Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கல் தோன்றி (சிறுகதை)

இன்ரநெற்றும், சற்றலைற்றும் இல்லாத ஆயிரத்து தொளாயிரத்து ஆரம்பத்தில் ஒருநாள்.

பேய் மழை அடித்து ஊத்திக் கொண்டிருந்தது. யுத்த விமானங்களோ அல்லது பீரங்கிகளோ வீசும் குண்டுகளைப் போல இடி காதைப் பிளந்தது. மின்னல் அகோரமாய் வெட்டிக் கொண்டிருந்தது.

மற்றும்படி மத்தியான நேரத்துக்கு ஒவ்வாத இருட்டு. மழை தொடர்ந்தும், சத்தமாயும்பெய்தது.

மரங்கள் முறிந்து தாறுமாறாய் விழுந்தன. வெள்ளம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் கரை புரண்டது. ஒழுங்கைகள் எதுவும் தெரியாதபடி எங்கும் வெள்ளம்.

பள்ளக்குடி ஊரில், வெளியில் மழையில் மாட்டிக் கொண்டவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் தங்களது கூரைகளுக்குக் கீழிருந்து மழையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொருவருடமும் இந்தக் காலப் பகுதியில் மழையால் அழிவது உறுதியாக இருந்தாலும், மழைக்குப் பின் நம்பிக்கையுடன் வாழ்வதும், திரும்ப மழை பெய்யும்போது ஒடுங்குவதும், கலங்குவதுமாக பள்ளக்குடி மக்களின் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

பள்ளக்குடி என்பது பூகோளரீதியில் பொதுப் பெயராக இருந்தாலும், மழையால் மக்களின் பாதிப்பு என்பது வேறுவேறாகவே இருந்தது. மீன் பிடிப்பவர்கள் கடல் போகாமல் பட்டினி கிடந்தார்கள். தோட்டம் செய்தவர்கள் போட்டதையும் இழந்தார்கள். கூலி வேலைக்குப் போபவர்கள் இன்னும் வறுமையானார்கள்.

பெட்டிக் கடைகளில் வியாபாரம் படுத்துக் கொண்டது.

கல்வீட்டுக்காறரோ தங்களது முற்றத்து றோசா வெள்ளத்தில் அடிபட்டுப் போவதையும், வீட்டு சுற்று மதிலில் பாசி படர்வதையும், வீட்டுக்குள் அட்டைகள் வருவதையும் பார்த்துக் கவலைப்பட்டார்கள்.

மழையாலும் பிறகு வெள்ளத்தாலும் பிரச்சினை என்பது மட்டும்தான் எல்லோருக்கும் பொதுவான பிரச்சினையாக இருந்தது.

பள்ளக்குடி மக்கள் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. வெள்ள அழிவைத் தடுத்து நிறுத்த ஆடுகளின் தலையை வெட்டிப் பூசை செய்தார்கள். முழங்காலிலிருந்து மெழுகுதிரி எரித்தார்கள். மண்டியிட்டு நிலத்தை முத்தமிட்டு கைகூப்பித் தொழுதார்கள்.

என்ன செய்து என்ன. வருடாவருடம் மழை வருவது மட்டும் நிற்கவில்லை. மழையும், வெள்ளமும் பள்ளக்குடியை அரித்து அழிப்பதும் நிற்கவில்லை.

பெரிய படிப்பு படிப்பதன் மூலம் மழைப் பிரச்சினைக்கு முடிவு கட்டலாம் என்றும், இதற்காகத் தங்கள் பிள்ளைகள் தூர தேசம் போக வேண்டும் என்றும் கல்வீட்டுக்காறர் ஒருநாள் சொன்னார்கள். இந்த நல்லெண்ணத்தை மெச்சி மண்வீட்டுக்காறர் தங்கள் வாழைக்குலைகள், மரக்கறிகள், மீன்கள், கோழிகள் எல்லாம் கொண்டுவந்து கல்வீடுகளில் கொட்டினார்கள்.

கல்வீட்டுப் பிள்ளைகள் தூர தேசம் போனார்கள். ஆனால் அவர்கள் திரும்பப் பள்ளக்குடிக்கு வரவேயில்லை.

வருடாவருடம் மழை வருவது மட்டும் நிற்கவில்லை. மழையும், வெள்ளமும் பள்ளக்குடியை அரித்து அழிப்பதும் நிற்கவில்லை.

ஆயிரத்து தொளாயிரத்துப் பிற்பகுதிகளில் பள்ளக்குடி அநேகமாகப் பாழடையத் தொடங்கிவிட்டது. வெள்ள அரிப்பினால் பூகோள ரீதியாக சிறிதாகவும் தொடங்கிவிட்டது.

