார்ந்தது.


இன்று தம்புள்ளயின் அரசியல் சமூக நிலைமை பற்றி சொல்லுங்கள்.


தம்புள்ளையை இன்று அரசபடைகளால் 'சிறை" பிடிக்கப்பட்ட பிரதேசமாகவுள்ளது. யுத்தம் நடந்தபோது இங்கு படையினர் பெரிய அளவில் இருக்கவில்லை. இப்போ தம்புள்ளையை சுற்றி பயிற்சி முகாம்களும் ராணுவ தளங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. பல நூறு ஏக்கர் தனியாரின் விவசாய காணிகளும், அரச காணிகளும் காடும் பாதுகாப்பு அமைச்சினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்களே கவனித்திருப்பீர்கள், எங்கு பார்த்தாலும் இராணுவத்தினரையும் புலனாய்வு பிரிவினரையும் காண முடியும். கடந்த வருடம் மரக்கறி விவசாயிகளால் நடத்தப்பட்ட பிளாஸ்டிக் கூடைக்கு எதிரான போராட்டத்தின் பின் மேற்படி ராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பு இங்கு அதிகரித்துள்ளது. போராடத்தை முன்னெடுத்தவர்கள் அதன் பின் வந்த நாட்களில் பயம் காரணமாக ஒருவர் ஒருவராக இங்கிருந்து வேறு பிரதேசங்களிற்கு போய்விட்டனர் என சொல்லப்படுகிறது. அதேவேளை இங்கு மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் ஜேவிபியின் அரசியல் வேலைகளும் அதிகரித்துள்ளது. இன்னொருவகையில் சொல்வதானால் 'புயலுக்கு முந்திய அமைதி"யான ஒருவகை அச்சமூட்டும் நிலை இங்கு நிலவுகிறது.


உங்களுடன் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் படித்தவர்கள் சிலரை யுத்தத்துக்கு பின்னான காலத்தில் சந்தித்தேன். அனைவரும் வெகுவாக விரக்தி அடைந்த நிலையில் உள்ளனர். கோபமும். ஆத்திரமும் அவர்களிடம் மிதம் மிஞ்சி காணப்படுகிறது. ஒருவகை கையறு நிலையில் அவர்கள் இருப்பதை உணர்ந்தேன். நீங்கள் அவர்கள் பலருடன் சேர்ந்து இயங்கியவர். ஆனால் அவர்களிடம் காணப்படும் மேற்படி விரக்தியான நிலை உங்களிடம் காண முடியவில்லை. காரணமென்ன? மேலும் புலிகளுடன் முரண்பட்டவர்களை கூட புலிகளின் வீழ்ச்சி பாதித்தது.


நீங்கள் சொல்வது மிகவும் சரி. எனது பல்கலைக்கழக தோழர்கள் பலரை முன்னாள் போராளிகள் என கூறமுடியும். அவர்கள் தம்மை விரும்பி புலிகளுடன் இணைத்து கொண்டவர்கள். புலிகளின் போராட்டம் வெல்லுமென்ற நம்பிக்கையில் தமது வாழ்வை அர்ப்பணித்தவர்கள். வெளிநாட்டு மாப்பிள்ளை, வெளிநாட்டு சீவியம், லண்டம் ஸ்கொலர்ஷிப் போன்றவரை தூக்கி எறிந்தவர்கள் அவர்கள். ஆனால் இன்று எல்லாம் இழந்து நடுரோட்டில் நிற்பது போன்ற வாழ்க்கை சூழலில் உள்ளனர். நான் சில காலம் அவர்களுடன் இணைத்திருந்தாலும் என்னை ஒரு முன்னாள் புலி போராளி என கூற முடியாது. நான் ஒரு அடிமட்ட கூலி விவசாயியின் மகள். இன முரண்பாடுகளை நாம் அரச இயந்திரத்தால் அனுபவித்திருந்தாலும் அன்றாட சீவியத்துக்கான போராட்டம் எப்போதும் முக்கிய பிரச்சனையாக என் குடும்பத்துக்கு இருந்தது. அதே போன்று எம்மை சுற்றி இருந்த முஸ்லீம்கள் சிங்களவர்கள் அனைவருக்கும் வறுமைதான் முக்கிய பிரச்சனையாக இருந்தது. அதனால் சாதாரண மக்களான எமக்கிடையில் இன முரண்பாடு பெரிதாக வளரவில்லை. நான் அயல் வீட்டு சிங்களவர்களின் சாப்பாட்டை சாப்பிட்டு வளர்த்தவள். அதனால் புலிகளின் தோல்வி என்னை பெரிதாக பாதிக்கவில்லை. 2006 ஆம் அண்டு நான் கேலனிய பல்கலைக்கழகத்தில் Master of Accounting and Finance கற்கையில் ஈடுபட்டபோது மார்க்சிய சிந்தனையை அறிந்து கொண்டதும் தோல்வி என்னை பாதிக்காததிற்கான முக்கிய காரணியாக இருக்கலாம். மார்க்சிசம் மூலம் நான் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் மாற்றத்திற்கான அடியாக பார்க்க கற்று கொண்டேன். அந்த வகையில் நான் எப்போதுமே போராளிதான்.

முன்னாள் போராளி ஒருவரை சந்திக்க போகிறோம் என்ற எண்ணத்தில் வந்த எனக்கு, தான் எப்போதும் போராளிதான் என அறிவுறுத்தி விட்டு என்னிடமிருந்து விடை பெற்றார் சைந்தவி ராஜரத்தினம். மூன்று மணித்தியாலங்கள் எவ்வாறு கழிந்ததென்று தெரியாமல் கழிந்திருந்தது. தம்புள்ள நகரை செக்கல் கவிந்தது. நகரின் மேற்கு புற வானம் சிவந்திருந்தது.