Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நாடு எரிமலை முகட்டில்- பதுளையில் நீறு பூத்த நெருப்பு

'பொது" என்று சொல்லிக் கொள்ளும் ஏதோ ஒரு'சேனா" சுற்றித் திரிவதாக நாங்கள் சொன்னோம். அது மட்டுமல்ல பைத்திய நாய்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் நாங்கள் சொன்னோம். அப்படி சொன்ன பிறகு, 'ஜனரல" அலுவலகத்துக்கு ஓய்வே இல்லை.

'ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? அந்த பிக்குவுக்கு ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? அது பௌத்த விரோத பத்திரிகையா?" என்றெல்லாம் கேள்விக் கணைகள் அலுவலகத்துக்கு வந்தன. நாங்கள் ஒரு விடயத்தைச் சொல்ல வேண்டும். நாங்கள் எந்தவொரு மதத்தையும் தூக்கிப் பிடிக்கும் பத்திரிகையல்ல. அதேபோன்று மிதிக்கும் பத்திரிகையுமல்ல. ஆனால், இனவாத மதவாத நச்சுப் பாம்புக்கு எங்கிருந்து வந்தாலும் நாங்கள் அதற்கு எதிரிகள்தான். இனவாதமும் மதவாதமும் இந்த நாட்டுக்கு இழைத்த தீங்குகளை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று 'ஜனரல" நினைக்கிறது. அதற்காகத்தான் 'ஜனரல" எழுதுகிறது. எந்தவொரு சேனாவாலும் அதனை நிறுத்த முடியாது. ஏற்கனவே கூறிய தொலைபேசி அழைப்புகளுக்கிடையில், "பதுளைக்கு வந்து முடியுமானால் உண்மையை எழுதுங்கள்" என்று வித்தியாசமான அழைப்பொன்று வந்தது. ஆமாம்! அது நல்லது! இதோ நாங்கள் பதுளைக்கு வந்து விட்டோம். அந்தப் பயணத்தின்போது நாங்கள் அறிந்துக் கொண்ட உண்மைகளை எழுதுவதற்கு இதோ தயாராகிவிட்டோம்!

பதுளை நகரத்தை அடையும்போது அதிகாலை நான்கு மணியாகி இருந்தது. அதுவரை பஸ்ஸுக்குள் இருந்த சூடு தணிந்து குளிர் காற்று எங்களை ஆக்கிரமித்துக் கொண்டது. காலையிலேயே பயணங்களை மேற்கொள்வதற்காக வந்திருந்த பயணிகளும், எங்களைப் போன்று தூரப்பிரதேசங்களிலிருந்து வந்தவர்களும் தம்மை  அழைத்துச் செல்வதற்கு யாராவது வரும்வரை அங்கு காத்திருந்தார்கள். அதனால் பதுளை பஸ் நிலையம் ஓரளவு சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டிருந்தது. குளிர் கடுமையாக இருந்ததால் கோப்பி குடிப்பதற்காக சிறிய தேனீர் கடையொன்றுக்குள் நுழைந்தோம். அந்தக் கடையின் முதலாளி ஒரு முஸ்லிமாக இருந்ததையும், அங்கே சிங்களவர்கள் தமிழர்கள் உள்ளிட்ட சிலர் தேனீர் அருந்திக் கொண்டிருந்ததையும் கண்டோம். பொதுவாக இருந்தாலும் அதுதான் முதல் சாட்சி. அது எங்களுக்கு ஒரு ஆறுதலைத் தந்தது. என்றாலும், நீறுக்குள் நெருப்பு இருப்பதும் எங்களுக்குத் தெரியும். இப்போது சூரிய ஒளி கொஞ்சம் கொஞ்சமாக பதுளை நகருக்கு ஒளியேற்றிக் கொண்டிருந்தது. சூரிய ஒளிக்குப் பயந்ததைப்போல குளிர் மெதுவாக விலகிக் கொள்ளும்போது எங்களைத் தேடி வந்த பயணத் தோழரோடு நீறுக்குள் நெருப்பைத் தேடி பயணமானோம். கொளுத்துவதற்கல்ல, அணைப்பதற்காக.

பதுளை நகரத்தை அண்மித்த குடியிருப்பு பதுளுபிட்டிய. பதுளுபிட்டிய என்பது, சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் ஒன்றாகக் கலந்து வாழும் பிரதேசமாகும். முஸ்லிம் வீட்டில் மரணம் சம்பவித்தால் பள்ளிவாயலில் முதலாவதாகக் குழுமுவது சிங்களவர்கள் அல்லது தமிழர்கள்தான். சிங்களவர் வீட்டில் பிரச்சினையென்றால் அங்கே முதலில் வருவது பக்கத்து வீட்டில் வசிக்கும் முஸ்லீமோ, தமிழரோ தான். ஒவ்வொருவரின் கலாச்சார விழாக்களிலும் ஒவ்வொருவரும் கலந்துக் கொள்வார்கள். அப்படியான விழாக்களின்போது ஒவ்வொருவரினது உணவு, பானங்களையும் முழு பதுளுபிட்டிய மக்களும் சுவைப்பார்கள்.

தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம். பதுளுபிட்டிய என்பது சுவர்க்க புரியல்ல. பொருளாதாரப் பிரச்சினை பதுளுபிட்டிக்கு இல்லாமலில்லை. வேலையில்லாப் பிரச்சிணை பதுளுபிட்டிக்கும் உண்டு. சுகாதாரப் பிரச்சிணை, கல்விப் பிரச்சிணை இல்லாமலில்லை. இத்தனைக்கு மத்தியிலும் இனவாத விஷத்தை ஒதுக்கி விட்டு பதுளுபிட்டிய மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். ஆனாலும் நாளைக்காக ஒரு கேள்வியை முன்வைத்துவிட்டு அனைத்தும் வரிசையாக வந்துகொண்டிருகின்றன.

இனவாத-மதவாத நச்சுப் பாம்பு பதுளுபிட்டியை நோக்கி ஊர்ந்துக் கொண்டிருக்கின்றது. இந்த நச்சுப் பாம்பு பதுளுபிட்டியில் பிறக்கவில்லை. அது முதலாளித்துவ ஆட்சியாளர்களின் செல்லப் பிள்ளையாக முதலாளித்துவத்தின் மடியில்தான் பிறக்கின்றது. தமது வர்க்கத்தின் நலனுக்காக 'நச்சுப் பாம்பை" பத்திரமாக பார்த்துக்கொள்பவர் 'தேசியப் பாதுகாப்பு" என்று அடிக்கடி உளரிக் கொட்டும் வெறி பிடித்த மனிதனாகும். எப்போதும் கழுத்துப்பட்டியை அணிந்திருக்கும் அவர் யாரென்று கூறவேண்டிய அவசியமில்லை. நச்சுப் பாம்பு நாடு பூராவும் பயமில்லாமல் ஊர்ந்து செல்வதற்கு ஆட்சியாளர்ளிடம் மிலிடரி பலமும் இருக்கின்றது. உத்தியோகப் பதவி இல்லாத மிலிடரி பலமும் உண்டு. நச்சுப் பாம்பை அந்தளவுக்கு ஊர்ந்து செல்ல வைப்பதற்கு உதவி செய்யும் 'மஞ்சள் உடை" பலமும் இருக்கின்றது. நாங்கள் அதனை 'சிவுர" என்று அழைக்காமல் இருப்பதற்கு காரணம் அடிப்படைவாதத்திற்குள் வீழாத இஸ்லாமியர்கள், இந்துக்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் பொளத்தர்களும்  இந்த தீபகற்பத்தில் இன்னும் இருப்பதுதான். நச்சுப் பாம்பை ஊர்ந்து செல்வதற்கு உதவி செய்யும் 'பிஸ்ஸு பலு சேனா"வின் உள்ளரங்கம் குறித்து சென்ற வார பத்திரகையில் கூறியிருந்தோம். ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்தோடு செயல்படும் அந்த சேனாவை பதுளைக்கு கொண்டு வரும் பொறுப்பு பதுளையைச் சேர்ந்த ஒரு நபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த நபர் யார்?

இப்போது நாங்கள் பதுளுபிட்டிய மக்களின் குரலுக்கு செவிமடுப்போம். அவர்களது பாதுகாப்பு கருதி அவர்களது ஊர், பெயர்களை வெளியிடாதிருப்போம். என்றாலும் அனைத்துக் குரல்களையும் இவ்வாறு பதிவுசெய்கிறோம்.

"பதுளுபிட்டிக்கு இனவாதத்தைக் கொண்டுவர ஆட்சியாளர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவது 'தயாசிரி" என்று அழைக்கப்படும் ஒரு நபர். அவர் முன்னர் நகர சபை உறுப்பினராக இருந்தார். மாநகர சபை தேர்தலில் தோற்றதால் முஸ்லிம் மக்களோடு கோபமாக இருக்கிறார். தான் தோற்றது முஸ்லிம்கள் வாக்களிக்காதமையால் தான் என்று அவர் நினைக்கிறார். உண்மையான செய்தி என்னவென்றால், அவரைத் தோற்கடித்துவிட்டு இன்னொரு சிங்களவரை முஸ்லிம் மக்கள் வெல்ல வைத்திருக்கிறார்கள். அரசியலைத் தெரிவு செய்வது குறித்து பிரச்சிணைகள் இருக்கலாம். வாக்களித்த விடயத்தில் இனவாதம் கொஞ்சம் கூட ஒட்டியிருக்கவில்லை. சமீபத்தில் நடந்த சம்பவங்களுக்காக கொழும்பிலிருந்து வந்த 'சேனா"வின் ஆட்களை தயாசிரிதான் வழி நடத்தினார். அந்த புத்தரின் படம் அச்சிடப்பட்டிருந்த கையுறைகள் இருந்ததாகக் கூறப்படும் முஸ்லிம் கடை நல்லதொரு வியாபாரியின் கடை. அப்படியான கையுறைகள் அந்தக் கடையில் இருக்கவில்லை. அதே நிறத்தைக் கொண்ட வேறு கையறைகளைக் காட்டித்தான் பொலிஸரை வழி கெடுத்துள்ளார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய வந்திருந்தவர்களிடம்தான் அப்படியான கையுறைகள் இருந்தன. அது ஒரு திட்டமிட்டச் செயல் என்பது நன்றாவே தெரிகிறது.