இப்போது பள்ளக்குடியில் புதிய சந்ததி வந்திருந்தது. அவர்கள் ஆட்டை வெட்டுவதையும், மெழுகுதிரி எரிப்பதையும், நிலத்தை முத்தமிடுவதையும் முழுமையாக நம்பவில்லை. இதனைத் தாண்டி எதையாவது செய்ய வேண்டும். அதுவும் விரைவில் செய்ய வேண்டும். இல்லையேல் பள்ளக்குடி முற்றாகவே அழிந்துவிடும் என்று அவர்கள் ஊகித்தனர்.

சந்திகள், குச்சொழுங்கை, மரத்தடி, பின்வளவு எல்லா இடமும் இப்போது இதே கதைதான். பள்ளக்குடி காணாமல் போகப் போகின்றது. இதிலிருந்து பள்ளக்குடியைக் காப்பாற்றுவது எப்படி என்பதைப் பற்றியே எல்லோரும் யோசித்து மண்டையை உடைத்துக் கொண்டிருந்தார்கள். பலராலும், பல்வேறு விதமாகவும் யோசிக்கப்பட்டு ஒரு பொது அபிப்பிராயம் உருவாகியிருந்தது. அது இதுதான்:

மேட்டுக்குடிக்குப் போவது. அங்கிருந்து மண் வெட்டி எடுத்து வருவது. பள்ளக்குடியை மேடாக்குவது.

மண் கொண்டு வருவது மட்டுமல்ல, மேட்டுக்குடியிலிருந்துதான் மழைவெள்ளம் உக்கிரத்தோடு வந்து பள்ளக்குடியை மூழ்கடிக்கிறது. அதனால் மேட்டுக்குடியிலிருந்து வாய்க்கால் வெட்டி, மழை நீரை கடலுக்கு அனுப்புவதால் வெள்ளம் பள்ளக்குடிக்கு வருவதைத் தடுக்கலாம் என்றும் முன்வைக்கப்பட்ட ஒரு சாராரின் யோசனை அவ்வளவு எடுபடவில்லை.

மண்வெட்டிக் கொண்டு வருவது விரைவில செய்து முடிக்கக் கூடிய ஒன்று என்று அந்த யோசனைக்கு ஆதரவாகப் பெரும்பான்மையாயும், வாய்க்கால் வெட்டுவது நீண்டகால நோக்கில் நல்ல தீர்வு என்று இந்த யோசனைக்கு சிறுபான்மையாயும் பள்ளக்குடியினர் வெவ்வேறு விதமாகச் சிந்தித்தாலும், மழை வெள்ளத்திலிருந்து பள்ளக்குடியைக் காப்பாற்றுவது என்பதில் மட்டும் ஒன்றாயிருந்தனர்.

மேட்டுக்குடிக்குப் போய் மண்ணை எடுத்து வருவது, வாய்க்கால் வெட்டுவது என்று யோசனைகளை சுலபமாக வைத்தளவிற்கு அடுத்த நடவடிக்கை அவ்வளவு துரிதமாக நடக்கவிலை. காரணம், மேட்டுக்குடி. டைனோசோரைப் போன்ற கொடிய விலங்குகள் அங்கிருப்பதாகவும், அங்கு போன யாரும் உயிருடன் திரும்பி வந்ததில்லை என்றும் ஊரில் தெளிவான கதைகள் இருந்தன. அதைவிட, மேட்டுகுடிக்குப் போகும் பாதைகளும் இலகுவானதாயில்லை. பள்ளத்தாக்குகள், அடர்ந்த காடுகள், ஆறுகள், பாம்புகள், பூச்சிகள் என்று ஆபத்துகள், தடைகள் அளவுகணக்கில்லாமல் இருந்தன.

வருடாவருடம் மழை வருவது மட்டும் நிற்கவில்லை. மழையும், வெள்ளமும் பள்ளக்குடியை அரித்து அழிப்பதும் நிற்கவில்லை. இப்போது வெள்ளத்தோடு பாம்புகளும் வீடுகளுக்குள் வரத் தொடங்கிவிட்டன. பெயர் தெரியாத நோய்கள் வந்து பலரைப் பலி கொள்ளவும் தொடங்கிவிட்டன.

