Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஆபத்தான குடியிருப்புகளில் வெள்ளந்துரை தோட்டத் தொழிலாளர்கள்!

காவத்தை பெருந்தோட்ட கம்பனியின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காவத்தை வெள்ளாந்துரை தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் சில வசிப்பதற்கு எவ்விதத்தில் பொருத்தமற்று காணப்படுவதுடன் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக அதில் வசிப்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இக்குடியிருக்குகளில் வசிக்கும் தொழிலாளர்களும் அவர்களின் குழந்தைகளினதும் உயிர்களுக்கு  எவ்வித உத்திரவாதமும் இல்லை என விசனம் தெரிவிக்கப்படுகிறது. இக்குடியிருப்பில் வசிக்கும் தொழிலாளர்கள் மாற்று குடியிருப்புகளைப் பெற்றுக் கொடுக்கும்படி தோட்ட நிர்வாகத்துக்கும்  கடிதம் மூலம் பல தடவைகள் அறிவித்துள்ள போதும் அவர்களுக்கு புதிய குடியிருப்புகள் வழங்கவோ அல்லது மாற்று காணிகளை வழங்கி அவர்களை குடியமர்த்தவோ எவ்வித முயற்சியும் தோட்ட நிர்வாகத்தினால் இது வரை எடுக்கப்படவில்லை.

14 வருடங்களுக்கு முன்னர் சேதமடைந்த லயன் அறையில் வாழும் தொழிலாளர் குடும்பம் ஒன்றுக்கும் மாற்று குடியிருப்பையோ காணியையோ தோட்ட நிர்வாகம் வழங்காதிருக்கின்றமையில் இருந்து தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் அசமந்த போக்கை கடைப்பிடித்து வருகின்றமையை எடுத்துக் காட்டுகிறது. பாதுகாப்பற்ற லயன் அறைகளில் வாழும் வெள்ளந்துரை தோட்ட மக்களுக்கு குடியிருப்புகளை தாமதியாது வழங்க வேண்டிய பொறுப்பு தோட்ட நிர்வாகத்துக்கு மாத்திரமன்றி உரிய அரச அதிகாரிகளுக்கும் இருக்கின்றது. தோட்ட நிர்வாகத்தின் மௌனம், தாமதம் தொழிலாளர்களின் உயிர்களை உடைமைகளை வெகுமதியாக கொடுக்கும் நிலைக்கே இட்டுச் செல்லும்.