அன்று 'கையுறை" சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு முஸலிம்களுக்கு எதிரான ஊர்வலமொன்று நடந்தது. ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது பாதையில் சென்று கொண்டிருந்த த்ரீவீல் ஒன்றில் பயணித்த ஒரு மனிதரை வெளியில் இழுத்து, கடுமையாகத் தாக்கி த்ரீவீலரையும் அடித்து நொறுக்கியுள்ளனர். பின்னர் த்ரீவீலின் மீது மரமொன்று விழுந்ததாக முறைப்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

அது முதலாவது ஊர்வலம் அல்ல. அதற்கு முன்னரும் பதுளையில் ஊர்வலமொன்று சென்றது. 'கிழக்கின் பௌத்த உரிமைகளைப் பாதுகாப்பீர்" என்று. இரண்டாவது ஊர்வலம் நேரடியாகவே முஸ்லிம்களுக்கு எதிரானது. இவர்கள் அதோடு நிறுத்திவிடவில்லை. பதுளுபிட்டி முஸ்லிம்களுக்கு சொந்தமான நான்கு ஆடுகளை வாகனமொன்றைக் கொண்டு வந்து எடுத்துச் சென்றுள்ளார்கள். கலவத்தை என்ற பிரதேசத்தில் வைத்து ஒரு ஆட்டை கழுத்தை வெட்டிக் கொன்றுள்ளார்கள். இதற்கு முஸ்லிம் மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பும், அப்போது திட்டமிட்டபடி சிங்கள-முஸ்லிம் இனக்கலவரத்தை உருவாக்க முடியும் என்று எண்ணியிருந்தார்கள். எதுவுமே நடக்கவில்லை..

அரசாங்கத்தை சார்ந்த பல அமைச்சர்கள் பதுளையில் இருந்தும் இவற்றைக் கண்டும் காணாததுபோல் இருக்கிறார்கள். தமது சீடகோடிகளை பாதுகாப்பதற்காக 'ஷேப்" ஆகுவோம் என்றுதான் அமைச்சர்களும், மக்கள் தொடர்ப்புச் செயலாளர்களும் சொல்கிறார்கள். பதுளை இப்போது அமைதியாக இருப்பதாகக்  காட்ட முயற்சித்தாலும், உண்மையான செய்தி அதுவல்ல.

முஸ்லிம் மக்கள் அச்சத்துடனேயே வாழ்கிறார்கள். நாளை என்ன நடக்குமோ என்ற பீதி அவர்களிடத்தில் இருக்கின்றது. இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக் கொதித்துப் போகக் கூடியவர்கள். இப்படியான இனவாத மதவாத 'சேனா"க்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் போது ஏதாவதொரு விபரீதம் நடந்தால் என்ன நடக்கும்? எங்கு போய் முடியும்?

நாங்கள் எழுத வேண்டும் என்று விரும்பிய, பதுளையில் நடந்த உண்மையான சம்பவத்தின் சாராம்சம் இதுதான். எவராவது சொல்லி நாங்கள் இதனை எழுதவில்லை. நச்சுப் பாம்பைத் தோற்கடிக்க வேண்டும் என்ற துடிப்பினாலேயே நாங்கள் எழுதினோம். பாம்பு தலை தூக்குவதைப் பற்றி உரத்துக் கூற வேண்டுமென்பதற்காகவே எழுதினோம். நீறு பூத்த நெருப்பின் மீது நாள் பூராவும் அலைந்த நாங்கள் திரும்பி வருவதற்குத் தயாரானபோது, காலையில் ஒழிந்தோடிய குளிர் மாலையில் எங்களை ஆரத்தழுவிக் கொண்டது. அந்தக் குளிர் 'தமிழனா, சிங்களவனா, முஸ்லிமா என்று பார்க்காமல் நான் எல்லோரையும் தழுவிக் கொள்வேன்" என்று கூறுவதைப் போன்று எங்களை மேலும் இறுகத் தழுவிக் கொண்டது.

-www.lankaviews.com/ta