பள்ளக்குடி மக்களின் பொறுமை போய்க் கொண்டிருந்தது. இந்தக் காலத்தில் கல்வீடுகளில் பிரகாசமான வெளிச்சத்தில் படித்தவர்கள் ஆளாளுக்குத் திட்டங்கள் போட்டார்கள். மேட்டுக்குடிக்குப் போவதற்கான தமது வழிமுறைகளைக் குறிப்பெடுத்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் மிகத் தெளிவாகத் தெரிந்த ஒன்று மேட்டுக்குடிக்கான பாதை கடினம் என்பதும், பயணம் அதை விட மிகவும் கடினம் என்பதும்தான். சிக்கலானதும், ஆபத்தானதுமான இந்தப் பயணத்தில் பலர் உயிருடன் திரும்பி வரப் போவதில்லை என்பதைக்கூட அவர்கள் அறிந்திருந்தார்கள்.

ஊரில் பொதுக் கூட்டம் கூட்டப்பட்டது. எல்லோருமே வந்திருந்தனர். கல்வீட்டுக்காறர் முன்வரிசைகளில் ஆசனங்களிலும், மண்வீட்டுக்காறர் பின்னால் தரையிலும் இருந்தனர்.

கல்வீட்டுக்காரப் பிள்ளைகள் தத்தம் யோசனைகளை ஆவேசமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும், நீண்டநேரமாகவும் கதைத்தனர்.

அவர்களது பேச்சு பள்ளக்குடியினரைக் கட்டிப் போட்டிருந்தது.

ஏற்கெனவே பெரிய படிப்புப் படித்தால் மழையை நிற்பாட்டலாம் என்று கல்வீட்டுக்காறர் தங்கள் பிள்ளைகளைத் தூர தேசம் அனுப்பியதும், போனவர்கள் இதுவரை திரும்பி வரவேயில்லை என்பதும், அவர்களுக்காகத் தாங்கள் வாழைக்குலைகள், மரக்கறிகள், மீன்கள், கோழிகள் எல்லாம் கொண்டுவந்து கல்வீடுகளில் கொட்டினதையும் நினைத்து மண்வீட்டுக்காறர் நம்பிக்கையீனமாக இருந்தாலும், வெள்ள அழிவை எப்பிடியாவது நிற்பாட்ட வேண்டும் என்ற ஒரே ஒரு முடிவுக்காகப் பேசாமலிருந்தார்கள்.

வர்ணனைகளாலும், ஏற்ற இறக்கங்களாலும் தங்களது பேச்சை வளர்த்துக் கொண்டிருந்த கல்வீட்டுக்காறப் பிள்ளைகள் இப்போது கொஞ்சம் நேரடியாகவே முக்கியமான விடயத்துக்கு வந்தார்கள்.

மேட்டுகுடிக்குப் போவதற்கான பயணத் திட்டங்களும், மண் கொண்டு வருவதற்கான வழிமுறைகளும் தங்களிடமே இருப்பதால் மேட்டுக்குடிக்கான பயணத்தில் தாங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் மிகவும் திறமையாகவும், ஆணித்தரமாகவும் விளங்கப்படுத்தினார்கள். இந்த ஒரே ஒரு காரணத்திற்காகவே மண்வீட்டுக்காறர் முன்னால் போய்க் கொண்டு தங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், தாங்கள் பின்னாலிருந்து அவர்களை அழகாக வழிநடத்துவதாகவும் அவர்கள் விபரித்தார்கள். கல்வீட்டுக்காரர் வரிசையிலிருந்து வானதிர கைதட்டல் ஓசை கேட்டது.

இந்தக் கதை மண்வீட்டுக்காறர்களிடம் ஒரு சலசலப்பை ஏற்படுத்தினாலும் அது அதிக நேரம் நீடிக்கவில்லை. மழையாலும், வெள்ளத்தாலும் செய்த தொழிலும் போய், குந்தியிருந்த இடமும் போய், பட்டினியோடு நாளைக்கு சாப்பிடக் கிடைக்குமா என்று தெரியாத நிலையில் பயணத்தில் முன்னால் போக மண்வீட்டுக்காறர் உடன்பட்டனர். இழப்பதற்கு இனித் தங்களிடம் எதுவுமில்லை என்ற விரக்தி அவர்களை அதிகம் குழம்ப விடவில்லை.

நாள் குறித்தாயிற்று.

பள்ளக்குடியே வழியனுப்பத் திரண்டிருந்தது.

