Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்களின் போர்க்காயங்களைப் பயன்படுத்தும் அரசு, அரசியல்வாதிகள் மற்றும் NGO

வைகாசி 20. 2015. இராணுவமும், கடற்படையும், அதிரடிப்படையும் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல வருடங்களுக்குப் பின் புகை மண்டலமாகக் காணப்படுகிறது. இம்முறை இலங்கை அரச படைகளல்ல இப் புகை மண்டலத்துக்குக் காரணம். மனிதக் குரல்கள் எங்கும் ஓலங்களாய்-கூக்குரலாய் ஒலிக்கிறது. ரணில் - மைத்ரி அரசால் அனுப்பப்பட்ட குண்டு வீச்சு விமானங்களல்ல இக்கூக்குரலுக்குக் காரணம். தமிழ் இளையோரும், மாணவர்களுமே இதற்க்குக் காரணம். வீதிகளெங்கும் முடக்கப்பட்டு பழைய ரயர் மற்றும் குப்பை குவிக்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது. அதன் முன்னால், இளைஞர்கள் கூடி நின்று செல்பி எடுகின்றனர். புலம்பெயர் மற்றும் உள்ளூர் இணைய மீடியா நிருபர்கள் பல பத்துப்பேர் ஒவ்வொருதருக்கும் தேவையான கோணத்தில் "எக்ளுசிவாக" போஸ் கொடுக்கிறார்கள்.

அரச நிறுவனங்களின் மேல் அதிகாரிகளோ, தமது ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். தமிழ் ஆசிரியர் சங்கம், யாழ். அரச அதிபர் காரியாலத்தின் முன்னால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கோரிப் போராட்டம் நடத்துகிறது. சிறுவர்கள் நூற்றுக் கணக்கானோர் "குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடு. இல்லையேல் எங்களிடம் ஒப்படை" என்ற பதாதையுடன், குடா நாட்டின் பல பாகங்களிலும் பாடசாலைகளுக்கு முன்னால் நிற்பது காணக் கூடியதாகவுள்ளது.

யாழ். நீதிமன்றத்தினை சுற்றி பொலிசார், இராணுவம் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இரு போலீஸ் வாகனமும், கைதிகளை ஏற்றிவர உபயோகிக்கும் பஸ் ஒன்றும் நீதிமன்ற வளாகத்தில் நுழைகிறது. சில ஆண்கள் அவ் பஸ் வண்டியிலிருந்து இறக்கப்பட்டு; நீதி மன்றக் கட்டிடத்துக்குள் கொண்டு செல்லப்பட்டர்கள். அவர்களில் ஒருவருக்கு மட்டும் விலங்கிடப்பட்டிருகிறது. பொலிசுடன் பஸ்ஸில் இருந்து இறங்கிய ஒருவரைச் சுட்டிக்காட்டி "அவர் தான் கொழுப்பில் இருந்து வந்துள்ள பிரபல வக்கீல்....." அடுத்த தீவுப்பகுதி TNA பாராளுமன்ற உறுப்பினர்" என முணுமுணுகின்றனர் கூட்டத்திலிருந்த சிலர்.

பின்பு கிடைத்த தகவலின்படி இது உண்மையல்ல. போலீஸ் நீதிமன்றத்துக்குள் கொண்டு சென்றது வேறு நபர்களை. இது நடந்து சில நிமிடங்களில் சில மினிவான்கள் தெருக்கரையில் நிறுத்தப்படுகிறன. கிடத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட ஆண்கள் நீதி மன்ற வாசலைத் தேடி ஓடி வருகின்றனர். கண் சிமிட்டும் நேரத்தில். கைதிகளை ஏற்றி வர உபயோகிக்கும் பஸ் முன் கண்ணாடி உடைக்கப்பட, அதே நேரத்தில் அங்கு நின்ற வேறு இரு வாகனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகப்படுகிறது. அவ்வாகனங்கள் நீதிபதிகளுக்கு அல்லது அரசுக்கு சொந்தமானது என அறியப்படுகிறது.

வாகனங்களை உடைத்த கும்பல் படிகளில் ஏறிச் சென்று நீதிமன்ற பிரதான வாசற் கண்ணாடிகளை உடைகிறது. இவற்றையெல்லாம் சிலர் வீடியோ மற்றும் படக் கருவிகளூடாக பதிவு செய்கிறனர். பதிவு செய்யும் ஊடகக்காரர்களைப் பார்த்து, தாக்குதல் நடத்திய கும்பலில் ஒருவர் கூக்குரலிடுகிறார் "அண்ணே, எங்கட முகங்கள் தெரியாத மாதிரி எடுங்கோ" என்று. சில நிமிடங்களிலேயே தமது தாக்குதல்களை முடித்து விட்டு நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறுகிறது அந்தக் கும்பல். இவற்றையெல்லாம் சிரித்தபடி இரசித்துக் கொண்டிருகிறது அங்கு நின்ற அரசபடைகள். அதிரடிப்படைத் தலைமை அதிகாரியிடம் ஒரு சிங்களம் தெரிந்த முஸ்லீம் ஊடகவியலாளர், ஏன் நீங்கள் இதைத் தடுத்து நிறுத்தக் கூடாதென வினவுகிறார். அந்த அதிகாரி "எங்களுக்கு இன்னும் கட்டளை வரவில்லை" எனப் பதிலளிக்கிறார். இந்த தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிப் போக, நடந்த கலோபரங்களுக்கு இடையில் கல்வீச்சு ஆரம்பித்தது.