கல்வீட்டுக்காறர் தங்கள் பிள்ளைகளை வெற்றித் திலகங்களாலும், மாலைகளாலும் அலங்கரித்தனர். தங்களிடமிருந்த எல்லாவற்றையும் வழித்துத் துடைத்து எடுத்துக் கொண்டு வந்த மண்வீட்டுக்காறர், பயணம் போகும் எல்லோருக்கும் கொடுத்தார்கள். மூடிக் கட்டியிருந்ததையும் மீறி அவர்களின் கண்ணீரும், வியர்வையும் அந்தப் பொதிகளிலிருந்து மணத்தன.

பட்டாசுச் சத்தத்திலும், வீராவேசக் கூச்சல்களிலும் மண்வீட்டுக்காறரின் அழுகை சத்தமின்றி கரைந்து போனது.

பயணம் தொடங்கியது.

மண்வீட்டுக்காறப் பிள்ளைகள் முன்னால் பாதையைச் செப்பனிட்டுக் கொண்டு போக, கல்வீட்டுக்காறப் பிள்ளைகள் தமது குறிப்புகளால் வழிநடத்திக் கொண்டு பின்னால் வந்தனர்.

வழியெல்லாம் குண்டும், குழியும். குறுக்குமறுக்காக முட் செடிகள். பாதையில் பாம்புகள். அடர்த்தியான பற்றைப் பகுதிகளில் இனம் தெரியாத விசப் பூச்சிகள்.

முன்னால் போனவர்களில் பலர் பாம்போ, பூச்சியோ கடித்து இறந்து போயினர். இன்னும் பலர் காயம் பட்டனர். இறந்தவர்களையும், காயம் பட்டவர்களையும் அந்தந்த இடங்களிலேயே விட்டுவிட்டுப் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது.

காயங்களுடன் இடையில் விடப்பட்டவர்கள் தகுந்த சிகிச்சையின்றியும், பசியாலும் சில நாட்களிலேயே இறந்து போயினர். காட்டு விலங்குகள் இழுத்துக்கொண்டு போனது போக மீதி உடலங்கள் அந்த மண்ணிலேயே உக்கத் தொடங்கின.

பயணம் போய்க்கொண்டிருந்தது.

மழை வந்தது. வெள்ளமும் வந்தது.

பயணத்தில் போய்க்கொண்டிருந்த பலர் இதிலும் அடிபட்டு மாண்டு போனார்கள். கல்வீட்டுக்காறர் பலர் திரும்ப பள்ளக்குடிக்குப் போய்விட்டார்கள். பள்ளக்குடிக்குப் போனவர்களில் சிலர் தூர தேசமும் போனார்கள்.

பள்ளக்குடியிலிருந்து ஆரம்பத்தில் பெரிய படிப்பு படிக்க வந்தவர்களும், பிறகு மழையால் வந்தவர்களுமாக ஏழு கடல் தாண்டிய தேசத்தில் இப்போது அவர்கள் தொகை அதிகரித்திருந்தது.

ஏழு கடல் தாண்டியவர்கள் ஒன்றும் பள்ளக்குடியை மறந்து போகவில்லை. பள்ளக்குடியை அழிக்கும் மழையை நினைவுகொள்ளும் முகமாக வருடத்தில் ஒருநாள் மழைநாள் என்று ஒரு நிகழ்வை நடாத்தினர். மிகுந்த பொருட்செலவில் நடத்தப்படும் இந்த விழாவில் மேலேயிருந்து தண்ணீர் குழாய் மூலம் மேடையில் தண்ணீர் பாய்ச்ச, அதில் நனைந்து கொண்டே, பள்ளக்குடியில் மழையை நிறுத்தியே தீருவோம் என்று நடிகர்கள் சபதம் போடும் உணர்வுபூர்வமான நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த நிகழ்வால் ஈர்க்கப்பட்டோ, ஆட்கொள்ளப்பட்டோ அல்லது ஏதோ பட்டோ பார்வையாளர்களில் பலரும் மேடைக்குப் பாய்ந்து ஏறி, சேர்ந்து சபதம் போடுவதும் குறிப்பிடத்தக்கது.

ஏழு கடல் தாண்டியவர்கள் வந்த தேசத்தில் தங்கள் உழைப்பை வழங்கியதால் நிதி கிடைக்கப் பெற்றார்கள். இதன்போதும் அவர்கள் பள்ளக்குடியை மறக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் மழையால் பாதிக்கப்படும் தங்கள் வீடுகளுக்கு புதிய வர்ணம் பூச நிதி அனுப்பினார்கள். வெள்ளத்தில் முறிந்து விழுந்த றோசா செடிகளுக்குப் பதிலாக ஏழு கடல் தாண்டிய தேசத்தில் இருந்த புதிய வகை குரோட்டன் செடிகளை வாங்கி அனுப்புவதோடு மட்டும் நின்று விடாமல், செடிகளைப் பராமரிக்கக் கூடிய வகையில் உரமும், பூச்சி மருந்தும் கூரியரில் அனுப்பி வைத்தார்கள்.

மழைநாள் நிகழ்வை ஏழு கடல் தாண்டிய தேசத்தில் இருந்த எல்லாப் பள்ளக்குடியினரும் ஆதரித்தார்கள் என்று சொல்ல முடியாது. இந் நிகழ்வு வெறும் உணர்வை மட்டும் தூண்டுகிறதேயொழிய அறிவுபூர்வமாக இல்லை என்று சிலர் தங்கள் விசனத்தை வெளிப்படுத்தினார்கள். தண்ணீர் குழாயிலிருந்து வரும் நீரில் நனைந்து சபதம் செய்வதல்ல தேவையானது. மேட்டுக்குடிக்கான பயணமும், அதிலுள்ள சிக்கல்களும் வெளிப்படையாகக் கதைக்கப்பட வேண்டும் என்றும் சொன்னார்கள்.

இப்படியான சிலரின் விசனங்கள் மேட்டுக்குடிக்கான பயணத்தைக் குழப்புவதற்கான சதிகளே என்று ஏழு கடல் தாண்டிய தேசத்தில் இருக்கின்ற பள்ளக்குடிப் பெரும்பான்மையினர் முடிவெடுத்தனர். இதற்கமைய பின்னாட்களில் வந்த பள்ளக்குடி அபிவிருத்திச் சங்கக் கூட்டங்களில் விசனப்பட்டோர் சேர்க்கப்படாமல் ஒதுக்கப்பட்டனர். இதைவிட பள்ளக்குடி அபிவிருத்திச் சங்கத்தினர் விசனப்பட்டோரைத் தெருவில் எதிர்கொள்ளும்போதும் விரோதிகளாகப் பார்த்துக் கொதித்தார்கள்.

ஏழு கடல் தாண்டிய தேசத்தில் மழைநாள் நிகழ்வுக்கு ஆதரவாவும், ஆதரவில்லாமலும் நாட்கள் போய்க் கொண்டிருந்தன.

பள்ளக்குடியிலிருந்து மேட்டுக்குடிக்குப் புறப்பட்ட பயணம் நீண்ட தூரத்தையும், வருடங்களையும் கடந்திருந்தது. பயணத்தில் புறச் சூழல்களால் பலர் இறந்து போயினர். அநேகமாக எல்லோரும் மிகவும் களைப்படைந்திருந்தார்கள்.

யாருடைய குறிப்புகள் மிகவும் சரியானவை என்று மோதிக் கொண்டதில் கல்வீட்டுகாறப் பிள்ளைகளில் பலர் இறந்தனர். இன்னும் சிலர் திரும்பிப் பள்ளக்குடிக்கே போய் விட்டனர்.

இத்தனை இழப்புகளுக்கும், துன்பங்களுக்கும் மத்தியிலும் தாங்கள் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இல்லை என்று அவர்கள் நம்பியபோதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

அவர்கள் இனிப் போக வேண்டிய பாதை பள்ளத்தாக்கொன்றை ஊடறுத்துச் செல்கின்ற ஒடுக்கமான பாதை. அந்தப் பாதையை மிகப் பிரமாண்டமான பாறாங்கல் ஒன்று அடைத்திருந்தது.

தங்கள் குறிப்புகளில் அந்தப் பாறாங்கல் பற்றி எதுவுமில்லாததால் குறிப்புகள் வைத்திருந்தவர்கள் குழம்பிப் போனார்கள்.

கல்லிருக்கும் வரைக்கும் பாதையைக் கடக்க முடியாது. பள்ளத்தாக்கிற்குள் இறங்கிப் போவதென்றால் இந்த நூற்றாண்டுக்குள் மேட்டுக்குடிக்குப் போய்ச் சேர முடியுமா என்று சொல்ல முடியாது. தவிர பள்ளத்தாக்கு குறித்த தகவல்களோ அல்லது அதற்குரிய தயாரிப்புகளோ அவர்களிடம் இல்லை.

எல்லோரும் கல்லின் முன் திகைத்துப் போயிருந்தனர். அவர்களது நம்பிக்கைகள் உடையத் தொடங்கின. சோர்ந்து போய் தரையில் விழுந்தார்கள். இத்தனை இழப்புகளுக்குப் பின்னர் இந்த நிலமையா என்று பலர் அழத் தொடங்கி விட்டார்கள்.