மோட்டர் சைக்கிள்களில் வந்திறங்கியவர்களுடன், விடுப்புப்பார்த்த சிலரும் இணைந்து கல்வீசுவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. திடீரென வீறு கொண்டெழுந்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை மேற்கொண்டனர். "திண்டவன் தப்ப, கோம்பை சூப்பினவன் தண்டம் கட்டியது" போல வேடிக்கை பார்த்த பலரும் கைது செய்யப்படுகின்றனர். மினி வானில் வந்து தாக்குதல் நடத்திய கும்பல்; குறிப்பிட்ட தமிழ் தேசியக்கட்சியை ஒன்றைச் சேர்ந்தவர்களும், அக் கட்சியின் தலைவரும் என தகவல்கள் தெரிவிகின்றன. அதேவேளை, இத் தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசி பெற்ற பிரபலமான ரவுடிக் கும்பல் எனவும் கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் நடக்க, சர்வதேச நிதியில் இயங்கும் அரச சார்பாற்ற நிறுவனங்கள் (NGO) தமது திட்டங்கள் (Project) நடக்கும் கிராம மற்றும் நகரம் சார் பெண்களை பதாதைகளை ஏந்திப் போராட, பஸ் வண்டிகள் ஏற்பாடு செய்து யாழ்.நகருக்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களிற் சிலர் கலவரம் தொடங்கியதால் எவ்வாறு தாம் வீட்டுக்கு திரும்பிப் போவதென்று கவலையுடன் காணப்படுகின்றனர்.

யாழ்பாணம் பற்றி எரிகிறது. எங்கும் அச்சம் கலந்த பயங்கரச் சூழல். கிட்டத்தட்ட 80களின் நடுப்பகுதியில் இருந்தது போன்ற உணர்வு நிலை. ஆனால், இன்றுள்ள இன்னிலைகுக் காரணம் நாம்! தமிழ் சமூகம்.

வைகாசி 19, 2015 அன்று புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் இணையத் தளத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது "ஒடுக்குமுறையின் காரணமாக அமுக்கப்பட்டிருந்த ஒரு சமூகம், தனக்குக் கிடைத்த ஒரு சிறு இடைவெளியில், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள விடும் பெருமூச்சாகவே மேற்படி நிகழ்வுகளை நாம் கருத வேண்டும். சகோதரி வித்தியாவுக்கு நடந்த கொடுமைகளை தனக்குள் வாங்கி, அவருக்கு நடந்த கொடுமைகளை முன்னிறுத்தி, இதுவரை தான் பட்ட காயங்களுக்காவும் தீர்வு கோருகிறது தமிழ் சமூகம். இது ஒரு வகையில் இயல்பானதும், தன்னைத் தானே சுதாகரித்துக் கொள்வதற்குமான நியாயமான சமூக முயற்சியுமாகும்." முற்றிலும் உண்மை போரின் வடுக்களைச் சுமக்கும் சமூகம்- தன்னை மறுசீரமைக்க வேண்டின்; அது ஏதோ ஒருவகையில் தனது கோபத்தை தீர்த்துக் கொள்ளத் தான் வேண்டும். போரின் காரணமாக "social psychosis"- "சமூக மனப்பிறழ்வு-பேதலிப்பு" கொண்ட- வலி நிறைந்த சமூகமாக உள்ளோம் நாம். இதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க முடியாது நாம். இன்று நமது சமூகதின் வலி பிரளயமாக உருவெடுத்து; நம்மை நாமே அழிக்கும் நிலை உருவாகியுள்ளது. சீழ் பிடித்த கட்டிலிருந்து சீழை வெளியேற்றினால் தான் வலி குறையும். அதேபோலவே நமது சமூகவலி குறைய வேண்டுமானால், சரியான முறையில் "social psychosis" -"சமூக மனப்பிறழ்வு-பேதலிப்பு" இக்கு மருந்து தேட வேண்டியுள்ளது.

ஆனால், இன்று நடப்பதென்ன?! எமது சமூக அவலத்துக்கு - போரின் பாதிப்புக்கு சிகிச்சை செய்ய வேண்டிய பொறுப்பிலுள்ளோர் அதைச் செய்கிறார்களா?! இப்பதிவின் ஆரம்பத்தில், (20.05.2015 அன்று யாழில் நடந்தவை பற்றி) விபரித்துள்ளபடி பார்த்தல் இல்லை! என்ற ஒரே பதில் மட்டுமே கிடைக்கும்.

-தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் ஏற்பட்ட முரண்பாடுகள்- குழிபறிப்புகள் வைகாசி 20.05.2005 அன்று நடந்த வன்முறைகளுக்கு காரணமாகியது. கொழும்பு வாழ் சட்டத்தரணி ஒருவர் வரும் தேர்தலில் தீவக அபேட்சகராக நிறுத்தப்படப் போவதாக சொல்லப்படுகிறது. அவரின் வேட்ப்பாளர் நியமனத்தை எதிர்ப்போர், இளைஞர்களைத் தூண்டி விட்டு- அவர்களை வன்முறையில் ஈடுபடவைத்தனர். அத்துடன், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ் வன்முறைகளுக்கு எல்லாவகையிலும் போசனை செய்துள்ளார்- செய்து வருகிறார். அவர் கூறும் காரணம், இப்போரடங்கள் மூலம் தமிழ் உணர்வு மழுங்காமல் பாதுகாப்பதாம்!

-போர்க்காயம் கொண்ட எம் சிறார்களை ஆற்றுப்படுத்தி, மனத்திடமுள்ள சந்ததியாக உருவாக்கப்பெற வைக்கும் பொறுப்பு, நமது தமிழ் ஆசிரிய மற்றும் கல்விச் சமூகத்தினுடையதாகும். சமூகப்பற்று, மனிதங்கள் மீதான அன்பு, உலக நேசம் கொண்டவர்களாக வளர்க்கப்படும் ஒரு சந்ததியே அர்த்தமுள்ள -அன்புள்ள சமூகத்தை உருவாக்கும். ஒடுக்கு முறையிலிருந்து அறிவு பூர்வமாகப் போராடும். ஆனால், 20.05.2015 அன்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சிலர் தமது அரசியல் லாபத்தை முன்னிறுத்தி மாணவர்களைத் தவறான பாதையில் செல்ல வழி காட்டியுள்ளனர். தமிழ் ஆசிரியர் சங்கம் தனது போராட்டத்தை "குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கு" என்ற பதாதையின் கீழேயே முன்னெடுத்தனர். இதன் தொடர்சியாகவே மாணவர்களும் "குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடு. இல்லையேல் எங்களிடம் ஒப்படை" என முழங்கினர்.

- போர் காலங்களில் NGO எனப்படும் சர்வதேச நிதியில் இயங்கும் நிறுவனங்கள் எமது சமூகத்தில் செலுத்திய ஆதிக்கம் இன்றும் தொடர்கிறது. இவர்கள் தான் இப்போ தமிழ் பகுதிகளில் "பெண்ணியம்" கதைப்பவர்கள். இவர்களுக்கு வெளியில் பெண்கள் அமைப்புகள் இயங்குவதை எல்லாவகையிலும் தடுப்பவர்கள். "அரசியல்" இல்லாமல் "பெண்ணியம்" கதைப்பதே இவர்களின் செயற்பாடு. எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல்- பாதிக்கப்பட்ட நம் சமூகப் பெண்கள், இந்த NGO க்களின் நலனுக்காக உபயோகப்படுத்தப்படுகின்றனர். இதற்கு இந்நிறுவனங்களில் வேலை செய்யும் கல்வி கற்ற எம் இளையோர் துணை போகின்றனர்.

இவ்வாறு எந்த வித திட்டமிடலுமின்றி, சமூக நலன் சார்ந்து - அதன் போர்க் காய குணப்படுத்தலுக்கான தீர்வு எதுமின்று; அதிகாரம் சார்ந்த சக்திகளின் இருப்பைத் தக்கவைக்க உபயோகப்படுத்தப்படுகிறது நமது தமிழ் சமூகம். "போராட்டங்கள்" என்ற பெயரில்- திட்டமிட்ட வகையில்; தமிழ் கட்சிகள், ஆதிக்கம் சார்ந்த தனிமனிதர்கள் மற்றும் சில NGO க்கள் தமது நலனுக்காக, மக்களில் உணர்ச்சிகளை- போர்க்காய வலிகளை பயன்படுத்துவதே நடந்து வருகிறது. இது இலங்கை அரசின் ஒடுக்குமுறையை - மறைப்பதற்கு நீண்டகாலப் போக்கில் உதவும். வைகாசி 20.05.2015 அன்று, யாழ். நீதிமன்றம் தாக்குதலுக்கு உள்ளாகியதும், சிறைசாலை பஸ் மற்றும் வாகனங்கள் உடைக்கப்பட்டதும், அதை அரச படையினர் கண்டும் காணாமல் விட்டுள்ளதும், ரணில் -மைத்திரி அரசின் திட்டமிட்ட செயலாகவே தோன்றுகிறது. காரணம், சர்வதேச சமூகத்துக்கு தான், "ஜனநாயக அரசாக" மக்களின் போராட்ட உரிமையை மதிக்கும் அரசாக் காட்டிக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

-யாழில் இருந்து எமது விசேட செய்தியாளர்