குறிப்புக் கொண்டு வந்தவர்களில் ஒரு பகுதி கல்லை எப்படித் தகர்ப்பது என்று யோசித்தார்கள். இன்னொரு பகுதி கல் எப்படி இங்கே வந்தது என்று ஆராய்வதுதான் முதல் வேலை என்றார்கள்.

ஆளாளுக்கு குழம்பினார்கள்.

நாட்கள் போயின.

கல்லடியிலேயே அவர்கள் நின்றார்கள்.

இது சிவனொளிபாதமலைக் கல் என்று ஒரு குரல் திடீரென ஒலித்தது. இல்லை, கல்வாரிக் கல் என்றது இன்னொரு குரல். மெக்காவின் கல் என்றது மற்றுமொரு குரல்.

வெவ்வேறிடங்களிலிருந்து வந்த கல் என்பதில் அந்தக் குரல்கள் வேறுபட்டாலும், அந்தக் கல் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதிலும், தம்மை மீறிய சக்தியொன்று தங்களை மேட்டுக்குடிக்குப் போகவிடாமல் காப்பாற்றவே இந்த அற்புதத்தை நிகழ்த்தியிருப்பதாகவும் அவர்களது நம்பிக்கை ஒன்றாகவே இருந்தது. கல்லை அங்கே வைத்தது அவரே என்பதிலும், அவர் கல்லிலும் இருப்பார், கல்லுக்கு மேலும் இருப்பார், கல்லுக்குப் பக்கத்திலும் இருப்பார் என்பதிலும் தங்களை மீறிய அந்த சக்தியான அவர் ஒரு ஆணாகவே இருக்க வேண்டுமென்பதிலும் அவர்களிடத்தே ஒற்றுமை இருந்தது.

அவர்களது பரவசம் உச்ச நிலையை அடைந்து கல் என்பது கல்லல்ல, கல்லாக இருப்பவர் அவரே என்ற பேருண்மையை தமக்குத் தெரிந்த பேரொளியில் கண்டு கொண்டனர். கல்லாக இருக்கும் அவர் யாருடைய அவர் என்ற பிரச்சினை கிளம்ப ஆளாளுக்கு மண்டையை உடைத்தார்கள். ஆளை ஆள் வெட்டிச் சாய்த்தார்கள். பயணத்தின்போது காட்டு விலங்குகளிடமிருந்து தம்மை பாதுகாப்பதற்காகக் கொண்டு வந்த ஈட்டி, வாள், கம்பு, கோடாலி, கத்தி என்ற இன்னொரன்ன ஆயுதங்களைப் பாவித்து கல்லுக்கு உரிமை கோரி சண்டை பிடித்தார்கள்.

கல்லை தகர்த்தெறித்ந்துதான் போக வேண்டும் என்று முடிவெடுத்த குழுவினர் அதற்குரிய வளங்களைத் திரட்ட ஆரம்பித்து விட்டனர். இதற்கான ஆதரவைக் கோரி ஏழு கடல் தாண்டிய தேசத்திலிருந்த பள்ளக்குடி அபிவிருத்திச் சங்கத்துக்கும் செய்தி போனது.

இன்னொரு குழு, கல்லை அங்கு கொண்டு வந்து போட்ட தீய சக்தி எது என்பதில் சிண்டைப் பிடித்துக் கொண்டது.

இருபதாம் நூற்றாண்டு.

எல்.சி.டி.ரீவி, ஸ்மாட்போன், வயர்லெஸ், ஜம்போஜெட், எம்.எம்.எஸ், கூகிள், லீனக்ஸ், பேபால், புளுரே, ஸ்பீட் ட்ரெயின், ஐபாட் என்று உலகம் மாறிப் போயிருந்தது. எல்லோரும் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். இலத்திரனியல் வேகத் தொடர்புகளால் ஆளாளுக்கு நேரில் சந்திப்பதெல்லாம் போய் அறைக்குள்ளிருந்தபடியே எல்லோரும் எல்லோருடனும் தொடர்பு வைத்திருந்தார்கள்.

உலக யுத்தங்களில் பீரங்கிகளும், யுத்த விமானங்களும் குறைந்து போய், அமெரிக்காவில் ஒரு அறையில் இருந்தபடியே ஜொய்ஸ்ரிக்கைப் பிடித்து ஆட்ட, விமானியில்லாத குட்டி விமானம் ஒன்று அப்கானிஸ்தானில் கீழே நின்றவர்களைச் சரியாகக் குறி பார்த்துச் சுட்டது. பிளேம், ஸ்ரக்ஸ்நெற் வைரசுகள் ஈரானின் கணணிகளுக்குள் புகுந்து அணு ஆலை இரகசியங்களைத் திருடி அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் அனுப்பி வைத்தன.

ஏழு கடல் தாண்டிய தேசத்திலும் பள்ளக்குடியினரிலும், அபிவிருத்திச்சங்கத்திலும் கூட மாற்றங்கள். மழைநாள் நிகழ்வு இப்போது மிகவும் பிரம்மாண்டமாகியிருந்தது. தண்ணீர் குழாயில் தண்ணீர் வருவதற்குப் பதிலாக நவீன தொழில் நுட்ப முறையில் தண்ணீர் இல்லாமலேயே மழை வருவது போலச் செய்ய, நனையாமலே நனைவது போல மேடையில் நடிகள் தத்ரூபமாக நடித்துக் கைதட்டல் பெற்றார்கள்.

மேலதிகமாக, கல்லடியிலிருந்து வந்த கல்லைத் தகர்ப்பதற்கான முயற்சிகள் பற்றிய மூவர்ணப் படங்கள், டி.வி.டி.க்கள் வந்து குவிய, தமக்கு கிடைத்த அமோக ஆதரவைப் பார்த்துப் பள்ளக்குடி அபிவிருத்திச் சங்கத்தினர் திக்குமுக்காடிப் போயினர்.

பள்ளக்குடி அபிவிருத்திச் சங்கத்தால் விரோதியெனப்பட்ட பள்ளக்குடாவினர் கல்லைத் தகர்ப்பதல்ல எமது நோக்கம் என்று இப்போதும் விசனப் பட்டுக்கொண்டிருந்தார்கள்.

கல்லடியிலும் நிலமைகள் நிறைய மாறியிருந்தன.

கல்லை அவராகக் கண்டவர்கள் ஆளாளுக்கு கல்லில் ஒவ்வொரு பக்கத்தை தங்களுடையதாக்கிக் கொண்டு பூசை, புனஸ்காரம், பிரார்த்தனை, தொழுகை எல்லாம் அமர்க்களமாகச் செய்து கொண்டிருந்தார்கள். அலங்கார விளக்குகள், மேளதாளங்கள், நாட்டியம், ஆளுயர மெழுகுதிரிகள் என்று எங்கும் அரளிபுரளி.

கல்லடியில் இப்போது கடைகளும் வந்திருந்தன. ஆடைக்கடை, மதுபானச்சாலை என்று அவை வளர்ந்து கொண்டிருந்தன.

பள்ளக்குடிக்கும், கல்லடிக்குமான பாதையில் இடைத் தூரம் வரை போக்குவரத்துச் சேவையும் ஆரம்பித்திருந்தார்கள்.

கல்லை உடைப்பதற்காக முயற்சித்தவர்களில் பலர் கல்லுக்கு வைத்த வெடிகளில் கொல்லப்பட்டு விட, மீதப் பேர் தொடர்ந்தனர்.

கல்லுடைப்பவர்களைத் திட்டிக் கொண்டிருந்த இன்னொரு குழுவோ மழை என்பதும் வெள்ளம் என்பதும் எல்லோரும் நினைப்பது போல ஒன்றும் மோசமானவையல்ல என்றும், மழையிலும் வெள்ளத்திலும் வாழப் பழகிக் கொண்டால் உலகிலேயே சந்தோசமானவர்களாக இருப்போம் என்றும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

பள்ளக்குடியும் மாற்றங்களுக்குத் தப்பவில்லை.

தூர தேசங்களிலிருந்து கூட வந்து பள்ளக்குடியில் வியாபார நிலையங்கள் திறந்திருந்தார்கள். பள்ளக்குடியின் பிரதான பிரச்சினையான மழையே வியாபார நிலையங்களின் அக்கறைக்குரியதாகவும் இருந்தது. மிக அழகானதும், வர்ணங்களினாலதுமான குடைகள் இப்போது பள்ளக்குடியில் அமோக விற்பனையாகும் பொருளாகும். கல்வீட்டுக்காறருக்கென ரச் குடைகள் பிரத்தியேகமாக இறக்குமதி செய்யப்பட்டன.

எம்.பி.3 பாடல்கள் கேடக்கக்கூடிய வசதிகள் கொண்ட குடைகளும், காலநிலைக்கேற்ப தமது நிறத்தைத் தாமே மாற்றிக்கொள்ளும் ஓட்டோமெற்றிக் குடைகளும் அதிக விலையாக இருந்ததால், பலர் அவற்றை வாங்க முடியாமல் வருந்தி வேதனைப் படுவதையும், இது தற்கொலைகளுக்கு வழிவகுக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதையும் வர்த்தக நிறுவனங்கள் அறிந்து துரித நடவடிக்கைகள் மேற்கொண்டன.

இப்போது பள்ளக்குடியில் வங்கிகளும் அதிகமாகின. குடைகள் வாங்குவதற்காக கடன்கள் தாராளமாக வழங்கப்பட்டன. ஏழு கடல் தாண்டிய தேசத்திற்குப் போனவர்களின் நிதி வருவதால் கடன் எடுக்க யாரும் யோசிக்கவில்லை.

அதி விலை கூடிய குடைகளின் விற்பனை அதிகரித்தபோது புதிதாக ஒரு பிரச்சினை வந்தது. குடை வைத்திருப்பவர்கள், குடை வைத்திருக்க முடியாதவர்கள் என்ற நிலமை இருக்கும்வரைக்கும் குடைகளுக்குப் பாதுகாப்பில்லை என்பது தெரிந்திருந்தது. இதனால் காவல் நிலையங்களில் குடைகளுக்கான விசேட படைகள் அமைக்கப்பட்டன. குடைகளுக்கான பாதி, முழு, ஆயுள் காப்புறுதிகளும் வந்துவிட்டன. கடனுக்கு குடை வாங்கியவர்கள் கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் போனால், அதனால் வங்கிகள் நட்டமடைந்து கவிழ்ந்து விழக் கூடாதென்பதற்காக, கடன் அடைக்கும் காப்புறுதியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

குடைகள் வாங்க முடியாதவர்களுக்கு உதவ தூர தேசங்களிலிருந்து மனித அக்கறை நிறுவனங்களும் பள்ளக்குடிக்கு வந்தன. இந்த நிறுவனங்களால் இருப்பதை வைத்து எப்படிக் குடை செய்வது போன்ற வகுப்புகள் நடாத்தப்பட்டன. படிப்பவர்கள் குடையில்லாதவர்களாகவும், வகுப்பெடுப்பவர்கள் குடை வைத்திருக்கும் கல்வீட்டுக்காறராகவும் இருந்தார்கள். குடை வகுப்புச் சிறப்புப் பயிற்சிகளுக்காக இவர்களும் தூர தேசம் போய் வந்து கொண்டிருந்தார்கள்.

எல்லைகள் தாண்டி உலகத்தை இணைக்கும் ருவிற்றரிலும், பேஸ்புக்கிலும் பள்ளக்குடிக்கும், மேட்டுக்குடிக்கும் இடையிலிருக்கும் பிரசித்தி பெற்ற கல்லைப் பற்றி ஆதரவாகவும் எதிராகவும் காராசாரமாகவும், இரவு, பகலாக விவாதித்துக் கொண்டேயிருந்தார்கள்.

எங்கு பார்த்தாலும் கல்லைப் பற்றியே பேச்சு. பேசாதது மழை, வெள்ளத்தைப் பற்றியே.

வருடாவருடம் மழை வருவது மட்டும் நிற்கவில்லை. மழையும், வெள்ளமும் பள்ளக்குடியை அரித்து அழிப்பதும் நிற்கவில்லை.

ஏழு கடல் தாண்டிய தேசம் சென்றவர்கள் இப்போதெல்லாம் தமது பிள்ளைகளுடனும், பேரப் பிள்ளைகளுடனும் பள்ளக்குடிக்குச் சுற்றுலா வருகின்றனர். இவர்களின் வசதிக்காகவே கல்லடிக்குப் பக்கத்தில் நவீன விமான நிலையம் திறக்கப்பட்டது.

விமான நிலையத்துக்கு வந்திறங்கிய சுற்றுலாவாசிகளை ஏற்றிச் செல்லும் குளிரூட்டப்பட்ட சொகுசு வாகனங்களின் சில்லுகளில், பள்ளக்குடிக்கான பாதையெங்கும் மண்ணோடு மண்ணாகி பரவியிருக்கும் மேட்டுக்குடி பயணம் போய் இறந்தவர்களின் இறுதித் துகள்கள் அள்ளுப்பட்டு காற்றோடு கலந்தன.

பள்ளக்குடிக்குள் இந்தச் சொகுசு வாகனங்கள் விரைந்து வந்து சடுதி பிறேக் பிடிக்கும் அழகில் கிளம்பிப் பறக்கும் புழுதி பிள்ளைகளையும், எல்லாவற்றையும் பறிகொடுத்தவர்களின் கண்ணீரையும் மறைத்தது.

- பார்த்திபன்

07.06.2012